Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு » ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?

ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது?
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்
இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான பல சட்டங்களை பிரித்து வழிக் காட்டியுள்ளது. அந்தந்த சட்டங்களில் இரண்டு சாராரும் தெளிவாக இருக்க வேண்டும்.

ஆண்கள் பெண்கள் இரண்டரக் கலக்கும் விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஏனைய நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை இஸ்லாம் நமக்கு அழகாக வழிக் காட்டியுள்ளது.

நபியவர்கள் காலத்தில் ஆண்களும், பெண்களும் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் ஒன்று சேரும் கட்டங்கள் வந்த போது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை முதலில் கவனிப்போம்.

தொழுகையும் பெண்களும்
நபியவர்கள் காலத்தில் ஐந்து நேரத் தொழுகை, பெருநாள் தொழுகைகள், நோன்பு காலத்தில் கடைசி பத்து நாட்கள் அமல்களின் போது ஆண்களும், பெண்களும் ஒரே சமயத்தில் ஒன்று சேரும் நிலை. ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டு சாரார்களும் இரண்டரக் கலக்க வில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொழுகை நேரத்தில் ஆண்கள் முன்னால் நிற்ப்பார்கள் பெண்கள் சற்று தள்ளி பின்னால் நின்று ஜமாத்துடன் தொழுவார்கள், தொழுது முடித்தவுடன் பெண்களை முதலில் வெளியே செல்லும் படி நபியவர்கள் கூறுவார்கள். பெருநாள் தொழுகையும் அப்படி தான் நடக்கும்.

யுத்தங்களுக்கு செல்லும் போது சில குறிப்பிட்ட ஸஹாபாக்களின் மனைவிமார்களை அழைத்துச் செல்வார்கள். தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்கும், யுத்தத்தில் காயப் பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதற்கும், ஏனைய உதவிகளை செய்வதற்கும் அப்போதும் கூட கண்ணியமான முறைகளில் ஆண்களுடன் பெண்கள் நடந்து கொள்வார்கள்.

பெண்கள் இருக்கும் பகுதிக்கு ஆண்கள் செல்வதை நபியவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். ஒரு அரவானி (திருநங்கை) பெண்கள் பகுதிக்கு சென்று ஒரு பெண்ணை வர்ணித்து சொன்ன போது இனிமேல் இவரை பெண்கள் பகுதிக்கு அனுப்பாதீர்கள் என்று நபியவர்கள் கண்டிப்பாக கூறினார்கள்.

பிறர் வீட்டுக்கு செல்வதாக இருந்தாலும் அனுமதியில்லாமல் நுழையக் கூடாது. ஸலாம் சொல்லி விட்டு,அவர்கள் அனுமதி தந்தால் தான் உள்ளே செல்ல வேண்டும். கணவன் இல்லாத வீடுகளில் வேறு ஆண்கள் செல்லக் கூடாது. என்று ஆண்கள், பெண்கள் விவகாரத்தில் இஸ்லாம் கடுமையாக சட்டம் போட்டுள்ளது.

ஆண்களே! நீங்கள் உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், பெண்களே நீங்கள் உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். என்பதன் மூலம் ஆண்கள் பெண்கள் கலக்கும் சந்தர்பங்களில் இரண்டு சாராரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மேற்ச் சென்ற குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு சொல்லித் தருகிறான்,

பெண்களே! நீங்கள் நடக்கும் போது காலை தட்டி, தட்டி நடக்காதீர்கள். மேலும் பெண்களே! நீங்கள் ஆண்களுடன் குழைந்து, குழைந்து பேசாதீர்கள்.

காலை தட்டி, தட்டி நடக்கும் பொது ஆண்களுடைய உள்ளத்தில் தப்பான சலனம் ஏற்ப்பட்டு விடலாம். இன்று பெண்கள் உயரமான ஹீல்ஸ் போன்ற பாதணிகளை அணிந்து நடக்கும் போது அந்த பாதணியின் சப்தத்தின் மூலம் ஆண்களின் உள்ளத்தில் ஷைத்தான் தீய எண்ணத்தை விதைக்கிறான். இப்படி ஏற்ப்பட்டு விடக் கூடாது என்பதற்காக தான் நீங்கள் நடக்கும் போது காலை தட்டி, தட்டி நடக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

பெண்கள் சாதாரணமாக பேசினாலே ஆண்களின் உள்ளத்தில் தப்பான எண்ணம் வந்து விடுகிறது. அதே நேரம் சற்று குழைந்து பேசினால் விபரீதம் முத்தி விடும் எனவே தான் பெண்கள் பேச்சிலும் அடக்கமாக இருக்க வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

பெண்கள் அணியும் ஆடை விடயதிலும் இப்படி தான் அணிய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கிறது. இஸ்லாம் காட்டிய வழிக்கு மாற்றமாக பெண்கள் ஆடை அணிந்தால் அவர்களை ஆண்களுக்கு ஷைத்தான் வித்தியாசமாக எடுத்து் காட்டி விபரீதங்கள் நடந்து விடலாம்.

பெண்கள் பிற ஆண்களுடன் கைலாகு செய்வது?
இன்று இது சர்வ சாதாரணமாக தலை விரித்தாடுகிறது. தான் வேலைப் செய்யும் இடத்தில் ஆண்களை கண்டவுடன் பெண்களும்,பெண்களை கண்டவுடன் ஆண்களும் மாறி,மாறி கை குலுக்கிக் கொள்கிறார்கள்?

விசேச தினங்களில் மாறி, மாறி கை கொடுத்துக் கொள்கிறார்கள்?

சிறப்பு நிகழ்ச்சியின் போது மேடையில் வைத்து கை குலுக்கிக் கொள்கிறார்கள்?

பெண்கள் பகுதிக்கு போக வேண்டாம், பார்வையை தாழ்திக் கொள்ளுங்கள் என்று சொல்லக் கூடிய மார்க்த்தில் இருந்து கொண்டு, மார்க்கத்திற்கு முரணாக பெண்களுடன் ஆண்களும், ஆண்களுடன் பெண்களும் மாறி,மாறி கை குலுக்கிக் கொள்கிறார்கள்? இது ஹராம் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

நபியவர்கள் ஆண்களிடத்திலும், பெண்களிடத்திலும் பைஅத் வாங்கியுள்ளார்கள். ஆண்களிடத்தில் கையைப் பிடித்து பைஅத் செய்துள்ளார்கள். ஆனால் பெண்களிடத்தில் கையைப் பிடிக்காமல் பைஅத் வாங்கியுள்ளார்கள்.

நபியவர்கள் எந்தப் பெண்ணுடைய கையையும் தொட்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்று தாராளமாக மனம் விரும்பி பாடசாலைகளிலும் வேலை செய்யும் இடங்களிலும், விசேச தினங்களிலு்ம், மேடைகளிலும் மாறி, மாறி கை கொடுத்து இஸ்லாத்தை இப்படிப் பட்டவர்கள் கேவலப் படுத்துகிறார்கள்.

சிலா் இதனுடைய விபரீதத்தை புரிந்து கொள்ளாமல்,இப்படி தவறு செய்பவர்களை காப்பாற்றுவதற்கும், மேலும், மேலும் அப்படியான பாவத்தை செய்வதற்கு துாண்டுகோலாக செயல் பட்டுவருகிறார்கள். இவர்கள் மார்க்க அறிவின்றி பின் வரும் காரணங்களை முன் வைக்கிறார்கள். அதாவது சுகமில்லாமல் டாக்டரிடம் போனால் டாக்டர் தொட்டு பாரத்து தானே நோய் விசாரிக்கிறார்? பிள்ளை பெற்றெடுக்க அதிகமாக அந்நிய ஆண்களிடம் தானே ஆஸ்பத்திரிக்கு செல்கிறார்கள்? பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது ஆண்களும், பெண்களும் இரண்டரக் கலந்து தானே பயணம் செய்கிறார்கள். அது எல்லாம் தப்பாக தெரியவில்லை? இப்படி கை கொடுப்பது மட்டும் எப்படி தப்பாகும் என்று தான் செய்யும் தவறை அல்லது தனது அன்புக்குரியவர் செய்யும் தவறை நியாயம் கற்பிக்க முற்ப்படுகிறார்?

இன்னும் சிலர் தவறுகளை மறைக்க வேண்டும் எனவே இப்படியான தவறுகளை பகிரங்கப் படுத்தக் கூடாது என்று ஓரிரு குர்ஆன் வசனங்களை தப்பாக எடுத்துக்காட்டுகிறார்கள்? இதுவும் இவர்களின் மார்க்க அறிவின்மையை எடுத்துக்காட்டுகிறது? தனிப்பட்ட ஒரு மனிதனின் தவறுகளை தான் இஸ்லாம் மறைக்க சொல்கிறது, இது மார்க்கத்தின் பெயரால் பகிரங்கமாக செய்யக் கூடிய பாவம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இதை மக்களுக்கு பகிரங்கமாக தான் எடுத்துக்காட்ட வேண்டும்.

மாறி, மாறி கை கொடுக்கலாம் என்றால் தனது மகள், மனைவி பிற ஆண்களுடன் கை குலுக்குவதை விரும்புவார்களா? தனக்கு ஒரு சட்டம் பிறருக்க ஒரு சட்டமா? அப்படி பார்த்தால் உலகில் இப்படி நொண்டிச் சாக்குகளை கூறி எந்த பாவத்தையும் துணிந்து செய்யலாம் என்று வரும்.? மார்க்கத்தில் எல்லை மீறுபவர்கள் நாசமாகட்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

தனக்காக அல்லது தனது நேசருக்காக மார்க்கத்தை தப்பாக பயன்படுத்தக் கூடாது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். எவர் தவறு செய்தாலும் அது இஸ்லாத்தின் பார்வையில் தவறாக இருப்பின் அந்த தவறை சுட்டிக்காட்டதான் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *