Featured Posts
Home » வரலாறு » நபித்தோழர்கள் » அபூபக்கர் (ரலி) அவர்களின் மரணத்தின் போது அலி (ரலி) அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை

அபூபக்கர் (ரலி) அவர்களின் மரணத்தின் போது அலி (ரலி) அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை

-இம்தியாஸ் யூசுப் ஸலபி-

நபி(ஸல்) அவர்களின் வபாத்திற்குப் பின் மதீனா சோகத்தால் நிரம்பிய நிகழ்வு அபூபக்கர்(ரலி) அவர்களின்மரணத்தின் போதே காட்சித்தந்தது. அல்லாஹ்வின் தூதரின் நேசத்திற்குரிய தோழரும் ஆறுயிர் நண்பருமான அபூபக்கர்(ரலி) அவர்களின் இழப்பை எண்ணி மதீனத்து மக்கள் அபூபக்கர்(ரலி) அவர்களின் ஜனாஸாவைச் சூழ கண்ணீரில் மூழ்கி இருந்தபோது அந்த இடத்திற்கு அலி(ரலி) அவர்கள் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன் எனக் கூறி அழுதவராக விரைந்து வந்தார்கள்.

ஆபூபக்கர்(ரலி) அவர்களின் ஜனாஜாவை பார்த்தவராக கண்ணீர் மல்க பின்வருமாறு பேசத் தொடங்கினார்கள். அபூபக்கரே அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக. நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விருப்பத்திற்கு உரியவராகவும் அன்பிற்குரியவராகவும் ஆறுதல் கூறக்கூடியவராகவும் பக்கபலமானவராகவும் இருந்தீர்கள். நபிகளாரின் இரகசியம் காப்பாளராகவும் ஆலோசனைக்குரியவராகவும் திகழ்ந்தீர்கள்

இஸ்லாத்தை ஏற்றவர்களில் முதல் நபராக நீங்கள் இருந்தீர்கள். உளத்தூய்மையுடன் நடந்தீர்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் அஞ்சியவராகவும் இருந்தீர்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உயர்ந்த செல்வந்தவராகவும் ரசூலுல்லாஹ்வுக்கு பாதுகாப்புடையவராகவும் இஸ்லாத்தில் உறுதிமிக்கவராகவும் மிகச் சிறந்த தோழமையுடையவராகவும் இருந்தீர்கள்.

மக்களில் அதிக சிறப்புக்குரியவராக இஸ்லாத்தை ஏற்ற முந்தியவர்களில் மிகச் கண்ணியத்திற்குரியவராகவும் அந்தஸ்தில் உயர்ந்தவராகவும் நபிகளாரிடம் பரிந்து பேசுபவர்களில் நெருக்கமானவராகவும் இருந்தீர்கள். நேர்வழியை பின்பற்றுவதில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒப்பானவராகவும் இருந்தீர்கள்.

மக்கள் எல்லோரும் நபி (ஸல்) அவர்களை பொய்பித்த போது நீங்கள் உண்மைப்படுத்தீனீர்கள். நபிகளாருக்கு முற்றிலும் கட்டுப்படக்கூடியவராக இருந்தீர்கள். சித்தீக் (உண்மையாளர்) என்று அல்லாஹ் உங்களை குறித்து குறிப்பிடும் போது “சத்தியத்தைக் கொண்டு வந்தவரும் அதனை உண்மைப்படுத்தியவர்களுமே பயபக்தியாளர்களாவர் (39:33)” என்று குறிப்பிடுகின்றான்.

மக்கள் கஞ்சத்தனம் காட்டியபோது நீங்கள் வாரி வழங்கி உதவி புரிந்தீர்கள். கஷ்டமான வேளையிலும் நபிகளாருடன் ஒன்றாக இருந்தீர்கள். ஹிஜ்ரத் பயணத்தின் போது குகையில் நபிகளாருடன் ஒருவராகவும் அமைதியை கொடுக்கக்கூடியவராகவும் இருந்தீர்கள்

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் மக்கள் மதம் மாறியபோது நீங்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கும் அவனது உம்மத்(சமூகத்திற்கும்) சிறந்த கலீபாவாக திகழ்ந்தீர்கள். எந்த நபியுடைய கலீபாவும் மேற்கொள்ளாத பணியை நீங்கள் மேற்கொண்டீர்கள். மக்கள் மனதளவில் பலஹீனமடைந்த போது நீங்கள் துணிவு பெற்றீர்கள். மக்கள் பலஹீனடைந்த போது நீங்கள் பலமுள்ளவராக இருந்தீர்கள். மக்கள் பலஹீனமடைந்த போது நபிகளாரின் வழிமுறையை நீங்கள் கடைப்பிடித்தீர்கள்.

நபி (ஸல்)அவர்கள் கூறியது போல் நீங்கள் உடல் ரீதியாக பலஹீனமானவராக இருந்த போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை கடைப்பிடிப்பதில் பலமுள்ளவராக இருந்தீர்கள். பணிவுள்ளவராகவும் அல்லாஹ்விடத்தில் கண்ணியமுள்ளவராகவும் இருந்தீர்கள். மக்கள் சுட்டிக் காட்டக்கூடிய எக்குறையுமுடையவராக நீங்கள் இருக்கவில்லை. எவருக்கும் அநீதி இழைக்கவுமில்லை.

பலஹீனனமானவர் தன்னுடைய உரிமையை பெற்றுக் கொள்ளும் வரை அவர் உங்களிடம் பலமுள்ளவராக இருந்தார். தூரத்தில் இருப்பவரும் பக்கத்தில் இருப்பவரும் உங்களிடத்தில் சமமானவராகவே இருந்தனர். அல்லாஹ்வை அஞ்சி நடப்பவரே உங்களிடத்தில் மிக நெருக்கத்திற்குரியவராக இருந்தார்.
உங்களுடைய விவகாரத்தில் உண்மை சத்தியம் மற்றும் மென்மை இருந்தது. உங்களால் இந்த மார்க்கம் சீரானது. உங்களால் ஈமானும் உறுதியானது. அல்லாஹ்வின் கட்டளையும் மேலோங்கியது.

அபூபக்கரே! நீங்கள் எல்லோரையும் (நன்மையில்) மிஞ்சி போய் விட்டீர்கள். உங்கள் பின்னால் உங்களை பின் தொடர்பவருக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டீர்கள். நீங்கள் நன்மையின் மூலம் தெளிவான வெற்றியை பெற்று விட்டீர்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன். அல்லாஹ்வையும் அவனது முடிவையும்பொருந்திக் கொண்டோம். அவனது கட்டளைக்கு கட்டுப்பட்டோம்.

அல்லாஹ்வின் தூதருக்குப்பின் உங்களைப் போன்ற ஒருவரை இழந்ததன் மூலம் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் (இதுபோன்ற) துன்பத்தை அடையவில்லை.
அபூபக்கரே நீங்கள் மார்க்கத்திற்கு கண்ணியமானவராகவும் பாதுகாப்பானவராகவும் அரணாகவும் இருந்தீர்கள். (இப்போது) அல்லாஹ் உங்களை அவனது தூதருடன் சேர்த்து விட்டான். உங்களுக்குப் பின் எங்களை வழிகெடுக்காமலும் உங்கள் கூலியை எங்களுக்கு தடுக்காமலும் இருப்பானாக என்று அலி (ரலி) அவர்கள் கண்ணீர் மல்க கூறி முடித்த போது அதுவரையிலும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்த மக்கள் அலியே நீங்கள் உண்மையைத் தான் கூறினீர்கள் என்று அழத்துவங்கினார்கள்.

(நூல்: அல்கவ்கபுத் துர்ரீய் பீ ஸீரதி அபிஸ் ஜிப்தைனி பக்கம் 99- 101)

2 comments

  1. இதுவரை அறிந்திடாத சம்பவம் ஒன்றை வாசித்து தெளிவுப் பட்டேன். மிக்க நன்றி உங்களுக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு மேன் மேலும் உதவி புரிவானாக! ஆமீன்.

  2. Masha allah….
    yandha alavirku unmaiyaga irundhu vaalndhu maranithu irundhu irukkiraargal…..
    allah ivargaludan nammaium marumail serthu vaika naam anaivarum dua saivom

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *