Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » ஹஜ்ஜும் சாதிப்பாகுபாடு ஒழிப்பும் (அல்குர்ஆன் விளக்கம்)

ஹஜ்ஜும் சாதிப்பாகுபாடு ஒழிப்பும் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

‘பின்னர் மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ அங்கிருந்து நீங்களும் திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’
(2:199)

ஹஜ் கடமையை ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகின்றனர். வெள்ளை-கறுப்பு என்ற நிற பேதம் இல்லாமல் அரபி-அஜமி என்ற மொழி பேதமில்லாமல் பிரதேச வேறுபாடில்லாமல் எல்லா மக்களும் ஒன்று போல் கூடும் சமத்துவ, சகோதரத்துவ சங்கமம் அது! ஜாஹிலிய்யாக் காலத்தில் இருந்து வந்த எல்லா வகையான தீண்டாமைக் கொடுமைகளையும் கொழுத்திப் போட்டது இந்த ஹஜ் கடமை. ஹஜ்ஜின் ஒன்பதாம் நாள் மக்கள் எல்லோரும் அறபாவில் ஒன்று கூட வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளையாகும்.

ஜாஹிலிய்யா காலத்தில் உயர் குலத்தவர்களான குறைஷpகள் முஸ்தலிபா எனும் புனித பிரதேசத்தில் இருப்பார்கள். சாதாரண மக்கள் அறபா எனும் இடத்தில் இருப்பார்கள். நபி(ச) அவர்களும் உயர் குலத்தில் பிறந்தவர். இந்த சந்தர்ப்பத்தில் நபி(ச) அவர்கள் தனது குலத்தைப் பாதுகாக்க நினைத்தால் தம்மோடு வந்து சேருவார். அவரது தோழர்களான சாதாரண மக்களை விட்டும் பிரிந்து வருவார் என உயர் குலத்தவர்கள் எண்ணினர். ஆயினும் நபி(ச) அவர்கள் அறபா எனும் சாதாரண மக்கள் ஒன்று கூடும் இடத்தில் ஒன்று கூடி தீண்டாமையை ஒழித்தார்கள். அது மட்டுமன்றி ஹஜ்ஜின் ஒன்பதாம் நாள் அறபாவில் ஒன்று கூடாவிட்டால் ஹஜ் கடமையே நிறைவேறாது என்றும் அறிவித்து குலப்பெருமை பேசியவர்களைத் தனிமைப்படுத்தினார்கள்.

மக்கள் எங்கிருந்து புறப்படுகின்றார்களோ அங்கிருந்து நீங்களும் புற்படுங்கள் எனக் கூறும் இந்தக் குர்ஆன் வசனமும் ஜாஹிலிய்யா காலத்தில் ஒதுக்கப்பட்டவர்களை மக்கள் என்று கூறும் அதே நேரம் தாம் உயர் சாதியினர் எனப் பெருமை பேசியவர்களை மனிதர்கள் என்ற வார்த்தைக்குள் சேர்க்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கதாகும். நபி(ச) அவர்களின் இந்த நடவடிக்கை சாதி வெறி மீது விழுந்த சம்மட்டி அடியாகும்; சாதி வெறிக்குக் கட்டிய சமாதியாகும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *