Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » மரணம் அழைக்கிறது..

மரணம் அழைக்கிறது..

இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா அல்லாஹ்! மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு! ஏற்கனவே நாம் குப்ரில் இருந்தோம். நாம் இனி இஸ்லாத்தில் இருப்போம். ஏற்கனவே பாவங்கள் செய்தோம். இனி நன்மை செய்வோம்! நல்லடியார்களாக உன்னை சந்திப்போம். ஒரு சந்தர்ப்பம் தா!’ என மன்றாடுவர். இது குறித்து அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் பதில் குறித்தும் பின்வரும் வசனம் பேசுகின்றது.

”எங்கள் இரட்சகனே! எங்களை வெளியேற்றி விடு. நாங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் போலல்லாது நல்லறமே புரிவோம்’ என அதில் அவர்கள் கதறுவார்கள். உபதேசம் பெறுபவர் அதில் உபதேசம் பெறும் அளவுக்கு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளிக்கவில்லையா? எச்சரிப்பவர் உங்களிடம் வந்தே இருந்தார். எனவே, (வேதனையைச்) சுவையுங்கள். அநியாயக்காரர்களுக்கு எந்த உதவியாளனும் இல்லை (என்று கூறப்படும்.)’ (35:37)

சிந்திக்கக் கூடியவர் சிந்திக்கக் கூடிய அளவுக்கு உங்களுக்கு நாம் கால அவகாசத்தை அளிக்கவில்லையா? 40 வருடங்கள், 50 வருடங்கள் உங்களை நாங்கள் வாழ வைக்கவில்லையா? இந்த அவகாசம் உங்களுக்கு சிந்திப்பதற்கும் சீர்திருந்துவதற்கும் போதாதா? என அல்லாஹ் கேட்பான்.

உங்களிடம் எச்சரிக்கை செய்யக் கூடிய எச்சரிக்கை வரவில்லையா? என அல்லாஹ் கேட்பான்.

உங்கள் உரோமங்கள் நரைக்க ஆரம்பிக்கும் போதே உங்களுக்கு மரணம் நெருங்குவது விளங்கவில்லையா?
பற்கள் விழுந்து கன்னத்தில் குழி விழும் போது, நாடி நரம்புகள் அடங்கி ஒடுங்கிச் செல்லும் போது மரணத்தின் நினைவு உங்களுக்கு வரவில்லையா?

உங்கள் உடல் பலமிழந்து கண்கள் பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் போது, முதுகு கூனி வரும் போது உங்களுக்கு மரணம் நெருங்குவது புரியவில்லையா?

உங்களுடன் கூட இருந்தவர்கள், கூடப் படித்தவர்கள், பழகியவர்கள், ஒன்றாகத் தொழில் செய்தவர்கள், உறவினர்கள்… என ஒவ்வொருவராக மரணத்தைத் தழுவும் போதாவது அடுத்தது நானாக இருப்பேனோ என்ற எண்ணம் எழவில்லையா?

மரணத்திற்கு வயது, எல்லை என்பன இல்லை. இருப்பினும், முதியவர்களுக்கு இயல்பிலேயே நாம் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம், வீடு போ.. போ… என்கின்றது. காடு வா… வா… என்கின்றது எனப் புரிந்து கொள்வது இலகுவானதாகும்.

மரணத்தை நினைவூட்டக் கூடிய இத்தனை அடையாளங்களைக் கண்ட பிறகும் மரணத்தை மறந்து, மறுமையை மறந்து வாழ்பவர்களின் இறுதி முடிவு இழிவானதே!

இத்தகையவர்கள் நாளை மறுமையில் கத்திக் கதறுவார்கள். அவர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படமாட்டாது. இதைத்தான் இந்த வசனத்தின் இறுதிப் பகுதி கூறுகின்றது.

அனுபவியுங்கள! அநியாயக்காரர்களுக்கு இங்கு எந்த உதவியாளர்களும் இல்லை என்று அல்லாஹ் கூறுவான்.

இந்த இழிவான இறுதி நிலை ஏற்படக் கூடாதென்றால் மரண சிந்தனையுடன் நாம் வாழ வேண்டியுள்ளது.

எம்மை ரமழான் அண்மித்துள்ளது. இந்த ரமழான் மூலமாவது எம்மை நாம் மாற்றிக் கொள்ள முயற்சி செய்வோம். எமது வாழ்க்கை யோட்டத்தின் திசையை மாற்றுவோம். சத்திய பாதையில் இஸ்லாமிய நெறியுடன் பயணிக்க உறுதி பூணுவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *