Featured Posts
Home » சட்டங்கள் » தொழுகை » கஸா் ஜம்வு தொழுகைகளின் சட்டங்கள்

கஸா் ஜம்வு தொழுகைகளின் சட்டங்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (ஆசிரியா் சத்தியக் குரல் மாத இதழ், இலங்கை)-
கஸா் என்றால் சுருக்குதல். அதாவது நான்கு ரக்அத்துகள் தொழுகையை இரண்டு ரக்ஆத்துகளாக தொழுவதாகும்.

ஜம்வு என்றால் சோ்த்தல். அதாவது ளுஹரையும், அஸரையும் சோ்த்து தெழுவதாகும். மேலும் மஃரிபையும், இஷாவையும், சேர்த்து தொழுவதாகும்.

கஸா் எப்போது செய்ய வேண்டும், ஜம்வு எப்போது செய்ய வேண்டும், என்பதை ஹதீஸ்களின் வழியில் காண்போம்.

கஸா் தொழுகை
“ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் சொந்த ஊரிலிருக்கும்போது நான்கு ரக்அத்களாகவும்,பயணத்திலிருக்கும் போது இரண்டு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான். முஸ்லிம் 1223

மேலும் “ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள்; (மக்காவுக்குச் செல்லும் வழியில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். முஸ்லிம் 1228

மேலும் “ நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது இரண்டு ரக்அத்களாகக் கடமையாக்கினான். பின்னர் சொந்த ஊரில் தொழும் (லுஹர், அஸர், இஷா ஆகிய) தொழுகைகளை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தினான்; பயணத் தொழுகை முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறு (இரண்டு ரக்அத்தாகவே) நீடித்தது. முஸ்லிம் 1220.

மேலும் “ யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் “நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறைமறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை” (4:101)என்றுதானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டதே? என்று கேட்டேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு(ம் ஐயமும்) எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது “(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். முஸ்லிம் 1222

மேலும் “ஹஃப்ஸ் பின் ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு பயணத்தில் என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் இருந்தேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சிலர் நின்றுகொண்டிருந்தனர். உடனே, “இவர்கள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள். “கூடுதலான தொழுகைகளைத் தொழுதுகொண்டிருக்கிறார்கள்” என்று நான் பதிலளித்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், “(பயணத்தில்) கூடுதலான தொழுகைகளை நான் தொழுபவனாக இருந்தால் எனது (கடமையான) தொழுகையை முழுமைப்படுத்தியிருப்பேன். என் சகோதரர் (ஆஸிமின்) மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (வேறெந்த முன், பின் சுன்னத்களையும்) தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).

நான் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். (பயணத்தில்) அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). நான் உமர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழுததில்லை. அவரகளின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).அல்லாஹ்வோ, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” ( (33:21)) என்று கூறுகின்றான்” என்றார்கள். முஸ்லிம் 1226

மேற்ச் சென்ற ஹதீஸ்கள் மூலம் ஊரில் இருக்கும் போது நான்கு ரக்அத்துகள் தொழுகைகளை குறைக்காமல் அப்படியே தொழு வேண்டும். பிரயாணத்தில் சுருக்கி தொழ வேண்டும்என்பதை விளங்கலாம்.

கஸா் தொழுகையின் அளவு
எவ்வளவு துாரம் பயணம் செய்தால் சுருக்கி தொழ வேண்டும். அந்த துாரம் ஊருக்குள்ளேயே இருந்தாலும் சுருக்கி தொழலாமா ? அல்லது ஊர் எல்லையை தாண்டினால் தான் சுருக்கி தொழ வேண்டுமா ? என்பதையும், இந்த சுரக்கி தொழும் எல்லை விடயத்தில் ஸஹாபாக்களுக்கு மத்தியிலும், இமாம்களுக்கு மத்தியிலும், சமகால அறிஞா்களுக்கு மத்தியிலு்ம் பலவிதமான கருத்துகளை காணலாம்.இருந்தாலும் நபி (ஸல்) அவா்கள் கஸா் தொழுகை விடயத்தில் காட்டித் தந்த அளவு எவ்வளவு என்பதையும் தொடா்ந்து கவனிப்போம்.

“ யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மூன்று மைல்” அல்லது “மூன்று ஃபர்ஸக்” தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள். முஸ்லிம் 1230

ஒரு பா்ஸக் என்பது மூன்று மையில்களாகும். மூன்று பா்ஸக் என்பது ஒன்பது மையில்களாகும். அதாவது கிட்டதட்ட இருபது கிலோ மீட்டா் துாரமாகும்.

பின் வரும்ஹதீஸ் அதை உறுதிப் படுத்துவதை காணலாம்.

“ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள்; (மக்காவுக்குச் செல்லும் வழியில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். முஸ்லிம் 1228

மேலும் “ ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்த் (ரஹ்) அவர்களுடன் பதினேழு அல்லது பதினெட்டு மைல் தொலைவிலிருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் இரண்டு ரக்அத்களே தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் (அது பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:

உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நான் கண்டேன். உமர் (ரலி) அவர்களிடம் நான் அதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்கிறேன்”என்றார்கள். முஸ்லிம் 1231

நபி (ஸல்) அவா்கள் மூன்று பா்ஸக் (ஒன்பது மைல் ) பயணம் செய்தால் நான்கு ரக்அத்கள் தொழுகையை சுருக்கி இரண்டு ரக்அத்துகளாக தொழுவார்கள். மதீனாவிற்குள் உள்வாங்கப் பட்ட , இடமான துல்ஹூலைபாவில் நான்கு ரக்அத்து தொழுகையை சுருக்கி இரண்டு ரக்ஆத்துகளாக தொழுதுள்ளார்கள்.

இங்கு இரண்டு விடயங்களை கவனிக்க வேணடும். முதலாவது ஊா் எல்லையை தாண்டாமல், குறிபிட்ட துாரத்தை தாண்டியவுடன் மதீனாவில் இருக்க கூடிய துல்ஹூலைபாவிலே நபியவர்கள் சுருக்கித் தொழுதுள்ளார்கள். எனவே சுருக்கித் தொழ ஊா் எல்லையை தாண்ட வேண்டும் என்புது நபிவழி கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். (துல்ஹூலைபா என்பது மதீனாவாசிகள் ஹஜ்,மற்றும் உம்ரா செய்வதற்கான நிய்யத் வைக்கும் எல்லையாகும்.அது மதீனா எல்லைக்குள் தான் உள்ளது.)

இரண்டாவது துார அளவு நபியவர்கள் சுமார் மூன்று பா்ஸக் ( ஒன்பது மையில் ) துாரம் பயணம் செய்ததற்கு சுருக்கி தொழுதுள்ளார்கள்.

மேலும் “ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்த் (ரஹ்) அவா்கள் நீண்ட துாரம் போனால் தான் சுருக்கி தொழ வேண்டும் என்று நினைத்திருந்தார். ஆனால் அதை ஜூபைா் பின் நுபைா் விளக்கப் படுத்தியவுடன் அதை ஏற்றுக் கொள்கிறார். அவா் பதினேழு மைல் போன பிறகு தான் தொழுதுள்ளதால் அந்த பதினேழு மைலை நினைவுப் படுத்துகிறார்.

எனவே கிட்ட தட்ட இருபது கிலோ மீட்டா் பயணம் போனால் சுருக்கி தொழ முடியும் என்பதாக மேற்ச் சென்ற ஹதீஸ்கள் தெளிவுப் படுத்துகின்றன.

எத்தனை நாட்கள் சுருக்கி தொழுவது
“ யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து (ஹஜ்ஜுக்காக) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். அவர்கள் திரும்பி வரும்வரை (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று கூறினார்கள். உடனே நான் (அனஸ் (ரலி) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?” என்று கேட்டேன். அதற்குப் “பத்து (நாட்கள்)” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். முஸ்லிம் 1233

மேலும் “ இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். முஸ்லிம் 1080
இத்தனை நாட்கள் தான் கஸா் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு வரவில்லை. ஒரு சந்தா்பத்தில் மக்காவில் பத்து நாட்கள் தங்கி போது இந்த பத்து நாட்களும் கஸ்ர் செய்துள்ளா்ர்கள். மற்றொரு தடவை பத்தொன்பது நாட்கள் தங்கியதற்காக கஸா் செய்துள்ளார்கள். எனவே பிரயாண நாட்களாக நாம் எத்தனை நாட்கள் பயணம் செய்கிறோமோ அத்தனை நாட்களும் சுருக்கி தொழலாம். வேலைக்காக வருடக்கணக்கில் போய் தங்கி வேலைப் பார்க்கிறோம் என்றால் அப்போது கஸா் செய்ய தேவை கிடையாது. நாம் தங்கி இருக்கும் இடத்திலிருந்து மேற்குறிப்பிட்ட எல்லையை தாண்டி பயணம் செய்வோமேயானால், அந்த இடத்தில் கஸா் செய்ய முடியும்.

அதே நேரம் ஜமாத்துடன் தொழ நேரிட்டால் கஸா் (சுருக்கி தொழக் ) கூடாது. பிரயாணம் செய்தவா்கள் தொழுகை நடத்தும் போது தாராளமாக சுருக்கித் தொழ முடியும்.

பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்
“ இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களும், அபூபக்ருக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் (இரண்டு ரக்அத்களே தொழுதனர்). பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் (சுருக்கித் தொழாமல்) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: முஸ்லிம் 1235

மேலும் ” அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் (இரண்டு ரக்அத்களாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே எங்களுக்குத் தொழுவித்தார்கள். இது பற்றி (அத்தொழுகையில் கலந்துகொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டபோது “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்புபவர்களாய் உள்ளோம்) என்று கூறிவிட்டு, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். இப்போது நான் (உஸ்மான் (ரலி) அவர்களுடன் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதுமே!” என்று கூறினார்கள். முஸ்லிம் 1237

ஜம்மு (சேர்த்து) தொழுதல்
“ அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக
இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள். முஸ்லிம்1263

“ அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் தொழுகையை அஸர் நேரம்வரைத் தாமதப்படுத்தி, பின்பு (ஓரிடத்தில்) இறங்கி லுஹரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள். பயணம் புறப்படுவதற்கு முன் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து விட்டால் லுஹர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.
முஸ்லிம் 1264

“ அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்துத் தொழ விரும்பினால், லுஹர் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம் வரும்வரைத் தாமதப்படுத்துவார்கள்; பிறகு லுஹரையும் அஸ்ரையும்சேர்த்துத்தொழுவார்கள். முஸ்லிம் 1265

ஜம்மு செய்வதற்கு இந்த நான்கு வக்து தொழுகைகளை உரிய நேரத்தில் முறையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். கஸா் செய்ய வேண்டிய குறிப்பிட்ட எல்லையை தாண்டி விட்டால், சுருக்கியும், சோ்த்தும் தாராளமாக தொழலாம்.

ஊரில் ஜம்மு ( சேர்த்து ) தொழுதல்

பொதுவாக ஜம்மு செய்வதற்கு முன்று காரணங்கள் உள்ளன. முதலாவது பிரயாணம், இரண்டாவது மழை, மூன்றாவது பயம், இந்த முன்று காரணங்களுக்காக ஜம்மு (சேர்த்து) தொழலாம். அதே நேரம் இந்த முன்று காரணங்கள் இல்லாமல் ஊரிலே இருக்கும் போது நபியவர்கள் ஜம்மு செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்வதை காணலாம்.

“ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை. முஸ்லிம் 1267

ஊரிலே இருக்கும் போது எந்த காரணமுமின்றி தொழுகைகளை சேர்த்து நபியவா்கள் தொழுதுள்ளார்கள். ஏன் நபியவர்கள் இப்படி செய்தார்கள் என்பதை பின் வரும்செய்திகள் மூலம் அவதானிக்கலாம்.

“ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்;மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?” என்று கேட்கப்பட்டதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்” என விடையளித்ததாக இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம் 1272

ஊரில் இருக்கம் போது ஓரு தொழுகையை மற்றொரு தொழுகையுடன் சேர்த்து நபியவர்கள் தொழுதது, இந்த சமுதாயத்திற்கு சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தான் என்பதை அறிந்து கொண்டோம்.

இப்போது ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது மஃரிபுக்கு ஒரு நேரம், பிறகு இஷாவிற்கு ஒரு நேரம் என்று நேரத்தை ஒதுக்கினால் நிகழ்ச்சியை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடியாது. மஃரிபுடன் இஷாவையும் சேர்த்து தொழுது விட்டால், அனைவருக்கும் இது இலகுவாக அமைந்து விடும்.

அதுமட்டுமல்ல நிகழ்ச்சி முடிந்து களைப்போடு வீட்டிற்கு சென்று இஷாவை தொழாமலே உறங்கி விடுவார்கள்.

இப்படி பொருத்தமான நேரங்களில் தேவையைக் கருதி சேர்த்து தொழுதுக் கொள்ளலாம்.

மழைக் காலங்களில் ஜம்மு செய்தல்
தொடா் மழை, அடை மழை, காலங்களில் தனது வீட்டிலே தொழுது கொள்ளும் படி நபியவர்கள் சொன்ன செய்தியை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நாம் அறியலாம்.

“ நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது “அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்” (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு “(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் “ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 1240

மேலும் “ ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்த போது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். முஸ்லிம் 1243

மேலும் “ அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்… அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் “ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், “ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்” (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!” என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)” என்று கூறினார்கள். முஸ்லிம் 1244

மேற்ச் சென்ற ஹதீஸின் மூலம் இரண்டு விடயங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அதாவது தொழுகை நேரத்தின் போது கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது என்றால், மழையில் நனைந்துக் கொண்டும், சேற்றில் மிதித்துக்கொண்டும்பள்ளிக்கு வரத் தேவை இல்லை வீட்டிலே தொழுது கொள்ள முடியும்.

அடுத்ததாக பள்ளியில் மஃரிபை தொழுது முடிந்தவுடன் மழை பெய்கிறது என்றால் அப்போது இஷாவை முற்படுத்தி மஃரிப் வக்திலே சோ்த்து தொழுது விட்டு வீட்டுக்கு போகலாம், என்பதை தான் மேற்ச் சென்ற ஹதீஸ்கள் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.

எனவே மேற்ச் சென்ற அனைத்து செய்திகள் மூலம் கஸா், ஜம்வு, அதனுடைய தூர எல்லைகள், எப்ப, எப்ப, கஸா், மற்றும் ஜம்வு செய்யலாம்.என்பதை படித்துக் கொண்டீா்கள அல்ஹம்து லில்லாஹ்.

“அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33 -21)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *