Featured Posts
Home » கேள்வி-பதில் » வீட்டில் நாய் வளர்க்கலாமா?

வீட்டில் நாய் வளர்க்கலாமா?

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆரிரியர்-
இந்த உலகத்தில் படைக்கப் பட்ட எல்லா படைப்புகளும் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட படைப்புகளாகும். என்றாலும் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு சில சட்டங்களையும், வரம்புகளையும்,அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

அதற்கு கட்டுப்பட்டு வாழ்பவனே உண்மையான முஸ்லிமாவான்.அந்த அடிப்படையில் நமது வீடுகளில் நாய் வளர்க்கலாமா? நாய்கள் விடயத்தில் நமது மார்க்கம் என்ன சொல்கிறது என்பதை கவனிப்போம்.

நாய்கள் வளர்க்க தடை
நாய்கள், மற்றும் உருவப்படங்கள் உள்ள வீடுகளில் மலக்குமார்கள் வரமாட்டார்கள். மேலும் எந்த வீடுகளில் நாய் வளர்க்கப் படுகின்றதோ அவரின் நன்மைகள் அழிக்கப் பட்டுக்கொண்டே இருக்கின்றது. போன்ற ஹதீஸ்கள் மூலம் நாய்கள் வளர்க்க தடை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

”யார் நாய் வளர்க்கிறாரோ அவருடைய நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவு நன்மைகள் குறைந்து விடும். கால்நடைகளை காவல் காக்கும் நாய்களையும், வேட்டைக்காக பயிற்ச்சி அளிக்கப் பட்ட நாய்களையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 5480, முஸ்லிம் 3202)

வேறு ஹதீஸ்களில் ஆடுகளை காவல் காக்கும் நாய்களையும், விவசாய பண்ணைகளை காவல்காக்கும் நாய்களையும் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாய் வளர்த்தால் ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத் நன்மைகள் குறையும் என்றால் ஒரு கீராத் என்பது உஹது மலை அளவு என்பதை ஜனாஸாவுடன் சம்பந்தப் பட்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாய் வளர்க்க அனுமதி
விவசாய காணிகளை காவல் காக்கவும், கால்நடைகளை காவல் காக்கவும், வேட்டைக்காக பயிற்ச்சி அளிக்கப் பட்ட நாய்களையும், தாராளமாக வளர்ப்பதற்கான அனுமதியை மேற்ச்சுட்டிக் காட்டிய ஹதீஸிலும் முஸ்லிம் (3210)லும் காணலாம். அதே நேரம் வீட்டு காவலுக்காகவோ, அழகிற்காகவோ,நாய்கள் வளர்ப்பதை இஸ்லாம் கடுமையாக தடை செய்துள்ளது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மேலும் விவசாய பண்ணைகளுக்காகவோ,அல்லது கால்நடைகளை பாதுகாக்கவோ, அல்லது வேட்டைக்காக இருந்தாலும் அந்த, அந்த பகுதிகளிலே நாய்களை வைத்துக் கொள்ள வேண்டும்.

நாய் பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால்?
நாம் சாப்பிடும் பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுப் படுத்துவதை காணலாம்.

”சுத்தமான உங்கள் பாத்திரத்தில் நாய் வாய் வைத்து விட்டால் அந்த பாத்திரத்தை ஏழு முறை கழுவுங்கள். அந்த ஏழு முறைகளில் முதல் தடவை மண்ணைக் கொண்டு கழுவுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம் ) கடைசியில் மண்ணைக் கொண்டு கழுவுங்கள் என்று திர்மிதியில் உள்ளது.

எனவே நாய் நக்கி விட்டால் அந்த பாத்திரத்தை ஏழு முறை கழுவ வேண்டும் அதில் ஒரு தடவை மண்ணை பயன் படுத்த வேண்டும். அதே நேரம் நாய் நம் உடம்பின் மீதோ, அல்லது நம் ஆடையின் மீதோ உரசி விட்டால் பட்ட இடத்தை மட்டும் ஒரு தடவை கழுவினால் போதுமாகும். பாத்திரத்தில் வாய் வைத்து விட்டால் மட்டும் தான் ஏழு முறை கழுவும் அந்த சட்டமாகும்.

நாய்களை கொல்ல அனுமதி?
அல்லாஹ்வின் துாதர் நாய்களை கொல்லுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள். அதையடுத்து கிராம புரத்திதிலிருந்து ஒரு பெண் நாயுடன் வந்தாலும் அந்த நாயையும் நாங்கள் கொன்றோம். பின்னர் நாய்களை கொல்வதை நபியவர்கள் தடை செய்தார்கள். மேலும் கண்களுக்கு மேலே இரு வெண்புள்ளிகள் உள்ள கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள் ஏனெனில் அது ஷைத்தானாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம் 3199)

கண்களுக்கு மேல் வெள்ளைப் புள்ளியுள்ள கருப்பு நாயை ஷைத்தானுக்கு நபியவர்கள் ஒப்பிட்டு காட்டியுள்ளார்கள். அது பயங்கரமான விளைவைத் தரும் என்பதற்காக நபியவர்கள் கொல்ல சொல்லியிருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *