Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பிக்ஹுல் இஸ்லாம் குனூத்

பிக்ஹுல் இஸ்லாம் குனூத்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர்.

சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். சிலர் பின்பற்றித் தொழுதாலும் இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜதாக்கள் மறதிக்காக தனியாகச் செய்துவிட்டு ஸலாம் கொடுக்கின்றனர்.

சுபஹுடைய குனூத் ஸுன்னா அல்ல எனக் கருதுபவர்கள் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். மற்றும் சிலர் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றி ஏனைய தொழுகைகளைக் கூட தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த இரு பக்க தீவிரவாதமும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

சுபஹுடைய குனூத் ஸுன்னா அல்ல என்ற கருத்தையே வலுவானதாக – ராஜிஹானதாக – மிகச் சரியானதாகக் கருதினாலும் இது தொடர்பில் இருக்கும் இருபக்க தீவிரவாதப் போக்குகளும் தவிர்க்கப்பட வேண்டியவை எனக் கருதுவதால் இது குறித்து விரிவாக விளக்குவது பொருத்தமானது என நினைக்கின்றேன்.

ஐவேளைத் தொழுகையில் ஓதப்படும் குனூத்:
முஸ்லிம் சமூகம் சந்திக்கும் சவால்களின் போது ஐவேளைத் தொழுகையிலும் ‘குனூத் நவாஸில்’ ஓதுவது குறித்தும் தொடராக சுபஹுடைய தொழுகையில் குனூத் ஓதுவது குறித்தும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.

சுபஹுடைய குனூத்:
சுபஹுடைய குனூத் தொடர்பில் நான்கு விதமான கருத்துக்கள் உள்ளன. இந்தக் கருத்துக்கள் குறித்தும் அவற்றுக்கு அவரவர் காட்டும் ஆதாரங்கள் குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

1. சுபஹுடைய குனூத் கட்டாய சுன்னாக்களில் ஒன்றாகும். அதனைத் தொடராகச் செய்து வருவது முஸ்தஹப் ஆகும் என்பது ஷாபிஈ, மாலிகீ மத்ஹபுடைய அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இதற்குப் பின்வரும் ஹதீஸ்களை அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘நபி(ச) அவர்கள் சுபஹிலும் மஃரிபிலும் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.’
அறிவிப்பவர்: அல்பராஉ இப்னு ஆஸிப்(வ)
ஆதாரம்: முஸ்லிம் 678-305, தாரமி1638, நஸாஈ 1076

இந்நபிமொழியில் சுபஹ், மஃரிப் ஆகிய இரு தொழுகைகளிலும் நபி(ச) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்று கூறப்படுவதை சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவதற்கான ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘நபி(ச) அவர்கள் சுபஹில் குனூத் ஓதினார்களா என அனஸ் இப்னு மாலிக்(வ) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘ஆம்’ எனப் பதிலளித்தார்கள். ருகூஃ செய்வதற்கு முன்னர் ஓதினார்களா? என்று கேட்ட போது ருகூஃ விற்குப் பின்னர் சிறிது நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள்.’
அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு ஸீரீன்(ரஹ்)
ஆதாரம்: புஹாரி 1001, தாரமீ: 1745

முன்னர் கூறிய ஹதீஸை விட சுபஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறுபவர்களுக்கு இது பலமான ஆதாரமாகத் தெரிகின்றது.

‘அபூ ஹுரைரா(வ) அறிவித்தார். இறைத்தூதர்(ச) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ என்று சொன்ன பின்பு, ‘இறைவா! வலீத் இப்னு வலீத், ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப்(ர) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக!’ என்று பிரார்த்திப்பார்கள். அதை சப்தமாகச் சொல்வார்கள். தம் ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், ‘இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவாயாக’ என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள்.’ (புஹாரி: 4560)

இந்த நபிமொழியிலும் பஜ்ருத் தொழுகை சிலவற்றிலும் சில கோத்திரத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள் என்று கூறப்படுவதையும் சுபஹுடைய குனூத்திற்கான ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) கூறினார். (உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு – ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறியதற்குப் பின்னால், நபி(ச) அவர்கள், ‘இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்னும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை இறக்கியருளினான். ‘ (புஹாரி: 4069)

இந்த வசனம் இறங்கியதும் நபியவர்கள் சபிப்பதை விட்டு விட்டதாகவும் குனூத்தை விடவில்லை எனவும் சுபஹுடைய குனூத்தை சரிகாணும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

‘நபியவர்கள் பஜ்ர் தொழுகையில் உலகை விட்டும் பிரியும் வரையும் குனூத் ஓதினார்கள்.’
அறிவிப்பவர்: அனஸ்(வ)
ஆதாரம்: ஹாகிம் முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 4964, அஹ்மத் 12657

இமாம் ஹாகிம் அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிட்டாலும் இது பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஃபர் அர்ராஸி என்பவர் (இவரது இயற் பெயர் ஈஸா இப்னு மாஹான்) பலவீனமானவராவார். ஸஹீஹான அறிவிப்பாளர்களுக்கு முரணாக அறிவிக்கும் போக்குடையவர். இவர் குறித்து அறிஞர்கள் பல விமர்சனங்களைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாம் மேலே குறிப்பிட்டவை போன்ற ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து சுபஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதி வர வேண்டும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

2. சுபஹ், ஏனைய தொழுகைகளில் குனூத் ஓதுவது மாற்றப்பட்டதும் பித்அத்தான நடைமுறையுமாகும்.

இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தில் இருக்கின்றார்கள். இந்தக் கருத்துடைய அறிஞர்கள் பின்வரும் செய்திகளைத் தமக்குரிய ஆதாரமாகக் கொள்கின்றனர்.

1. ‘அபூ மாலிகில் அஸ்ஜயீ(வ) அவர்கள் தனது தந்தையிடம் ‘தந்தையே! நீங்கள் நபியவர்களுக்கும் அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகியோருக்கும் கூபாவில் சுமார் ஐந்து வருடங்கள் அலி(வ) அவர்களுக்கும் பின்னால் தொழுதுள்ளீர்கள். அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா?’ எனக் கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை அருமை மகனே! இது புதிதாக உருவானது’ எனப் பதில் கூறினார்கள்.’
(ஆதாரம்: அஹ்மத் 15879, 27210, திர்மிதி- 402, 244)

சில அறிவிப்புக்களில் பஜ்ரில் குனூத் ஓதினார்களா? என்றும் கேட்டதாகவும் (ஷரஹ் மஆனியல் ஆதார் 1474) பல அறிவிப்புக்களில் பொதுவாகக் கேட்கப்பட்டதாகவும் இடம் பெற்றுள்ளது. குனூத்தே இல்லை என்பதற்கும் நபி(ச) அவர்கள் ஓதியது மன்ஸூஹ் – மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கும், குனூத் ஒரு பித்அத்தான செயல் என்பதற்கும் இதனை பலமான ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

‘நபி(ச) அவர்கள் சுபஹில் குனூத் ஓதுவதைத் தடுத்தார்கள்.’
அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரழி)
ஆதாரம்: இப்னுமாஜா 1242, தாரகுத்ஸி 1688

இதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர் இடம்பெற்றுள்ளதாக அறிஞர் ஷ{ஐப் அல் அர்நாஊத் குறிப்பிடுகின்றார்கள். அல்பானி (ரஹ்) அவர்கள் இதனை இட்டுக்கட்டப்பட்டது என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே, இதனை இக்கருத்துக்கு வலுவூட்டும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

‘நபி(ச) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். அதற்கு முன்னரோ, பின்னரோ குனூத் ஓதியதில்லை என இப்னு மஸ்ஊத்(ச) அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள்.’
ஆதாரம்: இப்னு அபீiஷபா-342, அல்பஸ்ஸார்-1569, ஷரஹ் மஆனியல் ஆதார்-1465, தபரானி (அல்கபீர்)-9973

குனூத் குறித்து இப்னு உமர்(வ) அவர்கள் ‘அல்லாஹ் மீது சத்தியமாக அது பித்அத்தாகும். நபி(ச) அவர்கள் ஒரு மாதம் ஓதினார்கள். பின்னர் விட்டு விட்டார்கள்.’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பிஷ;ர் இப்னு ஹர்ப்(ரஹ்)
ஆதாரம்: தபரானி (அல்கபீர்)- 14065, பைஹகி (குப்றா)-3158
இதுவும் பலவீனமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டதாகும்.

இது போன்ற தகவல்களை மையமாகக் கொண்டு சுபஹுடைய குனூத் மட்டுமன்றி பிரச்சினையான சந்தர்ப்பங்களில் ஓதப்படக் கூடிய குனூத்தும் மன்ஸூஹ் – மாற்றப்பட்ட சட்டத்தில் உள்ளது. அதனைச் செய்யக்கூடாது. சுபஹுடைய குனூத் பித்அத்தாகும் என்ற கருத்தை இச்சாரார் கொண்டுள்ளனர்.

03. குனூத்தை ஓதவும் முடியும், விடவும் முடியும்:

மேற்குறிப்பிட்ட இரு சாராரின் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து ஓதுவதும் ஆகுமானது; விடுவதும் ஆகுமானது என்ற கருத்தில் சில அறிஞர்கள் உள்ளனர். சில அறிஞர்கள் சுபஹுடைய குனூத்தை தவிர்ப்பதே மிகச் சரியானது என்று கருதிய போதிலும் ஓதுவதைக் கண்டிக்காது உள்ளனர். இமாம் இப்னுல் கையிம் ஜவ்ஸி(ரஹ்), இமாம் சுப்யானுத் தவ்ரீ(ரஹ்), தபரி(ரஹ்) போன்றோரை இக்கருத்துடைய அறிஞர் களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தொடரும்….
இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *