Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » முஃதஸிலா வழியில் செல்வோர்

முஃதஸிலா வழியில் செல்வோர்

بسم الله الرحمن الرحيم

ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc
(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்)

[இக்கட்டுரையின் மின் புத்தகத்தை (PDF eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்] –
தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் இஸ்லாமின் பெயரால் தோன்றின. தாங்கள் மட்டுமே சத்தியத்தில் இருப்பதாக ஒவ்வொரு கூட்டத்தினரும் வாதிட்டனர். நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் கடைபிடித்த சத்தியக்கொள்கையில் இருந்த நல்லோர்களை வழிகேடர்கள் என இவர்கள் கூறினர்.

இவர்களில் ஒரு பிரிவினர்தான் முஃதஸிலாக்கள். இவர்கள் இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் தோன்றி அழிந்துபோன ஒரு கூட்டத்தைப் பற்றி இன்று நாம் ஏன் பேச வேண்டும் என்ற சந்தேகம் சிலருக்கு வரலாம்.

அழிந்துபோன இந்த பிரிவினர் முன்பு கூறிச் சென்ற, நபிமொழிகளுக்கு எதிரான சில வழிகெட்ட கொள்கைகளை, தற்போது தமிழகத்தில் சிலவருடங்களாக சகோதரர் பீஜே அவர்கள் கூறி வருகிறார். அவரின் இயக்கத்தைச் சார்ந்தவர்களும் அதை உண்மை என நம்புகின்றனர். இதனால் தற்போது இஸ்லாமிய சமுதாயத்தில் மிகப்பெரிய கொள்கைக் குழப்பம் ஏற்பட்டு, நபிமொழிகளை நம்பும் முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் என இவர்கள் கூறிவருகின்றனர்.

முஃதஸிலாக்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை அவனுடைய தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியவாறு விளங்கவில்லை. ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மறுத்து தன் சுய அறிவையே மார்க்கமாக ஆக்கிக்கொண்டனர். தங்களின் அறிவுக்கு ஒத்துவராத நபிமொழிகளை சம்பந்தம் இல்லாத குர்ஆன் வசனங்களை காட்டி அந்த நபிமொழிகள் குர்ஆனுடன் முரண்படுகிறது எனக் கூறினர். தங்கள் அறிவுக்கு ஒத்துவராத ஹதீஸ்கள் நபியின் கூற்றாக இருக்காது என அவர்களாக எண்ணிக்கொண்டனர். சுயஅறிவே இவர்களின் அடிப்படை ஆதாரம். இதற்கு ஏற்றவாறு குர்ஆனைப் புரிந்தார்கள். இதற்கு ஒத்துவராத ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை பொய்யானக் காரணங்களைக் கூறி அவற்றில் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி மறுத்தனர். இதுவே அவர்களின் வழிகேட்டிற்கு காரணம்.

தற்போது தமிழகத்தில் உள்ள சகோதரர் பீஜே அவர்களும் இதே வேலையை செய்து வருகிறார். நபிமொழிகளின் மீதுள்ள நம்பிக்கையை விட தன்அறிவின் மீதுள்ள நம்பிக்கை இவருக்கு மிகைத்துவிட்டது. தன் அறிவிக்குப்படுவதே மார்க்கம். தன் அறிவிக்கு ஒத்துவராதவை ஹதீஸ்களாக இருந்தாலும் அவை மார்க்கமாகாது என்ற நிலைக்கு வந்துவிட்டார். முஃதஸிலாக்களுக்கும் இவருக்கும் இடையே சில வித்தியாசங்கள் இருந்தாலும் பல ஒற்றுமைகள் உள்ளன. அந்த ஒற்றுமைகளை கீழே காணலாம்.

கொள்கை ஒற்றுமை

  1. முஃதஸிலாக்கள் குர்ஆன் வசனங்களை நேரடிப் பொருளில் புரியாமல் தன் சுய சிந்தனைக்கு ஏற்றவாறு வசனங்களை வளைத்தது போல் இவரும் குர்ஆன் வசனங்களை தன் கருத்திற்கு ஏற்றவாறு வளைத்தும் ஒடித்தும் வருகிறார். உதாரணமாக (2:102) வது வசனத்தை பல இடங்களில் வெட்டி அதன் எதார்த்தமான அர்த்தத்தை மாற்றி இதுவரை யாரும் கூறாத விளக்கத்தை கூறியுள்ளார். அதுவும் குா்ஆனுக்கு முற்றிலும் எதிரான விளக்கம்.
  2. இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் மட்டுமே மறுத்த சில நபிமொழிகளை இன்று இவர் மட்டுமே மறுத்து வருகிறார். இந்த நபிமொழிகளை மறுப்பதற்கு முஃதஸிலாக்கள் என்ன வாதங்களை வைத்தார்களோ அதே வாதங்களை இன்று இவரும் கூறி வருகிறார். உதாரணமாக சூனியம் கண்ணேறு தொடர்பான பல நபிமொழிகளை மறுத்துள்ளார்.
  3. நபிமொழிகளை மறுக்கும் போது அவை குர்ஆனுக்கு முரண்படுகிறது என முஃதஸிலாக்கள் கூறியது போல் பொய்யானக் காரணத்தைக் கூறுகிறார்.
  4. நபிமொழிகளை நம்பிய முஸ்லிம்களை இணைவைப்பாளர்கள் என முஃதஸிலாக்கள் துணிந்து கூறியது போல் தற்போது இவரும் கூறுகிறார்.

இவர் முஃதஸிலாக்களின் கொள்கைகளை ஒவ்வொன்றாக படித்து அறிந்துவிட்டு அவற்றைக் கூறவில்லை. இவர் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்காமல் நாத்திகச் சிந்தனையின் அடிப்படையில் சிந்திப்பதால் இவரை அறியாமலேயே இதற்கு முன்பு இவரைப் போன்று சிந்தித்த முஃதஸிலாக்களுடன் சில விசயங்களில் ஒன்றுபட்டுள்ளார். நாம் இன்ன இன்ன கொள்கையில் முஃதஸிலாக்களுடன் சேர்ந்துள்ளோம் என்ற உண்மை தாமதமாகவே இவருக்குத் தெரிய வந்துள்ளது.

ஏகத்துவத்திற்காக பல தியாகங்களைச் செய்த சகோதரர் பீஜே தற்போது தடம்மாறி முஃதஸிலாக்களின் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறார். இதை இலங்கையைச் சார்ந்த அறிஞர்கள் அவருக்கு உணர்த்தினர். ஆனால் அவர் உணர்ந்தபாடில்லை.

தனது ஆன்லைன்பீஜே இணையதளத்தில் முஃதஸிலாக்களைப் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டார். அதில் இவருக்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை மட்டும் சுட்டிக்காட்டி இவர் முஃதஸிலா வழியில் செல்லவில்லை என்பது போல் சித்தரித்துள்ளார். ஆனால் இவருக்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள பல ஒற்றுமைகள் குறித்து வாய்திறக்கவில்லை.

முஃதஸிலாக்களின் அனைத்துக் கொள்கையையும் இவர் கூறுகிறார் என்று நாம் குற்றம்சாட்டவில்லை. முஃதஸிலாக்கள் விட்டுச் சென்ற சில வழிகெட்ட கொள்கை இவரிடம் உள்ளது என்பதே நம் விமர்சனம். சூனியம் கண்ணேறு சம்பந்தமான நபிமொழிகளை மறுத்து அதை நம்பக்கூடியவர்கள் இணைவைப்பாளர்கள் என்று முஃதஸிலாக்களைத் தவிர வேறு எந்த நல்லறிஞர்களும் கூறவில்லை. சகோதரர் பீஜே அச்சுப்பிசகாமல் அப்படியே இதேக் கருத்தைக் கூறுகிறார்.

இது சாதாரண மசாயில் பிரச்சனை இல்லை. முஃமின் முஷ்ரிக் என்ற கொள்கை ரீதியிலான பிரச்சனை. இக்கொள்கையில் இவர் முஃதஸிலாக்களுடன் இணைத்துள்ளதால் இவர் முஃதஸிலாக்களின் வழியில் செல்கிறார் என்ற விமர்சனம் இவருக்கு 100 சதவிகிதம் பொருந்தக்கூடியதே. இதை எப்படி மறுக்க முடியும்?

இது பொய்யான விமர்சனமோ காழ்ப்புணர்வினால் கூறும் அவதூறோ அல்ல. மாறாக அவர் செய்த செயலால் அவரே இழுத்துக்கொண்ட இழுக்காகும். கொள்கை ரீதியில் முஃதஸிலாக்களுக்கும் இவருக்கும் இவ்வளவு பெரிய ஒற்றுமை இருக்கும் போது எனக்கும் முஃதஸிலாக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இவர் மறுப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் தில்லுமுல்லு வேலையாகும்.

இந்தக் கட்டுரையில் முஃதஸிலாக்களைப் பற்றி நீங்கள் அறியும் ஒவ்வொரு தருணங்களிலும் சகோதரர் பீஜேவிற்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை பளிச்சென்று அறிவீர்கள் இன்ஷா அல்லாஹ்.

முஃதஸிலாக்களின் துவக்கம்

வாஸில் இப்னு அதாஃ என்பவனே முஃதஸிலாக்களின் தலைவன். இவனைப் பற்றி இமாம் தஹபீ(ரஹ்) கூறியதை அறிந்து கொள்ளுங்கள்.

سير أعلام النبلاء
(5 / 464)
210 وَاصِلُ بنُ عَطَاءٍ أَبُو حُذَيْفَةَ المَخْزُوْمِيُّ مَوْلاَهُم *
البَلِيْغُ، الأَفْوَهُ، أَبُو حُذَيْفَةَ المَخْزُوْمِيُّ مَوْلاَهُم، البَصْرِيُّ، الغَزَّالُ. وَقِيْلَ: وَلاَؤُهُ لِبَنِي ضَبَّةَ. مَوْلِدُه: سَنَةَ ثَمَانِيْنَ، بِالمَدِيْنَةِ. وَهُوَ وَعَمْرُو بنُ عُبَيْدٍ رَأْسَا الاعْتِزَالِ، طَرَدَهُ الحَسَنُ عَنْ مَجْلِسِهِ لَمَّا قَالَ: الفَاسِقُ لاَ مُؤْمِنٌ وَلاَ كَافِرٌ. فَانضَمَّ إِلَيْهِ عَمْرٌو، وَاعْتَزَلاَ حَلْقَةَ الحَسَنِ، فَسُمُّوا المُعْتَزِلَة

இவன் சொல்லாற்றலும், பேச்சாற்றலும் மிகுந்தவன். ஹிஜ்ரீ 80 ஆம் ஆண்டில் மதீனாவில் பிறந்தான். இவனும் அம்ர் இப்னு உபைத் என்பவனுமே முஃதஸிலா கொள்கையின் தலைவர்கள். இவன் இமாம் ஹஸனுல் பஸரீ(ரஹ்) அவர்களின் சபையில் இருந்தபோது பெரும்பாவம் செய்தவன் முஃமினாகவும் இருக்க மாட்டான். காஃபிராகவும் இருக்கமாட்டான் எனக் கூறியபோது ஹஸன் இவனைத் தன்னுடைய சபையிலிருந்து வெளியேற்றினார். இதன் பிறகு இவனுடன் அம்ரு என்பவனும் இணைந்துகொண்டான். இவ்விருவரும் ஹஸன்(ரஹ்) அவர்களின் சபையை புறக்கணித்தார்கள். எனவே, இவர்களுக்கு முஃதஸிலாக்கள் (விலகியவர்கள்) என்று பெயர் வந்தது.

நூல்: சியரு அஃலாமின் நுபலா பாகம் 5 பக்கம் 464

வரம்புமீறிய சிந்தனையும் அளவுக்கு அதிகமான பேச்சும் வாஸில் பின் அதாஉ வழிகெடுவதற்கு காரணமாகும்.

பெரும்பாவம் செய்தவன் காஃபிராகமாட்டான் என நபிமொழிகள் தெளிவாகக் கூறுகிறது. உதாரணத்திற்கு ஒரு சில நபிமொழிகளை அறிந்துகொள்வோம். :

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“”எனது இரட்சகனிடமிருந்து ஒரு(வான)வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார். அதாவது “எனது சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறக்கின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நான், “அவர் விபசாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா?” எனக் கேட்டேன். அவர் விபசாரத்திலோ திருட்டிலோ — ஈடுபட்டிருந்தாலும்தான்” என்று பதிலளித்தார்கள்.”
புகாரி (1237)

விபச்சாரமும் திருட்டும் பெரும்பாவமாகும். இப்பாவங்களை செய்தவன் ஓரிறைக்கொள்கையை ஏற்றிருந்தால் அவன் ஓரிறைக் கொள்கையை ஏற்றதற்காக அல்லாஹ் அவனுக்கு சொர்க்கத்தைத் தருகிறான். முஃமின்களுக்கே அல்லாஹ் சொர்க்கத்தை தருவான். எனவே பெரும்பாவம் செய்தவன் முஃமினாகமாட்டான் என்ற கருத்தை இந்த நபிமொழி தகர்க்கின்றது.

பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, “அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபசாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்” என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
நுால் புகாரி (18)

திருட்டு விபச்சாரம் பச்சிளம் குழந்தைகளை கொலை செய்தல் அவதூறு கூறுதல் ஆகியவை பெரும்பாவங்களாகும். மறுமையில் அல்லாஹ் நாடினால் இப்பாவங்களை மன்னிக்கலாம் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். பெரும்பாவம் செய்தவன் இறைநம்பிக்கையாளன் அல்ல என்றால் அவனை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். எனவே இந்த நபிமொழியும் பெரும்பாவம் செய்தவன் இறைநம்பிக்கையிலிருந்து வெளியேறிவிடுகிறான் என்ற கருத்தை தகர்க்கிறது.

வாஸில் என்பவன் நபிமொழிகளை ஏற்று அதனடிப்படையில் தீர்ப்புக் கூறவில்லை. மாறாக இவற்றை கவனிக்காமல் தன்னுடைய சுய சிந்தனை அடிப்படையில் பெரும்பாவம் செய்தவன் காஃபிராகவும் மாட்டான். முஃமினாகவும் இருக்கமாட்டான். இரண்டிற்கும் இடையிலான ஒரு நிலையில் இருக்கிறான் எனக் கூறினான்.

நபிமொழிகளை மறுத்து சுய சிந்தனையை புகுத்தியதே முஃதஸிலாக்கள் தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம். இதே வேலையை சகோதரர் பீஜே தற்போது ஹதீஸ்களில் செய்கிறார். இதனாலேயே இவர் முஃதஸிலா வழியில் செல்கிறார் என்கிறோம்.

முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்குவோர்

அல்லாஹ்வின் மார்க்கத்தில் உள்ள ஒரு முஸ்லிமை பெரும்பாவம் செய்த காரணத்திற்காக அவன் முஸ்லிமே இல்லை என்பது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். முஸ்லிமை கொல்வதற்கு நிகரான மாபெரும் ஃபித்னாவாகும். இந்த ஃபித்னாவில்தான் முதன்முதலில் முஃதஸிலாக்கள் உருவாகிறார்கள்.

ஆனால் சகோதரர் பீஜேவிற்கு இவை பெரிய குற்றமாகத் தெரியவில்லை. ஏனென்றால் இவரும் முஃதஸிலாக்களைப் போன்று நபிமொழிகளை நம்பும் முஸ்லிம்களுக்கு முஷ்ரிக் பட்டம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவேதான் இவருக்கு முஃதஸிலாக்களின் இந்த ஃபித்னா பாரதூரமாகத் தெரியவில்லை. முஃதஸிலாக்களுக்கு எப்படி வக்காலத்து வாங்குகிறார் என்று பாருங்கள்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றும் உள்ளது. அவர்கள் முஃதஸிலாக்கள் என்று அழைக்கப்படும்போது இதர வழிகேடான கொள்கைகள் அவர்களிடம் தோன்றவில்லை. மாறாக பெரும்பாவம் செய்தவனை முஃமின் என்றும் சொல்லக்கூடாது, காஃபிர் என்றும் சொல்லக் கூடாது என்ற இந்தக் கொள்கையே இருந்தது.

இந்த ஒன்றிலேயே சமுதாய அறிஞர்களின் கருத்துக்களை விட்டும் அவர்கள் தனித்து இருந்தார்கள். இதனாலேயே அவர்கள் முஃதஸிலாக்கள் – விலகியவர்கள் என்று அழைக்கப்படவும் செய்தார்கள். இது முஃதஸிலா என்ற பெயர் தோன்ற காரணமாக இருந்த நிகழ்வு.

முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் சமாதி வழிபாட்டுக் கொள்கையைவிட இது பயங்கரமானது அல்ல. இறைச் செய்தி மட்டுமே மார்க்கம் என்ற அடிப்படையைத் தகர்த்து சஹாபாக்களைப் பின்பற்றுவோம், இமாம்களைப் பின்பற்றுவோம் எனக் கூறும் சலபி மத்ஹபினர் மற்றும் நான்கு மத்ஹபினரின் கொள்கையை விட இது பாரதூரமானதல்ல.

(ஆன்லைன் பீஜே இணையதளம்)
http://www.onlinepj.com/deen_kula_penmani/2015-dkp/jan-dkp-2015/#.VUzovtKUewQ

இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்கள் உருவாக்கிய இந்தக் கொள்கைக் குழப்பம் சகோதரர் பீஜேவிற்கு சிறிய பிரச்சனையாகத் தெரிகிறது. சமாதி வழிபாட்டுடன் ஒப்பிடும் போது இது பாரதூரமானதல்ல எனக் கூறி முஃதஸிலாக்களின் வழிகேட்டை சாதாரணது போல் சித்தரிக்கிறார்.

இனம் இனத்தைச் சாரும் எனக் கூறுவார்கள். இந்தப் பழமொழி இவர் விசயத்தில் இங்கே பொருந்திப் போகிறது. இமாம் ஹஸன் பஸரி இப்பிரச்சனையில் மிகச்சரியாக நடந்துகொண்டார்கள். ஆனால் முஃதஸிலாக்களுக்கு வக்காலத்து வாங்கிய சகோதரர் பீஜே இமாம் ஹஸன் பஸரீ அவர்களை அநியாயமாக விமர்சனம் செய்வதைப் பாருங்கள்.

ஹஸன் பஸரி அல்லாஹ்வின் தூதர் அல்ல. அவருடன் ஒரு கொள்கையில் வாசில் பின் அதா என்பவர் முரண்பட்டால் அவருடன் விவாதித்து அவர் சொல்வது சரியல்ல என்று விளக்கம் சொல்வதுதான் ஹஸன் பஸரியின் கடமையாகும். அவ்வாறு கூறி ஆதாரம் காட்டாமல் நான் சொன்னதை எப்படி மறுக்கலாம் என்று ஒருவரை வெளியேற்றியதே இஸ்லாத்தின் அடிப்படையில் ஏற்கத்தக்கதல்ல.

அப்படியே ஹஸன் பஸரியின் சபையை விட்டு ஒரு சிறிய கொள்கைப் பிரச்சனைக்காக ஒருவர் விலக்கப்பட்டால் அதை அல்லாஹ்வின் தூதர் விலக்கி வைத்தது போல் எடுத்துக் கொண்ட செயலும் கண்டிக்கத்தக்கதே.

நான் சொல்வதை எவரும் எதிர்க்கக் கூடாது என்று ஹஸன் பஸரி நடந்து கொண்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட வாசில் பின் அதாவின் வழி வந்தவர்கள் இதன் பின்னர் இன்னும் சில தவறான கொள்கைகளையும் உருவாக்கிக் கொண்டனர். இக்கொள்கையை இவர்கள் உருவாக்குவதற்கு முன்னரே இவர்கள் முஃதசிலாக்கள் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டனர்.

(ஆன்லைன் பீஜே இணையதளம்)
http://www.onlinepj.com/deen_kula_penmani/2015-dkp/jan-dkp-2015/#.VUzovtKUewQ

முஃதஸிலாக்கள் நபிமொழிகளுடன் மோதியிருக்கும் போது ஹஸன் பஸரீ என்ற தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனையைப் போல் இதை சித்தரிக்கிறார். அல்லாஹ்வின் தூதருக்காக கோபம் கொண்ட ஹஸன் பஸரீ அவர்களை அல்லாஹ்வின் தூதர் போல் நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளார். மொத்தத்தில் முஃதஸிலாக்கள் உருவாகியதற்கு ஹஸன் பஸரீயே காரணம் என பலியை இமாம் ஹஸன் பஸரீ மீது சுமத்தியுள்ளார்.

குர்ஆன் வசனங்களை ஒடித்து நபிமொழிகளை மறுத்து இவர் கூறும் சுயக்கருத்தை யாராவது எதிர்த்தால் அவரை ஜமாத்தை விட்டும் விலக்குவதும் சமுதாயத்தில் அவரை கேவலப்படுத்த முயற்சிப்பதும் சகோதரர் பீஜே அவர்களின் இயல்பாகிவிட்டது. சகோதரர் பீஜேவிற்கு மாற்றுக்கருத்து சொன்னால் நம்மை ஒரு வழி செய்துவிடுவார் என்ற பயத்தை பரவலாக ஏற்படுத்தியுள்ளார். இந்த லட்சணத்தில் நான் சொல்வதை எவரும் எதிர்கக்கூடாது என்பது போல் ஹஸன் பஸரீ நடந்துகொண்டார் என விமர்சிக்கும் தகுதி இவருக்கு இருக்கிறதா?

குா்ஆன் சுன்னா அடிப்படையில் தான் பதிலளித்தப் பிறகும் அதை ஏற்காமல் எந்த ஆதாரமும் இன்றி தன் மனோ இச்சைப்படி ஒரு மாபெரும் கொள்கை குழப்பத்தை ஏற்படுத்தி அதில் பிடிவாதமாகவும் இருந்தால் அவர்களை விரட்டாமல் மடியில் வைத்து கொஞ்சவா முடியும்? திமிர்பிடித்து விலகிச் சென்றவர்களைத் தான் ஹஸன் பஸரீ அவர்களும் அப்படியே விட்டுவிட்டார். முஃதஸிலாக்கள் வழிகேடர்கள் எனக் கூறிய சகோதரர் பீஜே தற்போது முஃதஸிலாக்களின் மீது ஏன் இவ்வளவு கரிசனம் காட்டுகிறார் என்று புரிகிறதா?

ஐந்து அடிப்படைகளும் ஒற்றுமைகளும்

முஃதஸிலாக்கள் தங்களுக்கென ஐந்து அடிப்படை கொள்கையை வகுத்துள்ளனர். இந்த ஐந்து கொள்கைகளை கொண்டவர்களையே முஃதஸிலா எனக் கூற முடியும். டிஎன்டிஜே முஃதஸிலாக்கள் கூறிய இந்த ஐந்து விசயங்களில் எந்த ஒன்றிலும் உடன்படவில்லை. மாறாக இவர்களுக்கு எதிரான கருத்தைக் கூறுகிறது. அவ்வாறிருக்க எங்களை எப்படி முஃதஸிலாக்களுடன் சம்பந்தப்படுத்தலாம் என்று சகோதரர் பீஜே கேட்கிறார். இந்தக் கேள்விக்கு பதிலை அறிந்துகொள்வதற்கு முன்னால் முஃதஸிலாக்கள் உருவாக்கிய ஐந்து கொள்கைகளைப் பற்றி அறிவோம்.

1. தவ்ஹீத்
அல்லாஹ் தனக்கு இருப்பதாக சொன்ன தன்மைகளை அல்லாஹ்விற்கு இல்லை என மறுக்க வேண்டும். அல்லாஹ் கேட்பான். பார்ப்பான். வருவான் எனக் கூறினால் அல்லாஹ் படைப்பினங்களுக்கு ஒப்பாகிவிடுவான். எனவே, இவ்வாறு கூறுவது இணைவைப்பாகும். இதை மறுப்பது தான் தவ்ஹீதாகும். அல்லாஹ்விற்கு இந்தத் தன்மைகள் இருப்பதாக கூறும் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறினர்.

2. நேர்மை
அல்லாஹ் நேர்மையானவன். எனவே, அடியார்களில் யாராவது வழிகெட்டுப்போனால் அவர்கள் வழிகெட்டதற்கும் அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் இடையில் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விஷயம் விதிப்படி நடப்பதில்லை. மனிதர்களில் அவரவரின் முயற்சிக்கேற்பவே நன்மை தீமைகள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் விதியை மறுக்க வேண்டும் என்கின்றனர்.

3. இரண்டு நிலைகளுக்கிடையில் ஒரு நிலை
பெரும்பாவம் செய்தவனை முஃமின் என்றும் சொல்லக் கூடாது. காஃபிர் என்றும் சொல்லக் கூடாது. இந்த இரண்டு நிலைகளுக்கு இடையில் ஒரு நிலையில் அவன் இருக்கிறான் என்றே கூற வேண்டும் என்றனர்.

4. வாக்குறுதி மற்றும் எச்சரிக்கை நிறைவேற்றுதல்
பெரும்பாவம் செய்தவன் மரணித்து விட்டால் அவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அவன் நரகத்தில் நிரந்தரமாக கிடப்பான். அல்லாஹ் பெரும்பாவம் செய்தவர்களுக்கு என்ன தண்டனையைக் கூறி எச்சரிக்கிறானோ அதை கண்டிப்பாக நிறைவேற்றுவான். மன்னிக்கமாட்டான் எனக் கூறினர்.

5. நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்
ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் அநியாயம் செய்துவிட்டால் அதை பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும்.

இந்த ஐந்து வழிகெட்ட கருத்துக்களில் ஒன்றைக்கூட டிஎன்எஜே கூறவில்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த ஐந்து வழிகெட்ட கொள்கைக்கும் எது மூலக்காரணமாகவும் ஆணிவேராகவும் உள்ளதோ அந்த நோய் சகோதரர் பீஜேவிடம் உள்ளது. இந்த அடிப்படையில் சகோதரர் பீஜேவிற்கும் முஃதஸிலாவிற்கும் இடையே பெரிய சம்பந்தம் உள்ளது. நபிமொழிகள் முஃதஸிலாக்களின் இந்த ஐந்து அடிப்படைகளையும் நிராகரிக்கின்றன. பின்வரும் கருத்தே நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.

  1. அல்லாஹ் தனக்கு இருப்பதாக சொன்ன தன்மைகளை நாம் மறுத்து அதற்கு வேறு ஒரு விளக்கம் தரக்கூடாது. அந்தத் தன்மைகள் அல்லாஹ்விற்கு மனிதனைப் போன்றில்லாமல் அவனுடைய தகுதிக்கு ஏற்ப உள்ளது என்றே நம்ப வேண்டும்.
  2. அனைத்தும் விதியின் படியே நடக்கின்றன. நன்மை அல்லாஹ்வின் நாட்டத்தால் ஏற்படுவதைப் போன்று தீமைகளும் அவன் நாட்டத்தாலே ஏற்படுகிறது.
  3. பெரும்பாவம் செய்தவன் பாவி என்றாலும் அவன் இஸ்லாமை விட்டு வெளியேற மாட்டான்.
  4. அல்லாஹ் ஒரு பெரும்பாவத்திற்கு ஒரு தண்டனையை கூறி எச்சரித்தால் அந்த தண்டனையை அவன் கட்டாயம் நிறைவேற்றி ஆகவேண்டும் என்ற கட்டாயம் அல்லாஹ்விற்கு இல்லை. அவன் கருணையாளன்; அவன் நினைத்தால் மன்னிப்பான். அவன் நினைத்தால் தண்டிப்பான்.
  5. ஆட்சியாளர்கள் முஸ்லிம்களாக இருக்கும் வரை அவர்களிடம் அநியாயங்கள் வெளிப்பட்டாலும், நாம் பொறுமையாகவே இருக்க வேண்டும். அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யக் கூடாது. கட்டுப்பட்டே நடக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாக இணைவைப்போ, இறைமறுப்போ காணப்பட்டால் மட்டுமே எதிர் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

முஃதஸிலாக்கள் ஏற்படுத்தியுள்ள இந்த ஐந்து அடிப்படைகளுக்கும் நேர் எதிராக ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்கள் அனைத்தையும் குர்ஆனுக்கு முரண் என மறுத்துவிட்டு இந்த ஹதீஸ் மறுப்புக்கொள்கையின் மீதுதான் நாம் முன்னர் குறிப்பிட்ட ஐந்து அடிப்படைகளை இவர்கள் நிறுவியுள்ளனர்.

இவர்கள் கூறியுள்ள இந்த ஐந்து கருத்துக்களையும் ஆதாரங்களின் அடிப்படையில் சிந்திக்காமல் பாமரத்தனமாக மேலோட்டமாக சிந்தித்துப்பார்த்தால் சரியானவை போன்று தெரியும். இந்த சிந்தனையை ஆதாரமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகளே இவை. இதற்கு எதிராக வரும் நபிமொழிகளை சம்பந்தம் இல்லாத குர்ஆன் வசனங்களை காட்டி அவ்வசனங்களுக்கு இவை முரண்படுவதால் இவற்றை ஏற்கக்கூடாது என்றனர். தன் சுய சிந்தனையை ஆதாரமாகக் கொள்ளாமல் நபிமொழிகளை அவற்றின் வழியிலேயே ஏற்றிருந்தால் இந்த ஐந்து அடிப்படைகளையும் இவர்கள் கூறியிருக்கவே மாட்டார்கள்.

இன்று சகோதரர் பீஜே அவர்கள் இதே அடிப்படையில் தான் பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து வருகிறார். எனவேதான் சூனியம் கண்ணேறு தொடர்பாக வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பதில் இவர் முஃதஸிலாக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார். இப்பிரச்சனைக்கு நபிமொழிகளைக் கொண்டு விடைதேடாமல் பாமரத் தனமாக நாத்திகன் சிந்திப்பது போல் தன் மனோஇச்சையை ஆதாரமாகக் கொண்டதால் இந்த நபிமொழிகளை நம்புவது இணைவைப்பு என்ற பாரதூரமான கொள்கை குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதை அப்படியே இதற்கு முன் முஃதஸிலாக்கள் அச்சுப்பிசகாமல் கூறியுள்ளனர். இருவரின் அடிப்படையும் ஒன்று என்பதால் வழிகேடுகள் தானாக ஒன்றிணைந்துவிட்டது.

முஃதஸிலா என்றால் நபிமொழிகளை மறுத்து புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு விலகி தனியே சென்றவன் என்பது பொருள். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுத்து புதுப் புது இணைவைப்புகளை கண்டுபிடிக்கிற விசயத்தில் இந்த அளவுகோல் 100 சதவிகிதம் சகோதரர் பீஜேவிற்கு பொருந்திப்போகிறது.

கண்ணேறு உண்டு என்ற கருத்தில் ஒன்பதுக்கும் அதிகமான நபித்தோழர்கள் வழியாக ஏராளமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இருந்தும் அந்த ஹதீஸ்கள் அனைத்தையும் குா்ஆனுக்கு முரண் எனக் கூறி மறுக்கிறார். இதை நம்புவது இணைவைப்பு என்கிறார். இந்தக் கருத்தை இதற்கு முன்பு முஸ்லிம்களில் யாரும் சொல்லவில்லை. முஃதஸிலாக்கள் மட்டுமே கூறியுள்ளனர். இந்த அடிப்படையில் கொள்கை அளவில் இவர் முஃதஸிலாக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார்.

எனவேதான் இவர் முஃதஸிலாக்களின் வழியில் செல்கிறார் எனக் கூறுகிறோம். சில நேரங்களில் இவர்களை முஃதஸிலாக்கள் எனக் கூறுவது முஃதிஸிலாக்களின் அனைத்துக் கொள்கைகளையும் கூறுகிறார்கள் என்ற அர்தத்தில் அல்ல. மாறாக சில வழிகெட்டக் கருத்துக்களை கூறும் விசயத்தில் அவர்கள் சென்ற வழியில் செல்கிறார்கள் என்ற அர்தத்திலேயே ஆகும்.

அபூபக்ர் அல்ஜஸ்ஸாஸ்
அல்லாஹ் நாடும்போது மட்டுமே சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என குா்ஆனும் நபிமொழியும் கூறுகிறது. ஆனால் சகோதரர் பீஜே குா்ஆன் வசனத்திற்கு (2:102) சுய விளக்கம் கொடுத்து நபிமொழியை மறுத்து சூனியத்தால் பாதிப்பு ஏற்படாது எனக் கூறுகிறார். இந்தக் கொள்கையை இஸ்லாமிய வரலாற்றில் முஃதஸிலாக்களைத் தவிர வேறு யாரும் கூறவில்லை. இங்கேயும் சகோதரர் பீஜேவிற்கும் முஃதஸிலாக்களுக்கும் இடையே கொள்கை ஒற்றுமை ஏற்படுகிறது.

ஆனால் சகோதரர் பீஜே தான் முஃதஸிலாக் கொள்கையைக் கூறவில்லை என வாதிடுகிறார். சூனியத்தால் பாதிப்பு ஏற்படாது என நாங்கள் கூறுவது போல் முஃதஸிலா அல்லாத அபூபக்கர் ஜஸ்ஸாஸ் என்பவரும் இதைக் கூறியுள்ளார் எனக் கூறி தன் கொள்கைக்கு ஆள்சேர்க்க முயற்சிக்கிறார். ஆனால் உண்மையில் அபூபக்கர் ஜஸ்ஸாஸ் அவர்களும் முஃதஸிலா சிந்தனையுள்ளவர் என்பதே உண்மை.

இவர் ஹிஜ்ரி 370 ஆம் ஆண்டு மரணித்தார். இவர் இஸ்லாமிய அறிஞராக இருந்தாலும் முஃதஸிலாக்களின் சிந்தனை இவரிடம் மிகைத்திருந்தது. பல மார்க்க விஷயங்களில் முஃதஸிலாக்களின் கருத்துக்களை கூறக்கூடியவராகவே இருந்துள்ளார். இதை நாம் சுயமாக கூறவில்லை. இந்த விமர்சனத்தை இமாம் தஹபீ(ரஹ்) செய்துள்ளார்கள்.

سير أعلام النبلاء
(16/ 340)
. قَالَ:وَكَانَ الرَّازِيُّ يَزِيْدُ حَالُهُ عَلَى مَنْزِلَةِ الرُّهْبَانِ فِي العِبَادَةِ، فَأُرِيْدَ عَلَى القَضَاءِ فَامْتَنَعَ – رَحِمَهُ اللهُ (1) – ، وَقِيْلَ:كَانَ يمِيلُ إِلَى الاِعتزَالِ، وَفِي توَالِيفِهِ مَا يَدلُّ عَلَى ذَلِكَ فِي رُؤْيَةِ اللهِ وَغيْرِهَا، نَسْأَلُ اللهَ السَّلاَمةَ.

அபூ பக்ர் அவர்கள் தன்னுடைய நூல்களில் தன்னுடைய அறிவிப்பாளர் தொடர்வழியாக வந்த ஹதீஸ்களையே ஆதாரமாகக் கொள்வார். இவர் முஃதஸிலா சிந்தனையின் பக்கம் சாயக்கூடியவராக இருந்தார். அல்லாஹ்வை பார்ப்பது இன்னும் பல விஷயங்களில் இதற்கான ஆதாரங்களை அவருடைய நூல்களில் காணலாம். அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்பை வேண்டுகிறோம்.
நூல்: சியறு அஃலாமின் நுபலா (பாகம் 16 பக்கம் 340)

இமாம் இப்னு தைமியா அவர்களும் இவரை முஃதஸிலா என்று தன்னுடைய நூலில் கூறியுள்ளார்கள். முஃதஸிலாக் கொள்கையின் தலைவர்களில் ஒருவரான காளி அப்துல் ஜப்பார் என்பவர் தபகாதுல் முஃதஸிலா என்ற தன்னுடையில் நூலில் முஃதஸிலா அறிஞர்களின் பட்டியலில் இவரைக் குறிப்பிட்டுள்ளார்.

அபூபக்ர் ஜஸ்ஸாஸ் என்பவர் முஃதஸிலா சிந்தனையுள்ளவர் என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் அவர் தன்கொள்கைக்கு சார்புள்ளவர் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்காக பின்வருமாறு வக்காலத்து வாங்குகிறார்.

குர்ஆனுக்கு முரண்படுவதாக சில ஹதீஸ்களை முஃதஸிலாக்கள் மறுத்திருக்கிறார்கள். அதேபோன்று அந்த ஹதீஸ்களை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி மறுத்தால் அவர்களையும் முஃதஸிலாக்கள் என்று கூறுவது என சில அறிவிலிகள் அறிவற்ற செயலை செய்கிறார்கள்.

இந்த அடிப்படையிலேயே சூனியத்திற்கு சக்தி உண்டு என்பதை மறுத்த அபூபக்கர் அல்ஜஸ்ஸாஸ் போன்ற முஃதஸிலா அல்லாத அறிஞர்களை முஃதஸிலாக்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். நம்மையும் இவ்வாறே விமர்சிக்கின்றனர்.
(ஆன்லைன் பீஜே)
http://www.onlinepj.com/deen_kula_penmani/2015-dkp/jan-dkp-2015/#.VUzovtKUewQ

அபூபக்ர் ஜஸ்ஸாஸை முஃதஸிலா எனக் கூறுபவர்கள் அறிவிலிகள் என பீஜே கூறுகிறார். அப்படியானால் இவ்வாறு விமா்சனம் செய்த இமாம் தஹபீ அவர்களை அறிவிலி என்று இவர் கூறுகிறாரா? இமாம் இப்னு தைமியா அவர்களை அறிவிலி என்று கூறுகிறாரா? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். முஃதஸிலா சிந்தனையால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்காக குா்ஆன் சுன்னா அடிப்படையில் வாழ்ந்த சிறந்த அறிஞர்களை அறிவிலி என இவர் கூறுகிறார் என்றால் இனம் இனத்தைச் சாரும் என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.

முஃதஸிலாக்களின் தலைவன் காளி அப்துல் ஜப்பாரே இவரை முஃதஸிலா எனக் கூறிய பிறகு சகோதரர் பீஜே மட்டும் அபூபக்ர் ஜஸ்ஸாஸை முஃதஸிலா இல்லை என ஏன் கூற வேண்டும்? இவர் தன்கொள்கைக்கு ஆள்சேர்க்க நினைத்து இவர் கொள்கையில் உள்ளவர்கள் அனைவரும் முஃதஸிலாக்களே என்ற உண்மையை இதன் மூலம் வெளிப்படுத்திவிட்டார்.

இறுதியாக
நாங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் செயல்படக்கூடியவர்கள் என இவர்கள் பேசினாலும் எழுதினாலும் போதாது. அதில் உண்மையாளர்களாக நடந்துகாட்ட வேண்டும். இவர்களின் பேச்சு ஒன்றும் நடப்பும் ஒன்றுமாக இருப்பதால் இவர்களை தோலுறித்துக்காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் திருந்திவிட்டால் இவர்களைப் பற்றி எழுத வேண்டிய தேவை நமக்கில்லை.

குர்ஆனுக்கு முரண் என்ற பொய்யான காரணத்தைக் கூறி நாளுக்கு நாள் ஹதீஸ்களை இஷ்டத்திற்கு தூக்கி எரிந்துவிட்டு நாங்கள் ஹதீஸ்கள் அடிப்படையில் செயல்படும் இயக்கம் எனக் கூற இவர்கள் வெட்கப்பட வேண்டும். தலைவர் மறுத்த பல நபிமொழிகளில் ஒன்று நியாயமின்றி மறுக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்துவிட்டால் அந்த ஒரு நபிமொழிக்காக தலைவருக்கு எதிராக உண்மையை உரைத்துச் சொல்ல வேண்டும்.

தலைவர் மறுப்பதால் அதை சரிகாண்பதோ கண்டும்காணாமல் இருப்பதோ ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. ஈமான் உள்ள எந்த ஒரு முஃமினும் இந்த வழிகேட்டை நியாயப்படுத்தமாட்டான். இதைக் கண்டு ஊமையாக இருக்கவும் மாட்டான். தலைவர் பேச்சைக் கேட்டு நாம் நபிமொழிகளை தவறாக மறுத்து நபிமொழிகளை நம்பும் மக்களுக்கு எதிராக தாக்குதல் தொடுத்தால் மறுமையில் நம் வாழ்வு என்னவாகும் என்ற அச்சம் வர வேண்டும்.

நானும் ஒரு காலத்தில் சகோதரர் பீஜே அவர்களின் ஹதீஸ் மறுப்புக்கொள்கைக்கு ஆதாரவாக இருந்தவன். இதன் விபரீதத்தையும் உண்மை விளக்கத்தையும் அல்லாஹ் எனக்கு அளித்தவுடன் அதிலிருந்து மீண்டுவிட்டேன். அல்லாஹ் இதுபோன்ற சிந்தனையை இந்தத் துறையில் ஆழமாக ஈடுபடும் அனைவருக்கும் வழங்குவான் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இன்று சகோதரர் பீஜே அவர்களின் ஹதீஸ் நிராகரிப்புக் கொள்கைக்கு கொடிபிடிப்பவர்கள் என்றைக்காவது ஒரு நாள் இந்த ஹதீஸ் நிரகரிப்புக்கொள்கையை நஞ்சை விட கொடியதாக வெறுக்கும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவானாக.

சகோதரர் பீஜே முஃதஸிலா வழியில் செல்லவில்லை என்றால் அதை நிரூபிப்பதற்கு ஓரெ ஒரு வழி மட்டுமே உள்ளது. குா்ஆன் சுன்னா அடிப்படையில் வாழ்ந்த முஃதஸிலா அல்லாத சில இஸ்லாமி அறிஞர்கள் கொள்கைப் பிரச்சனையாக உள்ள சூனியம் கண்ணேறு இவ்விருவிசயத்தில் சகோதரர் பீஜேவின் நிலைபாட்டில் இருந்தார்கள் என்பதை அவர் நிரூபிக்க வேண்டும். இதற்கு ஒரு அறிஞரின் சொல்லையாவது எடுத்துக்காட்டுவாரா? அவரால் எடுத்துக்காட்டவே முடியாது.

இதைச் செய்யாமல் நான் முஃதஸிலா இல்லை. எனக்கும் முஃதஸிலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூப்பாடு போட்டால் உண்மையை உணரும் நோக்கில் நேர்மையாக சிந்திக்கும் மக்கள் யாரும் இதை நம்பப்போவதில்லை. இவர்கள் வழிகெட்டப் பிரிவினரான முஃதஸிலாக்கள் வழியில்தான் செல்கிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்ந்துகொள்வார்கள்.

சகோதரர் பீஜே தனக்கு நேர்வழி கிடைத்தப் பிறகு முஃமின்களின் அந்த வழியை விட்டுவிட்டு வழிகேடர்களின் வழியை தேர்வு செய்துகொண்டார் என்பதை மக்கள் அறிவார்கள்.

இவர்கள் வெறுத்தாலும் நபிவழியே நிலைத்து நிற்கும். ஹதீஸ் மறுப்புக்கொள்கை நிச்சயம் அழிந்தே போகும். அல்லாஹ் இவர்களுக்கு நபிவழியின் பக்கம் வழிகாட்டுவானாக!

5 comments

  1. மாஸா அல்லாஹ்! நீண்ட கட்டுரை என்றாலும் வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது உண்மையை தோலுரித்து காட்டிய சகோதரருக்கு நன்றியையும் பாராட்டையும் தொிவித்து கொள்கிறேன்,

  2. jazakallahu khair for your explanationa! thank you for identify the fitna of shiek pj! Indeed it is very very sad to read this article and very much worried about the people who follow PJ blindly! ALLAH is the only whom we will return!

  3. Masaallah!!
    ivarhalin nasthivha sinthanayai kalappathanaleye ivarhalukku intha muran padu thonruhirathu
    allah nammakkum avarhalukkum nervali kattuvanaha!

  4. Jazakallahu khair. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படும் என்ற த த ஜ வின் ஆபத்தான கொள்கையிலிருந்து அப்பாஸ் அலியின் விளக்கங்கள் மூலம் அல்லாஹ் எனக்கு தெளிவை தந்தான் .alhamdulillah.

  5. மாஷா அல்லாஹ். அப்பாஸ் அலீ அவர்களுக்கு அல்லா அருள் புரியட்டும். மிக தெளிவான விளக்கம்.

    இந்த விளக்கத்தை TNTJ வில் உள்ளவர்கள் திறந்த மனந்தோடு படித்தால் நிச்சயமாக படிப்பினை பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *