Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » (இலங்கை) தேர்தலில் தேறப்போவது யார்?

(இலங்கை) தேர்தலில் தேறப்போவது யார்?

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

சென்ற ஜனாதிபதித் தேர்தலில் கட்சி பேதங்களை மறந்து இனவாத, மதவாத, ஊழல் நிறைந்த அரசைத் தோற்கடித்தல் என்ற ஒரு பொது அம்சத்தில் ஒன்றுபட்ட மக்கள் ஓரணியில் திரண்டு மைத்திரியை வெற்றிவாகை சூட வைத்தனர். திட்டமிட்டு வியூகம் வகுத்து காய்கள் நகர்த்தப்பட்டு அனைத்தும் கனகச்சிதமாக நடந்தேறின! ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் ‘விழலுக்கிறைத்த நீராக’ வீணாகிவிட்டதே என்ற உணர்வில் நல்லாட்சிக்கான மாற்றத்திற்காக உழைத்த மனங்கள் எல்லாம் துவண்டு கொண்டிருக்கின்றன.

எளிமையும், மென்மைப் போக்கும் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மிகக் குறுகிய காலத்தில் மக்கள் செல்வாக்கைப் பெற்று அதைவிடக் குறுகிய காலத்திற்குள் மக்களின் அதிருப்தியையும் வெறுப்பையும் பெற்றுவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கட்சியில் போட்டியிட அனுமதித்ததன் மூலம் தனது கையாலாகாததனத்தையும் மக்கள் ஆணை மூலம் பெறப்பட்ட அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் திராணியற்ற போக்கையும் அவர் வெளிப்படுத்திவிட்டார்.

srilanka மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு கட்சியில் போட்டியிட அனுமதியளிக்கும் வரையும் அனைத்தும் சரியாகவே ஓடிக் கொண்டிருந்தது. அதன் பின்னர்தான் இலங்கை அரசியல் இடியப்பச் சிக்கலானது. மஹிந்தைக்கு அனுமதியளித்து அவரின் ஆதரவாளர்களுக்கு அனுமதியை மறுப்பதிலாவது ஜனாதிபதி உறுதியாக இருந்திருந்தால் மஹிந்த தலைமையில் அவர்கள் தனித்துக் கேட்கும் நிர்ப்பந்த நிலையை உருவாக்கியிருக்கலாம். ஜனாதிபதி இதற்கு மாற்றமாகச் செயற்பட்டு தனக்கிருந்த கடைசி சந்தர்ப்பத்தையும் தவறவிட்டுவிட்டார்.

மஹிந்தைக்கும் அவரது குழுவுக்கும் ஜனாதிபதி மன விருப்பத்துடன் கட்சியில் இடம் கொடுக்கவில்லை என்பது வெளிப்படையானதே! அவர் என்னமாதிரியான அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு உள்ளானார் என்பது அவருக்கே தெரியும். எனினும், அனுமதியளிக்க மாட்டேன், 45 வருட அரசியல் அனுபவம் உள்ளவன் நான், மக்களின் மௌனப் புரட்சியை வீணடிக்க மாட்டேன் என்று கூறி வந்தவர் இறுதியில் மௌனமாகவே இருந்துவிட்டார். இதனால் இருந்த நண்பர்களையும் இழந்து அரசியல் அநாதையாகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

மஹிந்த ஆதரவாளர்களில் சிலர் தனிக்கட்சியாக இருந்து போட்டியிடுவதைத்தான் விரும்பினர். அப்படிப் போட்டியிட்டால் நினைத்த இலக்கை அடைய முடியாது என்பதால்தான் கட்சியில் போட்டியிட வேண்டும் என்பதில் மஹிந்த உறுதியாக இருந்தார். மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் பிரிந்து சென்றால் கட்சி பிளவுபட்டு பின்னடைவைச் சந்திக்கும் என்று எண்ணி மைத்திரி மஹிந்தவுக்கு வாய்ப்பளித்திருந்தால் மைத்திரிக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லையென்றே சொல்ல வேண்டும். ஏனெனில், கட்சி பிளவுபட்டால் கூட வேண்டத்தகாதவர்கள் வெளியேறியிருப்பார்கள். தன்னை மதிக்கக்கூடியவர்கள் மட்டும் உள்ளே இருப்பார்கள். அதனால் கட்சி தூய்மைப்படுத்தப்பட்டிருக்கும். அதன் பின்னர் தலையிடி இல்லாமல் கட்சியைக் கொண்டு சென்றிருக்கலாம். இதற்கு மாற்றமாக நண்பர்களைப் பகைவர்களாக்கி எதிரிகளுக்கு மத்தியில் அரசியல் வண்டியை ஓட்டவேண்டிய ஓட்டாண்டி நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி என்ற உயர் அந்தஸ்து, கட்சித் தலைவர் என்ற மகுடம் அனைத்தையும் வைத்துக் கொண்டு நினைத்ததை சாதிக்க முடியாத மைத்திரியை விட முன்னாள் ஜனாதிபதி என்ற மகுடத்தை வைத்துக் கொண்டு மைத்திரியைத் தனிமைப்படுத்தி தான் நினைத்ததை சாதித்துக் கொண்டு தொடர்ந்து தலைமைப் பதவியை வகிப்பதா அல்லது விட்டுவிட்டு ஓடுவதா என்ற மனநிலைக்கு மைத்திரியை உள்ளாக்கிய மஹிந்த ராஜபக்ஷ அரசியல் சாணக்கியமும் அசாதாரண துணிச்சலும் மிக்கவராக மிளிர்கின்றார்.

மஹிந்த சாதாரண வேட்பாளராகப் போட்டியிட்டாலும் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பிரதம மந்திரியாக நியமிக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவே அதிகூடிய வாக்கு வங்கி உள்ள குருணாகல் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த வகையில் அவர் தனது குறிக்கோளில் உறுதியாகவே உள்ளார் என்பது திண்ணமாகும்.

கட்சிகளின் கணக்கு!:
மைத்திரி அணியில் இருந்த பலரும் ரணிலின் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் UNP கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர் என்பது உண்மையே! 120-125 ஆசனங்களையாவது கைப்பற்றலாம் என்பது அவர்களது இன்பக் கனவு!

இருப்பினும், மஹிந்த அணியினர் கலங்காது உள்ளனர். சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரி ஆதரவாளர்களாக இருந்தவர்களே UNP பக்கம் பாய்ந்துள்ளனர். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் நாம் பெற்ற வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கின்றது என்பது அவர்களது எண்ணமாகும். இதில் ஓரளவு உண்மையும் உள்ளது.

அடுத்து, மைத்திரி ஆதரவாளர்களது வாக்குகள் ஓரளவு சிந்தி சிதறும் நிலை உள்ளது. சென்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த சிலர் கூட ஜ.ம.சு. கூட்டமைப்பில் இம்முறை போட்டியிடலாம். அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் இம்முறை UNP க்கு வாக்களிக்கப் போவதில்லை. மைத்திரி ஆதரவாளர்கள் சிலர் கட்சியின் தேசியப் பட்டியலில் உள்வாங்கப் பட்டுள்ளனர். அவர்கள் கட்சிக்கு ஆதரவு தேடவே செய்வார்கள். உதாரணமாக, பைஸல் முஸ்தபா தேசியப் பட்டியலில் உள்ளார். அவர் சென்ற முறை மைத்திரி ஆதரவாளராக இருந்தவர். இப்போதும் அவர் மைத்திரி ஆதரவாளர்தான். இருப்பினும் அவர் கட்சிக்கு ஆதரவாகவே பிரச்சாரம் செய்வார். இதன் மூலம் சென்ற முறை மைத்திரிக்குக் கிடைத்த வாக்குகளில் சில இம்முறை UNP க்கு வர வாய்ப்பு இல்லை. இதனால் ஜனாதிபதித் தேர்தல் கணக்கில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

மைத்திரி ஆதரவாளர்கள் மூலம் கட்சிக்குக் கிடைக்கும் வாக்குகளையும் மஹிந்த தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாணக்கியத்துடன் செயற்படத் தொடங்கியுள்ளார்.

அடுத்து, சென்ற முறை கட்சி பேதம் பார்க்காமல் வாக்களிக்கப்பட்டது போல் முழுவதுமாக வாக்களிப்பு இருக்காது. சில கட்சிபேதங்கள் பார்க்கப்படும். உள்ளூர் அரசியலில் தீராப் பகையாக ஊடுருவியுள்ள பச்சை, நீலப் பகைமைகள் ஓரளவு வேலை செய்யலாம்.
இதே வேளை, இலங்கைப் பாராளுமன்றம் 225 ஆசனங்களைக் கொண்டதாகும். இவற்றில் 196 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலமும் 29 உறுப்பினர்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவர். 225 ஆசனங்களைப் பெற இம்முறை 6151 பேர் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் பாரியளவான வாக்குகள் சிதைவடைந்து செல்லாக்காசாகலாம்.

தமக்கு வாக்கு வங்கி இல்லாத இடங்களில் சுயேட்சைக் கட்சிகளுக்குப் பணம் கொடுத்து பெரிய கட்சிகள் போட்டியிடச் செய்வதுண்டு. அப்படிப் போட்டியிடச் செய்வதன் மூலம் தமக்குக் கிடைக்காத வாக்குகளைத் தமது எதிராளிக்குக் கிடைக்காமல் தடுக்கலாம். இதற்காக தாராளமாகப் பணப் பரிமாறல்கள் இடம் பெறுவதுண்டு. இம்முறை சுமார் 300 கட்சிகள், 201 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுவதற்காக தாராளமாகவே அரசியல் விளையாட்டுக்கள் நடந்துள்ளதை உறுதி செய்ய முடிகின்றது. இதில் 24 சுயேட்சைக் குழுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு திட்டமிட்டு வாக்குகள் சிதறடிக்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக நஷ;டத்தை அடையப்போவது ரணிலா அல்லது மஹிந்தயா என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஜனநாயகத் தேர்தலில் பணக்கார சக்திக்கு அதிக பங்குள்ளது. பணத்தை அள்ளி வீசும் திராணி உள்ளவர் பக்கம் சாய ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும். இதிலும் மஹிந்த முன்னணியில் நிற்பார் என்பதில் சந்தேகமில்லை.

மஹிந்த ஆதரவில் சில வீழ்ச்சிகள் ஏற்படுவதாக இருந்தால் பின்வரும் வழிகளில் ஏற்படலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மஹிந்த அவரது குடும்பத்தினர் தொடர்பான ஊழல் மோசடி, ஆடம்பரம், பாலியல் குற்றச்சாட்டுக்கள் என பல செய்திகள் வெளியாகின. இவ்வாறே மஹிந்த ஆதரவு அரசியல்வாதிகளின் ஊழல், ஆடம்பரம் தொடர்பான செய்திகள் ஒரு வீழ்ச்சியை ஏற்படுத்தலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஊடகங்கள், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்ட அளவு இம்முறை பயன்படுத்த முடியாத நிலை மஹிந்த தரப்புக்கு ஏற்படலாம்.

மைத்திரி-ரணில் அரசு அதிரடியாக முக்கிய பொருட்களின் விலைவாசியைக் குறைத்தமை, சம்பள உயர்வுகளை வழங்கியமை போன்றவற்றால் கவரப்பட்டு சிலர் கட்சி மாறும் மனநிலையில் இருக்கலாம்.

இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்து மூன்றாம் முறையும் ஜனாதிபதிக்காகப் போட்டியிட்டவர் மஹிந்தவே! ஜனாதிபதியாக இருக்கும் போதே போட்டியிட்டு தோல்வியுற்ற ஜனாதிபதியும் அவரே! ஜனாதிபதியாக இருந்து தோல்வியுற்று பாராளுமன்றத்திற்காகப் போட்டியிடும் முதல் தலைவராகவும் இவரே இருப்பார். இவரின் இப்போக்கை விரும்பாத சிலர் இம்முறை மாறி வாக்களிக்கலாம்.

இப்படி இரு பக்கமும் வீழ்ச்சிகளும் எழுச்சிகளும் உள்ளன. பெரும்பாலும் UNP க்கு வெற்றி வாய்ப்பு இருப்பினும் அது மிகப்பெரும் வெற்றியாக அமையுமா? என்பது சந்தேகமே!

இந்த சூழ்நிலையில் வாக்களிக்கும் வாக்காளர்கள் கட்சி பேதங்களை மறந்து இனவாதம், மதவாதம் இல்லாத, ஊழல் மேசடி, அதிகார துஷ;பிரயோகம் இல்லாத ஆட்சி அமைய நிதானமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தேசிய அரசியல் இடியப்பச் சிக்கலாகக் காட்சியளிக்கும் இவ்வேளை முஸ்லிம் கட்சிகளின் அரசியல் நகர்வுகள் சுயநலமிக்கதாக மாறியிருப்பது வேதனையளிக்கின்றது.
பாராளுமன்றத்தில் 20 ஆம் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்மொழியப்பட்ட போது எமது அரசியல் தலைவர்கள் ஒன்றாக அதற்கெதிராகக் குரல் கொடுத்தனர். இதனால் சிறுபான்மைக் கட்சிகள் பாதிக்கப்படும், தமது பாராளுமன்ற அங்கத்துவத்தை இழக்க நேரிடும் என்று ஒரே குரலில் முழக்கமிட்டனர். சமூகத்திற்கு இழப்பு என்றதும் ஒன்றாகக் குரல் கொடுக்கின்றனர் என மகிழ்ச்சியடைந்தவர்கள் மனதில் மண்ணை வாரி இறைப்பதாக தேர்தல் நடவடிக்கைகள் உள்ளன.

அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ் அணியினர் ஜ.ம.சு கூட்டமைப்பில் போட்டியிடுகின்றனர். தம்மை மஹிந்த ஆதரவாளர்கள் என்று முஸ்லிம் மக்களிடம் சொல்ல முடியாது என்பதால் இவர்கள், தாம் மைத்திரி ஆதரவாளர்களாகவே காட்டிக் கொள்வார்கள். இதனால் வாக்கு வங்கி ஓரளவு சிதறலாம். குறிப்பாக, மட்டக்களப்பில் ஐந்து ஆசனங்களுக்காக 388 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இப்படி வாக்கு சிதறுவதால் முஸ்லிம் வாக்குகளால் தமிழ் அரசியல் தலைவர்கள் தெரிவாகும் நிலை ஏற்படலாம்.

இவ்வாறே முஸ்லிம் காங்கிரஸ் UNP யுடன் கூட்டாகப் போட்டியிடும் இடங்களில் ரிஷாத் பதியுதீன் தனித்துக் களம் இறங்குகின்றார். அம்பாறை போன்ற இடங்களில் ரிஷாத் பதியுதீனால் ஒரு ஆசனத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போனாலும் இதன் மூலம் ஹகீமின் செல்வாக்கை ஓரளவு சரிக்கலாம். தேசியப் பட்டியல் ஒன்றையேனும் பெறும் வாய்ப்பு ஏற்படலாம்.

கண்டி, அம்பாறைப் பகுதியில் அவர் தனித்துப் போட்டியிடுவது அவருக்கு ஒரு ஏற்றமாக இருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு சரிவாக அமையலாம். முஸ்லிம் வேட்பாளர்களுக்கான விருப்பு வாக்குகள் குறைவதனால் சிங்கள வேட்பாளர்கள் தெரிவாகும் சூழ்நிலை உருவாகலாம்.

20 ஆவது திருத்தத்தை ஒன்றாக எதிர்த்தவர்கள் சமூகத்திற்குப் பாதிப்பு என்பதால் ஒன்றிணையவில்லை. அது தமக்குப் பாதிப்பு என்பதனாலேயே ஒன்றிணைந்தனர். தேர்தல் வந்த பின்னர் சமூகத்திற்குப் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை, நமது கட்சி நலன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர். இவ்வாறே வன்னி மாவட்டத்தில் ரிஷாத் UNP யுடன் இணைந்து கேட்கும் போது ஹுனைஸ் பாரூக் மைத்திரி அணியுடன் களமிறங்கவுள்ளார். இவ்வாறு அரசியல் தலைவர்கள் தங்களைத் தக்கவைத்துக் கொள்ள சமூகத்தைப் பணயம் வைப்பது வேதனையளிக்கின்றது.

மனோகனேஷன் போன்று முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் ஒன்று திரண்டிருந்தால் சமூகத்திற்கு அரசியல் மீது ஒரு நம்பிக்கை வந்திருக்கும். பேரம் பேசும் சக்தியும் அதிகரித்திருக்கும். முஸ்லிம்களின் வாக்குகளால் சிங்கள, தமிழ் வேட்பாளர்கள் தெரிவாகும் நிலையையும் தவிர்த்திருக்கலாம்.

பதுல்லைத் தேர்தலில் ஹகீம்-ரிஷாத் இருவருக்கும் ஒன்றிணைய முடியுமாக இருந்தால் இந்தத் தேர்தலில் ஒன்றிணையத் தடையாக இருந்தது எது? அல்லது பதுல்லையில் அவர்களை ஒன்றிணைத்தது எது என்ற சந்தேகம் எழுகின்றது.

எமது அரசியல் தலைமைகளின் இந்த சுயநலவாத அரசியல் என்பது அருவருப்பாக இருந்தாலும் எமக்கு மாற்றுவழி இல்லை என்பதே கசப்பான உண்மை.

இந்தத் தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் திருப்புமுனையாக அமையத்தக்கது என்பதால் கட்சி பேதங்களை மறந்து நிதானமாக சிந்தித்து வாக்களிப்பது காலத்தின் கட்டாயமாகும்.

குறிப்பு:
இக்கட்டுரை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஒரு மணி நேர விஷேட உரைக்கு முன்னர் எழுதப்பட்டதாகும். அவரது உரைக்குப் பின்னர் அவர் பற்றிய மதிப்பீட்டில் மக்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *