Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 1

ஹதீஸ் மறுப்புக்கு முட்டுக்கொடுக்கும் வாதங்களும், தக்க பதில்களும்: Part 1

முன்னால் SLTJ அழைப்பாளார்
சகோ சதாத்

குர்ஆனுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ, அதே அளவு முக்கியத்துவம் தான் ஹதீஸுக்கும் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

இரண்டுக்கும் ஒரேயளவு முக்கியத்துவம் இருப்பதனால், இரண்டையும் ஒரே அளவில் பாதுகாப்பதும் கட்டாயமாக இருக்கிறது. அதனால் தான் அல்லாஹ் குர்ஆனை எந்த அளவுக்குப் பாதுகாத்திருக்கிறானோ, அதே அளவுக்கு ஹதீஸையும் பாதுகாத்திருக்கிறான். இதற்கான ஆதாரங்களை ஏற்கனவே சென்ற தொடரில் பார்த்தோம்.

குர்ஆன் பாதுகாக்கப்பட்ட அதே அளவுக்கு ஹதீஸ்களும் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன என்ற இந்த இந்த உண்மையைத் தான் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத், மற்றும் அவர்களது குருநாதர்கள் போன்றோர் இருட்டடிப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.

இதன் உண்மைத்தன்மையை விளக்கும் முகமாக, இது பற்றி அவர்கள் வைக்கும் சில வாதங்களை இங்கு சுட்டிக்காட்டி, அவற்றுக்கான பதில்களைத் தர்க்கரீதியாக இங்கு பதிவு செய்கிறேன்:

SLTJ வாதம் 1:
ஹதீஸ்களை அறிவித்தவர்களும், தொகுத்தவர்களும் நல்ல மக்களாக இருக்கலாம். ஆனால், அவர்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறுகள் இழைத்திருக்கலாம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே, ஹதீஸ்களில் கலப்படம் இருப்பது உறுதி.

எனது பதில்:
பாய்ண்ட் 1 – இவர்கள் வாதத்தையே இவர்களுக்கு எதிராகத் திருப்பி விடுகிறேன். இவர்களும் மனிதர்கள் தானே. ஒரு வேளை இவர்கள் சிந்தனையில் இது விசயத்தில் தவறு ஏற்பட்டிருக்கலாம். இந்தத் தவறுகள் மூலம், ஹதீஸ்களை சரியாக இணைத்துப் புரிந்துகொள்ளத் தவறியதன் விளைவாக ஏறுக்குமாறான முடிவுகளை இவர்கள் எடுத்திருக்கலாம் தானே? இதை ஏன் இவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்? இந்த அளவுக்குமா இவர்களது சிந்தனைத் திறன் மழுங்கி விட்டது?

பாய்ண்ட் 2 – இவர்கள் வாதப்படியே வைத்துக் கொண்டால், ஸஹாபாக்களும் மனிதர்கள் தானே? ஆகவே, அவர்களும் இதே மாதிரி தவறு விட்டிருக்கலாம் தானே? அவர்கள் காலத்தில் தான் இன்றிருக்கும் குர்ஆன் தொகுக்கப்பட்டு, நூலுருப் பெற்றது. ஆகவே, இவர்கள் வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், குர்ஆன் விடயத்திலும் இவர்கள் இதே நிலைபாட்டைத் தான் கடைப்பிடித்திருக்க வேண்டும். அதற்கு மட்டும் எந்த அடிப்படையில் விதிவிலக்குக் கொடுத்தார்கள்?

குறிப்பு:
குர்ஆன் விடயத்தில் விதிவிலக்குக் கொடுப்பதற்கு ஏதுவாக, இவர்கள் இன்னொரு வாதத்தையும் முன்வைப்பதுண்டு. அதற்கும் சேர்த்தே இங்கு பதில் கொடுத்து விடலாம்:

SLTJ வாதம் 2:
குர்ஆன், மக்களின் உள்ளங்களில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது என்று அல்லாஹ் அதற்கு உத்தரவாதமளித்திருக்கிறான். ஆனால், ஹதீஸுக்கு இந்த உத்தரவாதமில்லை. அதனால், இரண்டுக்கும் ஒரே நிலைபாடு எடுக்க முடியாது.

எனது பதில்:
இதுவும் ஒரு பொய்யான பிரச்சாரம். இந்த வாதத்தின் மூலமும், குர்ஆனை மட்டுமே அல்லாஹ் பாதுகாத்தான், ஹதீஸ்களைக் கண்டுகொள்ளவில்லை என்பது போல் ஒரு பிரமையைத் தான் இவர்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள். இதன் விளைவாகத் தான் இன்று டீக்கடையில் டீ ஆத்துகிறவன் கூட, அவனவன் இஷ்டத்துக்கு ஹதீஸ்களை மறுக்கத் துனிந்து விட்டான். இது தவறு.

உண்மை இதுவல்ல. குர்ஆனும், ஹதீஸும் ஒரே வஹியின் இரண்டு வடிவங்கள். ஒன்றின் துணை இல்லாமல் இன்னொன்றை விளங்க முடியாது. அதனால் குர்ஆனோடு சேர்த்து ஹதீஸையும் தான் அல்லாஹ் பாதுகாத்திருக்கிறான். அல்லாஹ்வின் உத்தரவாதம் குர்ஆனுக்கு மட்டுமல்ல; ஹதீஸுக்கும் சேர்த்துத் தான். இவர்களுக்குத் தான் இது புரியவில்லை. சில ஆதாரங்கள் மூலம் இதை விளக்குகிறேன்:

ஆதாரம் 1:
(முஹம்மதே!) இதற்காக அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது. (75:16-19)

இந்த வசனங்களின் ஆரம்பப் பகுதியில், ஓதப்படும் குர்ஆன் வசனங்களை ஒன்றுதிரட்டிப் பாதுகாப்பது தனது பொறுப்பு என்று அல்லாஹ் உத்தரவாதமளிக்கிறான். அதேபோல், வசனத்தின் பிற்பகுதியில், ஒன்றுதிரட்டப்பட்ட அந்தக் குர்ஆன் வசனங்களைத் தெளிவுபடுத்துவதும் தனது பொறுப்பு என்று உத்தரவாதமளிக்கிறான்.

இங்கு கவனிக்க வேண்டிய அம்சம்:
வசனத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ் குர்ஆனைப் பாதுகாப்பதாக உத்தரவாதமளிக்கிறான். பிற்பகுதியில், அந்தக் குர்ஆன் வசனங்களுக்கான விளக்கமாக அல்லாஹ் அருளிய ஹதீஸ்களையும் அதே போல் பாதுகாப்பதாக அதே உத்தரவாதத்தை அளித்திருக்கிறான்.

அதாவது, ரத்தினச் சுருக்கமாக அருளப்பட்டிருக்கும் குர்ஆனின் பாதுகாப்புக்கும், அதன் விரிவான விளக்கமாக அருளப்பட்ட ஹதீஸ்களின் பாதுகாப்புக்கும் இடையில் அல்லாஹ் எந்தவிதமான ஏற்றத்தாழ்வையும் இங்கு காட்டவில்லை. இரண்டையும் சம அந்தஸ்த்தில் தான் பாதுகாப்பதாக உறுதி கூறுகிறான். சிந்திக்கும் ஒருவருக்கு இந்த ஓர் ஆதாரமே போதுமானதாகும்.

ஆதாரம் 2:
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (15:9)

இந்த வசனத்தில் ‘திக்ர்’ எனும் சொல் தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதற்கு நேரடி அர்த்தம் “அறிவுரை” / “உபதேசம்” என்பது தான்.

“திக்ர் என்ற இந்தச் சொல், குர்ஆனை மட்டும் தான் குறிக்கிறது” என்று தான் சகோதரர் பீஜே இதற்கு வியாக்கியானம் கொடுத்திருக்கிறார்.

சகோதரர் பீஜேயின் பித்தலாட்டங்களை ஒவ்வொன்றாக ஆதாரங்களோடு தோலுரித்துக் காட்டுவதாக நான் ஏற்கனவே உங்களுக்கு வாக்களித்திருக்கிறேன். அந்த வாக்குறுதியின் பிரகாரம், நான் தோலுரித்துக் காட்டும் முதலாவது பித்தலாட்டம் இது.

இந்தப் பித்தலாட்டத்தின் மூலம் அவர் மக்களின் ஆழ்மனதில் விதைக்க முயற்சிக்கும் கருத்து:
“குர்ஆனின் பாதுகாப்புக்கு மட்டுமே அல்லாஹ் இந்த வசனத்தில் உத்தரவாதம் அளித்திருக்கிறான்; ஹதீஸின் பாதுகாப்புக்கு இதில் எந்த உத்தரவாதமும் இல்லை” என்பது தான்.

இந்தப் பித்தலாட்டத்தின் மூலம் ஹதீஸ்களின் நம்பகத்தன்மையைத் தான் இவர்கள் குறிவைத்துத் தகர்க்க முயற்சிக்கிறார்கள்.

உண்மையில் இந்த வசனத்திலிருக்கும் “திக்ர்” என்ற பதம் குர்ஆனை மட்டும் தான் குறிக்கிறது என்று இவர்கள் வாதிடுவதாக இருந்தால், அதை நிரூபிக்கும் வலுவான ஆதாரங்களை இவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் திக்ர் எனும் சொல்லுக்கு அகராதியில் என்ன பொருள் கொடுக்கப் பட்டிருக்கின்றதோ, அந்த நேரடிப் பொருளைத் தான் எடுக்க வேண்டும். இது தான் அறிவுடையோர் ஆய்வு செய்யும் முறை.

நேரடிப் பொருள் மூலம் திக்ர் எனும் பதத்தை விளங்கினால், அல்லாஹ் நமக்கு அருளியிருக்கும் மொத்த உபதேசங்களையும் தான் இது குறிக்கிறது என்று பொருள்படும். மொத்த உபதேசங்களும் என்பது குர்ஆன், ஹதீஸ் இரண்டும் சேர்ந்த பூரண வடிவம் தான் என்பது ஒரு சாதாரண முஸ்லிம் கூட அறிந்த விடயம். இந்த அடிப்படையில் நோக்கும் போது, திக்ர் என்ற சொல் குர்ஆன், ஹதீஸ் இரண்டையும் சேர்த்துத் தான் குறிக்கிறது என்பது மறுக்க முடியாத வாதம்.

இதையும் மீறி இவர்கள், “இந்த வசனத்தில் ஹதீஸ்களின் பாதுகாப்புக்கு அணுவளவும் உத்தரவாதம் இல்லை” என்று வாதிப்பார்களென்றால், வாதிக்கும் இவர்கள் தான் இதற்கு வலுவான சான்றுகளைக் காட்ட வேண்டும். காட்டாவிட்டால், நமது வாதம் தான் சரியென்று நிரூபனமாகும்.

உண்மையில், இந்த வசனத்திலிருக்கும் திக்ர் என்ற பதம் குர்ஆனை, மட்டுமல்ல; ஹதீஸையும் சேர்த்துத் தான் குறிக்கிறது என்பது எனது சிந்தனையின் வெளிப்பாடு மட்டுமல்ல; இது தான் மார்க்க அறிஞர்களது ஏகோபித்த கருத்தும் கூட. உதாரணத்துக்கு ஒருசிலரது கருத்துக்களை இங்கு முன்வைக்கிறேன்:

இப்னுல் முபாரக் (ஹதீஸ்கலை மேதை), தன்கீல் என்ற நூலில் கூறுகிறார்:
இந்த வசனத்தில், “திக்ர்” என்ற பதம் குர்ஆன், ஹதீஸ், மற்றும் அரபு மொழி ஆகிய மூன்றையும் சேத்துத் தான் குறிக்கிறது.”

இமாம் இப்னு ஹஸம், “உஸூலில் அஹ்கம்” என்ற அவரது நூலில் கூறுகிறார்:
“இந்த வசனம் குர்ஆனின் பாதுகாப்புக்கு மாத்திரமான உத்தரவாதம் இல்லை; மாறாக குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டின் பாதுகாப்புக்குமான உத்தரவாதம் தான் இது.”

இமாம் இப்னு தைமியா, அவரது “அல் ஃபதாவா அல் குப்ரா” என்ற நூலில் கூறுகிறார்:
“திக்ர் என்பது குர்ஆன், மற்றும் ஹதீஸ் இரண்டையும் இணைத்துக் கூறப்பட்ட சொல்”

அதாவது, இந்த அறிஞர்களெல்லாம் ஏகோபித்துக் கூறுவது ஒன்றைத் தான்:
“குர்ஆன் எந்த அளவுக்குப் பாதுகாக்கப் படுமோ, அதே அளவுக்கு ஹதீஸும் பாதுகாக்கப் படும் என்பதைத் தான் அல்லாஹ் இங்கு உத்தரவாதம் தருகிறான்.” என்ற கருத்துத் தான் அது.

ஆகமொத்தத்தில், குர்ஆன், ஹதீஸ் இரண்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்து அல்லாஹ் பாதுகாத்தான் என்பதில் ஐயமில்லை. ஆனால், பாதுகாத்த விதத்தில் தான் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. குர்ஆனை அல்லாஹ் கல்வியுடையோர் உள்ளங்களில் பாதுகாத்தான்; பிறகு நூலுருவிலும் அதன் பாதுகாப்பை ஊர்ஜிதப் படுத்தினான்.

இதற்கு சமாந்தரமாக, ஹதீஸ்களை அல்லாஹ் முதல் கட்டமாக, ஸஹாபாக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் பாதுகாத்தான். ஹதீஸ்களைப் பாதுகாக்கும் இந்த அடிப்படை நோக்கத்தையும் கருத்திற் கொண்டு தான், ஸஹாபாக்களை அல்லாஹ் அந்த அளவுக்குப் புடம் போட்டுப் பயிற்றுவித்தான். பயிற்சியில் அவர்கள் நூற்றுக்கு நூறு புள்ளிகள் பெற்றுத் தேறினார்கள். அவர்கள் தேறியதற்கான சான்றிதழைத் தான் அல்லாஹ் “ரழியல்லாஹு அன்ஹும்” என்ற வாசகத்தின் மூலம் அந்த மகத்தான சமுதாயத்துக்கு வழங்கினான். இதன் மூலம், அவர்களை மொத்தமாகவே பொருந்திக் கொண்டதாக அல்லாஹ், உலக மக்களுக்குப் பிரகடணமும் செய்தான்.

இவ்வாறு முதல் கட்டமாக ஹதீஸ்களை ஸஹாபாக்களின் வாழ்வொழுக்கத்தில் பாதுகாத்த அல்லாஹ், பிறகு இரண்டாம் கட்டமாக அதை, அவன் தேர்ந்தெடுத்த இமாம்கள் மூலம் துல்லியமான வரலாற்றுப் பதிவுகளாக நூலுருவிலும் பதியச் செய்தான்.

குர்ஆன் பாதுகாக்கப் பட்ட விதத்துக்கும், ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்ட விதத்துக்கும் இடையில் இருக்கும் அடிப்படை வித்தியாசம் இவ்வளவு தான். பாதுகாத்த விதத்தில் இருக்கும் இந்த வித்தியாசத்தைத் தான் இவர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள். மக்களுக்கு இந்த உண்மையைத் தப்பான கோணத்தில் அறிமுகம் செய்கிறார்கள். அதன் மூலம் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்றி, குர்ஆனை மட்டுமே அல்லாஹ் பாதுகாத்தான்; ஹதீஸைப் பாதுகாக்கவில்லை என்ற பொய்யை விதைக்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியை இன்ஷா அல்லாஹ் இரண்டாம் பாகத்தில் எதிர்பாருங்கள்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *