Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-01

ஸஹாபாக்களை குறைகாண முடியுமா? Part-01

ஸஹாபாக்கள் என்போர் யார்? ஸஹாபாக்களிடத்தில் குறை காண முடியுமா? ஸஹாபாக்களை குத்திக் காட்டி கேலியாக பேச முடியுமா? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இக் கட்டுரை எழுதப்படுகிறது.

சமீப காலமாக ஸஹாபாக்களை மிக மோசமான, தவறான வார்த்தைகளால் பேசப்பட்டு, அப்படி பேசுவது குற்றமில்லை என்றளவிற்கு சா்வசாதாரணமாக ஸஹாபாக்கள் மதிக்கப் படுவதை கண்டு வருகிறோம். ஸஹாபாக்களை எப்படியான வார்த்தைகளால் குத்திக்காட்டி பேசினார்கள் என்று தேவையான இடத்தில் சுட்டிக் காட்டவுள்ளேன்.

ஸஹாபாக்களுடைய செய்திகளை தொகுத்து வழங்குவதற்கு முன், பொதுவாக மனிதா்களைப் பற்றி குறையாகவோ, குத்திக் காட்டியோ, அல்லது மானபங்கப் படுத்துவதைப் போன்ற வார்த்தை ஜாலங்களால் பேச முடியுமா? என்பதை குா்ஆன், மற்றும் ஹதீஸ் வழியில் தெளிவை காண்போம்.

”ஈமான் கொண்ட விசுவாசிகளே ! எண்ணங்களில் பெரும்பாலவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள். (ஏன் என்றால்) எண்ணத்தில் சில பாவமாகும்….(49-12)

இஸ்லாத்தைப் பொருத்தவரை பல பாவங்களை நேரடியாக எடுத்துக் காட்டி அவைகள் பக்கம் நெருங்க வேண்டாம் என்று எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

அந்த பாவங்களில் மக்கள் தெளிவாக உள்ளனா். ஆனால் தன்னை அறியாமல் பல பாவங்கள் தொடராக செய்யப் படுகின்றன அப்படிப் பட்ட பாவங்களில் மக்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.

அவைகளில் ஒன்று தான் பிறரை தவறாக நினைப்பதாகும். அதிகமான பாவங்களுக்கு நமது எண்ணம் தான் காரணமாகும். அதனால் தான் எண்ணத்தினால் எழும் தவறான எண்ணங்களை முற்றிலும் தவிர்ந்து கொள்ளும் படி அல்லாஹ் நமக்கு பாடம் நடத்துகிறான்.

விசுவாசிகளே ! என்று அடியார்களை அல்லாஹ் அழைத்து உபதேசம் செய்கிறான்.

சிறு துளி பெரும் வெள்ளம் என்பதை போல சிறு, சிறு தவறான எண்ணங்கள் மக்களுக்கு மத்தியில் பிரிவுகளையும், பிளவுகளையும் ஏற்ப்படுத்தி காலப் போக்கில் அது விருட்சமாக வளா்ந்து அவா்களை நரகில் தள்ளிவிடும் அளவிற்கு போய் விடுகிறது. மேற்ச் சுட்டிக்காட்டிய அதே வசனத்தில் தொடர்ந்து …(பிறருடைய குறைகளை) நீங்கள் துருவி, துருவி விசாரிக்க வேண்டாம்…(49-12) என்று அல்லாஹ் நமக்கு பாடம் நடத்துகிறான். முதல் கூறிய செய்தியான எண்ணங்கள் பாவம் என்பதற்கும்,துருவி, துருவி ஆராயாதீா்கள் என்பதற்கு்ம் நேரடி தொடா்பை நாம் காணலாம்.

அதாவது ஒருவருடை மனதில் தப்பான எண்ணம் வந்தால் தான், அவரைப் பற்றி துருவ ஆரம்பிப்பார் எனவே தான் தவறான எண்ணங்களை நமது உள்ளத்திலிருந்து களையப் பட வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு உபதேசம் செய்கிறான்.

ஒருவா் தவறு செய்கிறார் என்றால் அவரை அணுகி இப்படிப் பட்ட தவறை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எடுத்துக் கூறலாம். அதை விட்டு விட்டு நாளு பேருக்கு மத்தியில் அவரை மானபங்கப் படுத்தும் அளவிற்கு போய்விடக் கூடாது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் பிறரின் குறைகளை தேட ஆரம்பித்தால் அவனை அறியாமல் புறம் பேச ஆரம்பித்து விடுவான் என்பதை அந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் சொல்ல வருகிறான்.

…“உங்களில் ஒருவருக்கு ஒருவர் புறம் பேசி திரியாதீா்கள். இறந்த உங்களின் சகோதரரின் மாமிசத்தை சாப்பிட விரும்புவீா்களா? வெறுப்பீர்கள் அல்லாஹ் கருணையாளன், மன்னிக்கக் கூடியவன். (49 -12) இந்த வசனத்தில் அல்லாஹ் அடுத்தடுத்து தவிர்ந்து கொள்ளப் பட வேண்டிய மூன்று விடயங்களை எடுத்துக் கூறுகிறான்.

ஒரு மனிதனிடம் தவறான எண்ணம் வந்து விட்டால், குறைகளை தேட ஆரம்பிக்கிறான், அதன் பின் புறம் பேச ஆரம்பிக்கிறான். புறம் பேச அடிப்படைக் காரணம் தவறான எண்ணமாகும். புறம் பேசுவது பெரிய பாவமாகும் அதன் முடிவு நரகமாகும்.

புறம்என்றால் என்ன?
நபி (ஸல்) அவா்கள் (ஸஹாபாக்களை நோக்கி) புறம் என்று சொன்னால் என்னவென்று அறிவீா்களா? என்று கேட்டார்கள் அதற்கு ஸஹாபாக்கள் அல்லாஹ்வும், அவனது துாதரும் தான் அறிவார்கள் என்றனா். உனது சகோதரனைப் பற்றி அவன் வெறுக்கக் கூடிய ஒன்றை பேசுவதாகும் என்றார்கள். அதற்கு நபித் தோழர்கள் யா ரஸீலுல்லாஹ் ! நாங்கள் பேசுவது அந்த சகோதரனிடத்தில் இருந்தாலுமா? என்று கேட்டனா். அந்த சகோதரனிடத்தில் இருப்பதை பேசுவது தான் புறமாகும். அவனிடத்தில் இல்லாததை பேசுவது இட்டுக்கட்டியதாகும் என்றார்கள். (ஆதாரம் முஸ்லிம் 5048)

நாம் பேசும் செய்திகள் பிறரிடத்தில் இருந்தாலும் அந்த செய்திகளைப் பற்றி நாம் பேசுவதை அவர் வெறுப்பாரேயானால், அது தான் புறம் என்பதை நபியவர்கள் நமக்கு மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது மிகப் பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 6064 முஸ்லிம் 2563

ஆனால் இன்று சர்வசாதாரணமாக பிறரின் குறைகளையும், பிறறை மானபங்கப் படுத்தும் விடயங்களில் பகிரங்கமாக ஈடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் எந்த அளவிற்கு இம் மார்க்கத்தை கொச்சைப் படுத்துகிறார்கள்?

மார்கத்தைப் படித்த, தஃவா களத்தில் இருப்பவர்களே இப்படி அருவருப்பாக பேசுகிறார்கள் என்றால் இவர்களின் தஃவா எப்படி இருக்கும் என்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்?

அப்படி பேசாதீர்கள் என்றால் நபியவர்களே பேசியுள்ளார்கள்? நாம் ஏன் பேசக் கூடாது என்று கேட்கிறார்கள்.? இவர்கள் ஹதீஸை தவறாக அணுகியதினால் நபியவர்களே இப்படி பேசியுள்ளார்கள் என்று தங்களது பேச்சுக்களை நியாயப்படுத்துகிறார்கள்.? அவர்கள் தவறாக புரிந்து கொண்ட ஹதீஸை இன்ஷா அல்லாஹ் நாம் தெளிவுப் படுத்த உள்ளோம்.

மேலும் அல்லாஹ் முன்னால் வாழு்ந்து மரணித்த பலரின் குறைகளையும், தவறுகளையும். குற்றங்களையும், குர்ஆனில் எடுத்துக் கூறும் போது நாம் ஏன் மக்களின் குறைகளையும், தவறுகளையும், எடு்துப் பேசக் கூடாது என்று புறம் பேசுவதற்கு ஆதாரம் தேடுகிறார்கள்.?

அப்படியானால் சூரியன் மீதும், சந்திரன் மீதும், நட்சத்திரங்கள் மீதும், காலத்தின் மீதும், இரவின் மீதும், முற்பகல் மீதும், இப்படி தன்னால் படைக்கப் பட்ட படைப்புகள் மீது அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான். எனவே நாங்களும் இப்படியான படைப்புகள் மீது சத்தியம் செய்யலாம் என்று கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை?

நமக்கு எதை நபியவர்கள் காட்டித் தந்தார்களோ அதை தான் நாம் மார்க்கமாக நடைமுறைப் படுத்த வேண்டுமே தவிர சம்பந்தமில்லாத செய்திகளை நமது தவறான கொள்கைகளுக்கு சார்பாக திரிபுப் படு்த்தக் கூடாது.

குறைகளை மறைத்தல்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பம்ரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்துவிட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்’ என்று அவனே கூறுவது பம்ரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி 6064

தான் செய்த பாவங்களைக் கூட தானே பகிரங்கப் படுத்தக் கூடாது. என்று இஸ்லாம் சொல்லும் போது, பிறரைப் பற்றி பேச முடியுமா?

உலகத்தில் ஓர் அடியானின் குறைகளை ஓர்அடியான் மறைத்தால், மறுமையில் அல்லாஹ் இவனுடைய குறைகளை மறைப்பான். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் முஸ்லிம் 2590, 2699

ஸஃப்வான் இப்னு முஹ்ரிஸ் அல்மாஸினீ(ரஹ்) அறிவித்தார்
ஒருவர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:
‘உங்களில் ஒருவர் தம் இறைவனை நெருங்குவார். எந்த அளவிற்கென்றால் இறைவன் தன் திரையை அவரின் மீது போட்டு (அவரை மறைத்து) விடுவான். அப்போது இறைவன், ‘நீ (உலகத்தில்) இன்னின்ன (பாவச்) செயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அதற்கு அவர், ‘ஆம்’ என்பார். இறைவன் (மீண்டும்) ‘இன்னின்ன (பாவச்) சயல்களைச் செய்தாயா?’ என்று கேட்பான். அப்போதும் அவர், ‘ஆம்’ என்று கூறி (தம் பாவச்) செயல்களை ஒப்புக் கொள்வார். பிறகு அவன், ‘இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்(திருந்)தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகிறேன்’ என்று கூறுவான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் புகாரி 6070

பிறரின் தவறுகளை, குறைகளை மறைப்பதால். மறுமை நாளில் அல்லாஹ் இவனது தவறுகளை மறைக்கிறான், என்பதை தான் மேற்ச் சுட்டிக் காட்டிய ஹதீஸ் நமக்கு தெளிவுப் படுத்தகிறது.

மேலும்
“ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (33-58)

அது போல “ எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள். (24:19)

இப்படி பல குர்ஆன் வசனங்கள் மூலமும், பல ஹதீஸ்கள் மூலமும் இஸ்லாம் நமக்கு பகிரங்கமாகவே எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

பிறரை மானபங்கப் படுத்தலாம் என்று தவறான முறையில் அவர்கள்எடுத்துக் காட்டு்ம் ஹதீஸ்ஸோடும். அதற்கான விளக்கத்தோடும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் சந்திப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *