Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » நோன்பும் நிய்யத்தும்

நோன்பும் நிய்யத்தும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்
நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி கொள்ள வேண்டும்.

‘யார் பஜ்ருக்கு முன்னர் நோன்பு நோற்பதாக உறுதி கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பே இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(தாரமி: 1845, அபூதாவூத்: 2454, நஸாஈ:2333)

இது பர்ழான நோன்புக்கான சட்டமாகும். நபி(ச) அவர்கள் சுபஹ் தொழுதுவிட்டு வீட்டுக்கு வந்து உண்ண ஏதும் உண்டா என்று கேட்பார்கள். இருந்தால் உண்பார்கள். இல்லாவிட்டால் நோன்பு நோற்பார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன. எனவே, ஸுன்னத்தான நோன்புக்கு சுபஹுக்கு முன்னரே ‘நிய்யத்’ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ரமழான் முழுவதும் நோன்பு நோற்கும் எண்ணத்தில் ஒருவர் இருக்கிறார். இடையில் ஒருநாள் சுபஹுடைய அதானுக்குப் பின்னர்தான் உறக்கத்திலிருந்து விழிக்கின்றார். இவர் தொடராக நோன்பு நோற்கும் எண்ணத்தில் இருந்ததால் இவரது நோன்பு ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால், ரமழான் முழுவதும் நோன்பு நோற்கும் எண்ணத்தில் இருந்த ஒருவர் இடையில் பயணம் அல்லது நோய் காரணமாக நோன்பை விடுகின்றார். இவர் திரும்பவும் நிய்யத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாமல் உறங்கி காலையில் எழுந்தால் அவர் நிய்யத்துச் செய்தவராக மாட்டார்.

இன்று நோன்பு நிய்யத் என்ற பெயரில் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்படுகின்றன. வானொலியிலும், கியாமுல் லைல் தொழுகையின் பின்னரும் ‘நவைத்து ஸவ்மகதின்…..’ என்ற நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இது தவறாகும். நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத்தாகும். நோன்பின் இந்த நிய்யத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அத்துடன் இந்த துஆ பிழையானதாக அமைந்துள்ளது, பிழையான முறையிலும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. தினமும் ஸஹரில் எழுந்து உணவு உண்டுவிட்டு நாளைப் பிடிக்க நிய்யத்துச் செய்கின்றேன் என்று தமிழில் சொல்லும் போதே இது பிழையானது என்பது இவர்களுக்குப் புரியாமல் இருப்பது புதிராகவே இருக்கின்றது.

முதல் நாளில்….:
ரமழான் மாதம் முதல் நாள் அன்றைய தினம் நோன்பு என்று தெரியாமல் உறங்கிய ஒருவர் விழிக்கிறார். காலையில் நோன்பு என்பது தெரியாததால் இவர் நிய்யத்து வைக்கவும் இல்லை; பஜ்ருக்கு முன்னர் விழிக்கவும் இல்லை. இவரின் நிலை என்ன? என்ன செய்யலாம்?

இந்த நிலையில் எழும்புபவர் அன்று ரமழான் என்பது தெரிந்ததிலிருந்து உண்ணாமல், பருகாமல் இருக்க வேண்டும். அதே வேளை இந்த நோன்பைக் கழாச் செய்யவும் வேண்டும். ஏனெனில், நோன்பின் ஷர்த் ஒன்று விடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *