Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 03 (முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்)

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 03 (முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்)

(03) முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்

முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபில் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே!

1. தவ்ஹீத் – ஏகத்துவம்.
2. அல் அத்ல் – நீதி
3. அல் வஃது வல் வஈது – வாக்குறுதியும் எச்சரிக்கையும்
4. மன்ஸிலதுன் பைனல் மன்ஸிலதைன். – (ஈமான்- குப்ர், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை.
5. அல் அம்ரு பில் மஃரூப் வன்னஹீ அனில் முன்கர். – நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுத்தலும்.

வெளிப்படையாகப் பார்க்கும் போது இதில் உள்ள நான்காவது அம்சத்தைத் தவிர மற்றைய அனைத்தும் இஸ்லாத்தில் உள்ள அம்சங்கள் தான். இஸ்லாத்தில் உள்ள இந்த அடிப்படையான அம்சங்களுக்கு அவர்கள் வழங்கிய விளக்கங் கள்தான் வில்லங்கமானது.

தவ்ஹீதும் முஃதஸிலாக்களும்:
தவ்ஹீத் என்பது புனிதமான வார்த்தை தான். முஃதஸிலாக்களிடம் கப்ரு வணக்கம், இறந்தவர்களிடம் பிரார்த்தித்தல், மூட நம்பிக்கைகள் போன்றவை இருக்கவில்லை. அவர்கள் தம்மை ‘அஹ்லுத் தவ்ஹீத்’ – தவ்ஹீத்வாதிகள் என அழைத்தும் கொண்டனர். அல்லாஹ்வின் அஸ்மாக்களை ஏற்றுக் கொள்வதையும் அவனது பண்புகளை நிராகரிப்பதையுமே அவர்கள் தவ்ஹீத் என்றனர்.
உதாரணமாக, அல்லாஹ் ‘ஆலிம்’ அறிந்தவன் என்றனர். ஆனால், அவனுக்கு ‘இல்ம்’ – அறிவு என்ற பண்பு இருப்பதை நிராகரித்தனர், இதற்கு பின்வருமாறு ஒரு வித்தியாசமான வாதத்தை முன்வைத்தனர்.

அல்லாஹுதஆலா தனது அறிவால் ஆலிமாக இருக்கின்றான் என்று கூற முடியாது. ஏனெனில், அல்லாஹ்வுடைய அறிவு, ஆதி அந்தம் அற்றதாக இருக்க வேண்டும். அல்லது பின்னர் உருவாகிய புதிய ஒன்றாக இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அறிவு பழையது. ஆதி, அந்தம் அற்றது என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் அல்லாஹ்வும் ஆதி-அந்தம் அற்றவன். அவனது அறிவும் ஆதி-அந்தம் அற்றது. எனவே, ஒரே நேரத்த்pல் ஆதி-அந்தம் அற்ற பழையது இரண்டு இருந்ததாகக் கூற நேரிடும். இது தவ்ஹீதுக்கு மாற்றமானது.

இதற்கு மாற்றமாக ஆரம்பத்தில் அல்லாஹ்தான் இருந்தான். அவனது அறிவு பின்னர் உருவானது என்று கூறினால் அதுவும் தவறுதான். ஏனெனில், அல்லாஹ்வில் புதிய மாற்றம் உருவாகிறது என்று கூற நேரிடும். என்று தத்துவவாதிகளின் தத்துவங்ளைப் படித்து ஏதோ உளர ஆரம்பித்தனர். அல்குர்ஆனில் அல்லாஹ்வின் அறிவு என நேரடியாகப் பல வசனங்கள் வந்திருந்தும் அவற்றைக் கவனத்திற் கொள்ளாமல் இந்தக் குதர்க்கத்தில் ஈடுபட்ட அதே நேரம் தம்மைத் தவ்ஹீத் வாதிகள் என்றும், அல்லாஹ்வுடைய பண்புகளை ஏற்றுக் கொள்பவர்களை முஷ்ரிக் குகள் என்றும் கூறினர்.

இமாம் அஷ்அரி(ரஹ்) அவர்கள் முஃதஸிலாவாக இருந்து பின்னர் அந்தக் கொள்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர். முஃதஸிலாக்களின் இந்தக் கருத்து பற்றி அவர் விபரிக்கையில்,

‘முஃதஸிலாக்கள் ஆட்சியாளர்களின் வாளுக்குப் பயந்தனர். உண்மையில் அவர்களது நோக்கம் அல்லாஹ்வையே நிராகரிப்பதுதான். அல்லாஹ் அறிவு இல்லாமலே ஆலிம், வல்லமை இல்லாமலேயே காதிர் – வல்லமை மிக்கவன். ஹயாத் – வாழ்வு இல்லாமலேயே ‘ஹையு’ – உயிர் வாழ்பவன்என்று அவர்கள் கூறினர். அறிவு இல்லாதவன் ஆலிமாக முடியாது. வாழ்வு இல்லாதவன் வாழ்பவனாக முடியாது. வல்லமை இல்லாதவன் வல்லவனாக முடியாது. முஃதஸிலாக்கள் அல்லாஹ் ஆலிம் இல்லை என்று நேரடியாகச் சொன்னால் ஆபத்து என்றுதான் இப்படிக் கூறினர். உண்மையில் அல்லாஹ்வையே நிராகரிப்பதுதான் அவர்களின் நோக்கமாகும். தாம் அல்லாஹ்வின் அஸ்மாக்களை ஏற்பது போல் அவர்கள் நடித்தாலும் அல்லாஹ்வின் ஸிபத்துக் களை மறுப்பதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் அஸ்மாக்களையும் மறுக்கவே செய்தனர்.

இது குறித்து முஃதஸிலாக்கள் செய்யும் வாதங்களைப் படித்தால் தலை சுற்ற ஆரம்பிக்கும். ஆய்வு எனும் பெயரில் இவர்கள் மயிர் பிளக்கும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபாடு காட்டினர்.

02. அல் அத்ல் – நீதி, நேர்மை:

‘அல் அத்ல்’ என்றால் நீதி, நேர்மை என்று அர்த்தப்படும். இதன் மூலம் அவர்கள் நாடியது என்னவென்றால் மனிதர்களின் செயல்கள், பேச்சுக்கள் என்பன அல்லாஹ்வால் படைக்கப் பட்டவை அல்ல. அல்லாஹ் நல்லவன், அவனிடமிருந்து நல்லது மட்டுமே வெளிப்படும். தீமையை அல்லாஹ் படைப்பதில்லை என வாதிட்டனர். நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். அந்த அடிப்படையை மறுத்தனர். அல்லாஹ் தீமையை நாடமாட்டான் என்று வாதிட்டனர்.

கேட்பதற்கு இந்த வாதம் நல்லது போல் இருந்தாலும் அல்லாஹ் நாடாததும் உலகில் நடக்கின்றது என்று கூறுவதாக இது அமைந்துவிடும். அல்லாஹ் படைக்காததும் உலகில் இருப்பதாக சொல்வதாக அமையும். அத்துடன் தீமையைப் படைக்க தனிக் கடவுள் இருப்பதாகவும் ஆகிவிடும். அத்துடன் ‘கழாகத்ரை’ மறுப்பதற்கும் இந்த அடிப்படையை ஆதாரமாக ஆக்கினர். அல்லாஹ் தீமையைப் படைக்கவில்லை. தீமையை நாடமாட்டான். மனிதனின் செயல்களை அவனே படைத்துவிட்டு தீமை செய்தவர்களுக்குத் தண்டனை கொடுப்பது அல்லாஹ்வின் நீதிக்கு ஏற்றதில்லை என்று கூறி, தாம் மட்டுமே அல்லாஹ்வை உண்மையான நீதிமானாக நம்புவதாக வாதிட்டனர். எனவே, தம்மை ‘அஹ்லுல் அத்ர்’ – நீதிக்குரியவர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர்.

அல் வஃது வல் வஈது:

வாக்குறுதியும் எச்சரிக்கையும் என்பதன் மூலம் முஃமினுக்குக் கூலி கொடுப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகும். பாவம் செய்தவன் தவ்பா செய்தால்தான் அல்லாஹ் அவனை மன்னிப்பான். பெரும் பாவம் செய்தவன் தவ்பா செய்யாமல் மரணித்தால் அவன் நரகில் நிரந்தரமாக இருப்பான். அவன் ஷபாஅத் மூலமோ விஷேட மன்னிப்பின் மூலமோ நரகில் இருந்து வெளியேற மாட்டான். காபிருக்குக் கிடைக்கும் வேதனையை விட இவனுக்குக் கிடைக்கும் வேதனை சற்று குறைவாக இருக்கும் என்று கூறினர்.

4. மன்ஸிலதுன் பைனல் மன்ஸில தைன்:
குப்ருக்கும் ஈமானுக்கும் இடைப்பட்ட நிலை என்பது முஃதஸிலாக்கள் உருவாக்கிய புதிய கோட்பாடாகும். ஒரு முஸ்லிம் பெரும்பாவம் செய்தால் அவன் காபிர் என்பது கவாரிஜ்களின் நிலைப்பாடாகும். முஃதஸிலாக்கள் அவன் காபிரும் இல்லை, முஃமினும் இல்லை இரண்டுக்கும் இடையில் இருக்கின்றான். அவன் மரணிக்க முன்னர் தவ்பா செய்துவிட்டால் முஃமினாகிவிடுவான். இல்லையென்றால் நரகில் நிரந்தரமாக இருப்பான் என்று கூறினர்.

பெரும்பாவம் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாது! அல்லாஹ் நாடினால் அவன் மன்னிக்கலாம். அவன் நரகம் சென்றாலும் எப்போதாவது ஒருநாள் அவன் சுவனம் நுழைவான் என்பது அஹ்லுஸ்ஸுன்னாவின் கொள்கையாகும்.

5. நன்மையை ஏவுதலும், தீமையைத் தடுத்தலும்:

தீமை செய்பவர்கள் ஆட்சியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சக்திக்கு ஏற்ப போராட வேண்டும். ஆட்சியாளர்கள் பாவம் செய்பவர்களாக இருந்தால் அவர்களுக்குக் கட்டுப்படாமல் வெளியேற வேண்டும் என்பது இதன் அர்த்தமாகும். ஆட்சியாளரிடம் தெளிவான குப்ரைக் காணும் வரை அவருக்கு எதிராகக் கிளர்ந்தெழக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். ஆட்சியாளனுக்கு எதிரான செயற்பாடுகள் அவர்களை இன்னும் இன்னும் பாவம் செய்யவே தூண்டும்.

இந்த ஐந்து அம்சங்களில் நான்கு அம்சங்கள் நல்ல அம்சங்களாக இருந்தாலும் இது குறித்த முஃதஸிலாக்களின் விளக்கம் விபரீதமானது என்பதை இதனூடாக அறியலாம்.

இத்துடன் முஃதஸிலாக்கள் இன்னும் பல கொள்கைகளைக் கூறினர். நாளை மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள் என குர்ஆனும், ஹதீஸும் கூறுகின்றன. முஃதஸி லாக்கள் இம்மையிலோ அல்லது மறுமையிலோ அல்லாஹ்வைப் பார்க்க முடியாது. அல்லாஹ்வைப் பார்க்க முடியும் என்றால் அவனுக்குத் திசை யையும், இடத்தையும் கற்பிக்க நேரிடும். அல்லாஹ் திசை, இடத்தை விட்டும் பரிசுத்தமானவன் என்று கூறியதுடன் அல்லாஹ்வைப் பார்ப்பார்கள் என்று வரும் வசனங்களுக்கு மாற்று விளக்கம் கூறியதுடன் ஹதீஸ்களையும் மறுத்தனர்.

7. அல்லாஹ் அர்ஷின் மீதானான் என்பதை மறுத்தனர்:

அவன் அர்ஷின் மீது தனது ஆட்சியை நிலைநாட்டினான் என்று கூறினர். இதே கருத்தையே அஷ்அரிய்யாக்களும் கூறினர். இதுதான் இன்று அஹ்லுஸ் சுன்னாவின் நிலைப்பாடாக மக்கள் மத்தியில் போதிக்கப் படுகின்றது. அது தவறாகும். அல்லாஹ் அர்ஷின் மேல் உள்ளான் என்பதே அஹ்லுஸ்சுன்னாவின் நிலைப்பாடாகும்.

8. ஷபாஅத்தை முஃதஸிலாக்கள் மறுத்தனர்:

நபியவர்கள் பெரும்பாவம் செய்தவர் களுக்காக பரிந்துரைப்பார்கள் என்பதை மறுத்ததுடன், பாவிகளுக்கு எதிராக நபியவர்கள் முறைப்பாடுதான் செய்வார்கள் என்றனர். பெரும் பாவம் செய்பவர்கள் நரகம் செல்வார்கள் என்ற தமது கருத்துக்கு முரண்படுவதால் குர்ஆனுடைய சில வசனங்களை எடுத்து குதர்க்கமான வாதங்களை முன்வைத்து ஷபாஅத்தை மறுத்தனர்.

9. இறைநேசர்களுக்கு கராமத்து ஏற்படலாம் என்பதை மறுத்தனர்:

வலிமார்கள் மூலமாகவும் அற்புதங்கள் நடக்கும் என்றால் வலிமார்கள் நபிமார்களுக்கு ஒப்பாகிவிடுவார்கள் என்று வாதிட்டனர்.

10. குர்ஆன் படைக்கப்பட்டது என்று பெரும் புரளியைக் கிளப்பி இஸ்லாமிய உலகில் குழப்பத்தை விளைவித்தனர்:

இவ்வாறு இஸ்லாமிய உலகில் பல்வேறு பட்ட கொள்கைக் குழப்பத்தை முஃதஸிலாக்கள் உருவாக்கினார்கள். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற அவர்களது கொள்கை குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் நோக்குவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *