Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » நீக்கப்பட்ட சலுகை (அல்குர்ஆன் விளக்கம்)

நீக்கப்பட்ட சலுகை (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

‘கணக்கிடப்பட்ட சில தினங்களில் (அது நிறைவேற்றப்பட வேண்டியதாகும்.) ஆனால், உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். எனினும், (முதுமை அல்லது நிரந்தர நோய் போன்ற காரணங்களால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கட்டும். எனினும், எவரேனும் தானாக விரும்பி அதிகமாகக் கொடுத்தால் அது அவருக்கு நல்லது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நல்லதாகும்.’ (2:184)

ஆரம்பத்தில் நோன்பு விதியாக்கப்பட்ட போது விரும்பியவர்கள் நோன்பைப் பிடிக்கலாம். சக்தியிருந்தும் பிடிக்க விரும்பாதவர்கள் ஒரு ஏழைக்கு உணவை தர்மம் செய்து நோன்பை விடலாம். இருப்பினும் நோன்பு நோற்பதே சிறந்தது என்று சலுகை அளிக்கப்பட்டது. பின்னர்,

‘எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப் படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு செய்தான்.)’ (2:185)

என்ற வசனத்தின் மூலம் நோன்பு நோற்க சக்தியுள்ளவர்கள் கட்டாயம் நோன்பு நோற்றேயாக வேண்டும் என சட்டம் விதியாக்கப்பட்டது.

எனினும், 2:184 வசனம் சொன்ன சலுகையை நிரந்தர நோயாளிகள், வயோதிபம் காரணமாக நோன்பு நோற்கும் ஆற்றல் அற்றோர், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றோர் பயன்படுத்தலாம். அவர்கள் நோன்பு நோற்பதற்குப் பகரமாக ஒரு நோன்புக்கு ஒரு ஏழைக்கு உணவு என்ற அடிப்படையில் தர்மம் செய்துவிட்டால் போதுமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *