Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுத்தார்களா? பீஜே-விற்கு பதில்

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுத்தார்களா? பீஜே-விற்கு பதில்

–மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல்ஆசிரியர்–

கண்ணியத்திற்குறிய இறைவிசுவாசிகளே !

சமீபகாலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஆரம்பிக்கப்பட்டு, நடைமுறைக்கு சாத்தியமில்லை, அறிவுக்கு பொருத்தமில்லை, என்று நாளுக்கு நாள் ஸஹீஹான ஹதீஸ்கள் பல கோணங்களில் மறுக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள்.

நபியவர்களுடைய காலத்திற்குப் பின் முஃதஸிலாக்கள் என்ற வழி கெட்ட அமைப்பினர் ஸஹீஹான ஹதீஸ்களை மறுப்பதை தனது கொள்கையாக கொண்டிருந்தனர். அதன் பிறகு சமீப காலமாக ஸஹீஹான ஹதீஸ்கள் தொடராக மறுக்கப்பட்டு வருவதை காண்கிறோம்.

ஸஹீஹான ஹதீஸ்களை முஃதஸிலாக்கள் தான் மறுத்தார்கள். அதே வழியில் நீங்களும் போய்விடக் கூடாது என்று எடு்த்து கூறும் போது, தனது தவறான கொள்கையை நிலை நாட்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸ்களை மறுத்துள்ளார்களே என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.?

ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுத்தார்களா ? அல்லது திருத்திக் கொடுத்தார்களா ? என்பதை தெளிவுப் படுத்துவதற்காக இந்த கட்டுரை முன்வைக்கப் படுகிறது.

மறுப்பது என்றால் அப்படி ஒரு ஹதீஸை நபியவர்கள் சொல்லவே இல்லை என்று கூற வேண்டும். ஆனால் சொல்லப்பட்ட செய்தி உண்மை, அதை புரிந்து கொண்ட விதம் தான் பிழை என்று திருத்திக் கொடுப்பதை இவர்கள் முன் வைக்கும் பின் வரும் ஹதீஸை சரியாக கவனித்தாலே புரிந்து விடும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்தார்கள் என்று அவர்கள் முன் வைக்கும் ஹதீஸ்களை முதலில் அவதானியுங்கள்.

“உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள் ( என் தந்தை ) இறந்த போது அவர்களுக்காக (என் சகோதரி) ஹப்ஸா (ரலி) அவர்கள் அழுதார்கள்.அப்போது அருமை மகளே ! பொறுமையாக இரு ! இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழுவதனால், அவர் வேதனை செய்யப்படுகிறார் என்று அல்லாஹ்வின் தூதர் சொன்ன செய்தியை நீங்கள் அறியவில்லையா ? என்று கேட்டேன்.

அறிவிப்பவர் நாபிஉ பின் அப்துல்லாஹ் ( ரலி )

ஆதாரம் முஸ்லிம் 1687

மேலும்
“ இப்னு உமர் அவர்கள் கூறியதாவது. “ உமர் (ரலி) அவா்கள் கத்தியால் குத்தப்பட்டு மயக்கமுற்றிந்த போது, வேகமாக அழுகுரல் கேட்டது, மயக்கம் தெளிந்ததும் அவர்கள், “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார் என்று அல்லாஹ்வின் துாதர் கூறியதை நீங்கள் அறியவில்லையா ? என்று கேட்டார்கள்.

ஆதாரம் முஸ்லிம் 1689

இதே கருத்தை தரக்கூடிய ஹதீஸ்கள் புகாரியில் 1290, 1292, லும், முஸ்லிமில் 1688, 1690, 1691, 1692 லும் காணலாம்.

இந்த ஹதீஸ்களை ஆயிஷா (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறிய போது, பின் வரும் ஹதீஸ்கள் மூலம் திருத்திக் கொடுப்பதை காணலாம்.

“ அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீ முலைக்கா (ரலி) அவர்கள் கூறும் நீண்ட ஹதீஸில் … “உமர் (ரலி) அவர்கள் குத்தப்பட்டு கடுமையான வேதனையில் இருக்கம் போது, சுஹைப் (ரலி) அவர்கள் அழுதுக் கொண்டு வருகிறார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் குடு்ம்பத்தார் அழுகைகளில் சிலவற்றால் இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார், என்று கூறினார்கள்.

இந்த செய்தியை ஆயிஷா அவர்களிடம் எடுத்து கூறிய போது “ அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! எவரோ ஒருவர் அழுவதன் காரணமாக இறந்து விட்ட (இறை நம்பிக்கையாளர்) வேதனை செய்யப் படுகிறார் என்று நபியவர்கள் கூறவில்லை, மாறாக குடும்பத்தார்கள் அழுவதன் காரணமாக இறை மறுப்பாளனுக்கு அல்லாஹ் இன்னும் வேதனையை அதிகப் படுத்துகிறான் என்று அல்லாஹ்வின் துாதர் கூறினார்கள். “ அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான், அல்லாஹ்வே அழவும் வைக்கிறான்.(53- 43) மேலும் “ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது, என்று கூறினார்கள். இந்த ஹதீஸின் இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறகிறார்கள் நீங்கள் பொய்யர்களோ, பொய்பிக்கப் பட்டவர்களோ, அல்லாத இருவா் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகிறீா்கள், ஆயினும் (செவி) சில நேரங்களில் தவறாக விளங்கிவிடுகிறது. என்று கூறினார்கள். ஆதாரம் முஸ்லிம் 1693

இன்று இவர்கள் மறுப்பது போல நபியவர்கள் இப்படி ஒரு செய்தியை சொல்லியிருக்க மட்டார்கள் என்று மறுக்கவில்லை. சொல்லப்பட்ட செய்தி உண்மைதான் ஆனால் விளங்கிய விதத்தில் பிழை ஏற்பட்டுள்ளது என்று ஆயிஷா அவர்கள் திருத்திக் கொடுக்கிறார்கள்.

மேலும் “ முஸ்லிமில் 1694 லில் பதிவு செய்யப்பட்ட நீண்ட ஹதீஸின் இறுதியில் .. .. .. ஆயிஷா (ரலி) அவர்கள் திருத்தி சொன்ன செய்தியை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறிய போது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

அதே போல “முஸ்லிமில் 1696ம் ஹதீஸில் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொன்ன போது, அல்லாஹ் அபூ அப்திர்ரஹ்மானுக்கு அருள்பாளிப்பானாக ! அவர் ஒரு ஹதீஸை செவியுற்றார், ஆனால் அவர் அதை நினைவில் வைத்துக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் துாதர் அவர்களை கடந்து ஒரு யூதரின் சடலம் சென்றது, அவருக்காக யூதர்கள் அழுது கொண்டிருந்தனர். அப்போது தான், அல்லாஹ்வின் துாதர் நீங்கள் அழுது கொண்டிருக்கிறீர்கள், ஆனால் அதுவோ (சடலமோ) வேதனை செய்யப்படுகிறது என்று கூறினார்கள். (இறை நம்பிக்கையாளர் விடயத்தில் இவ்வாறு கூறவில்லை) என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேற்ச் சென்ற ஹதீஸில்“ அதாவது இறை நம்பிக்கையாளர் விசயத்தில் நபியவா்கள் அப்படி கூறவில்லை, மாறாக இறை மாறுப்பாளன் விசயத்தில்தான அப்படி கூறினார்கள் என்று மிகத் தெளிவாக உள்ளது. ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுத்திருந்தால் இங்கு திருத்திக் கொடுக்காமல், அப்படி ஒரு செய்தியையே நபியவா்கள் கூறவில்லை என்று கூறியிருக்க வேண்டும். எனவே இவர்கள் சொல்வது போல ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுக்க வில்லை என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.

மேலும் அடுத்து வரும் ஹதீஸை கவனியுங்கள்.

முஸ்லிமில் 1697 ம் ஹதீஸில் “அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இப்படி கூறுகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறிய போது,… அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் இப்னு உமர் அவர்கள் பிழையாக விளங்கிக் கொண்டார். இறந்தவர் தன் சிறிய, பெரிய, பாவங்களுக்காக வேதனை செய்யப் படுகிறார். ஆனால் அவருடைய குடும்பத்தார்களோ இப்போது அழுதுக் கொண்டிருக்கிறார்கள்.என்று தான் அல்லாஹ்வின் துாதர் கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள்கூறினார்கள்.

அதே போல அடுத்து வரும் ஹதீஸையும் நிதானமாக கவனியுங்கள்.

முஸ்லிமில் 1698 ம் ஹதீஸில் இப்னு உமர் அவர்கள் இப்படி கூறுகிறாரே என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறிய போது, அல்லாஹ் அபூஅப்திர்ரஹ்மானை மன்னிப்பானாக ! நிச்சயமாக அவர் பொய்யுரைக்கவில்லை, எனினும் அவர் மறந்திருக்கலாம் அல்லது தவறாக விளங்கி இருக்கலாம். “அல்லாஹ்வின் துாதர் ஒரு யூதப் பெண்ணின் பிரேதத்தை கடந்து சென்றார்கள், அவளுக்காக சிலர் அழுது கொண்டிருந்தனர்.அப்போது அல்லாஹ்வின் துாதர் அவர்கள் “இவர்கள் இவளுக்காக அழுகிறார்கள். இவளோ தனது கப்ரில் வேதனை செய்யப் படுகிறாள் என்று தான் கூறினார்கள். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி 1289 முஸ்லிம் 1698

இப்போது நிதானமாக சிந்தியுங்கள். இவர்கள் சொல்வது போல ஆயிஷா (ரலி) அவர்கள் ஹதீஸை மறுத்தார்களா ? அல்லது திருத்திக் கொடுத்தார்களா ?

உமர், மற்றும் இப்னு உமா் (ரலி) இந்த இரண்டு பேரும் பொதுவாக யார் மரணித்தாலும் அதாவது இறைவிசுவாசியின் மரணத்திற்காக குடும்பத்தார் அழுதாலும் அவர் கப்ரில் வேதனை செய்யப் படுகிறார் என்று விளங்கி இருந்ததை தான் திருத்திக் கொடுத்தார்களே தவிர, அவர்களால் சொல்லப் பட்ட முழு செய்தியையும் பொய் என்று மறுக்க வில்லை.

இது வரை இவர்களால் மறுக்கப் பட்ட எந்த ஹதீஸாக இருந்தாலும் நபியவர்கள் அப்படி சொல்லவே இல்லை, புகாரி, மற்றும் முஸ்லிம், இமாம்கள் தவறாக பதிவு செய்து விட்டார்கள் என்று அவர்கள் மீதும் பழி சுமத்துவதோடு, இவா்களால் மறுக்கப் படு்ம் ஹதீஸ்களை வேரோடு பிடிங்கி வீசுவதை காணலாம்.?

இந்த கட்டுரையை படித்ததின் மூலம், இவா்கள் ஹதீஸ்களை தவறாக அணுகிறார்கள் என்பதை விளங்கி இருப்பீர்கள்.

தனது தவறான கொள்கையை திணிப்பதற்காக ஆயிஷா (ரலி) அவர்களே மறுத்தார்கள் என்று பொய் கூறும் போது மற்றவர்கள் மீது சேறு பூசுவது இவர்களுக்கு மிக சாதாரண விசயம். ?

எனவே அவா் சொன்னால் சரியாக இருக்கும் என்று கண் மூடித்தனமாக ஸஹீஹான ஹதீஸ்களை மறுத்து வழி கேட்டில் விழுவதை விட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் போதுமானவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *