Featured Posts
Home » மீடியா » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 7

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 7

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

குர்ஆன், பைபிள் இரண்டுமே இயேசு பற்றிப் பேசுகின்றன. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இயேசுவை மதிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசுவை இறைவனின் திருத்தூதர் என்று போற்றுகின்றனர். அவர் ஆண் தொடர்பின்றி அற்புதமாகப் பிறந்தவர், பிறந்ததும் தனது தாயின் தூய்மை பற்றி அற்புதமாகப் பேசியவர். இறைவனிடமிருந்து வேத வெளிப்பாட்டைப் பெற்று மக்களுக்கு நற்போதனை செய்தவர். இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக அழிவு நெருங்கும் போது மீண்டும் பூமிக்கு வந்து நீதியான, அமைதியான ஒரு ஆட்சியை உலக மக்களுக்கு வழங்குவார் என்றெல்லாம் முஸ்லிம்கள் நம்புகின்றனர். பைபிளும், குர்ஆனும் இயேசு பற்றிக் கூறும் தகவல்களை அலசி ஆராய்ந்தால் பைபிள் பல இடங்களில் இயேசுவை இழிவு படுத்தும் தகவல்களைத் தரும் போது குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் தகவல்களை தந்திருப்பதை அறியலாம். இருப்பினும் மூன்று விடயங்களில் அல்குர்ஆன் இயேசுவை இழிவுபடுத்துவதாக கிறிஸ்தவர்கள் நினைக்கலாம்.

1. பைபிள் இயேசுவை இறைவனின் குமாரன் என்று கூறுகின்றது. ஆனால், குர்ஆன் அவரைக் கடவுளின் குமாரன் அல்ல கடவுளின் தூதர் என்கின்றது.

2. பைபிள் இயேசுவை பிதா, சுதன், பரிசுத்த ஆவி எனக் கூறி கடவுள் தன்மையில் பங்குள்ளவர் என்று கூறுகின்றது. இஸ்லாம், கடவுள் ஒருவனே! இயேசு கடவுள் அல்ல மனிதர் என்று கூறுகின்றது.

3. இயேசு உலக மக்களின் பாவங்களைப் போக்க தனது உயிரை சிலுவையில் தியாகம் செய்தார் என பைபிள் கூற இஸ்லாம் இந்தக் கோட்பாட்டை மறுப்பதுடன் இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை, அவர் உயிருடன் உயர்த்தப்பட்டுவிட்டார் என்று கூறுகின்றது.

இந்த மூன்று விடயங்களிலும் குர்ஆன் இயேசுவை இழிவுபடுத்திவிட்டதாக கிறிஸ்தவ நண்பர்கள் நினைக்கலாம். ஒருவர் செய்த போதனைக்கு மாற்றமாக அவரை சிலாகிப்பது அவரை கண்ணியப்படுத்துவதாகாது. உண்மையில் வாழ்நாளில் பல தியாகங்கள் செய்து ஒருவர் செய்த போதனைகளுக்கு மாற்றமாக ஒருவரைப் புகழ்ந்துரைப்பது அவரைக் கொலை செய்வதை விடக் கொடியதாகும். அந்தத் தவறைத்தான் கிறிஸ்தவ உலகம் செய்துகொண்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் இயேசுவை அவருடைய போதனைக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளும் குர்ஆன்தான் அவரை உரிய முறையில் கண்ணியப்படுத்துகின்றது என்பதைத் தொடராகப் பார்த்து வருகின்றோம்.

இயேசு கடவுளிற்கு குமாரன் அல்ல என்பதே குர்ஆனின் திட்டவட்டமான தீர்ப்பாகும். பைபிளின் போதனையும் இதைத்தான் கூறுகின்றது. பைபிள் இயேசுவை மட்டுமன்றி மற்றும் பலரையும் கடவுளின் பிள்ளைகள் என்று கூறுகின்றது என்பன போன்ற பல செய்திகளைச் சென்ற தொடரில் பார்த்தோம். இயேசுவைக் கடவுள் என்று கூறுவது பைபிளின் போதனைக்கு முரணானது என்பதை இந்தத் தொடரில் நோக்குவோம்.

‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.’ (யோவான் 17:3)

கடவுள் ஒருவன் இயேசு இறைவனால் அனுப்பப்பட்டவர் என்பதை அறிவதே நித்திய ஜீவனை அடையும் வழி என்று இயேசு கூறுகின்றார். இதைத்தான் ‘லாஇலாஹ இல்லல்லாஹ் – ஈஸா ரஸூலுல்லாஹ்’ – வணக்கத்துக்குரிய தேவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை. ஈஸா அல்லாஹ்வின் திருத்தூதர் என்று இயேசு போதித்தார் என இஸ்லாம் கூறுகின்றது. இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர். அவர் கடவுள் அல்ல. இயேசுவின் இந்த வாசகம் அவர் கடவுள் தன்மையில் பங்குள்ளவர் அல்ல என்று தெளிவாகக் கூறுகின்றது. அவன் அனுப்பியவர் அல்ல அனுப்பப்பட்டவர்.

‘வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.’

‘இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.’

‘உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.’

‘இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார்.’

‘அதற்கு வேதபாரகன்: சரிதான் போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை.’
(மாற்கு 12:28, 32)

தேவன் ஒருவன் தான் மூவர் அல்ல என்பதே இயேசுவின் பிரதான போதனை. இப்படியிருக்கின்ற இப்போதனையை மீறி இயேசுவையும் இறைவன் என்று கூறுவது அவரை இழிவுபடுத்துவதல்லவா?

‘அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.’
(மத்தேயு 24:36)

மறுமை எப்போது ஏற்படும் என்பதை கடவுள் ஒருவரே அறிவார். தனக்கும் எது தெரியாது என்று இயேசு கூறுகின்றார். கடவுள் என்பவர்தான் உலகை நிர்வகிப்பவர். உலகம் எப்போது அழியும் என்பது எனக்குத் தெரியாது என்று இயேசு கூறுகின்றார், கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்கின்றார். இப்படிக் கூறும் போது இயேசுவைக் கடவுள் என்று கூறுவது அவரது போதனைக்கே முரணானது அல்லவா?

‘ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.’
(மத்தேயு 27:46, 15:34)
இயேசு சிலுவையில் அறையப்பட்ட போது இப்படிக் கத்தியதாக பைபிள் கூறுகின்றது. இயேசுவே தேவன் என்றால் அவர் என் தேவனே! என் தேவனே! என்று யாரையோ கூப்பிட்டால் காப்பாற்றுமாறு கத்தியவர் கடவுளாக இருப்பாரா என்பதைக் கிறிஸ்தவ நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

‘பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்து போவதுமில்லை, இளைப்படைவதுமில்லை. இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.’ (ஏசாயா 40:28)

கடவுள் சோர்ந்து போகமாட்டார் என்று பைபிள் கூறும் போது இப்படிக் கூப்பிட்ட ஒருவர் கடவுளாக இருப்பாரா?

‘இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.’
(யோவான் 20:17)

இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த பின் நடந்த நிகழ்வாக பைபிள் இதைக் கூறுகின்றது. என் தேவனும், உங்கள் தேவனும் என்று இயேசு கூறி நான் கடவுள் அல்ல, உங்கள் கடவுள்தான் எனக்கும் கடவுள். நான் கடவுள் தன்மையில் பங்கு இல்லாதவன் என்று பறைசாட்டுகின்றார். இயேசுவின் போதனை இப்படித்தான் இருந்தது என அல்குர்ஆனும் தெளிவாகக் கூறுகின்றது.

‘நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான். எனவே, அவனையே வணங்குங்கள்ளூ இதுவே நேரான வழியாகும்(என்றும் கூறினார்).’ (3:51)

”நிச்சயமாக மர்யமின் மகன் மஸீஹ்தான் அல்லாஹ்’ எனக் கூறியோர் நிராகரித்து விட்டனர். ‘இஸ்ராஈலின் சந்ததியினரே! எனது இரட்சகனும் உங்களது இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்று அல்மஸீஹ் கூறினார். நிச்சயமாக யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடுத்துவிடுவான். அவனது ஒதுங்குமிடம் நரகமே! அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளர்களும் இல்லை.’
‘எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், என்று (கூறும்படி) நீ என்னை ஏவியதைத் தவிர வேறு எதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும், நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீதான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.’
(5:72, 117)

‘நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இரட்சகனும் உங்களது இரட்சகனுமாவான். எனவே, அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழியாகும் (என்றே அவர் கூறினார்.)’ (19:36)

‘நிச்சயமாக அல்லாஹ்வே எனது இரட்சகனும், உங்களது இரட்சகனுமாவான். எனவே, அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும் (என்றும் கூறினார்.)’ (43: 64)

இவ்வாறு என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங் கள் என்றே இயேசு போதித்தார். தன்னையோ, தன் தாயையோ வணங்குமாறு இயேசு போதிக்கவில்லை. இயேசுவைக் கடவுள் என்று கூறியவர்கள் பரலோக ராஜ்யத்தை (சுவனத்தை) அடைய முடியாது என்பதே குர்ஆனினதும் பைபிளினதும் உண்மையான போதனையாகும்.

‘மர்யமின் மகன் ஈஸாவே! ‘அல்லாஹ்வையன்றி என்னையும் எனது தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று மனிதர்களுக்கு நீர் கூறினீரா? என அல்லாஹ் கேட்கும் போது, அ(தற்க)வர் ‘நீ மிகத் தூய்மையானவன்ளூ எனக்கு உரிமை இல்லாதவற்றை நான் சொல்வதற்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய். ஆனால் உன் உள்ளத்தில் இருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கறிந்தவன்’ என்று கூறுவார்.’

‘எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், என்று (கூறும்படி) நீ என்னை ஏவியதைத் தவிர வேறு எதனையும் நான் அவர்களுக்குக் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றியதும், நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீதான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.’
(5:116, 117)

இதே செய்தியை பைபிள் இப்படிக் கூறுகின்றது.

‘பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.’

‘அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக் காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.’ (மத்தேயு 7:21, 23)

கிறிஸ்தவ உலகமே! இயேசுவைக் கடவுள் என்று வழிபாடு செய்யும் உங்களை தீர்ப்பு நாளில் இயேசு, ‘அக்கிரமக்காரர்களே! உங்களை எனக்குத் தெரியாது’ என்று விரட்டிவிடுவார்கள். ஏனெனில், அவர் தன்னைக் கடவுள் என்று கூறவில்லை. நீங்கள் அவர் கூறாததை அவர் மீது இட்டுக்கட்டி அவரையே கடவுளாக்கியுள்ளீர்கள். உண்மையில் இயேசுவின் மீது அன்பும், மரியாதையும், உண்மையான விசுவாசமும் இருந்தால் இயேசுவைக் கடவுள் என்றோ கடவுள் தன்மையில் பங்குள்ளவர் என்றோ கூறுவதை நிறுத்திவிடுங்கள். அதுவே உங்களைப் பரலோ ராஜ்யத்தில் பிரவேசிக்கச் செய்யும். இதோ குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

‘வேதத்தையுடையோரே! உங்கள் மார்க்கத்தில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர வேறு எதனையும் கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவன் அதை மர்யமுக்கு (ஜிப்ரீல் மூலமாக) போட்டான். இன்னும் (அவர்) அவனிடமிருந்து வந்த ஓர் ஆன்மாதான். எனவே, அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுளை) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டு விடுங்கள். (அது) உங்களுக்கு நல்லதாகும். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியான வன் அல்லாஹ் ஒருவனே. அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூய்மையானவன். வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.’ (4:171)

பைபிளின் இன்னும் ஏராளமான வசனங்கள் அவர் ஒரு தூதர் என்பதை உறுதி செய்கின்றன. அவர் கடவுள் அல்ல, கடவுளால் அனுப்பப்பட்டவர் மட்டுமேயாகும்.
‘உங்களை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக் கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக் கொள்ளுகிறான்.’

‘தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக் கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.’ (மத்தேயு 10:40-41)

தான் ஒரு நபி – தீர்க்கதரிசி. கடவுளால் அனுப்பப்பட்ட தன்னை ஏற்றுக் கொண்டால் தன்னை அனுப்பியவரை ஏற்றுக் கொள்வதாக அது அமையும் என்கின்றார்.

‘அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார்.’
(மத்தேயு 15:24)

‘அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.’
(மத்தேயு 21:11)

‘அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப் பட்டேன் என்றார்.’ (லூக்கா 4:43)

இவ்வாறு பைபிள் முழுவதும் அவர் தேவனால் அனுப்பப்பட்ட தேவதூதர் – இறைத்தூதர் என்பதற்கான ஆதாரங்கள் நிறைந்துள்ளன. இதைத்தான் இஸ்லாம் இயேசு இறைவன் அல்ல இறைத்தூதர் என்று கூறுகின்றது.

இயேசு தன்னைக் கடவுள் என்று கூறவில்லை. எனவே, இயேசுவைக் கடவுள் என்று கூறுபவர்கள்தான் அவரை இழிவு படுத்துகின்றனர். அவரை இறைத்தூதராக மட்டும் ஏற்றுக் கொள்பவர்களே அவரை உரிய முறையில் உண்மையாக கண்ணியப் படுத்துகின்றனர் என்பதை அறியலாம்.

தொடரும்….
இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *