Featured Posts
Home » மீடியா » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் » இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 8

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 8

இயேசு மனித வடிவில் இருந்தாலும் அவர் கடவுள் தன்மையுடையவர், மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்ட பல்வேறுபட்ட அற்புதங்களை அவர் நிகழ்த்திக் காட்டியுள்ளார். அவரது அற்புதங்கள் அவர் கடவுள் தன்மை உடையவர் என்பதற்கான ஆதாரங்களாகும் என கிறிஸ்தவ உலகம் நம்பி வருகின்றது.

இயேசு பல்வேறுபட்ட அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் என பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அவர் தனது இஷ;டப்படி சுயமாக இந்த அற்புதங்களைச் செய்யவில்லை. கடவுளின் உத்தரவுப் பிரகாரம் இவற்றைச் செய்தார் என்றும் பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அற்புதங்கள் நிகழ்த்தியதால் அவர் கடவுள் அல்ல. கடவுளின் தூதர்தான் என்றும் பைபிளும் கூறுகின்றது, குர்ஆனும் கூறுகின்றது. அற்புதங்கள் நிகழ்த்தியதால் அவர் கடவுளாகத் திகழ்கின்றார் என்பது கிறிஸ்தவ உலகு ஏற்படுத்திக் கொண்ட தப்பான நம்பிக்கையாகும். இந்தத் தப்பான நம்பிக்கையை இஸ்லாம் ஏற்காததால் இயேசுவை இஸ்லாம் அவமதிப்பதாகவோ இழிவுபடுத்துவதாகவோ கூற முடியாது. இது குறித்து விரிவாக நோக்குவோம்.

இயேசுவின் அற்புதங்கள்:

‘இஸ்ராயீலின் சந்ததியினருக்கு ஒரு தூதராகவும் (அவரை ஆக்குவான். அவர் அவர்களிடம்) ‘நிச்சயமாக நான் உங்களுக்கு, உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத்தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன்’. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி, பின்னர் அதில் ஊதுவேன். உடனே அல்லாஹ்வின் உத்தரவினால் அது (உயிருள்ள) பறவையாக ஆகிவிடும். அல்லாஹ்வின் உத்தரவுப் பிரகாரம் பிறவிக் குருடரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் மரணித்தோரையும் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் உண்ணுபவற்றையும் உங்கள் இல்லங்களில் நீங்கள் சேமித்து வைப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கின்றது’ (எனக் கூறினார்.)’

‘எனக்கு முன் இருக்கும் தவ்றாத்தை உண்மைப்படுத்துபவனாகவும் உங்களுக்குத் தடுக்கப்பட்டிருந்த சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்குவதற்காகவும் (உங்களிடம் நான் வந்துள்ளேன்.) இன்னும், ஓர் அத்தாட்சியையும் உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். எனவே, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள், எனக்கும் கட்டுப்படுங்கள்.’

‘நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாவான். எனவே, அவனையே வணங்குங்கள்ளூ இதுவே நேரான வழியாகும்(என்றும் கூறினார்). ‘ (3:49-51)

இயேசு இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர். அவர் பல அற்புதங்களைச் செய்தார்.

  • மண்ணால் செய்த பறவைக்கு உயிர் கொடுத்தார்.
  • குஷ்ட ரோகிகளை குணப்படுத்தினார்.
  • பிறவிக் குருடர்களை குணப்படுத்தினார்.
  • இறந்தவர்களை உயிர்ப்பித்தார்.
  • சில மறைவான செய்திகளை அறிவித்தார்.

இவை அனைத்தையும் தனது சுய அதிகாரத்தில் செய்யவில்லை. தன்னை அனுப்பிய கடவுளின் உத்தரவின் பிரகாரம் செய்ததாகச் சொன்னார். எனது தேவனும், உங்களது தேவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள். அதுவே நேரான வழி என்றே போதித்தார் என இந்த வசனம் கூறுகின்றது. அல்குர்ஆனின் மற்றும் பல வசனங்கள் இந்தக் கருத்தைச் சொல்கின்றது.

இயேசு செய்த போதனைகள் மற்றும் செயல்கள் அனைத்தையும் அவர் சுயமாகச் செய்யவில்லை. அவரை அனுப்பிய தேவனின் சித்தத்தினாலேயே அவற்றைச் செய்தார் என பைபிளும் பல இடங்களில் கூறுகின்றது.

‘நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.’ (யோவான் 5:30)

‘அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர். அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள்.’ (யோவான் 7:28)

‘ ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என்சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள்.’
(யோவான் 8:28)

‘நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்க வேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.’
(யோவான் 12:49)

‘நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை. என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.’
(யோவான் 14:10)

இது போன்ற மற்றும் பல வசனங்கள் இயேசு சுயமாய் அற்புதம் செய்யவில்லை என்கின்றது. ஏற்கனவே நாம் கூறிய வசனங்கள் இயேசு கடவுள் அல்லகடவுளின் தூதர் !இதுவே அவர் போதித்த பிரதான கற்பனை (போதனை) என்பதை உறுதி செய்கின்றது.
உண்மையில் இயேசு மீது அன்புள்ள கிறிஸ்தவ சகோதரர்கள் இயேசுவின் போதனையை மதிக்க வேண்டும்.

‘நீங்;கள் என்னிடத்தில் அன்பாய் இருந்தால் என் கற்பனைகளைக் கைக் கொள்ளுங்கள்’
(யோவான் 14:15)

என்ற இயசுவின் போதனைக்கு ஏற்ப அவர் கடவுள் அல்ல கடவுளின் தூதர் என்று நம்பும் முஸ்லிம்களே அவர் மீது உண்மையான அன்பும், மரியாதையும் உடையவர்கள்! கிறிஸ்தவ நண்பர்களும் உண்மையில் இயேசு மீது அன்பிருந்தால் இயேசுவை இறைவன், இறைவனின் மகன் என்ற இயேசுவின் போதனைக்கு மாற்றமாக நம்பி இயேசுவை இழிவுபடுத்தும் தவறிலிருந்து விடுபட வேண்டும்.

அற்புதங்கள் ஆதாரங்களாகுமா?
நாம் மேலே கூறிய செய்திகளே நடுநிலையாளர்கள் உண்மையை உணரப் போதுமானவையாகும். இருப்பினும் இயேசுவின் அற்புதங்கள் அவரது கடவுள் தன்மைக்கு ஆதாரமாக அமைகின்றன என்ற நம்பிக்கை பலரின் அடி மனதில் ஆழமாக வேறூன்றி இருக்கலாம். எனவே, அவர் செய்த அற்புதங்களை வைத்து அவரைக் கடவுள் என்று கூற முடியாது என்பதை இன்னும் சற்று விரிவாக விளக்குவது பொருத்தமாகும் என நினைக்கின்றேன்.

இறந்தவர்களை உயிர்ப்பித்தல்:
இயேசு செய்த பெரிய அற்புதம் இறந்தவர்களை உயிர்ப்பித்ததுதான் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. கடவுள், தான் அனுப்பிய தூதர்களைத் தனது உண்மையான தூதர்கள் என நிரூபிப்பதற்காக சில அற்புதங்களை அவர்களுக்கு வழங்குவான். கடவுளின் உத்தரவு இல்லாமல் அவர்களினால் சுயமாக இந்த அற்புதங்களைச் செய்ய முடியாது. இயேசுவும் அப்படியே இறந்தவர்களை உயிர்ப்பித்துள்ளார். இறந்தவர்களை உயிர்ப்பித்ததுதான் இயேசு நிகழ்த்திய பெரிய அற்புதமாகும். இறந்தவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு இறைவன் என்று கிறிஸ்தவ உலகம் நம்பினால் இறந்தவர்களை உயிர்ப்பித்த அனைவரையும் கடவுள் என்று நம்ப வேண்டும். இறந்தவர்களை உயிர்ப்பித்தவர்களில் சிலரை இறைத்தூதர்கள் என கிறிஸ்தவ உலகம் நம்பினால், இயேசுவையும் அதே அடிப்படையில் இறைத்தூதர் என நம்பவேண்டும். ஆனால், கிறிஸ்தவ உலகு இது விடயத்தில் முரண்பட்டு சிலரை இறைத்தூதர்கள் என நம்புகின்றது. இறந்தவர்களை உயிர்ப்பித்தார் என்ற காரணத்தைக் கூறி இயேசுவை மட்டும் இறைவன் என்று கூறுகின்றது. இந்த முரண்பாடே இந்தக் கொள்கை தவறானது என்பதற்கான தக்க சான்றாகத் திகழ்கின்றது.

எலியா, எலிசா, எசேக்கியல் போன்ற தீர்க்கதரிசிகளும் இறந்தவர்களை உயிர்ப்பித் துள்ளதாக பைபிள் கூறுகின்றது.

‘கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது. அவன் பிழைத்தான்.’
(முதலாம் இராஜாக்கள் 17:22)

இறந்த ஒரு சிறுவனை எலியா தீர்க்கதரிசி கர்த்தரிடம் பிரார்த்தித்து உயிர்ப்பித்தாக இந்த வசனம் கூறுகின்றது.

எலிசா தீர்க்கதரிசியின் எலும்பு பட்டே இறந்தவர் உயிர் பெற்றதாக பின்வரும் வசனம் கூறுகின்றது.

‘அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.’ (2 இராஜாக்கள் 13:21)

எசேக்கியேல் அத்தியாயத்தின் 37 ஆம் அதிகாரத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசியால் இறந்து எலும்புகளாகிப்போன ஒரு சேனையே உயிர் பெற்ற வரலாறு கூறப்படுகின்றது.

இறந்தவர்களை உயிர்ப்பித்ததால் இயேசு இறைவன் என்றால் எலியா, எலிசா, எசேக்கியேல் தீர்க்கதரிசிகளையும் கடவுள் என்றுதானே கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டும். ஏன்இந்த முரண்பட்ட நோக்கு?

பைபிளின் பழைய ஏற்பாட்டை ஆராய்ந்தால் இயேசு செய்த அற்புதங்களை மற்றும் பல இறைத்தூதர்களும் செய்துள்ளனர். இயேசுவைப் போலவே குஷ;டரோகிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர், குருடர்கள் பார்வையைப் பெற்றுள்ளனர். குறைந்த உணவை அதிக மக்கள் உண்டுள்ளனர்.

இது போன்ற பல அற்புதங்களை இறைத்தூதர்கள் நிகழ்த்தியுள்ளனர். எனவே, அற்புதங்களைக் காரணம் காட்டி இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. நல்லவர்கள் மட்டுமன்றி கள்ளக் கிறிஸ்துக்களும் அற்புதம் செய்யலாம் என்பதை பைபிலே கூறுகின்றது என்பதை ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளோம். எனவே, அற்புதங்களை வைத்து இயேசுவைக் கடவுள் என்று கூற முடியாது. கடவுளின் தூதர் என்றே கூற வேண்டும். அது போக, இயேசு சராசரி மனிதராக வாழ்ந்துள்ளார், பசியில் இருந்துள்ளார், அச்சத்திற்குள்ளாகியுள்ளார், உணவு உண்டுள்ளர், அறியாமை, கவலை, இயலாமை, சோகம், என்பவற்றைச் சந்தித்துள்ளார். எல்லா வகையான மனிதத் தன்மைகளும் அவரிடம் இருந்துள்ளன.

‘உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும், ‘செவியுற்றோம்ளூ கட்டுப்பட்டோம்’ என நீங்கள் கூறியபோது, அவன் உங்களிடம் எடுத்த அவனது வாக்குறுதியையும் நீங்கள் நினைவு கூருங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவனாவான்.’ (அல்குர்ஆன் – 5:7)

இயேசுவும் அவருடைய தாயாரும் கடவுள்கள் அல்லர். உணவு உண்ணக் கூடிய சராசரி மனிதர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. உணவு உண்டார்கள் என்பதன் மூலம் அவர்களுக்குப் பசி ஏற்பட்டது, மலசல உபாதை ஏற்பட்டது என்பதையும் சேர்த்தே கூறப்படுகின்றது. அதாவது, மனித பலவீனங்களுடன்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். எனவே, அவர்கள் கடவுள்கள் அல்லர். மாறாக மனிதர்கள்! இயேசு இறைத்தூதர். இயேசுவின் தாயார் இறைவனால் ஆசீர்வதிக்கப்ட்ட பெண் அவ்வளவுதான்.

கிறிஸ்தவ உலகு இந்த உண்மையை ஒப்புக் கொண்டால்தான் அவர்கள் உண்மையில் இயேசுவை மதித்தவர்களாகவும், அவர்கள் மீது அன்பு காட்டியவர்களாகவும் இருப்பார்கள். இந்த அடிப்படையில் இயேசு கடவுள் அல்லர், அவர் கடவுளின் புதல்வரும் அல்லர். அவர் கடவுளின் தூதர் என நம்புவது உண்மையில் அவரை மதிப்பதாக இருக்கும். இயேசுவை இறைவன் என்று கூறுவது அவரையும் அவரது போதனையையும் இழிவுபடுத்துவதாகவே இருக்கும். கிறிஸ்தவ உலகு இந்த உண்மையை ஏற்று இயேசுவை நேசிக்கத் தயாராகுமா?

தொரும்…..
இன்ஷா அல்லாஹ்

One comment

  1. Alhamdulillah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *