Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 02 – Part 1)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 02 – Part 1)

Magic Series – Episode 02 – Part 1:

சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்:

வாதம் 1: சூனியத்தை உண்மையென்று நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டானா?

பாகம் 1:

சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், தமக்கு சார்பாகப் பல பல குர்ஆன் வசனங்களை ஆதாரமாகக் காட்டுவதுண்டு. ஆனால், அந்த வசங்கள் எதுவுமே அவர்கள் வாதங்களை நிறுவக் கூடிய நேரடி ஆதாரங்கள் கிடையாது. அவற்றைச் சொல்லுக்குச் சொல் நேரடி மொழியாக்கம் செய்தால், அவர்களின் வாதங்களுக்கு சார்பான எதுவுமே இருக்காது. இதை அவர்களும் உள்ளூற உணரத்தான் செய்கிறார்கள். உணர்ந்ததால் தான், இந்த வசனங்களை சொல்லுக்குச் சொல் நேரடி மொழியாக்கம் செய்யாமல், சுற்றி வளைத்துப் புதுப்புது வியாக்கியானங்கள் மூலம் மனோ இச்சை மொழியாக்கம் செய்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒவ்வொரு தடவையும் இவர்கள் இந்தக் குர்ஆன் வசனங்களுக்குக் கொடுக்கும் வியாக்கியானங்கள் தவறானது என்பதைக் கொஞ்ச நாட்களில் அவர்களே உணர்கிறார்கள். உணர்ந்தவுடன், வியாக்கியானத்தைக் கொஞ்சம் மாற்றியமைப்பார்கள். மீண்டும் கொஞ்ச நாட்களில் அதிலும் சில ஓட்டைகள் தெரிய ஆரம்பிக்கும். மறுபடியும் வியாக்கியானத்தை மாற்றுவார்கள். இப்படிக் காலத்துக்குக் காலம் தேவைக்கேற்ப, தமது வியாக்கியானங்களில் இருக்கும் ஓட்டைகளை ஒட்டி ஒட்டி மறைக்கப் பார்க்கிறார்கள். என்ன தான் ஒட்டி மறைத்தாலும், சத்தியம் அதையெல்லாம் கிழித்துக் கொண்டு வெளியில் வரத்தான் செய்யும். இதற்கு ஓர் நடைமுறை உதாரணம் தான், சகோதரர் பீஜேயின் குர்ஆன் தர்ஜுமா. இதுவரை எத்தனையோ மாற்றங்களை அது சந்தித்து விட்டது. இன்னும் எத்தனை மாற்றங்கள் வர இருக்கின்றனவோ? அல்லாஹ்வே அறிவான்.

சூனியத்தை மறுப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் குர்ஆன் ஆதாரங்களின் லட்சனம் இது தான். எதுவுமே நேரடி ஆதாரம் கிடையாது. இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு “சூனியம் என்பது சுத்தப் பொய். சூனியத்தால் எதுவுமே செய்ய முடியாது. சூனியத்துக்குத் தாக்கம் இருக்கிறதென்று நம்பியவன் முஷ்ரிக்” என்று நாக்கூசாமல் மக்கள் மத்தியில் பிரச்சாரம் பன்னப் போனால், அது எடுபடுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. “சூனியத்தை நம்பியவன் முஷ்ரிக் என்ற ஃபத்வாவை எங்கிருந்து எடுத்தீர்கள்?” என்ற கேள்வியைப் பலரும் இவர்களிடம் கேட்க வாய்ப்பிருக்கிறது.

இவர்கள் வாதத்தில் இருக்கும் ஒரு பெரிய குறைபாடு இது. எனவே, இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்துகொள்வதற்கு இவர்களுக்கு நேரடியான ஒரு ஆதாரமாவது தேவை. அப்படியோர் ஆதாரம் கிடைக்குமா என்று தேடித் தேடி அலைந்து, இறுதியில் ஒரு ஹதீஸைக் கண்டெடுத்துக் கொண்டார்கள். “சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டான்” என்ற வாசகத்தைக் கொண்ட ஹதீஸ் தான் அது. இவர்களது வாதங்களில் இருக்கும் குறைபாடுகள் அனைத்தையும் இந்த ஒரு ஹதீஸை வைத்தே தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு இந்த ஹதீஸைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.

இந்த ஹதீஸ் மூலம் இவர்கள் வாதம் முழுமை பெற்று விட்டது. மக்கள் மத்தியில் சூனியத்தை மறுத்துப் பிரச்சாரம் செய்யும் போதெல்லாம், தவறான வியாக்கியானம் கொடுக்கப்பட்ட குர்ஆன் வசனங்களை ஆதாரம் காட்டுவார்கள். இந்தக் குர்ஆன் வசனங்களை வைத்து இவர்கள் செய்யும் பித்தலாட்டத்தை உரித்துக் காட்டும் நோக்கில் விவரம் தெரிந்த யாராவது முன்வந்தால், அவர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் கேடயமாக இந்த ஹதீஸை உபயோகித்துக் கொள்வார்கள். இந்த இரண்டும் தான் இவர்களது தந்திரோபாயம். இந்த இரண்டையும் மாற்றி மாற்றி உபயோகிப்பதன் மூலம் தான் இவர்களது வாதமே பிழைத்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக சூனியத்தை மறுப்பதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களுக்கெல்லாம் முத்தாய்ப்பான ஆதாரமாக இவர்களிடம் இருப்பது இந்த ஒரு ஹதீஸ் தான். இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இந்த ஒரு ஹதீஸ் தான் இவர்களது “பிரம்மாஸ்திரம்” போன்ற கடைசி ஆயுதம். ஆகவே, இந்த பிரம்மாஸ்திரத்தையே நான் முதலில் குறிவைக்கிறேன். ஏனெனில், இந்த ஹதீஸ் மூலம் நடக்கும் பித்தலாட்டங்களை முதல் சுற்றிலேயே தோலுரித்துக் காட்டி விட்டால், இவர்களது சூனியக் கட்டடத்தின் பாதி தன்னால் சரிந்து விடும். பிறகு மிச்சமிருக்கும் பித்தலாட்டங்களை ஒவ்வொன்றாகத் தகர்ப்பது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. இன் ஷா அல்லாஹ் அவற்றையும் இனிவரும் தொடர்களில் தகர்க்கலாம்.

முதலில் இந்த ஹதீஸின் வாசகத்தை அவர்களது மொழியாக்கத்தின் வடிவில் பார்த்து விடுவோம்:

விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். 
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26212)

இந்த ஹதீஸில் இருக்கும் “சூனியத்தை உண்மையென்று நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டான்” என்ற ஒரு வாசகத்தை வைத்துக் கொண்டு தான் இவர்களது மொத்தப் பித்தலாட்டங்களும் அரங்கேற்றப் படுகின்றன.

இனி இந்த ஹதீஸின் உண்மை நிலை என்னவென்பதைப் பார்க்கலாம்:

இந்த ஹதீஸின் சரியான அரபு வாசகத்தைக் கவனித்தாலே முதலாவது பித்தலாட்டம் புரிந்து விடும். “சூனியத்தை உண்மையென்று நம்புபவன்” என்ற வாசகம் அரபு மூலத்தில் இல்லை; மாறாக “சூனியத்தை நம்பியவன்” என்று தான் இருக்கிறது. இடையில் “உண்மையென்று” என்ற ஒரு சொல்லைத் திட்டமிட்டு மேலதிகமாக மொழியாக்கத்தில் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஒரு சொல்லை மேலதிகமாக சேர்த்ததன் மூலம், ஹதீஸின் கருத்தையே மாற்றி விட்டார்கள். அது என்னவென்பதை இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்க்கலாம்.

முதலில் இந்த ஹதீஸின் தரம் என்னவென்பதைத் தெரிந்து கொள்வோம். இந்த ஹதீஸின் தரம் பற்றி சகோதரர் பீஜே என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்; அதன் பிறகு நமது கருத்துக்கு வருவோம்:

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற தனது நூலில் பீஜே கூறுவதை நன்றாகக் கவனியுங்கள்:

இந்த ஹதீஸ் வேறு சில வழிகளில் வருகின்றது. அந்தச் செய்திகளெல்லாம் பலவீனமானவை. ஆனால் முஸ்னத் அஹ்மதில் (26212) பதிவு செய்யப்பட்ட மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது.

அடுத்து சுலைமான் பின் உத்பா என்ற அறிவிப்பாளரும் பலவீனமானவர் என்று இந்த ஹதீஸை மறுப்பவர்கள் கூறித் திரிகிறார்கள். ஆனால் இவர் பலவீனமானவர் அல்ல என்பதே உண்மை.

இவர் நம்பகமானவர் என்று பலா் நற்சான்று அறிவித்துள்ளனா். துஹைம், அபூ ஹாதிம், அபூசுா்ஆ, ஹைஸம் பின் காரிஜா, ஹிசாம் பின் அம்மார், இப்னு ஹிப்பான், இப்னுஹஜா், தஹபீ ஆகியோர் நம்பகமானவர் எனக் கூறியுள்ளனா்.

இமாம் யஹ்யா பின் மயீன் மட்டுமே இவரைக் குறை கூறியுள்ளார். அந்தக் குறை காரணம் இல்லாமல் உள்ளது. பலருக்கு மாற்றமாக இவர் ஒருவர் மட்டும் காரணம் கூறாமல் பொத்தாம் பொதுவாகக் குறை சொன்னால் அந்தக் குறை ஹதீஸ் கலையில் நிராகரிக்கப்பட்டு விடும்.

மேலே இருப்பவை சகோதரர் பீஜேயின் வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நான் ஒருசில வாதங்களை முன்வைக்கிறேன்:

இந்த ஹதீஸ் ஏற்கனவே சிலரால் விமர்சிக்கப் பட்ட ஒரு ஹதீஸ் என்ற உண்மையை மூடி மறைப்பதற்கு சகோதரர் பீஜே இங்கு முயற்சிக்கிறார். யஹ்யா பின் மயீன் என்ற ஒரேயொரு அறிஞரைத் தவிர வேறு யாருமே சுலைமான் பின் உத்பா என்ற அறிவிப்பாளரைக் குறை கூறவில்லை என்று கூறுகிறார். இதன் மூலம் சுலைமான் பின் உத்பா என்பவர் மிகவும் உறுதியான, பக்காவான அறிவிப்பாளர் என்ற கருத்தை அவர் மக்கள் மனதில் பதிய வைக்க முயற்சிக்கிறார்.

மேலும், யஹ்யா பின் மயீன் மட்டுமே ஸுலைமான் பின் உத்பாவை ஏதோ, போகிற போக்கில் காரணமில்லாமல் விமர்சித்தார் என்று கூறுவதன் மூலமும் சுலைமான் பின் உத்பா என்ற அறிவிப்பாளர் எந்த விமர்சனத்துக்கும் உள்ளாகாத நம்பகமான அறிவிப்பாளர் என்ற கருத்தையும் விதைக்க முயற்சிக்கிறார்.

இங்கு கவனிக்க வேண்டிய விசயம், சுலைமான் பின் உத்பாவைப் பற்றி யஹ்யா பின் மயீன் என்ன விமர்சனம் செய்தார் என்பதைச் சொல்லாமல் சகோதரர் பீஜே மழுப்பி விடுகிறார். அது என்னவென்பதை சற்று நேரத்தில் பார்க்கலாம்.

மேலும், இந்த மழுப்பலை மூடிமறைக்கும் விதமாக, உடனே இன்னொரு நியாயத்துக்குத் தாவி விடுகிறார். “அனேகமானோருக்கு முரணாக ஒருவர் மட்டும் விமர்சித்தால், அவரது விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை”என்ற விதி ஹதீஸ் கலையில் இருப்பதனால், யஹ்யாவின் விமர்சனத்தைக் கண்டுகொள்ளத் தேவையில்லை என்கிறார். இறுதியில், “ஆகவே இந்த ஹதீஸ் ஸஹீஹ் ஆனது” என்ற கருத்தைப் பதியவைத்து முடிக்கிறார்.

வாசகர்கள் சிந்திக்க வேண்டும். உண்மையில் சகோதரர் பீஜே தனது வாதத்தில் நேர்மையானவராக இருந்தால், யஹ்யாவின் விமர்சனம் என்னவென்பதைக் கூறியிருக்க வேண்டும். ஆனால், கூறவில்லை. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு, இனி இந்த ஹதீஸ் பற்றிய நமது கண்ணோட்டத்துக்கு வருவோம்:

சூனியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையும், அதற்கு சில தாக்கங்கள் இருக்கின்றன என்பதையும் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல் பச்சையாக நிரூபிக்கக் கூடிய மார்க்க ஆதாரங்களுள் ஒன்று தான், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக சொல்லும் செய்தி. ஸஹீஹ் புகாரி, மற்றும் முஸ்லிம் ஆகிய இரண்டிலும் மட்டும் மொத்தம் 8 அறிவிப்புகளாக இந்தச் செய்தி பதிவாகியிருக்கிறது. இந்த 8 ஹதீஸ்களும் எந்தவிதமான விமர்சனங்களுக்கும் உள்ளாகாத ஆதாரபூர்வமான ஹதீஸ்கள். இவை நம்பகத்தன்மையிலும் உச்ச கட்டத்தில் இருக்கக் கூடிவை.

இந்த அளவுக்கு சுத்தமான தரத்தில் இருக்கும் 8 ஹதீஸ்களையும் ஒருவர், வேறோர் ஆதாரத்துக்கு முரணாக இருக்கின்றதென்று கூறி நிராகரிப்பதாக இருந்தால், அந்த ஆதாரம், இந்த 8 ஹதீஸ்களையும் விட மிகவும் உச்ச தரத்தில் இருக்க வேண்டும்; எண்ணிக்கையிலும் அதிகமக இருக்க வேண்டும். குறைந்த பட்சம், “சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டான்” என்ற வாசகத்தைக் கொண்ட இந்த ஹதீஸின் தரமாவது, புகாரி / முஸ்லிம் ஹதீஸ்களையெல்லாம் விட அதியுயர் தரத்தில் ஆதாரபூர்வமானதாக இருக்க வேண்டும். இது தானே நீதி? இது தானே நியாயம்? இது தானே ஹதீஸ் கலை விதி?

ஆனால், உண்மை என்ன தெரியுமா? இந்த நியாயத்துக்கு முற்றிலும் மாற்றமாகவே ஹதீஸ் மறுப்பாளர்கள் இங்கு நடந்து கொள்கிறார்கள்.

அந்தப் பித்தலாட்டம் என்னவென்பதை இன்ஷா அல்லாஹ் இதன் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *