Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி அலி(ரலி) அவர்களின் உண்மை நிலை

அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி அலி(ரலி) அவர்களின் உண்மை நிலை

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-

இஸ்லாமிய உம்மத்தை கீறிகிழித்து குளிர்காய நினைக்கும் குள்ளநரி-களான ஷீஆக்கள் அலி(ரலி) அவர்களுக்கும் நேர்வழிப் சென்ற அபூபக்கர் (ரலி) உமர்(ரலி) ஆகியோருக்குமிடையில் குரோதமும் பகைமையும் இருந்ததாக கதைகட்டினார்கள். அபூபக்கர் (ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரை விட அலி(ரலி) சிறந்தவர் வல்லவர் என்றும் புராணங்கள் பாடினார்கள். எங்களுக்கடையில் எவ்வித குரோதமும் பகைமையும் இருக்கவில்லை என்பதை மனம் திறந்து சொல்கிறார் அலி(ரலி) அவர்கள்.

தன்னை விட அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோரையும் சிறப்பானவர்கள் என்றே அலி(ரலி) அவர்கள் கூறிவந்ததுடன் அவர்களுடைய ஆட்சியில் நன்னடத்தையுள்ள ஒரு முஸ்லிமாக கட்டுப்பட்டு நடந்தார்கள்.

ஒரு முறை அலி(ரலி) அவர்களுடைய மகன் முஹம்மத் (ரஹ்) அவர்கள் தன்னுடைய தந்தை அலி(ரலி) அவர்களைப் பார்த்து கேட்டதை பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

நான் என் தந்தை அலி(ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களுக்குப்பின் மக்களில் சிறந்தவர் யார் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்கள் என்று பதிலளித்தார்கள். அவர்களுக்கு பிறகு யார் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் உமர்(ரலி) அவர்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு மக்களில் சிறந்தவர் உஸ்மான் (ரலி) அவர்கள் அவர்கள் தாம் என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சியவனாக பிறகு மக்களில் சிறந்தவர் நீங்கள் தானே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் நான் முஸ்லிம்களில் ஒருவன் அவ்வளவு தான் என்று கூறினார்கள். (நூல்: புகாரி)

ஸூவைத் பின் நப்லஹ் என்பவர் கூறும் போது:
ஆபூபக்கர் (ரலி) உமர்(ரலி) ஆகிய இருவரைப் பற்றியும் குறை கூறிக் கொண்டிருந்த மனிதர்களுக்கருகாமையில் நடந்து சென்றேன். இது பற்றி அலி(ரலி) அவர்களிடம் கூறிவிட்டு நீங்கள் மனதில் வைத்துள்ளதைத்தான் அவர்கள் கூறுகிறார்களா? அவர்களுடன் அப்துல்லாஹ் இப்னு ஸபாவும் இருக்கிறானே என்று கேட்டேன்.

உடனே அலி(ரலி) அவர்கள் அதனை விட்டும் அல்லாஹ் என்னை பாதுகாத்து அருள் புரிவானாக. என்று கூறி எழுந்து என் கையைப் பிடித்துக் கொண்டு மஸ்ஜிதில் பிரவேசித்தார்கள். மிம்பரில் ஏறி நின்று கொண்டே தங்களது வெண்மையான தாடியைப் பிடித்துக் கொண்டு அழுதார்கள். தாடி முழுவதும் கண்ணீரால் நனைந்து விட்டது. மஸ்ஜித் நிறைய மக்கள் நிரம்பியதும் பின்வருமாறு உபதேசம் செய்தார்கள்:

அல்லாஹ்வின் தூதரின் அன்புச் சகோதரர்களாகவும் அமைச்சர்களாகவும் நண்பர்களாகவும் குறைஷியர்களின் தலைவர்களாகவும் முஸ்லிம்களின் தந்தையர்காளகவும் இருந்த அபூபக்கர்(ரலி) உமர்(ரலி) அவர்களைச் சில மனிதர்கள் ஏன் குறைகூறுகிறார்கள். இவர்கள் கூற்றில் எனக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. இப்படியானவர்களை நான் தண்டிப்பேன். அவர்களிருவரும் அன்பின் அடிப்டையிலேயே அல்லாஹ்வின் தூதருடன் நெருங்கி பழகினார்கள். எப்போதும் உண்மையை பேணியும் வாக்கை நிறைவேற்றியும் நடந்தார்கள். நன்மையை ஏவினார்கள் தீமையை விலக்கினார்கள். கோபித்தார்கள் தண்டித்தார்கள். அல்லாஹ்வின் கட்டளை படியே! அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் இவ்விருவருடைய அபிப்பிராயத்திற்கு மேலால் எவருடைய அபிப்பிராயத்தையும் ஏற்கவில்லை. இவ்விருவரைப் போன்று மற்றெவரையும் விரும்பவுமில்லை. அல்லாஹ்வின் விஷயங்களில் இவ்விருவருடைய தாராள உறுதியைக் கண்ட இறைத்தூதர் அப்படியே நடந்து கொண்டார்கள். இவ்விருவரும் பரம திருப்தியுடனேயே வபாத்தானார்கள். முஸ்லிம்களும் இவ்விருவர் மீதும் திருப்திக் கொண்டார்கள். இவ்விருவரின் ஆலோசனையையும் பேச்சையும் அண்ணலார் ஒருபோதும் தட்டியதில்லை. அத்தகைய நிலையிலே அவ்விருவரும் மரணமடைந்தார்கள். அவ்விருவருக்கும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக.

வித்துக்ளை முளைக்கச் செய்தவனும் தென்றலை படைத்தவனுமாகிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! சிறந்த விசுவாசியே அவ்விருவரையும் விரும்புவான். அட்டகாசம் செய்யும் துர்ப் பாக்கியவனே அவர்களை வெறுப்பான். அவ்விருவரையும் விரும்புதல் வணக்கமாகும். அவர்களை வெறுப்பது குழப்படி செய்வதாகும். அவ்விருவரை பற்றியும் நல்லெண்ணம் கொள்ளாதோனை அல்லாஹ் சபிப்பானாக என அலி(ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஷ்ஷீஆ வஸ்ஸூன்னா)

(மற்றொரு அறிவித்தலின் படி) முஃமின்களுக்கு தொழுகை நடாத்தும் படி நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு ஏவினார்கள். நபிகளாரின் வாழ்நாளில் ஏழு நாட்கள் அபூபக்கர்(ரலி) தொழுகை நடாத்தியுள்ளார்கள். அல்லாஹ் தனது நபியை கைபற்றிக் கொண்ட போது (மரணிக்கச் செய்த போது) அபூபக்கரை முஃமின்களின் ஆட்சி அதிகாரத்திற்கு நியமித்தார்கள். மக்கள் அவரிடம் ஸகாத்தை ஒப்படைத்தார்கள். வெறுப்பின்றி விருப்புடன் பைஅத் செய்து கொடுத்தார்கள். அபூதாலிபின் மக்களில் நான் தான் முதலில் அவருக்கு கட்டுப்படும் அந்த வழியை செய்தவன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் அல்லாஹ்வை அஞ்சியவர்களில் சிறந்தவராகவும் இருந்தார்கள். இரக்கம் காட்டுபவராகவராகவும் அன்பு காட்டுபவராகவும் பேணுதலுடையவராகவும் இஸ்லாத்தை ஏற்ற வயதில் மூத்தவராகவும் இருந்தார். மீகாயில் (அலை) அவர்களது அன்பும் இரக்கத்திற்கும் இப்றாகீம் நபியின் மன்னிப்பும் கண்ணியத்திற்கும் அவரை நபி (ஸல்) அவர்கள் ஒப்பிட்டார்கள். இந் நிலையில் அவர் எங்களை விட்டும் மறையும் வரை நபிகளாரின் வரலாராக அவர் எங்களிடம் விளங்கினார்.

அவருக்குப் பின் உமர்(ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். உமரை பொருந்திக் கொண்டவரும் வெறுத்தவரும் இருந்தார்கள். அவரை வெறுத்தவர் உலகை விட்டும் பிரியும் போது உமர் மீது திருப்திக் கொள்ளாமல் மரணிக்க வில்லை. நபி(ஸல்) அவர்களதும் அவரது தோழர் அபூபக்கரினதும் வழியிலே ஆட்சி செய்தார். பால்குடிக்கும் குழந்தை தன் தாயை பின் தொடர்வது போலவே அவ்விருவரினதும் அடிச்சுவட்டை பின்தொடரந்தார்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உமர்(ரலி) அன்பாகவும் இரக்கமாகவும் இருந்தார். அநீதி இழைக்கப்பட்டவருக்கு உதவக் கூடியவராகவும் அன்புக் காட்டக்கூடியவராக ஒத்தாசை வழங்கக் கூடியவராகவும் இருந்தார். அல்லாஹ்வுடைய விஷயத்தில் பழிப்போரின் பழிச் சொல்லை அவர் பொறுப்படுத்தியதில்லை. அவர் நாவின் மூலமாகவே அல்லாஹ் சத்தியத்தை நிலை நாட்டினான். உண்மையை நிலைபெறச் செய்தான். அவரின் நாவின் மூலம் ஒரு வானவர் பேசுகிறாரோ என்று நாம் எண்ணும் அளவுக்கு அவர் நடந்து கொண்டார். அவர் மூலமாக அல்லாஹ் இஸ்லாத்தை கண்ணியப் படுத்தினான். அவரது ஹிஜ்ரத்தை நேர்மையானதாகவும் ஆக்கினான். நயவஞ்சகர்களின் உள்ளங்களில் அவரைப் பற்றிய பயத்தையும் முஃமின்களின் உள்ளங்களில் அவர்மீதுள்ள அன்பையும் ஏற்படுத்தினான். ஜிப்ரீல் (அலை) அவர்கள் எதிரிகள் மீது காட்டும் கடுகடுப்புக்கும் நூஹ் (அலை) அவர்களின் கோபத்திற்கும் அவரை நபி(ஸல்) அவர்கள் ஒப்பிட்டார்கள். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் இன்பம் காண்பவரைவிட அல்லாஹ் வுக்கு கட்டுப்படுவர் துன்பப்படுவதை மேலாகக் கருதினார்கள்.

அபூபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோரைப் போன்று உங்களுக்கு யார் இருக்கின்றார்கள். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் ரஹ்மத் உண்டாகட்டுமாக. அவ்விருவரின் வழியில் செல்ல எங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. அவ்விருவரின் அடிச்சுவட்டை பின்பற்றாமல் அவர்களது அந்தஸ்த்தையும் நேசத்தையும் ஒருவர் அடைய முடியாது.

அறிந்துகொள்ளுங்கள். எவர் என்னை நேசிக்கின்றாரோ அவர் அவ்விருவரையும் நேசிக் கட்டும். அவ்விருவரையும் நேசிக்காதவர் என்னை கோபப்படுத்திவிட்டார். நான் அவரை விட்டும் விலகிக் கொண்டேன். அவ்விருவர் மீதும் அவதூரு சொல்பவரை நான் கடுமையாக தண்டிப்பேன். இந்த நாளைக்குப் பின் யாராவது அவர்கள் மீது கெட்டதை சொன்னால் அவருக்கு இட்டுக்கட்டியவருக்குரிய தண்டனையை வழங்குவேன்.

அறிந்து கொள்ளுங்கள் இந்த உம்மத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் சிறந்தவர்கள் அபூபக்கர்(ரலி) அவர்களும் உமர்(ரலி) அவர்களுமா வார் நான் விரும்பினால் மூன்றாம் நபரின் பெயரையும் குறிப்பிடுவேன். எனக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருகின்றறேன் எனக் தனது உரையை முடிவு செய்தார்கள் அலி(ரலி) அவர் கள். (நூல்: அல்கவ்பதுத்துர்ரிய் பீ ஸீரதி அபீ ஸ்ஸிப்தைனி அலி(ரலி) பக்கம். 133. அந்நஹ்யு அன் ஸப்பில் அஸ்ஹாப் லில் லியாஇ மக்தஸி பக்கம் 7)

One comment

  1. Unfortunately there is no proper instructions to access the link. Please insert always a direct link to access the source.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *