Featured Posts
Home » பொதுவானவை » நுட்பம் » அறிவியல் » வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

-உண்மை உதயம் மாத இதழ்-
(அல்குர்ஆனின் அறிவியல் அற்புதம்)

அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி பேசும் போது பெண்பால் வினைச் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான்.

‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிகப் பலவீனமானது சிலந்தியின் வீடாகும். அவர்கள் அறிபவர்களாக இருந்தால் (இவர்களை எடுத்திருக்க மாட்டார்கள்.)’ (29:41)

இங்கு வலை பின்னும் சிலந்தியை அல்லாஹ் பெண்பால் வினைச் சொல்லில் பயன்படுத்தியுள்ளான். பொதுவாக சிலந்தி அரபு இலக்கணப் பிரகாரம் ஆண்பால் என்பதால் ஆண்பாலுக்குப் பெண்பால் வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அல்குர்ஆனில் இலக்கணப் பிழை உள்ளது என சிலர் கடந்த காலத்தில் விமர்சித்தனர்.

இந்த அடிப்பிடையில் ‘இத்தஹதத்’ என்ற அரபு வார்த்தை ‘இத்தஹத’ என்று வந்திருக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதமாகும்.
ஆனால், அண்மைக்கால ஆய்வுகள் ஒரு அற்புதமான உண்மையைக் கண்டறிந்துள்ளன. சிலந்திவலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா? என்று ஆய்வு செய்ததில் பெண் சிலந்திதான் வலை பின்னும் ஆற்றலுடையது. இதில் ஆண் சிலந்திக்குப் பங்கில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில் அரபு இலக்கணப் பிரகாரம் சிலந்தி என்பது ஆண்பாலாக இருந்தாலும் சிலந்திகளில் பெண் சிலந்தி மட்டுமே வலை பின்னுகின்றது என்பதால் பெண்பால் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது நியாயமானது என்பது விஞ்ஞானபூர்வமாகவே உறுதி செய்யப் படுகின்றது. இந்த உதாரணத்தைக் கூறிவிட்டு அல்லாஹ் சொல்லும் செய்தியை சற்று அவதானியுங்கள்.

‘இவை உதாரணங்களாகும். இவற்றை மனிதர்களுக்காகவே நாம் கூறுகின்றோம். அறிவுடையோரைத் தவிர வேறு யாரும் இதனை விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.’ (29:43)

இந்த உதாரணத்தை அறிவுடையோரே சரியாகப் புரிந்து கொள்வார்கள் என்று கூறி இதில் அறிவியல் உண்மை இருப்பதையும் அல்லாஹுதஆலா உணர்த்திவிடுகின்றான். அல்குர்ஆனில் ஒரு எழுத்து கூட வீணாக இடம்பெறவில்லை என்பதை நாம் இன்று சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் நாளைய உலகு அதை சரியாகப் புரிந்து கொள்ளும் இந்த உண்மை மூலம் அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகின்றது.

One comment

  1. 1 – சிலந்தி அரபி மொழியில் ஆண்பாலாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம்? 2- அன்கபுத் என்ற அரபி வார்த்தை பெண்பால் என இமாம் ஸீபவை கூறியுள்ளாா்கள. இமாம் ஃபரா அன்கபுத் ஆண்பால் மற்றும் பெண்பால் இரண்டிற்கும் பயன்படுத்தப்படும் என கூறுகிறாா்கள். 3 – சிலந்தி வலையை பெண் சிலந்தி தான் பின்னுகிறது என்பதற்கு முன்சென்ற நல்லோா்களிடம் ஆதாரம் இருந்தால் தரவும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *