Home » மதங்கள் ஆய்வு » பைபிள் » இயேசு ஒரு முஸ்லிம் (Part-7)

இயேசு ஒரு முஸ்லிம் (Part-7)

– எஸ்.எல்.எம். அர்ஷாத் (arshathslm@gmail.com)-

கடந்த தொடர்களில் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல்வேறு சான்றுகளை கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளிலின் ஒளியில் நோக்கினோம். அதன் தொடரில் பைபிள் மனிதக் கறை படிந்து கூட்டல், குறைத்தல், சேர்த்தல், நீக்குதல், திருத்துதலுக்கு உட்பட்டு புனிதத்துவத்தை இழந்துவிட்ட போதிலும் கூட இன்றும் இயேசு ஒரு முஸ்லிம்தான் என்பதை நிரூபிக்க கூடிய சான்றுகளை பைபிளை கருத்தூன்றிப் படிக்கின்ற ஒவ்வொருவரும் உள்ளங்கை நெல்லிக் கனி போன்று அறிந்து கொள்ளலாம்.

“நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: ‘நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.’ (அல்குர்ஆன் 5:12)

கிறிஸ்த்தவர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிள் கடன் குறித்து என்ன கூறுகின்றது என இத்தொடரில் நோக்குவோம்.

பைபிளின் ஒளியில் கடன்
இயேசு கிறிஸ்த்துவின் போதனைகள் என கிறிஸ்த்தவ சமுதாய மக்களால் நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலான லூக்கா கைம்மாறு கருதாமல் கடன் கொடுக்குமாறு போதிக்கின்றது.
“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.” – லூக்கா 6:35

பைபிளின் மற்றொரு புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு கடன் கேட்பவனுக்கு முகங்கோணாது கொடுக்குமாறு உபதேசிக்கின்றது.

உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. மத்தேயு 5:42

மத்தேயு ஆகமம் மற்றொரு இடத்தில் கடனாளிக்கு மன்னிப்பளிப்பதை முன்னிறுத்தி சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரிடம் பிரார்த்திக்குமாறு கிறிஸ்த்தவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றது.

“எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்” – மத்தேயு 6:12

நீங்கள் இறைவனிடம் பிரார்த்திக்கும் போது, எங்களிடத்தில் கடன்பட்டவர்களை மன்னிப்பதால் அதன் நன்மையினால் தமது பாவங்களை மன்னிக்குமாறு பிரார்த்திக்குமாறு இயேசு உபதேசித்ததாக லூக்கா அதிகாரம் குறிப்பிடுகின்றது.

“எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார்.” – லூக்கா 11:4

இறைவேதம் திருக்குர்ஆனின் 4:160,161 வசனங்கள் யூதர்கள் வட்டியிலிருந்து தடுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடுகின்றது.

கிறிஸ்த்தவ அன்பர்களால் இறைவேதமாக நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான யாத்திராகமம் நூல் யூதர்களை வட்டியிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு கடுமையாக எச்சரிக்கின்றது.

“உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டி வாங்குகிறவர்கள் போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.” – யாத்திராகமம் 22:25

மோசே (அலை) அவர்களின் போதனைகள் என நம்பப்படுகின்ற உபாகமம் யூதர்கள் வட்டியிலிருந்து தடுக்கப்பட்டமை குறித்து குறிப்பிடுகையில்,

“கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.” – உபாகமம் 23:19 எனக் கூறுகின்றது.

மேலும், இறைவேதம் திருக்குர்ஆனின் 2:278ம் வசனம் அசல் தொகையை விட அதிகமாக -வட்டி- வாங்கி கடன்பட்டவர்களுக்கு அநியாயம் செய்து விட வேண்டாம் என எச்சரிக்கின்றது.

நெகேமியா தீர்க்கதரிசியின் போதனைகள் என நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான நெகேமியா கடன்பட்டவர்களிடமிருந்து வட்டியை விட்டுவிடுமாறு போதனை செய்கின்றது.

“நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும் அவர்களுக்குத் திரும்பக்கொடுத்துவிடுங்கள் என்றேன்.” – நெகேமியா 5:10,11

மேலும், இறைவேதம் திருக்குர்ஆனின் 2:282ம் வசனம் கடன் கொடுக்கல் வாங்கல் செய்தால் அதனை எழுதிக்கொள்ளுமாறும் ஆண்களாயின் இரண்டு சாட்சிகளை வைத்துக் கொள்ளுமாறும் கட்டளையிடுகின்றது.

கொடுக்கல் வாங்கல்களை எழுதிக்கொள்ளுகின்ற மற்றும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுகின்ற நடைமுறை எரேமியா தீர்க்கதரிசியின் காலத்தில் நடைமுறையில் இருந்ததாக பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான எரேமியா பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“ஆகையால் என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன். நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு,” – எரேமியா 32:9, 10

இறைவேதம் திருக்குர்ஆனின் 2:283ம் வசனம் கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன் அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனப் போதிக்கின்றது. இந்நடைமுறை தீர்க்கதரிசி மோசேயின் காலத்தில் நடைமுறையில் இருந்ததாக பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான உபாகமம் கூறுகின்றது.

“பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம். வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக.” – உபாகமம் 24:10,11

இறைவேதம் திருக்குர்ஆனின் 4:58ம் வசனம் அமானிதங்களை திரும்ப ஒப்படைக்குமாறு கட்டளையிடுகின்றது. அடைமானத்தை திரும்ப ஒப்படைத்துவிட வேண்டுமென்றும், வட்டிக்கு கொடுக்காதிருக்க வேண்டுமென்றும் எசேக்கியேல் தீர்க்கதரிசி போதித்ததாக பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான எசேக்கியேல் குறிப்பிடுகின்றது.

“ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்”” – எசேக்கியேல் 18:7-9

திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குபவனது கடனை அவன் சார்பாக அல்லாஹ்வே திருப்பிச் செலுத்துவதாக நபிமொழித்தொகுப்பான ஸஹீஹுல் புகாரி யின் 2387 வது நபிமொழி குறிப்பிடுகின்றது. தீர்க்கதரிசி சாலொமொனின் போதனைகள் என நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான நீதிமொழிகள் கர்த்தர் கடனை திரும்பக் கொடுப்பது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” – நீதிமொழிகள் 19:17

முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் கடன்படுவதிலிருந்து இறைவனிடம் அதிகமாக பாவமன்னிப்பு கோருபவர்களாக இருந்துள்ளார்கள். இவ்வுயரிய போதனையை உண்மைப்படுத்தும் வகையில் பவுலின் நிருபங்களின் ஒன்றான ரோமர் கடன்படுவது குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றது.

“ஒருவரிடத்திலொருவர் அன்பு கூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான்.”- ரோமர் 13:8

மோசேயின் போதனைகள் என நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான உபாகமம் கடன் கொடுப்பது குறித்து பின்வருமாறு உபதேசிக்கின்றது.

“அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.”- உபாகமம் 15:8

“தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்”- உபாகமம் 15:11

“ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய். நீயோ கடன் வாங்காதிருப்பாய்.” – உபாகமம் 28:12

“உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை.” – உபாகமம் 15:6

“விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன் கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன்.” – உபாகமம் 15:2

தாவீது தீர்க்கதரிசியின் போதனைகள் என நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான சங்கீதம் கடன் குறித்து பின்வருமாறு உபதேசிக்கின்றது.

“துன்மார்க்கன் கடன் வாங்கிச் செலுத்தாமற் போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்” – சங்கீதம் 37:21

“அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.” -சங்கீதம் 37:26

“இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்” – சங்கீதம் 112:5

வஹியின் ஒளியில் கடன்
இறைவேதம் திருமறைக்குர்ஆன் கடன் குறித்து பின்வருமாறு உபதேசம் செய்கின்றது.

“(கடன்பட்டவர்) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது” – திருக்குர்ஆன் 2:280

கடன்பட்டவனுக்கு அவகாசம் அளிக்குமாறும், அவன் கஷ்டத்தில் இருந்தால் அவனுக்கு அக்கடனை தர்மமாக வழங்கிவிடுவது சிறந்ததெனவும் திருமறைக்குர்ஆன் வழிகாட்டுகின்றது.

யூதர்களுக்கு வட்டி தடுக்கப்பட்டிருந்ததாக இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடுகையில்,

“யூதர்களுக்கு வட்டி தடுக்கப்பட்டிருந்தும் யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.” – திருக்குர்ஆன் 4:160,161 என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

கொடுக்கல் வாங்கல்களின் போது அசல் தொகையை விட அதிகமாக வட்டியைப் பெறுகின்றவர்கள் சர்வ வல்லமை பொருந்திய கர்த்தருடனும், அவனது தூதர் (ஸல்) அவர்களுடனும் போர் புரியத் தயாராகுமாறு இறைவேதம் திருமறைக்குர்ஆன் மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றது.

“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.” – திருக்குர்ஆன் 2:278,279

அதுமாத்திரமன்றி, வாழ்வியல் வழிகாட்டி திருமறைக்குர்ஆன் கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பின்வருமாறு மிக உன்னதமானதொரு வழிகாட்டலை வழங்குகின்றது

“நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி தவறாகக் கூறினால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது; ஒருவருக் கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்” – திருக்குர்ஆன் 2:282

பயணத்தில் கடன் கொடுக்கல் வாங்கலை எழுத முடியாவிட்டால் ஏதாவது ஒரு பொருளை அடைமானமாகப் பெற்றுக் கொள்ளுமாறு இறைவேதம் திருக்குர்ஆன் வழிகாட்டுகின்றது.

“நீங்கள் பயணத்தில் இருக்கும் போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.” – திருக்குர்ஆன் 2:283

அமானிதங்களாக பெறப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு இறைவேதம் அருள்மறைக் குர்ஆன் கட்டளையிடுகின்றது.

“அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.” – திருக்குர்ஆன் 4:58

கடன்பட்டவருக்கு மன்னிப்பளிப்பது குறித்து நபிகளார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது,

“(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 2078

“ஒரு மனிதர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும் போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன் என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” – அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- 2391

“எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி 2387

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடனிலிருந்து அதிகமதிகம் பாதுகாப்பு தேடுபவர்களாக இருந்தார்கள்

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் மஅஸமி வல்மஃக்ரம் – (இறைவா! பாவத்திலிருந்தும் கடன்படுவதிலிருந்தும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்’. ‘தாங்கள் கடன் படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?’ என்று யாரோ ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்), ‘ஒருவன் கடன்பட்டுவிட்டால் (திருப்பிச் செலுத்த முடியாதபோது) பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்’ என்று பதிலளித்தார்கள்.” – அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம் – 925

இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் அழகிய கடன் கொடுக்குமாறு அல்லாஹ் உறுதி மொழி பெற்றதாக இறைவேதம் திருக்குர்ஆன் குறிப்பிடுவதை உண்மைப்படுத்தும் வகையில், இறைத்தூதர் இயேசு (அலை) அவர்கள் இஸ்ராயீல் சந்ததியினருக்கு அழகிய கடன் கொடுப்பது குறித்து அதிகமதிகம் உபதேசித்துள்ளமை இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம்தான் என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்து நிற்கின்றது.

அதுமாத்திரமன்றி அழகிய கடன் கொடுப்பது குறித்த போதனைகள் நிறைந்து காணப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டை – நியாயப்பிரமாணத்தை – நிறைவேற்றுவதற்கே வந்தேன் என இயேசு (அலை) அவர்கள் குறிப்பிடுவதும் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம்தான் என்பதை பறைசாற்றி நிற்கின்றது.

இறைவன் நாடினால் இயேசு (அலை) அவர்கள் ஒரு முஸ்லிம் என்பதற்கான சான்றுகளை தொடர்ந்தும் நோக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *