Featured Posts
Home » பொதுவானவை » தலையங்கம் » கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி!

கருணாதியின் ஆட்சியில் மறுக்கப்பட்டு வரும் நீதி!

Article1997 ஆம் ஆண்டு கோவையில் காவல்துறையும் சங்பரிவாரும் இணைந்து நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் அப்பாவி முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் தகர்க்கப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அன்றைய கருணாநிதி ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை.

சங்பரிவாரின் மத துவேஷத்தால் தூண்டப்பட்டு கோவை குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி முஸ்லிம்களைச் சிறையில் அடைத்தது கருணாநிதியின் அரசு. அவர்களில் பலரும் சந்தேகம் காரணமாக அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகின்றவர்கள். கோவை கலவரத்தில் கருணாநிதி காட்டிய மெத்தனமும் முஸ்லிம்களைக் கைது செய்வதில் அவர்கள் மீது பழி போடுவதில் காட்டிய வேகமும் அன்றே அவரது முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியது.

முஸ்லிம்களின் உரிமைக்காகப் போராடிய இயக்கங்கள் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடின. வழக்ககம் போல் தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார் கருணாநிதி. முஸ்லிம்களெல்லாம் அவர் கட்சிக்காகத் தேர்தலில் பணியாற்றி ஓட்டுகளையும் சேகரித்துக் கொடுத்தனர். கருணாநிதி வெற்றியும் பெற்றார். ஆட்சிக்கு வந்த கருணாநிதி வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்றார். இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு விழா கொண்டாடிய புலவர்களும் கருணாநிதி புகழ் பாடி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நினைவூட்டினர். முஸ்லிம்களுக்கு ஏதோ இட ஒதுக்கீடு என்று அறிவித்தார் கருணாநிதி. அது நடை முறைக்கு வந்ததோ இல்லையோ, நம்மவர்கள் அதைக் கொண்டாடினோம். வெற்றி பெற்றோம் லட்சியத்தை அடைந்தோம் என்றெல்லாம் புளங்காகிதம் அடைந்தோம்.

இந்நேரத்தில் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கைதிகள் விடுதலை என்று நற்செய்தி அறிவித்தார் கருணாநிதி. ஆனால், விடுதலை செய்யப்பட்ட 1,405 கைதிகளில் மதக் கலவரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முஸ்லிம்கள் யாரும் இல்லை என்ற செய்தியின் மூலம், எதிர்பார்த்திருந்த முஸ்லிம்களுக்கு வேதனை அளித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வகுப்புவாத வழக்குகள் என்று வர்ணிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் சிறையில் வாடும் முஸ்லிம்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர் பார்த்திருந்த முஸ்லிம் குடும்பங்களை ஏமாற்றும் விதத்தில் கருணாநிதி அரசு செயல்பட்டுள்ளது. வெளிப்படையாக முஸ்லிம்களின் நண்பன் என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் கருணாநிதியின் கபட முகம் இதிலிருந்து வெளிப்படுகிறது.

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கருணாநிதியின் ஆட்சியில் சங்பரிவாரங்கள் வெறியாட்டம் போடுகிறது. முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கும் மத அடிப்படையிலான ஒரு விழாவாக இன்று விநாயக சதுர்த்தி பரிணமித்துள்ளது. பள்ளி வாசல்கள் வழியாகத்தான் ஊர்வலம் போவோம், முஸ்லிம்களை இழிவுப் படுத்தி கோஷமிடுவோம் என்று இந்துத்துவா அடம்பிடிக்கின்றது. அதை நியாயப் படுத்தி உரிமைக் குரல்(?) எழுப்ப ராமகோபாலன் , இல கணேசன் வகையறாக்களும் அறிக்கையிடுகின்றன. கலவரக் காரர்களை அடக்க வக்கற்ற காவல்துறை முஸ்லிம்கள் மீது வெறியாட்டம் போடுகிறது. பள்ளிவாசல் கதவுகளை உடைக்கிறது. பூட்ஸ் காலுடன் பள்ளிவாசலுக்குள் சென்று நோன்பாளிகள் என்ற இரக்கம் கூட இல்லாமல் மிருகத்தனமாக முஸ்லிம்களைத் தாக்குகிறது. இது என்ன மக்களாட்சியா? அராஜக ஆட்சியா?

பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் செல்ல அரசாணை தடையாம். காவல் துறை அத்தடையை மீறி அனுமதி அளித்ததாம்!! ஒரு சமுதாய இணைய தளத்தில் இதைப் படித்ததும் அதிர்ச்சியாகி விட்டது. தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி செய்கிறாரா அல்லது கருணாநிதியை காவல் துறை ஆட்சி செய்கிறதா? அரசு கட்டளையை காவல் துறை மீறும் அளவுக்கு கையாலாகாத நிலையில்தான் தமிழக அரசு உள்ளதா? இந்த ஆட்சியின் நம்பகத் தன்மை இவ்வளவு தானா?

தினமலர் என்ற பத்திரிகை. இந்நாட்டின் மதச் சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் விதமாக நபிகளாரைக் குறித்து கேலிச்சித்திரம் வெளியிட்டது. நபிகள் நாயகத்தை ஏதோ தமிழ் நாட்டின் அரசியல் வாதிகளைப் போன்று நினைத்து விட்டனர் போலும். நபிகள் நாயகத்தின் மீதுள்ள நேசம் ஒரு முஸ்லிமுக்கு அவனது கொள்கை சார்ந்த விஷயம் ஆகும். அவனது தாய் தந்தையரைத் திட்டினாலும் பொறுத்துக் கொள்வானே தவிர நபிகள் நாயகத்தைத் திட்டுவதை ஒரு முஸ்லிம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டான். நபிகள் நாயகத்தை நேசிப்பது என்பது அவனது இரத்தத்தோடு ஊறியது ஆகும். மத உணர்வுகளைச் சீண்டியவர்களைக் கைது செய்து சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை தங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவித்த முஸ்லிம்கள் மீது மிருகத் தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது.

சென்னையில் ஒரு வியாபார நிறுவனம் தீப் பிடித்ததற்காக மறுதினமே களம் குதித்து அறிக்கை வெளியிட்ட கருணாநிதி ஒரு முஸ்லிம் சமுதாயத்தின் மதவுணர்வுகளைச் சீண்டி தமிழகத்தின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைத்த தினமலரின் செயல் குறித்து வாய் திறக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு இடங்களில் காவல் துறையின் அராஜகம், அது குறித்த கருணாநிதியின் மவுனம் காவல் துறைக்கும் சங் பரிவாரத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

தம் வீட்டு ஆண்களை விடுதலை செய்யக் கோரி நமது சமுதாயப் பெண்மணிகள் தெருவில் இறங்கிப் போராட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளமை வருந்தத் தக்கது. எங்கே சமுதாய இயக்கங்கள்? இவர்களுக்காக பாரபட்சமின்றி அவர்கள் களமிறங்கட்டும். அவை தத்தமது இயக்கங்களுக்கு விளம்பரம் தேடித் தரும் பேரணிகள் என்பதைவிட ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் விடுதலைக் குரல்களாக ஒலித்து அவர்களுக்கு நீதி வாங்கித் தரட்டும். இது அந்தந்த குடும்பத்துக்காக உள்ள பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரச்சினை.

“தங்களிடையே கருணை காட்டுவதிலும் தங்களிடையே அன்பு செலுத்துவதிலும் தங்களிடையே இரக்கம் கொள்வதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடல் போல் நீர் காண்பீர். அதன் ஒரு உறுப்புக்கு சுகவீனம் ஏற்பட்டால் அதற்காக அவ்வுடலின் மற்ற உறுப்புக்கள் விழித்துக் கொண்டும், காய்ச்சல் ஏற்பட்டும் நோய்வாய்ப் படுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர் (ரழி) நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

8 comments

  1. assalamu alaikum ,

    its highly horrible to see whats happening to muslims in tamil nadu…. india is a socialist, secular, democratic country this s what we all studied in our younger age.. but its all humbak today..
    india is a socialist, secular, democratic country for all sang pariver, rss cowards.. its really a hell for MUSLIMS

  2. assalaamu alaikum,

    Dear brothers & Sisters,

    Pray for peace and forgiveness betweeen muslims and other religions

  3. உடன்பிறப்பு

    ‘சங்பரிவாரின் மத துவேஷத்தால் தூண்டப்பட்டு கோவை குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி முஸ்லிம்களைச் சிறையில் அடைத்தது கருணாநிதியின் அரசு. அவர்களில் பலரும் சந்தேகம் காரணமாக அநியாயமாகக் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுகின்றவர்கள். ‘

    இது உண்மைதானா என்பதை விசாரித்து அறிந்து எழுதியிருக்க வேண்டும்.கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பும் வந்து விடுதலையானவர்களும் உண்டே. அரசு ஆணையில்
    மத பாரபட்சம் இல்லை. முஸ்லீம் அல்லாத பலரும் அரசு ஆணைப்படி விடுதலை பெறாமல் சிறையில்தான் இருக்கிறார்கள்.
    நளினியின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.அவர் சிறையில்
    இருக்கிறார்-17 ஆண்டுகளாக. அவர் இந்து என்பதற்காக கலைஞர்
    சலுகை தரவில்லை. மத அடிப்படையில் கலைஞர் அரசு
    விடுதலையை அணுகவில்லை.அரசு ஆணை செய்த குற்றங்களின் அடிப்படையில், சிறையில் கழித்த காலம், சிறையில் நடத்தை போன்றவற்றின் அடிப்படையில் விடுதலை உண்டா இல்லையா என்பதை தீர்மானிக்கு அதிகாரத்தினை சிறைத் துறைக்கு வழங்கியுள்ளது. இதுவும் ஏற்கனவே உள்ள ஆணைதான்.புதிதாக
    எதையும் சேர்க்கவில்லை. திமுகவினருக்கு சலுகை இல்லை.
    லீலாவதி வழக்கில் ஒருவர் ஒரு சிறு தவறுக்காக விடுவிக்கப்படவில்லை. அவர் செய்த தவற்றுக்கு தண்ட்னை தர வேண்டாம் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. இருப்பினும் அவருக்கு நன்னடத்தை இல்லை என்று விடுதலை தரப்படவில்லை.இதை விளக்கி கலைஞர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். உண்மைகளை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.கலைஞர் எப்போதும் சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பவர். அவரை குறை கூறுவது நியாயமா?

    சிலர் முஸ்லீம்களை திமுகவிற்கு எதிராக திரட்ட பொய்களை
    எழுதுகிறார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் அதையெல்லாம்
    நம்பி ஏமாறவேண்டாம்.

  4. yes, these type of govt activities is clearly shows that no security to Muslims.

  5. தேங்கை முனீப்

    உடன் பிறப்பு அவர்களுக்கு

    கோவை சிறையில் இருந்து விசாரணை முடிந்து குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு பலரும் வெளியில் வந்தார்கள் என்பது உண்மைதான். அப்பாவி முஸ்லிம்களை கருணாநிதி அரசு கண்ணை மூடிக் கொண்டு கைது செய்த கருணாநிதியின் சிறுபான்மைக்கு எதிரான செயலையே இது காட்டுகிறது. இவர்கள் 9 ஆண்டு காலமாக பெயில் கூட கிடைக்காமல் தங்கள் வாழ்க்கையை சிறையில் கழித்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்க. அதே நேரத்தில் முஸ்லிம்களக் மீது வன்முறை வெறியாட்டம் நடத்திய சங்பரிவார் கும்பலுக்கு என்ன தண்டனை அளிக்கப்பட்டது? கோவை குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி கண்ணில் பட்டவர்களை எல்லாம் கைது செய்த அரசு முஸ்லிம்களைக் கொலை செய்தவர்களில் எத்தனை பேரைக் கைது செய்தது?

    முஸ்லிம்களைத் தாக்கியவர்களில் பலரும் இன்று சுதந்திரமாக நடமாடுகின்றனரே! இதுதான் சிறுபான்மைக்கு அரணாக இருப்பதோ? திருவிதாங்கோட்டில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் சிலைகளை வைத்து ரகளை செய்தும் முஸ்லிம்களைத் தாக்கியும் அவர்களின் கடைகளைச் சுறையாடியும் வன்முறையில் ஈடுபட்ட இந்து மதவெறியர்களைத் தடுக்க முயன்ற முஸ்லிம்களைக் கைது செய்தும் இரவு நேரத்தில் பெண்கள் இருக்கும் வீடுகளில் நுழைந்து அட்டூழியம் செய்ததே காவல் துறை. இதுதான் சிறுபான்மைக்கு அரணாக இருப்பதா? மதச் சார் பற்ற நாட்டில் முஸ்லிம்களின் மதச் சின்னங்களை இழிவுபடுத்தும் விதத்தில் பள்ளிவாசல் கதவுகளை உடைத்தது, பூட்ஸ் கால்களுடன் நுழைந்தது, அங்கிருக்கும் முஸ்லிம்களை நோன்பாளிகள் என்றும் பாராமல் அடித்து உதைத்தது இதுதான் சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பதா?

    கோடிக் கணக்கான முஸ்லிம்களின் மதவுணர்வுகளைச் சீண்டிய தினமலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ அதைக் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவோ செய்யாத கருணாநிதி ஏதோ தினமலர் நிர்வாகி ஒருவர் சொன்னார் என்பதற்காக செய்தி வெளியிட்ட சன் டிவி யின் மீது வழக்கு தொடுக்க ஐடியா கொடுத்தாரே இதுதான் சிறுபான்மைக்கு அரணாக இருப்பதா?

    சமூகத்தோடு சேர்ந்து வாழத் தகுதியற்றவர்கள் என்று நீதி மன்றமே சுட்டிக் காட்டிய கொடிய குற்றவாளிகளையும் விடுதலை செய்து தன் குடும்ப பாசத்தை வெளியிட்ட கருணாநிதி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்ய இவருக்கு ஆதரவு அளித்த முஸ்லிம் தலைவர்களே வேண்டுகோள் கடிதம் அனுப்பியும் அவரது கல் நெஞ்சம் இரங்கவில்லையே? இதுதான் சிறுபான்மையினருக்கு அரணாக இருப்பதா? மகன் அழகிரியின் அடியாட்களுக்கு ஒரு நீதி முஸ்லிம்களுக்கு ஒரு நீதியா? நளினி போன்ற தனிப்பட்ட சில சம்பவங்களை மேற்கோள் காட்டி கருணாநிதியின் இத்தகைய அநீதிகளை மறைக்க முயன்றுள்ளீர்கள். ஒரு திமுக காரனாக இல்லாமல் ஒரு மனிதனாக இருந்து சிந்தித்துப் பாருங்கள்.

  6. சகோதரர் பிறப்பு அவர்களே ! முதலில் குற்றவாளி யார் நிரபராதி யார் என்று கருணாநிதி அரசுக்கு தெரியருதுருக்கு பதினோரு வருடங்கள் சிறை வாசம் அனுபவித்து. ஒவ்வொரு பெரியவர்களின் பிறந்தநாளின் போதும் நிரூபிக்கப்பட்ட கைதி இன்னும் கிரிமினல் கைதி எல்லாம் வெளிவந்தார்கள் பைலில். அனால் அது கூட கோவையில் குண்டுவெடிப்பின் போது சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை விடுவிக்கவில்லை. கோவை போலீசாரால் நிரூபிக்க முடியாமல் போனதால் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டார். இதற்க்கு பெயர் தான் கருணை இல்லையா ? அதனால் தான் அதை பெயருடன் இணைத்துள்ளார் அருமையான நீதி. எல்லாத்தையும் ஆராய்ந்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள். முதலில் அவரை பெயரை மாற்றி வைக்க சொல்லுங்கள்.

  7. பெரும்பான்மையான தமிழக முஸ்லிம்களின் ஆதரவு கருணாநிதிக்கு இருப்பது அவர் இஸ்லாமிய சமுதாயத்தின் நலனில் அக்கறை கொண்டவர் என்பதால் அல்ல. ஜெயலலிதாவை விட இவர் பரவாயில்லை என்பதால்தான். தேர்தல் காலம் தவிர மற்ற காலங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் தமிழக முஸ்லிம்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். இயக்க பாகுபாடுகளை மறந்து முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து ஜனநாயக முறையில் தமது எதிர்ப்பை தெரியப் படுத்தலாம். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஓட்டுப் போடாமல் ‘ஓ’ போடுவதைப் பற்றி முஸ்லிம்கள் யோசிக்கலாம்.

  8. உடன் பிறப்பே எங்கே சென்றாய் ,,,,, பதில் தாரும் அய்யா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *