Home » இஸ்லாம் » குடும்பம் » பெற்றோர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் – 02

பெற்றோர் சந்திக்கும் உளவியல் பிரச்சினைகள் – 02

-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)-
வீட்டுச் சூழல்
எம்மை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை எல்லா விடயங்களிலும் முன்னிலைப்படுத்துவதை பழக்கிக் கொள்ள வேண்டும். அவர்களது அன்பும் ஆசிர்வாதமும் எப்போதும் கிடைக்கக் கூடியதாக நடந்துகொள்ள வேண்டும்.

வீட்டில் விசேடமான நிகழ்வுகள் ஏதும் நடக்குமாயின் (திருமணப் பேச்சுக்கள் போன்ற நிகழ்வுகள் நடக்குமாயின்) அது பற்றிக் கதைக்கும் போது அவர்களை முற்படுத்தி அவர்களுக்கென ஒரு இடத்தை கொடுக்க வேண்டும். நான்கு பேர் உட்கார்ந்து பேசும்போதும், வீட்டுக்கு வருபவர்களுடன் பேசும்போதும் அவர்களுக்கு ஒரு கதிரையைப் போட்டு உட்கார வைக்க வேண்டும். அவர்களது கருத்துகளுக்கும் காது கொடுத்து கேட்க வேண்டும்.

தங்களால் ஒரு கருத்தை முன் வைக்கவோ அல்லது ஒரு வேலையை செய்து கொடுக்கவோ முடியா விட்டாலும் எனது பிள்ளை மிக நல்ல முறையில் பணிகளை செய்கிறதே நல்ல முடிவுகளை எடுக்கின்றதே எனக்கும் மரியாதை செய்கிறதே என்று ஆனந்தமடைவார்கள். நாம் பெற்ற பிள்ளை நம்மைப் போலவே நடந்துக் கொள்கிறதே என்று சந்தோசமடைந்து கண்ணீர் வடிப்பார்கள்.

நேரம் கிடைக்கும் போது கடற்கரைக்கும் பூங்காவுக்கும் அழைத்துச் செல்லவேண்டும் அது அவர்களுடைய உள்ளத்திற்கு அமைதியையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும்.
வயது போன காலத்தில் அவர்கள் அதிகம் ஓய்வெடுக்கக் கூடிய காலம் என்றாலும் வீட்டிலுள்ள சின்ன சின்ன வேலைகளில் அவர்களின் கவனங்களை செலுத்த வைக்க வேண்டும். உதாரணமாக பூ செண்டுகளை நடுதல் அவைகளுக்கு நீர் ஊற்றுதல் முற்றத்தை அழகுப்படுத்தல் பக்கத்திலுள்ள கடைகளுக்கு சென்று வருதல் போன்ற விடயங்களில் தந்தையை ஈடுபடச் செய்ய வேண்டும். தாயைப் பொறுத்த வரையில் வீட்டு வேலைகளில் அதிக கவனம் செலுத்துபவர் என்றபடியால் அவர்களுக்குரிய வீட்டு வேலைகளில் ஈடுபடச் செய்ய வேண்டும். எந்த வேலையுமின்றி இருக்கும் போது மிக சீக்கிரத்தில் உளவியல் பாதிப்புகளுக்கு ஆளாகி விடுவர். (அப்பாதிப்புக்கள் பின்னால் விளக்கப்படுத்தப்படும்.)

பெருநாள் தினங்கள் போன்ற முக்கியமான தினங்களில் பெற்றோருக்கு அன்பளிப்புகள் வழங்குவது, புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பது உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்வது அவர்களுடைய நண்பர்களை சந்திக்கச் செல்வது போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

நாம் சிறுவயதில் இருக்கும் போது பலவிதமான அழகிய புத்தாடைகளை வாங்கித் தந்து அணிவித்து அழகு பார்த்த பெற்றோரின் நிலையை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் அவர்களை அழகுபடுத்தி, சந்தோசப் படுத்துவது பிள்ளைகளின் பொறுப்பாகும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பிள்ளைகள் இருக்கும்போது ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களால் முடிந்தளவு அன்பளிப்புகளையும் புத்தாடைகளையும் வாங்கிக் கொடுத்து, மகிழ்விக்க வேண்டும். ஒவ்வொருவருடைய வீட்டிலும் தங்க வைத்துக் கொள்ள நாட்களையம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

பேரப் பிள்ளைகளுடன் கலகலப்பாக இருப்பதற்கும் விளையாடுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பேரப்பிள்ளைகள் பாட்டியிடமிருந்தும் தாத்தாவிட மிருந்தும் நல்ல நல்ல கதைகளைக் கேட்பது போல் நல்ல முன்மாதிரிகளையும் வழிக்காட்டல்களையும் உள்வாங்கிக் கொள்ளும்.

கணவன்-மனைவி மற்றும் பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகள் அல்லது சச்சரவுகள் பெரிதுப்படுத்தாமலும் அவை பெற்றோர்களுக்கு கவலைகள் தராத வண்ணமும் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகள் காண அவர்களை அணுகுவதாகவே காட்டிக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும். எந்தப் பிரச்சினைகளின் போதும் அவர்களது வழிகாட்டலை அல்லது கருத்துக்களை பெற முயற்சிக்க வேண்டும். தங்களால் ஒரு தவறு நடந்தால் அதற்காக உடனே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். எமது பெற்றோர் குடும்பத்திற்கு சுமையாக இருக்கிறார்கள் என்ற நிலையை எச்சந்தர்ப்பத்திலும் ஏற்படுத்திட இடம்கொடுக்கக் கூடாது. அப்படி ஒருநினைவு ஏற்பட்டால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி, வீதிகளிலும் பள்ளிவாசல்களிலும் தங்கி விடுவார்கள். இல்லையேல் முதியோர் இல்லத்தை நாடிச் செல்வார்கள்.

பெற்றோர் சுகயீனமுற்றால் முதலில் பிள்ளைகள் எல்லோரும் வந்து பார்க்க வேண்டும். அன்பாகப் பேச வேண்டும். நோயின் எந்தத் தாக்கம் இருந்தாலும் அதன் பாதிப்பை பெரிதுபடுத்தாது இலகுபடுத்தியே ஆறுதலாகப் பேச வேண்டும்.

அல்லாஹ் உங்களுக்கு சுகத்தை தருவான், பெரிய பாதிப்பு உங்களுக்கு ஏற்படாது, எல்லோரும் உங்களுடன் இருக்கின்றார்கள் என்ற மாதிரி கதைக்க வேண்டும். வார்த்தைகளால் எந்தளவு தெம்பை ஊட்ட முடியுமோ அந்தளவு பேச வேண்டும். நோயாளியை பார்க்கும்போது ஓதும் துஆவையும் ஓத வேண்டும். அவர்கள் நோயில் இருக்கும்போதும் பல வீனப்பட்டு இருக்கும்போதும் அவர்கள் தூங்குகின்ற போதும் “குல் ஸூராக்களை” நாம் ஓதி எமது கரங்களால் அவர்களது மேனியில் தடவ வேண்டும்.

நோய் அதிகரிக்கின்றபோது அவர்கள் பயந்து போய் மரணம் நெருங்கி வருவதாக அஞ்சுவார்கள். அந்நேரங்களில் அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் வணக்க வழிபாடுகளையும் எடுத்துக் கூறி,

”நீங்கள் அல்லாஹ்வுக்காக நல்ல விடயங்களில் ஈடுபட்டீர்கள். மற்றவர்களுக்காக நல்லதையே செய்தீர்கள். உங்களால் மக்கள் நன்மையடைந்துள்ளார்கள். உங்களுக்கு நல்லதை செய்கின்ற பாக்கியத்தையும் அல்லாஹ் எமக்கு தந்துள்ளான். அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான். முஃமின்களின் அமல்களை (காரியங்களை) அல்லாஹ் ஒருபோதும் வீணடிக்க மாட்டான். முஃமின்களின் உயிரை ரஹ்மத்துக்குரிய மலக்குகள் கைப்பற்றுகிறார்கள்” போன்ற வார்த்தைகளால் சாந்தப்படுத்தி, மரணத்தை எதிர்கொள்ள அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். சுவனத்தைப் பற்றியும் சுவன வாசிகளின் சிறப்புகளைப் பற்றியும் கதைக்க வேண்டும்.

பெற்றோர்கள் உயிருடன் இருக்கும் போதும் மரணித்த போதும் அவர்களுடைய நணபர்களை கண்ணியப்படுத்தி மரியாதை கொடுக்க வேண்டும். எமது பெற்றோரை சந்திக்க வீட்டுக் வந்தால் உரிய மரியாதையை கொடுத்து வரவேற்க வேண்டும். அவர்களை காணும் போதெல்லாம் எம் பெற்றோருக்கு கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *