Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » அல்குர்ஆன் விளக்கம் – குழப்பம் கொலையை விடக் கொடியது

அல்குர்ஆன் விளக்கம் – குழப்பம் கொலையை விடக் கொடியது

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
‘(நபியே!) புனித மாதத்தில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அதில் போர் புரிவது பெரும் குற்றமே. (எனினும்) அல்லாஹ்வின் பாதையை விட்டும், (மக்களைத்) தடுப்பதும் அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுப்பதும் அங்குள்ளோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் குற்றமாகும். மேலும், குழப்பம் விளைவிப்பது கொலையை விட பெரும் குற்றமாகும் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்களுக்கு முடியுமானால் உங்கள் மார்க்கத்தை விட்டும் உங்களைத் திருப்புகின்ற வரை உங்களுடன் அவர்கள் போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் எவர் தனது மார்க்கத்தை விட்டும் மாறி காபிராக மரணித்தும் விடுகின்றாரோ, அவர்களது செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.’
(2:217)

குழப்பம் (பித்னா விளைவிப்பது) கொலையை விடக் கொடியது என்று இந்த வசனம் கூறுகின்றது. இதே கருத்தை 2:191 வசனமும் கூறுகின்றது. மக்கத்துக் காபிர்கள் அல்லாஹ்வுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல குற்றச் செயல்களைச் செய்து வந்தனர்.

  • அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுத்தனர்.
  • ஏக இறைவனை மறுத்தனர்.
  • மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளியை விட்டும் மக்களைத் தடுத்தனர்.
  • அங்கிருந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
  • இஸ்லாத்தை ஏற்ற மக்களை மதம் மாற்றுவதற்கு தம்மாலான அனைத்து வழிகளிலும் முயற்சித்தனர்.

குழப்பத்தை ஏற்படுத்தும் இவர்களின் இத்தகைய நடைமுறைகள் கொலையை விடக் கொடியது என்றே இந்த வசனம் கூறுகின்றது.

இந்த வசனம் அருளப்படுவதற்கு ஒரு பின்னணிச் சம்பவம் உள்ளது.

நபி(ச) அவர்கள் உளவு வேலைக்காக ஒரு சிறு குழுவை மதீனாவின் எல்லைப்புறத்திற்கு அனுப்பினார்கள். அவர்கள் இஸ்லாத்தின் எதிரிகள் சிலரைக் கண்டனர். அதற்கு அடுத்த நாள் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட ரஜப் மாதத்திற்குரியதாகும். இருப்பினும் தாம் முன்னைய மாதத்தின் இறுதியில் இருப்பதாக அவர்கள் கருதினர். அந்தப் படை, எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி ஒருவரைக் கொலை செய்து இருவரைக் கைதிகளாகப் பிடித்து வந்தனர். இவர்களின் இந்தச் செயலை நபி(ச) அவர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். போர் செய்யக் கூடாத மாதம் என்ற பொது விதியை மீறியமைக்காகவும், ஏவப்படாத வேலையைச் செய்துவிட்டு வந்ததற்காகவும் நபி(ச) அவர்கள் அக்குழுவைப் புறக்கணித்தார்கள். அப்போது முஹம்மது பொது விதியை மீறிவிட்டார் என இஸ்லாத்தின் எதிரிகள் விமர்சனம் செய்தனர். கஃபா பள்ளிக்கு வருவதைத் தடுக்கக் கூடாது என்பதும் பொது விதிதான். அங்குள்ளவர் களுக்கு அநீதி இழைக்கக் கூடாது என்பதும் பொது விதிதான். இதையெல்லாம் அப்பட்டமாக மீறியவர்கள் முஹம்மது பொது விதியை மீறிவிட்டார் என விமர்சனம் செய்வது கேலிக்குரியதாகும். இதைச் சுட்டிக்காட்டும் வண்ணமே இந்த வசனம் அருளப்பட்டதாகும்.

இந்த வசனம் அருளப்பட்ட பின்னர் அந்தக் குழுவினரை நபி(ச) அவர்கள் மன்னித்ததுடன் கொல்லப்பட்டவருக்கான நஷ;டஈட்டையும் வழங்கினார்கள். நபி(ச) அவர்கள் போரின் போது கூட பொது விதிகளை மீறக் கூடாது என்பதில் கவனம் செலுத்தியதுடன், தமது படையினர் தவறு செய்யும் போது அவர்களைக் கண்டித்து வழிநடாத்தியுள்ளமையையும், படையினர் விட்ட தவறுக்காகக் கூட தவறுகளுக்குரிய நஷ;டஈட்டைச் செலுத்தி பரிகாரம் கண்டுள்ளமை யையும் இது தெளிவுபடுத்துகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *