Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம்

பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம்

முன்னாள் SLTJ அழைப்பாளர்
சாதாத்

முன்னுரை:
இந்தப் பாகத்தில் பிரத்தியேகமாக சகோதரர் பீஜேயின் பெயர் குறிப்பிடப்பட்டுத் தான் விமர்சனம் எழுதப் பட்டிருக்கிறது. இதற்கான காரணம், இந்த ஜமாஅத்துக்குள் நான் குற்றம் சாட்டும் வழிகேடுகள் நுழைந்ததற்கு அடிப்படைக் காரணமே சகோதரர் பீஜேயின் ஆரம்ப கட்ட ஆய்வுகள் தாம். அந்த அடிப்படையில், இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு உண்மையான சொந்தக்காரன் அவராக இருப்பதனால் தான், இதிலிருக்கும் அடிப்படைப் பிரச்சினையை சுட்டிக்காட்டும் பொருட்டு அவர் பெயர் உபயோகிக்கப் பட்டிருக்கிறது; அவரைக் கழுவி ஊற்றும் நோக்கத்தில் அல்ல. இன்ஷா அல்லாஹ் இது உங்களுக்கே போகப் போகப் புரியும்.
—————————————

பீஜே வழிதவறியதற்கான அடிப்படைக் காரணம்:

அல்லாஹ்வின் தூதர் சொன்னதாகத் தகுந்த சாட்சியங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட பல நம்பகமான ஹதீஸ்களை இன்று, “குர்ஆனுக்கு முரண்படுகிறது; பகுத்தறிவுக்கு முரண்படுகிறது; நிதர்சனத்துக்கு ஒத்துவரவில்லை; அருவருப்பாக இருக்கிறது” என்று கூறி சகோதரர் பீஜே எட்டி உதைகிறார். இந்தச் செயலுக்கு முட்டுக்கொடுக்கும் விதமாகப் பல நியாயங்களையும் அவர் முன்வைக்கிறார். அந்த நியாயங்கள் இவை தாம்:

ஹதீஸ்களை அறிவித்தவர்களும் தவறிழைக்கக் கூடிய மனிதர்களே.
மனித பலவீனங்கள் மூலம், ஹதீஸ்கள் மாசுபட்டிருக்கின்றன.
குர்ஆனின் பாதுகாப்புக்கு அல்லாஹ் உத்தரவாதம் தந்திருக்கிறான்.
ஆனால், ஹதீஸ்களின் பாதுகாப்புக்கு இந்த உத்தரவாதம் இல்லை.
எனவே, ஹதீஸ்களின் நம்பகத்தன்மை, குர்ஆனின் நம்பகத்தன்மைக்கு சமம் அல்ல.
நம்பகத் தன்மை குறைவான ஹதீஸ்கள், நம்பகத்தன்மை கூடிய குர்ஆனுக்கு முரண்படும் போது, நம்பகத்தன்மை குறைவான ஹதீஸ்களை ஓரங்கட்ட வேண்டும்; அது எவ்வளவு நம்பகமானவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டாலும் சரியே.

இவர் முன்வைக்கும் இந்த நியாயங்கள் உண்மையில் நியாயங்கள் தாமா? அல்லது தனது மனோ இச்சைக்கு முட்டுக் கொடுக்கும் நொண்டிச் சாட்டுக்களா என்பதை இன் ஷா அல்லாஹ் விரிவாக நோக்க இருக்கிறோம்.

அதற்கு முன், தூய இஸ்லாத்தை மக்களுக்கு எத்திவைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தனது பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்த சகோதரர் பீஜே, இன்று இந்த அளவுக்கு வழிகெட்டுப் போனதற்கான அடிப்படைக் காரணத்தைப் பற்றிய ஓர் அறிமுகத்தைத் தெரிந்து கொள்வோம்.

குர்ஆனுக்கு முரண்படுகிறதென்று சகோதரர் பீஜே மறுத்திருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் எதுவும் உண்மையில் குர்ஆனுக்கு முரண்படவில்லை; பீஜேயின் மனோ இச்சைக்குத் தான் முரண்படுகின்றன.

தனது மனோ இச்சைக்கு முரன் என்று ஹதீஸ்களை அவர் மறுத்தால், எந்த மனிதரும் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அனைவரும் அவரது ஹதீஸ் மறுப்புக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏதாவதொன்றுக்கு அந்த ஹதீஸ்கள் முரண்படுவதாக சித்தரித்துக் காட்ட வேண்டும்.

இதன் நிமித்தம், “இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரணாக இருக்கிறது; அதனால் இது ஹதீஸாக இருக்க முடியாது” என்ற ஒரு வாதத்தைப் போட்டால், குர்ஆனை உயிராக மதிக்கக் கூடிய மக்களுள் அனேகமானோர் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, “அப்படியா??? சொல்லவே இல்ல…” என்று வாயைப் பிளந்து விடுவார்கள்.

அவர்கள் இவ்வாறு வாய் பிளந்த பிறகு, பிளந்த வாயின் ஊடாகப் பித்தலாட்டங்களை உள் நுழைப்பது சகோதரர் பீஜே போன்ற ஒரு திறமைசாலிக்கு ஒன்றும் அவ்வளவு கடினமான காரியமில்லை.

“ஆமா அப்படித் தான். இதோ பாருங்கள்..! இத்தனை குர்ஆன் வசனங்களில் சூனியம் என்ற சொல் இருக்கிறது; அவற்றில் இருக்கும் விளக்கங்களுக்கும், இந்த ஹதீஸில் இருக்கும் விளக்கத்துக்கும் முரண்பாடு இருக்கிறது. ஆகவே, இது ஹதீஸாக இருக்க முடியாது; யாரோ சதிகாரர்கள் இதை நபியின் பெயரில் இட்டுக்கட்டி விட்டார்கள். அதனால், இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது” என்று ஒரு வியாக்கியானத்தைக் கொடுத்தால்…

“அட ஆமால்ல….!!! இது நமக்குத் தெரியாம போச்சே..” என்று அனேகமானோர் அந்தப் பித்தலாட்டத்தை அப்படியே நம்பி, விழுங்கி விடுவார்கள்.

உண்மையில் இது தான் எனது முன்னாள் ஜமாஅத்தில் இன்று அச்சொட்டாக நடந்து கொண்டிருக்கிறது. இது எதையும் நான் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. ஒவ்வொன்றையும் இன் ஷா அல்லாஹ் ஆதாரங்களோடு நிரூபிப்பேன். ஆதாரங்களைப் பார்க்க முன், ஃபித்னாவின் ஆணிவேரைக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத் தான் இத்தனை பீடிகை.

பிரச்சிணையின் ஆணிவேர்:

இறை விசுவாசிகளின் அடையாளம் என்னவென்பதை அல்லாஹ் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்: “அவர்கள் மறைவான விசயங்களை, நம்புவார்கள்” (2:3)

மறைவான விசயங்களை இரண்டு படித்தரங்களில் இஸ்லாம் எமக்குப் போதிக்கிறது:

முதலாவது படித்தரம்:
அல்லாஹ், வானவர்கள், இறைச்செய்தி, இறுதி நாள், விதி போன்ற அடிப்படைகளில் இருக்கும் மறைவானவற்றை, சொல்லப்பட்ட பிரகாரம் நம்புவது.

இரண்டாவது படித்தரம்:
ஜின்களின் உலகம், ஷைத்தானின் செயல்திட்டங்கள், சூனியம், கண்ணேறு போன்ற, மனித அறிவுக்கு எட்டாத, மறைவான அம்சங்கள் பற்றி மார்க்கத்தில் எவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றனவோ, அவற்றை சொல்லப்பட்ட பிரகாரமே நம்புவது.

இதில் முதலாவது படித்தரத்தை நம்புவதில் சகோதரர் பீஜே உறுதியாக இருக்கிறார். இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இரண்டாவது படித்தரத்தை நம்புவதில் அவருக்கு அவ்வளவாக இஷ்டம் இல்லை. அவர் மனம் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

இதற்குக் காரணம், “நவீன விஞ்ஞானத்தின் மூலம் கண்டுபிடித்து, எதையெல்லாம் நிரூபிக்க முடியுமோ, அவை மட்டுமே உண்மை; ஆகவே, அவற்றை மட்டுமே நம்ப வேண்டும்” என்று மேற்கத்திய பகுத்தறிவு வாதிகள் முன்வைக்கும் நாத்திக வாதங்களால் பீஜே கவரப்பட்டிருக்கிறார். இவ்வாறான நாத்திகக் கோட்பாடுகளை அவர் உண்மையென்று நம்புகிறார். இதன் விளைவாக “எதுவெல்லாம் நவீன விஞ்ஞானத்துக்கு முரணாக இருக்கிறதோ, அதுவெல்லாம் மூட நம்பிக்கை; அப்படியெதுவும் உலகில் இல்லை” என்ற ஒரு சித்தாந்தம் சகோதரர் பீஜேயின் உள்ளத்தில் வேறூன்றி விட்டது. அவரது பல சமீபகால ஆய்வுகள் வழிகேட்டின் பால் போனதற்கு இந்த சித்தாந்தம் தான் காரணம்.

ஆனால், இந்த சடத்துவவாதக் கொள்கையை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாம் ஆதரிக்காத திசையில் ஒரு மனிதனின் ஆய்வு பயனித்தால், கண்டிப்பாக அந்தப் பயணத்தின் முடிவு வழிகேடாகத் தான் இருக்கும்.

இந்த நாத்திக சித்தாந்தத்தை அளவுகோலாக வைத்தே, சகோதரர் பீஜே உலகிலிருக்கும் அனைத்தையும் எடைபோடத் தொடங்கினார். இறுதியில், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையும் கடிப்பது போல், குர்ஆன், மற்றும் ஹதீஸ் ஆகிய மாக்கத்தின் அடிப்படை மூலாதாரங்களையும் இதே அளவுகோல் மூலம் எடைபோடத் தொடங்கி விட்டார். இந்த இடத்தில் தான் அவர் சறுக்கத் தொடங்கினார்:

மேற்கத்திய விஞ்ஞானத்தின் மூலம் வஹியை எடைபோடத் தொடங்கிய சகோதரர் பீஜேயின் பார்வையில், பல குர்ஆன், ஹதீஸ் வாசகங்கள் அறிவுக்கு முரணாக இருப்பது போல் தோற்றமளிக்கத் தொடங்கி விட்டன. குறிப்பாக ஜின் / ஷைத்தான்களின் பௌதீக ஆற்றல்கள், சூனியம், கண்ணேறு போன்ற பல மறைவான அம்சங்கள் அவரது பார்வையில் மூடநம்பிக்கை போல் தோன்ற ஆரம்பித்து விட்டன.

இந்தக் கட்டத்தில் தான் அவருக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. மறைவானவை பற்றி இஸ்லாம் இவ்வாறு கூறும் சில குர்ஆன், ஹதீஸ் வசனங்களுக்காக, தான் உண்மையென்று நம்பிக் கொண்டிருக்கும் நாத்திக விஞ்ஞானத்தை மறுப்பதா? அல்லது விஞ்ஞானத்துக்காக இந்த ஒருசில குர்ஆன், ஹதீஸ் வசனங்களை மறுப்பதா? இந்தப் போராட்டத்தில் சிக்கித் தவித்த சகோதரர் பீஜே, இறுதியில் ஒரு தீர்மானம் எடுத்தார்.

“நவீன விஞ்ஞானத்தால் கண்டறிந்து நிரூபிக்க ஏதுவான அம்சங்கள் தான் உண்மையாக இருக்க வேண்டும்; அறிவுக்குப் புலப்படாத ஜின் / ஷைத்தான்களின் சேட்டைகள், சூனியம், கண்ணேறு போன்ற மறைவான விசயங்கள் எதுவும் உண்மையில் இருக்க வாய்ப்பில்லை. இவையெல்லாம் நிச்சயமாக மூட நம்பிக்கைகளாகத் தான் இருக்கும்.” இந்தத் தீர்மாணத்தைத் தான் அவர் எடுத்தார் என்பது, கடந்த தசாப்தத்திலிருந்து அவரிடம் ஏற்பட்ட மாற்றங்களை அவதானிப்பதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

இதன் விளைவாக அவர் மேலும் சில தீர்மாணங்களை நிறைவேற்றினார். முதலில், ஜின்கள், சூனியம் போன்ற மறைவானவை பற்றி விளக்கும் குர்ஆன் வசனங்களுக்கெல்லாம், நவீன நாத்திக விஞ்ஞானத்தோடு ஒத்துப்போகும் விதத்தில், சுற்றி வளைத்துப் புதுப்புது வியாக்கியானங்களைக் கொடுத்தார். பிறகு, இதே மறைவான அம்சங்கள் பற்றி விளக்கும் ஹதீஸ்களையெல்லாம், ஏற்கனவே சுற்றி வளைத்துப் பொருள் கொடுக்கப்பட்ட குர்ஆன் வசனங்களோடு மோத விட்டு, முரண்பாடு கற்பித்தார். இதன் மூலம் இந்த ஹதீஸ்களை இட்டுக்கட்டப்பட செய்திகள் என்று பெயர் சூட்டி, வீசியெறிந்தார். இவ்வாறு செய்ததன் மூலம், அவரது நாத்திக விஞ்ஞானக் கருத்துக்கும், இஸ்லாத்தின் மூலாதாரங்களுக்கும் இடையில் இருந்த முருகல் நிலையைக் களைந்து, இரண்டுக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி விட்டதாக நினைத்துப் பெருமூச்சு விடலானார். ஏற்றாலும், மறுத்தாலும் இது தான் உண்மை. நியாய உணர்வோடும், நடுநிலையான பார்வையோடும் பார்ப்பவருக்கு இந்த உண்மை பளிச்சென்று புலப்படும்.

இந்தத் தீர்மானங்களை நியாயப்படுத்தும் நோக்கத்தில் தான் “குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்க வேண்டும்” என்ற வழிகெட்ட உஸூலையே அவர் தூக்கிப் பிடிக்கத் தொடங்கினார். ஏனெனில், இந்த உஸூல் மூலம் மட்டுமே அவரது தீர்மானங்கள் நிறைவேறுவது சாத்தியம். வேறெந்த வழியிலும் அவரது இந்த மனோ இச்சையான தீர்மானங்கள் மக்களிடம் எடுபடாது.

எனவே தான், முதலில் இந்த உஸூலை மக்கள் மனதில் நிலைநாட்டுவதற்கு அரும்பாடு பட்டார். இந்த உஸூலை நியாயப் படுத்துவதற்கு ஏற்றாற்போல் ஏதேனும் ஓர் அம்சம் கிடைக்குமா என்று தேடினார். கையில் கிடைத்தது சூனியம். “இது தான் நமது உஸூலை நியாயப் படுத்துவதற்கு ஏற்ற சிறந்த ஆயுதம்” என்று உடனே அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

சூனியத்தை அவர் தெரிவு செய்ததற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. சூனியம் என்பது அனேகமான மக்கள் அருகில் கூட நெருங்க விரும்பாத ஒரு மறைவான அம்சமாக இருப்பதால், இது பற்றிய சரியான தெளிவு அனேகமான மக்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. அதனால், தான் சொல்வது சரியா? தவறா? என்பதைத் தமது அறிவைக் கொண்டு தேடிப்பார்த்து, கண்டறிந்து கொள்ளும் வசதி அனேகமான மக்களுக்கு இதில் இல்லை. ஆகவே, இஷ்டத்துக்கு இதில் புகுந்து விளையாடலாம். முன்வைக்கும் வாதங்களுக்கு ஏற்ற மாதிரியெல்லாம் இது பற்றிய குர்ஆன் வசனங்களை வளைத்து வளைத்து வியாக்கியானம் கொடுக்கலாம். பிறகு, நாத்திக விஞ்ஞானக் கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கக் கூடிய ஹதீஸ்களையெல்லாம், அதே குர்ஆன் வசனங்களுக்கு முரண்பவதாக சித்தரித்து, ஒழித்துக் கட்டி விடலாம். சுயமாகத் தேடிப்பார்த்து ஆய்வு செய்யக் கூடிய ஒருசிலரைத் தவிர வேறு யாரும் இதைக் கண்டுபிடிக்கப் போவதில்லை. இதை சரிவரப் புரிந்துகொண்டு தான் சூனியத்தை மறுக்கும் பிரச்சாரத்தை முதல் கட்ட நடவடிக்கையாக அவர் ஆரம்பித்தார். இந்த வாதங்கள் மக்களிடம் எடுபடத் தொடங்கிய பிறகு, இந்த வாதங்களையே நியாயமாக முன்வைத்து, “உள்ளுணர்வுக்கு ஒத்துவராத ஹதீஸ்களையும் மறுக்க வேண்டும்” என்ற தனது இரண்டாம் கட்ட வாதங்களை நைஸாக உள்ளே நுழைத்தார்.

இப்படித் தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது. இப்போது பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கு போய் இது முடியப் போகிறதோ அல்லாஹ்வே அறிந்தவன்.

இனிவர இருக்கும் தொடர்கள் இவர்களது வழிகெட்ட நவீன உஸூலில் இருக்கும் வழிகேடுகளை ஒவ்வொன்றாகத் தோலுரித்துக் காட்டுவதாகவே இருக்கும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

– அபூ மலிக்

One comment

  1. Thank you very much. In this article you are very clearly indicate what is the real problems with PJ . May be PJ and his blind followers challenge you and ask you to debate with him. or try to insult you whatever way they think. Be firm and May ALLAH strengthen your feet to fight with these jadeed fitnas! I think “kibr” is the first virus which affect PJ. He always try to prove himself as a different type of scholar! thinker! orator! most knowledgeable person of this centurary! because of that he criticize everybody! great companions,imams,muhadhiths and mubassareens! and who else!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *