Featured Posts
Home » சட்டங்கள் » தொழுகை » இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா?

இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா?

முதலாவதாக நடைப்பெறும் ஜமாஅத் தொழுகைக்குப் பின் இரண்டாவதாக ஜமாஅத் தொழுகை நடத்த முடியுமா?
-இம்தியாஸ் யூசுப் ஸலபி-

பள்ளிவாசலில் முதலில் நடத்தப்படும் ஜமாஅத் தொழுகை முடிந்து விட்டால் இரண்டாவது முறையாக அப்பள்ளியில் ஜமாஅத் தொழுகை நடத்தப்படக் கூடாது அதற்கு பதிலாக தனித்தனியாக தொழுது விட்டு செல்ல வேண்டும். அதுமட்டுமன்றி இரண்டாவது ஜமாஅத் நபிகளார் (ஸல்) அவர்கள் நடத்தியதாக ஆதாரமுமில்லை என சிலர் கூறிவருகிறார்கள்.

நாம் அறிந்தவரையில் இவர்களுடைய வாதத்திற்கு நேரடியான எந்த ஆதாரமுமில்லை. தனித்து தொழுவதை விட கூட்டாக தொழுவது தான் இருபத்தேழு மடங்கு நன்மை உண்டு என்றிருக்கும் போது ஜமாஅத் தொழுகையை தவிர்க்க எந்த முகாந்திரமுமில்லை.

முதலாவது ஜமாஅத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு விரைந்து வரும்போது அந்த ஜமாஅத் தொழுகை முடிவடைந்துவிட்டால் வந்தவர்கள் கூட்டாக சேர்ந்து ஜமாஅத்தாக நின்று தொழுகை நடத்த முடியும் என்பதற்குத்தான் தெளிவான நேரடியான ஆதாரம் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடிந்த பின் பள்ளிக்கு வந்து ஒரு ஸஹாபி தனியாக தொழுவதற்கு முற்பட்டபோது இவருடன் சேர்ந்து தொழுது நன்மை பெறுபவர் உண்டா? என நபியவர்கள் கேட்டார்கள் என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி, இப்னு குஸைமா, பைஹகி)

ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னால் பள்ளிக்கு வந்த ஒருவர் தனித்து தொழ முற்பட்டபோது அவரை தனித்து தொழவிடாமல் இன்னுமொருவரை கூட்டாக்கி இரண்டாம் ஜமாஅத் தொழுகை நடத்த நபி (ஸல்) அவர்களே ஏற்பாடு செய்கிறார்கள் என்று இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது. நபியவர்களின் முன்னிலையில் அவர்களுடைய அனுமதியுடன் இரண்டாம் ஜமாஅத் நடத்தப்படுகிறது என்பதன் மூலம் இது தடுக்கப்படவில்லை என்பது புலனாகிறது. இந்த ஒரு ஆதாரமே போதுமானது.

தெளிவான இந்த ஹதீஸை வேண்டுமென்றே சிலர் மறுக்கிறார்கள். தேவையற்ற வியாக்கியானம் கொடுக்கிறார்கள். அதாவது ஜமாஅத் தொழுகையின் பின் வந்த அந்த ஸஹாபிக்கு துணையாக நின்று தொழுகை நடத்த அனுமதி கொடுத்தது ஏற்கனவே ஜமாஅத்துடன் தொழுது முடித்தவரை கூட்டாக்கிக் கொள்ளுமாறுதான் நபியவர்கள் கூறினார்களே தவிர வேறொருவரை கூட்டாக்கி ஜமாஅத்துடன் தொழ அனுமதிக்கவில்லை. எனவே இரண்டாம் ஜமாஅத்தை அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

தனித்து தொழ வந்தவருக்கு இன்னுமொருவர் இருந்தால்தானே ஜமாஅத் நடத்த முடியும். அந்த ஜமாஅத் தொழுகைக்கு ஏற்கனவே தொழுதவர் கூட்டு சேர்வதா? அல்லது வேறொருவர் கூட்டு சேர்வதா என்பது இங்கே முக்கியமல்ல. தனித்து தொழக் கூடியவருக்கு கூட்டு சேர்த்து தொழுவதற்கு ஒருவர் வேண்டும். அவர் ஏற்கனவே தொழுது முடித்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஜமாஅத்துடன் தொழுவதற்கு ஒருவர் தேவை என்பதுதான் முக்கியம். எனவே ஜமாஅத் தொழுகை முடிந்தபின் தனியாக வந்தவர் ஒருவர் மட்டுமல்லாமல் இரண்டு பேராக இருந்தால் அந்த இரண்டு பேருக்கும் ஜமாஅத்தாக கூட்டாக தொழ நபியவர்கள் அனுமதித்திருப்பார்கள். இரண்டு பேர் இல்லாமல் ஒருவர் மட்டும் வந்ததால்தான் அவருடன் சேர்ந்து தொழுவதற்கு தொழுது முடிந்த ஒருவரை கூட்டாக்கி ஜமாஅத் நடத்த நபியவர்கள் வழிகாட்டுகிறார்கள். எனவே இவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியானதல்ல. இரண்டாம் ஜமாஅத் கூடாது என்றால் இந்த ஏற்பாட்டை நபியவர்கள் செய்திருக்க மாட்டார்கள்.

இரண்டாம் ஜமாஅத் நடத்த இந்த ஹதீஸ் தெளிவானதாக இருப்பதனால்தான் இந்த ஹதீஸை அறிவிக்கக் கூடிய அனஸ் (ரழி) அவர்களே இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து இரண்டாவது ஜமாஅத் நடத்தியிருக்கிறார்கள்.

அபூ உஸ்மான் என்பவர் அறிவிக்கிறார்: நாங்கள் பனீ ரிபாஆ பள்ளியில் லுஹர் தொழுகையை தொழுது முடித்து விட்டு அமர்ந்து கொண்டிருக்கும்போது அனஸ் (ரழி) அவர்கள் சுமார் இருபது இளைஞர்களுடன் பள்ளிக்கு வந்தார்கள். நீங்கள் தொழுது முடிந்து விட்டீர்களா? என்று எங்களிடம் கேட்டார்கள். நாங்கள் ஆம் என்று கூறினோம். அப்போது அவர்கள் இமாமாக முன்னின்று ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள் என்று அறிவிக்கிறார். (நூல்: பைஹகி)

முதலாம் ஜமாஅத் முடிந்த பின் அதே பள்ளியில் இரண்டாம் ஜமாஅத்தும் நடத்தலாம் என்பதற்கு இது மிகத் தெளிவான சான்றாகும்.
அதேவேளை இரண்டாம் ஜமாஅத் நடத்தக் கூடாது என்பவர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரமும் உண்டு.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு தொழுகைக்காக வந்தபோது மக்கள் தொழுது முடித்துவிட்டார்கள் என்பதைக் கண்டு பிறகு தன்னுடைய வீட்டுக்குச் சென்று குடும்பத்தாரை ஒன்று சேர்த்து ஜமாஅத்தாக தொழுதார்கள் என்று தபரானியில் வரும் ஹதீஸை காட்டுகிறார்கள்.

இந்த ஹதீஸினுடைய அறிவிப்பளர்களின் அபூ முதீஹ் முஆவியா இப்னு யஹ்யா என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என இமாம்கள் விமர்சிக்கிறார்கள். இமாம் இப்னு அதீ (ரஹ்) அவர்களும் இது முன்கரான செய்தி என்று விமர்சிக்கிறார்கள். (அல் காமில் 6/401) எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுக்க முடியாது.
இன்னுமொரு ஹதீஸையும் இரண்டாம் ஜமாஅத் கூடாது என்பதற்கு முன்வைக்கிறார்கள்.

நபித்தோழர்கள் தொழுகைக்காக பள்ளிக்கு வரும்போது மக்கள் தொழுது முடித்து விட்டிருந்தால் தனித் தனியாக தொழுவார்கள். (நூல்: முஸன்னப் இப்னு அபீ ஷைபா)
இந்த நபித் தோழர்கள் -இரண்டாம் ஜமாஅத் நடத்த நேரடியான ஆதாரம் இருக்கும் போது- ஏன் தனித் தனியாக தொழுதார்கள்? என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

இரண்டாம் ஜமாஅத் நடத்த ஆதாரம் இல்லாவிட்டால் இது சரியென கூறலாம். ஆனால் ஆதாரம் இருக்கும்போது ஏன் செயல்படவில்லை? அவர்கள் தனிப்பட்ட முறையில் விரும்பி இப்படி செய்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக செய்தார்களா?

இந்தக் கேள்விக்கு இந்த செய்தியை அறிவிக்கின்ற ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் பதில் கூறும்போது அந்த நபித் தோழர்கள் ஆட்சியாளருக்கு (சுல்தானுக்கு) அஞ்சிதான் ஜமாஅத்தாக தொழுவதை வெறுத்தார்கள் என்று தெளிவுபடுத்துகிறார்கள் இந்த செய்தியும் அதே முஸன்னப் இப்னு அபீ ஷைபாவில் பதிவாகியுள்ளது.
நபித் தோழர்கள் தனித் தனியாக தொழுவதற்கு அடிப்படை காரணம் ஆட்சியாளர்கள் ஏதும் தீங்கு விளைவித்து விடுவார்களோ என்ற பயம்தான் காரணமே தவிர வேறு எதுவுமில்லை என்பது புலனாகிறது.

இரண்டாம் ஜமாஅத் நடத்த ஆதாரம் உண்டு என்பதை அந்த நபித் தோழர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு ஆட்சியாளருக்கு அஞ்சி ஜமாஅத்தாக தொழுவதற்கு வெறுத்தார்கள் என்ற வாசகத்திலிருந்து நன்கு தெளிவாகிறது. அன்றைய காலத்தில் அரசியல் சூழ்நிலை அப்படியொரு அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
எனவே இவர்கள் எந்த செய்தியை இரண்டாம் ஜமாஅத்திற்கு ஆதாரமில்லை என்பதற்கு நிறுவதற்கு கொண்டு வந்தார்களோ அதே செய்தி இரண்டாம் ஜமாஅத்திற்கு ஆதாரம் உண்டு என்பதை தெளிவாகக் காட்டுகிறது இதனை கவனிக்க மறந்து விட்டார்கள்.

இரண்டாம் ஜமாஅத் நடத்த கூடாது என்ற தவறான வாதமுடையவர்கள். தனித்து தொழுவதால் ஜமாஅத் தொழுகையின் நன்மைகளை வீணாக்குகிறார்கள் என்பதை தவிர வேறில்லை.

இவர்கள் பயணம் மேற்கொள்கின்ற போது பிரயாணத் தொழுகையை பள்ளியில் ஜமாஅத்தாக தொழுவதைக் கூட விட்டு விடுகிறார்கள். காரணம் பள்ளியில் நிரந்தரமான (ராதிபான) இமாம் இருக்கும்போது எக்காரணம் கொண்டு இரண்டாம் ஜமாஅத் -அது பயணத் தொழுகையாக இருந்தாலும் சரி- தொழக் கூடாது என்கிறார்கள். இது தவறான வாதம். இதற்கும் எந்த ஆதாரமுமில்லை.

எனவே ராதிபான இமாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இரண்டாவது ஜமாஅத் தொழுகையை நடத்துவதை தடுப்பதற்கு எந்த ஆதாரமுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதேவேளை இரண்டாம் ஜமாஅத்திற்கு ஆதாரம் உண்டு என்ற கூறினால் முதல் ஜமாஅத்தை மக்கள் அலட்சியப்படுத்துவார்களே என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். உண்மைதான். ஆனால் மக்கள் ஒன்றை அலட்சியப்படுத்துவார்கள் என்றால் அது பற்றிய தெளிவை கொடுத்து சரிப்படுத்த முனைய வேண்டுமே தவிர அதனை காரணம் காட்டி இஸ்லாம் அனுமதிக்கின்ற ஒரு காரியத்தை கூடாது என்ற தடுத்து விட முடியாது. முடிந்த வரை முதலாவதாக நடத்தப்படும் ஜமாஅத்தில் கலந்து கொள்ளவே மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதை நாமும் சொல்லிக் கொள்கிறோம். –அல்லாஹூ அஃலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *