Featured Posts
Home » இஸ்லாம் » அகீதா » தவ்ஹீத் வாதிகளே! வாதப்பிரதிவாதங்களைக் களைந்து அகீதாவில் தெளிவுபெற முன்வாருங்கள்?

தவ்ஹீத் வாதிகளே! வாதப்பிரதிவாதங்களைக் களைந்து அகீதாவில் தெளிவுபெற முன்வாருங்கள்?

بسم الله الرحمن الرحيم

எமது நாட்டில் ஏகத்துவத்தைத் தம் உள்ளங்களில் சுமந்து கொண்ட ஒரு சமூகம் திசைமாறிச் சென்று கொண்டிருப்பதை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிந்து வருகின்றோம். ஒரு புறத்தில் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் தம்முடைய பணியின் முதற்கடமை என்னவென்று புரியாமல் மக்களைக் கருத்து வேறுபாடுகளைக் கொண்டு வழி நடாத்திக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். மறு புறத்தில் இத்தகைய அழைப்பாளர்களின் திருவிளையாடலில் சிக்குண்டு தர்க்கம் புரிவது தான் மார்க்கம் என்ற தோரணையில் செயற்பட்டுவருவதையும் நாம் காண்கிறோம். இதனால் பாதிக்கப்பட்ட பலர் மனஉளைச்சலுக்குள்ளாகி யார் சொல்வது உண்மையெனத் தீர்மானிக்க முடியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். இதன்பேறாக ஆதி தொட்டு எம்முன்னோர்கள் ஏகோபித்த அடிப்படையில் பேணிவந்த பல அடிப்படை அம்சங்கள் காற்றில் பறந்து செல்லும் தூசாக மதிக்கப்படுகின்றன. இந்நிலை அவசியம் எம் சூழலைவிட்டும் மாற்றப்பட்டாக வேண்டும். ஒவ்வொரு சாராரும் தம் நிலை குறித்து சற்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இப்படியான சுயவிசாரணையின்றி மேற்கொள்ளப்பட்டுவரும் தஃவாக்கள் நிச்சயமாக பாலைவனத்து மழைபோன்றாகிவிடும்!

தமிழ் பேசும் மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்பட்ட இத்தவ்ஹீத் பிரச்சாரம் ஆதி முதல் அந்தம் வரை பேச்சாளர்களை மையப்படுத்திய தஃவாவாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாகவே எமது சமூகத்தில் பேச்சாளர்கள் அதிகமாகவும் உலமாக்கள் மிகக் குறைவாகவும் காணப்படுகின்றார்கள். இக்காலம் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எச்சரித்த காலமாகக்கூட இருக்குமோ என்று அச்சம் கொள்ளப்படுகின்றது. இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘நிச்சயமாக நீங்கள் தொழுகையை நீட்டுவதும், குத்பாவைச் சுருக்குவதுமான ஒரு காலத்தில் இருக்கின்றீர்கள். இக்காலத்தில் உலமாக்கள் அதிகமாகவும், பேச்சாளர்கள் குறைவாகவும் இருக்கின்றார்கள். மேலும், மக்கள் மத்தியில் ஒரு காலம் வரும் அக்காலத்தில் தொழுகை சுருக்கமாகவும் குத்பா நீளமாகவும் இருக்கும். அக்காலத்தில் பேச்சாளர்கள் அதிகமாகவும், உலமாக்கள் குறைவாகவும் இருப்பார்கள்”.

எமது தஃவா வரலாற்றில் நாம் விட்ட இத்தவறே இன்று எதற்கெடுத்தாலும் விவாதம் செய்தல் என்ற கலாச்சாரத்தை உண்டுபன்னியுள்ளது. உலமாக்களை மையப்படுத்தி நாம் முதலாவது கற்க வேண்டிய கல்வியில் இருந்து எமது தஃவாப் பயணத்தை ஆரம்பித்திருந்தால் இன்று வானம் பார்த்த மண்ணாய் தெளிவை நாடி பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

அன்பின் வாசக நெஞ்சங்களே! இதுவல்ல எமது முதற்கடமை. நாம் அனைவரும் சிக்கித்தவிக்கும் மயக்க நிலையில் இருந்து வெளியேறி அடிப்படையாகக் கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளன. அவற்றை நாம் நல்லமுறையில் கற்றுக் கொண்டால் அகீதாவைப் பாழ்படுத்தி குப்ரின் பால் இட்டுச் செல்லக்கூடிய எந்தவொரு விடயம் எம்முன் தோற்றம் பெற்றாலும் நடுநிலையாகச் செயற்படுவதற்கும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிந்து காரியமாற்றுவதற்கும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அப்படியான அடிப்படைப் பாடங்களில் முதன்மையானது தான் எம்மில் பெரும்பான்மையானவர்கள் கற்கத் தவறிய அகீதா தொடர்பான பாடமாகும். இன்று தவ்ஹீத் பேசக்கூடிய பலரிடத்தில் அகீதா மற்றும் தவ்ஹீத் பற்றிய தெளிவில்லாத நிலையைக் காண்கின்றோம். அதிலும் குறிப்பாக எம்மைப் படைத்துப் பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வைப் பற்றி ஒரு முஸ்லிமின் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று கேட்டால் அதைப் பற்றிக்கூட சரிவரத் தெளிவுபடுத்த முடியாத அநாதரவான நிலையில் இருப்பதைக் காண்கிறோம். இன்று எம்சமூகத்தில் அல்லாஹ்வுடைய பண்புகள் விடயத்தில் பரவிக்காணப்படும் முஃதஸிலாக்களின் கொள்கை கோட்பாடுகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரு முஸ்லிமுக்குத் தன்னைப் படைத்த ரப்பைப் பற்றித் தெரியாவிட்டால் அவன் முஸ்லிமாகத்தான் இருக்க முடியுமா? எனவே, இப்படிப்பட்டவர்களிடத்தில் எப்படி இஸ்லாம், ஈமான் ஆகியவற்றின் அடிப்படைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட கிளை அம்சங்கள் பற்றிய அறிவை எதிர்பார்க்க முடியும்? இவ்விடயத்தில் எம்சமூகத்திற்கு மத்தியில் காணப்படும் பொதுமக்களும் பல மௌலவிமார்களும் சமாந்திரமாகச் செயற்பட்டு வருவதினால் எம் சமூகத்தின் தலைமைகள் அகீதாவில் தவறுவிடும் போது அதனைக்கூடத் திருத்துவதற்கு திராணியற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

நாங்கள் எங்களுடைய ஆரம்பப் பாடத்தை மறந்துவிட்டு பெரும்பெரும் மஸாயில்களை ஆராட்சி செய்கின்றவர்களாகவும் அவற்றைப் பற்றி கருத்துப் பரிமாறுகின்றவர்களாகவும் இருந்து கொண்டு எமக்கு மத்தியில் வழிகேடர்களான முஃதஸிலாக்கள், அஷ்அரியாக்கள், ஹவாரிஜ்கள், ஜஹ்மிய்யாக்கள் போன்றோரின் கொள்கை கோட்பாடுகள் உள்ளவாங்கப்பட்டு நாம் எம்மை அறியாமலேயே அஹ்லுஸ்ஸுன்னாவிலிருந்து வெளியேறி வழிகெட்ட கொள்கைகள், குப்ர் மற்றும் பித்அத் போன்றவற்றில் மூழ்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். இப்படியான நிலை தொடருமானால் இஸ்லாமிய மார்க்கத்தில் எமக்கு எப்பங்குதான் இருக்கப் போகின்றது? மூன்று அடிப்படைகளை விளங்காவிட்டால் ஒருவன் முஸ்லிமாக இருக்க முடியாது என்பதை இமாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் உஸூலுஸ் ஸலாலா என்ற நூலைக் கற்கும் போது புரிந்து கொள்ள முடியும். அப்படியான முதன்மைவகிக்கும் பாடத்தின் கேள்விகள் அனைத்தும் எம்முடைய ரப், நபி மற்றும் மார்க்கம் ஆகியவற்றைத் தழுவியனவாகவே காணப்படுகின்றன என்பதை யாவரும் அறிந்திருக்கின்றோம்.

எனவேதான் அன்பின் இஸ்லாமிய உள்ளங்களே! இந்த அறிவைத் தேடிக் கற்றுக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண்ணினதும் கட்டாயக் கடமையாகும். இந்த அறிவைக் கற்றுக் கொள்கின்ற விடயத்தை அவசியப்படுத்தி பின்வருமாறு இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: “மனிதர்கள் உணவு குடிபானத்தைவிட அறிவின் பால் அதிக தேவையுடையவர்கள். ஏனெனில், மனிதன் ஒரு நாளில் உணவு மற்றும் குடிபானம் ஆகியவற்றில் ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நாட்டமுடையவனாக இருக்கின்றான். மாற்றமாக, அவன் அறிவின்பால் ஒரு நாளில் விடும் மூச்சுக்களின் அளவு நாட்டமுடையவனாக இருக்கின்றான்”.

மிகவும் கவளைக்குரிய நிலைமை என்னவென்றால் இன்றைய தமிழ் பேசும் உலகத்தின் மிம்பர் மேடைகள் அரசியல், வாக்குவாதம் மற்றும் கருத்துவேறுபாடுடைய மஸாயில்களில் நடுநிலை தவறிய பேச்சுக்கள் போன்றன அரங்கேற்றப்படக்கூடிய இடங்களாக மாற்றம் பெற்று வருகின்றன.

மேலும், போயாதினங்கள் மற்றும் சுழற்சி முறைக் காலங்களை மையப்படுத்திய ஒன்றுகூடல்கள் போன்றவற்றின் போது பள்ளிவாசல்கள் அதிரும் பேச்சுக்கள் ஊர் முலங்க, அல்லாஹ்வைப்பற்றி சரியான அடிப்படை தெரியாத பொதுமக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றன. பேசுவதற்குத் தலைப்பே இல்லை என்ற அளவுக்கு நிகழ்ச்சி நிரல்கள் பூரணத்துவம் அடைந்திருந்தாலும் அடிக்கடி போதிக்கப்பட வேண்டிய அகீதா தொடர்பான தலைப்புக்கள் விலாசமற்றுக் காணப்படுகின்றன.

சகோதரர்களே! பள்ளிவாசல்களின் வரலாற்றுப் பக்கங்களைப் பிரட்டிப் பாருங்கள்! இந்த இஸ்லாமியக் கற்கை நெறி எங்கிருந்து எப்படி ஆரம்பிக்கப்பட்டதென்பதைத் தெரிந்து கொள்ள! அப்படியான பள்ளிவாசல்கள் ஈன்றெடுத்த செல்வங்கள் இன்று வரை எப்படியான வழிகாட்டல்களை இந்த சமூகத்திற்கு வழங்கியிருக்கிறார்கள் என்பதை எப்போதாவது சிந்தித்திருக்கின்றீர்களா?

மேலும், பல்வேறுபட்ட வழிகெட்ட சிந்தனைகள் அரங்கேற்றப்பட்ட காலந்தொட்டு அவற்றுக்குத் தக்க பதிலடிகளைக் கொடுத்து இன்று வரை நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் கொள்கைதான் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கையாகும். இக்கொள்கையின் வாரிஸ்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் எமக்கு அவர்களுடைய கொள்கை கோட்பாடுகள் பற்றிய தெளிவில்லாமல் இருக்கும் போது நாமும் இக்கொள்கைக்கு அன்னியர்களாகவே கருதப்படுவோம்.

எனவே, அனைத்தையும் ஒதுக்கிவிட்டு காலநேரங்களை வகுத்து அகீதாவைக் கற்பதற்கு முன்வாருங்கள். அல்லாஹ்வின் கிருபையால் அகீதாவை அடிப்படையில் இருந்து கற்பதற்குச் சிறந்த பல நூற்களை எம்முடைய அறிஞர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள். அப்புத்தகங்களை மார்க்கத்தைக் கற்றவர்கள் படிப்படியாகத் தெரிவு செய்து அவற்றுக்கான விரிவுரை நூற்களையும் கற்று விளக்கம் சொல்வார்களென்றால் நாளடைவில் பல பெறுபேறுகளை எமது சமூகத்திற்கு மத்தியில் காணலாம்.

எம்முடைய மார்க்கத்திற்குப் பணிவிடை செய்த பல உலமாப் பெருந்தகைகள் இத்துறையில் சிறந்த பல அனந்தரச் சொத்துக்களை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாங்கள் அடிப்படையில் இருந்து சுவீகரித்துக் கொள்ள வேண்டும். ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமியாவைப் பாருங்கள்! ஏன் நவீன யுகத்தில் தவ்ஹீத் சிந்தனைக்கு புத்துயிர் வழங்கிய ஷெய்ஹுல் இஸ்லாம் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ்வைப் பாருங்கள்! அவர்களைப் போன்றவர்கள் வழங்கிய அகீதா தொடர்பான சிறுசிறு தொகுப்புக்கள் ஆரம்பத்திலிருந்து அகீதாவைக்கற்க முனையும் எங்களைப் போன்றவர்களுக்கு பிரயோசனம் அளிக்கும் என்பதில் யாதொரு ஐயப்பாடுமில்லை.

இதுபோக, அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தினரின் கொள்கை கோட்பாடுகள், பிரச்சினைகளை அணுகும் விதம், குர்ஆனையும் சுன்னாவையும் விளங்குவதற்கான அடிப்படைகள் போன்ற அம்சங்களைக் கற்று அதற்குத் தக நின்றால் நிச்சயமாக தற்போது இருக்கின்ற நிலை மாறி மாற்றங்கள் பல உண்டாகும். இன்ஷா அல்லாஹ்.

இப்படியான அமைப்பில் நாம் செயற்பட்டு இன்று வரை வெற்றிக்கான பல அறிகுறிகளைக் கண்டுவருகின்றோம். எமது பள்ளிவாசலான அத்தார் அஸ்ஸலபிய்யா பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டு காலத்திற்குக் காலம் தலைசிறந்த உள்நாட்டு வெளிநாட்டு உலமாக்களின் தீர்க்கமான வழிகாட்டல்களைப் பெற்று இன்றுவரை நடுநிலைமையுடன் செயற்பட்டு வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ். இங்கு நாம் எமதூர் மக்களுக்கும் தமிழ்பேசும் மக்களுக்குமாகப் பல அடிப்படை வழிகாட்டல்களை வழங்கிக் கொண்டிருக்கின்றோம். எம்முடனிருக்கும் ஏகத்துவ வாதிகளுக்குத் தெளிவான அகீதாவை வழங்கும் நோக்கில் எம்முன்னோர்கள் மற்றும் தற்காலத்தில் வாழ்ந்து மரணித்த பல அறிஞர்களின் அடிப்படை அகீதா நூற்களைப் போதனை செய்து வருகின்றோம். அதன் நிரலில்:

• நவாகிலுல் இஸ்லாம்
• அல்கவாஇதுல் அர்பஃ
• அல்உஸூலுஸ் ஸித்தா
• ஸலாஸதுல் உஸூல்
• லாமிய்யா
• அல்முஹ்தார் மின் அஹாதீஸி ஸையிதில் அப்ரார்
• லும்அதுல் இஃதிகாத்
• அல்அகீததுல் வாஸிதிய்யா
• உஸூலு அகீததி அஹ்லிஸ் ஸுன்னா
• மஸாஇலுல் ஜாஹிலிய்யா
• அல்கவாஇதுல் ஹஸ்ஸான்
• அல்மபாதிஉல் முபீதா
• ஷுரூத்து லாஇலாஹ இல்லல்லாஹ்

போன்ற பல நூற்களைப் போதித்துள்ளோம். இவற்றில் சில புத்தகங்கள் ஒரு தடவைக்கு மேலாகவும் எமது பள்ளிவாசலில் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தவிர்ந்த இஸ்லாமியக் கல்வியின் ஏனைய பிரிவுகளுடன் தொடர்பான நூற்களும் இங்கு கற்பிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஸிபது ஸலாதின் நபி, சீறதுன் நபி, மனாகிபுஸ் ஸஹாபா, கிதாபுஸ் ஸியாம், தாரீஹு பனீ இஸ்ராயீல், கஸசுல் அன்பியா போன்றவற்றைக் குறிப்பிடலாம். மேலதிகமாக, இன்னும் சில நூற்கள் தினம் தோறும் தொழுகைகளுக்குப் பின்னால் போதிக்கப்பட்டு வருகின்றன. அதன் நிரலில் கிதாபுத் தவ்ஹீத், பத்ஹுல் அல்லாம், மிஸ்குல் கிதாம், தப்ஸீர் இப்னு உஸைமீன், ரியாளுஸ் ஸாலிஹீன், ஹாஇய்யா, அஸ்ஸஹீஹுல் முஸ்னத் மின் அஸ்பாபின் நுஸூல் ஆகிய நூற்களைக் குறிப்பிடலாம்.

மேற்குறித்த நூற்கள் போதனை செய்யப்படும் போது மாணவர்களுடன் பொதுமக்களுமாகக் கலந்து பயன்பெறுவார்கள். ஏனெனில் இந்த அறிவை சம்பாதித்துக் கொள்ள மார்க்கத்தில் வயது நிர்ணயம் கிடையாது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.

நாம் நடாத்தி முடித்த வகுப்புக்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் காலக்கிரமத்தில் அதற்கான தனியானதோர் இணையதளம் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதனில் எமது வகுப்புக்கள் அனைத்தையும் பதிவு செய்யவுள்ளோம். அத்தோடு தொலைபேசியில் கூட பதிவிறக்கம் செய்து செவிமடுப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளோம். இவை அனைத்துக்கும் அல்லாஹ்வின் உதவி எங்களுக்கு அவசியமாகும். தற்போதைக்கு எம்முறைய ஒலிப்பதிவுகளைப் பெற நாடுபவர்கள் 0777199095 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அழைப்பினை ஏற்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

எனவே, இப்படியான அடிப்படை நூற்களை நீங்களும் உங்கள் தஃவாப் பணிமனைகளில் கற்பித்து வாருங்கள். அதன் காரணமாக அகீதாவில் உறுதிமிக்க சமூகம் ஒன்றை உருவாக்க முடியும். இன்ஷா அல்லாஹ்.

– அபூ ஹுனைப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *