Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 03)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 03)

Magic Series – Episode 03:

சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்:

சூனியத்தை உண்மையென்று நம்புகிறவன் அநியாயக் காரனா?

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட சம்பவத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்கள், அந்தச் சம்பவம் குர்ஆனுக்கும், மற்றும், ஆதாரபூர்வமான வேறு ஹதீஸுக்கும் முரண்படுகிறது என்று சொல்லி3த் தான் மறுப்பதுண்டு.

இதை நிரூபிக்க இவர்கள் பிரதானமாக இரண்டு ஆதாரங்களைக் காட்டுவார்கள். ஒன்று, நாம் சென்ற தொடரில் பார்த்த, “சூனியத்தை நம்பியவன் சுவர்க்கம் புக மாட்டான்” என்ற ஹதீஸ்.

இந்த ஹதிஸ் மூலம் இவர்கள் செய்துகொண்டிருக்கும் பித்தலாட்டங்கள் என்னென்னவென்பதை அந்தத் தொடரிலேயே தோலுரித்துக் காட்டி விட்டோம். ஆக, இவர்களது இரண்டு ஆதாரங்களில் ஒன்றைத் தகர்த்து விட்டோம். மிச்சமிருக்கும் இன்னோர் ஆதாரத்தை இன் ஷா அல்லாஹ் இந்தத் தொடரில் நோக்குவோம்.

இது தான் அந்த ஆதாரம்:

“சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், உம்மிடம் அவர்கள் செவியேற்றபோது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

“உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்” என்று கவனிப்பீராக! இதனால் அவர்கள் வழிகெட்டனர். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது. (17:47,48)

இந்தக் குர்ஆன் வசனங்கள் மூலம் ஹதீஸ் மறுப்பாளர்கள் பின்வரும் வாதத்தை முன்வைப்பார்கள்:

இந்த வசனத்தில் “மஸ்ஹூர்” என்ற அரபுச் சொல் வழங்கப் பட்டிருக்கிறது. “மஸ்ஹூர்” என்பதன் அர்த்தம் சூனியம் செய்யப்பட்டவர் என்பது தான். இந்த வசனங்களில் “நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர்” என்று யார் கூறினாலும், அவர் அநீதி இழைத்தவர் ஆவார் என்றும், வழிகெட்டவர் ஆகிவிடுவார் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அதாவது, நேர்வழியில் இருக்கக் கூடிய, நீதியான, உண்மை சொல்லக் கூடிய மக்கள் ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதர் என்று சொல்லவே மாட்டார்கள்; பொய்யர்கள் தான் நபி (ஸல்) அவர்கள் சூனியத்தால் பாதிக்கப் பட்டவர் என்று சொல்வார்கள் என்பது தான் இதன் பொருள்.

அதாவது, நபி (ஸல்) அவர்களுக்கு ஒருபோதும் சூனியம் செய்யப்படவில்லை என்பது தான் உண்மை. இதைத் தான் இந்தக் குர்ஆன் வசனங்கள் மறைமுகமாகக் கூறுகின்றன.

இந்த வசனங்கள் நபி (ஸல்) அவர்கள் சூனியம் செய்யப்பட்டவர் அல்ல என்று ஆணித்தரமாகக் கூறுகிறது. நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக கூறும் ஹதீஸ்கள் இந்த வசனத்துக்கு முரண்படுகிறது. எனவே, அந்த ஹதீஸ்கள் எவ்வளவு நம்பகமானதாக இருந்தாலும், குர்ஆனுக்கு முரண்படுவதால் நிராகரிக்கிறோம்.

மிகவும் கஷ்டப்பட்டு, சுற்றி வளைத்துப் பல வியாக்கியானங்களை இந்த வசனத்துக்குக் கொடுப்பதன் மூலம் ஹதீஸ் மறுப்பாளர்கள் முன்வைக்கும் வாதம் இது தான்.

இனி இந்த வாதத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்:

எனது பதில்:
இந்த வாதம் பக்கசார்பானது; மனோ இச்சையின் அடிப்படையிலானது; குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட வாதம் அல்ல இது.

இங்கு நபி (ஸல்) அவர்களை “மஸ்ஹூர்” என்று காபிர்கள் அபாண்டம் சுமத்தியது, நபியவர்கள் சூனியம் வைக்கப்பட்டவர் என்ற அர்த்தத்தில் அல்ல. இதை இந்தக் குர்ஆன் வசனங்களே உறுதிப்படுத்துகின்றன. “உம்மிடம் அவர்கள் எதைச் செவியேற்றார்களோ,” என்று இங்கு அல்லாஹ் குறிப்பிடுவது குர்ஆனைத் தான்.

அதாவது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டிய போது, அதை செவிமடுத்துக் கொண்டிருந்த காஃபிர்கள் இரகசியமாக சொன்ன அவதூறைப் பற்றித் தான் அல்லாஹ் இங்கு கூறுகிறான்.

நபியவர்கள் ஓதிய குர்ஆன் வசனங்களை காஃபிர்கள் செவியேற்று விட்டு, பிறகு இரகசியமாக மற்றவர்களிடம் “இவர் ஓதக்கூடிய இந்த வசனங்கள் உங்கள் மனதை ஈர்த்து, வசியம் செய்யும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. உங்கள் மனதை இது ஈர்க்கின்றது என்பதை வைத்து இதை இறைவேதம் என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள். இது இறைவேதமல்ல; உண்மையில் இது ஒரு வழிகேடு. இதன் வசியத்தில் மயங்கிக் கவரப்பட்டு, இந்த முஹம்மத் வழிதவறி விட்டார். வழிதவறிய ஒரு மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள்” என்பதைத் தான் காஃபிர்கள் இவ்வாறு கூறினார்கள்.

“மஸ்ஹூர்” என்ற வார்த்தைப் பிரயோகம் மூலம் காஃபிர்கள் இந்தக் கருத்தைத் தான் கூறினார்கள் என்பதை அடுத்த வசனமே (வசனம் 48) உறுதிப்படுத்துகிறது:

“உமக்கு எவ்வாறு அவர்கள் உதாரணம் காட்டுகிறார்கள்” என்று கவனிப்பீராக!
இதனால் அவர்கள் வழிகெட்டனர். அவர்கள் நேர்வழியை அடைய இயலாது.

இந்த வசனத்தை உற்றுப் பார்த்தாலே விஷயம் விளங்கி விடும். 47வது வசனத்தில் காஃபிர்கள் எந்த அவதூறை நபி மீது சுமத்தினார்களோ, அந்த அவதூறையே அல்லாஹ் அவர்கள் விசயத்தில் உண்மையாக்கி, 48வது வசனத்தில் அவர்கள் மீதே அதை சாபமாகத் திருப்பி விடுகிறான். “இதனால் அவர்கள் வழிகெட்டனர்” என்பதன் அர்த்தம் இது தான்.

அதாவது நபி (ஸல்) அவர்களை வழிதவறியவர் என்றும், அவர் ஓதிய குர்ஆனை வழிகேடு என்றும் காஃபிர்கள் அவதூறு சொன்னதனால், உண்மையில் அவர்கள் தாம் வழிதவறியவர்களாக ஆனார்கள் என்பதைத் தான் அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் இதைக் காஃபிர்கள் சொல்லவுமில்லை; பதிலுக்கு அல்லாஹ் சூனியத்தை இங்கு மறுக்கவுமில்லை.

ஹதீஸ் மறுப்பாளர்களின் கற்பனை வியாக்கியானத்தின் மூலம் மட்டுமே இந்த வசனம் சூனியத்தை மறுப்பது போல் ஒரு போலித் தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தான் உண்மை.

இதை நான் வெறும் அனுமானத்தில் சொல்லவில்லை; எந்த “மஸ்ஹூர்” என்ற பதத்தை வைத்து இந்த வசனத்தை ஹதீஸ் மறுப்பாளர்கள் தங்களுக்கு சார்பாகத் திருப்பப் பார்க்கிறார்களோ, அதே “மஸ்ஹூர்” என்ற பதத்தை வைத்துத் தான் நானும் சொல்கிறேன்.

“மஸ்ஹூர்” என்ற பதத்துக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தம் மட்டும் தான் அகராதியில் இருப்பது போல் ஹதீஸ் மறுப்பாளர்கள் ஒரு மாயையை மக்கள் மத்தியில் விதைக்கப் பார்க்கிறார்கள். இது உண்மையில்லை.

“மஸ்ஹூர்” என்ற சொல்லுக்கு வேறு பல அர்த்தங்களும் இருக்கின்றன. அவற்றையும் கொஞ்சம் பார்த்து விடுவோம். அப்போது தான் இதிலிருக்கும் பித்தலாட்டம் புரியும்.

“ஸ ஹ ர” எனும் அரபுச் சொல்லடியிலிருந்து தான் “ஸிஹ்ர்” / “மஸ்ஹூர்” / “ஸாஹிர்” போன்ற சொற்கள் அனைத்தும் முளைத்திருக்கின்றன. “ஸ ஹ ர” எனும் மூலச் சொல்லுக்கு நேரடி அர்த்தம் “அடர்ந்த இரவின் காரிருள்” என்பது தான். பொதுவாக நள்ளிரவு தாண்டிய பின்னிரவில் தான் அடர்ந்த இருள் மண்டியிருக்கும். இந்த அர்த்தத்தின் அடிப்படையிலேயே நோன்பு நோற்பவர் உணவு உண்ணும் பின்னிரவு நேரத்தைக் குறிக்கும் “ஸஹர்” என்ற சொல் கூட இதே சொல்லடியிலிருந்து முளைத்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதென்றால், பார்வை எனும் புலனை மறைக்கும் அளவுக்கு அடர்ந்த காரிருள் என்பது தான் “ஸ ஹ ர” எனும் மூலச் சொல்லின் பொருள்.

சூனியம் என்பது இருள் சூழ்ந்த ஒரு ஷைத்தானியக் கலை. மேலும், மனிதனது புலன்களை மறைக்கும் தன்மையும் சூனியத்துக்கு இருக்கிறது. இதனால் தான், இதன் இருள் சூழ்ந்த தன்மையையும், புலன்களை மறைக்கும் தன்மையையும் உருவகப்படுத்தும் விதத்தில் “ஸிஹ்ர்” (சூனியம்) / “ஸாஹிர்” (சூனியக்காரன்) / “மஸ்ஹூர்” (சூனியம் செய்யப்பட்டவன்) போன்ற சொற்களெல்லாம் “ஸ ஹ ர” எனும் இதே சொல்லடியிலிருந்து முளைத்திருக்கின்றன.

இந்த மூலச்சொல் பற்றி இவ்வளவு தூரத்துக்கு நான் சொன்னதன் நோக்கம், “மஸ்ஹூர்” என்ற சொல்லின் உள்ளார்ந்த அர்த்தம் “இருள்”, மற்றும் “புலன்களை மறைத்தல்” என்பது தான் என்ற அடிப்படை உண்மையைப் பதிவு செய்யத் தான்.

அரபுகளின் அன்றாட வாழ்வில் “மஸ்ஹூர்” என்ற சொல், அனேகமான சந்தர்ப்பங்களில் சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தில் தான் மேலோட்டமாக வழங்கப் படுவதுண்டு. இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சூனியம் செய்யப்பட்டவர் என்பதற்கு மட்டும் இந்தச் சொல்லை அரபுகள் பயண்படுத்துவதில்லை; “புலன்களை மறைத்தல்” என்ற அடிப்படையில் அமைந்த வேறு பல அர்த்தங்களிலும் இந்தச் சொல் வழங்கப் படுவதுண்டு.

உதாரணத்துக்கு, மதி மயங்கியவர் / சொக்கிப் போனவர் / வசப்படுத்தப் பட்டவர் / வசியம் செய்யப்பட்டவர் / கவரப் பட்டவர் / தன்னிலை மறந்து ஈர்க்கப்பட்டவர் / திசைதிருப்பப் பட்டவர் என்ற அர்த்தங்களும் இதற்கு உண்டு.

இதை நிரூபிக்கும் ஒருசில ஆதாரங்களை இனி பார்க்கலாம்:

ஆதாரம் 1:
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மதீனாவிற்கு) கிழக்கிலிருந்து இரண்டு மனிதர்கள் வந்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ” பேச்சில் சூனியம் (கவர்ச்சி) உள்ளது” என்று சொன்னார்கள்.
நூல்: புகாரி 5146

ஆதாரம் 2:
அப்துல்லாஹ் இப்னு உமர் சொல்ல, ஸைத் இப்னு அஸ்லம் கேட்டு, அவரிடமிருந்து மாலிக் கேட்டு, எனக்கு அறிவித்த செய்தி:
கிழக்கிலிருந்து வந்த இரண்டு மனிதர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். மக்கள் அதில் கவரப்பட்டு, லயித்துப் போயிருந்ததைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள், “சில பேச்சுக்கள் சூனியம்” என்றோ, அல்லது “பேச்சில் சில பகுதிகள் சூனியம்” என்றோ கூறினார்கள்.
நூல்: முவத்தா மாலிக்: பாடம்: 56, ஹதீஸ்: 7

மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு ஆதாரங்களும் ஒரே செய்தியைக் கூறும் இரண்டு ஹதீஸ் பதிவுகள். இந்த இரண்டு ஹதீஸ்களிலும் “ஸிஹ்ர்” என்ற சொல் தான் வழங்கப் பட்டிருக்கின்றது.

இரண்டு பேச்சாளர்கள் மதீனாவுக்கு வந்து சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது, அவர்களது பேச்சின் கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு மக்கள் அதில் லயித்துப் போயிருந்தனர். அதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் “சில பேச்சுக்களில் ‘ஸிஹ்ர்’ உள்ளது” என்று கூறினார்கள். இங்கு நபி (ஸல்) அவர்கள் “ஸிஹ்ர்” என்ற சொல்லை சூனியம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை; மாறாக “புலன்களை வசப்படுத்துதல்” / “கவர்ந்து ஈர்த்தல்” / ”சொக்கிப் போக வைத்தல்” என்ற அர்த்தத்தில் தான் சொன்னார்கள்.

ஆக, “ஸிஹ்ர்” / “மஸ்ஹூர்” என்ற சொற்களுக்கு சூனியம் என்பதைத் தவிர வேறு அர்த்தங்களும் உள்ளன என்பதை இங்கு நிரூபித்து விட்டோம். இனி மீண்டும் நமது குர்ஆன் வசனத்துக்கு வருவோம்.

இந்தக் குர்ஆன் வசனத்தில் “மஸ்ஹூர்” என்ற சொல்லுக்கு, “தன்னிலை மறந்து, வழிதவறிப் போனவர்” என்ற அர்த்தம் தான் சரியானது. அதாவது “குர்ஆனின் அழகான ஓசை நயத்தில் மயங்கிக் கட்டுண்டு, தன்னிலை மறந்து, அதன் மூலம் வழிகேட்டின் பால் திசைதிருப்பப் பட்டவர் / வழிதவறியவர்” என்ற அர்த்தத்தில் தான் இங்கு “மஸ்ஹூர்” என்ற சொல் வழங்கப் பட்டிருக்கிறது. இதற்கான நியாயங்களைப் பட்டியலிடுகிறேன்:

நியாயம் 1:
நபி (ஸல்) அவர்களை “மஸ்ஹூர்” என்று காஃபிர்கள் கூறியதன் அடிப்படை நோக்கமே, அவர் ஓதிக் காட்டிய குர்ஆன் வசனங்களைப் பொய்ப்பிப்பது தான்; நபியின் தனிப்பட்ட உடல், / உள ஆரோக்கியத்தைக் குறை கூறுவது அல்ல. குர்ஆனின் அழகிலும், சத்தியத்திலும் ஈர்க்கப்பட்டு, மக்கள் அதன் பால் நெருங்குவதை அவர்கள் தடுக்க நினைத்தார்கள்.

குர்ஆனின் அழகைக் கஃபிர்களால் பொய்ப்பிக்க முடியவில்லை; காது கொடுத்துக் கேட்கும் எவராலும் அதன் அழகை மறுக்க முடியவில்லை. ஆகவே, குர்ஆனின் அழகை வைத்தே, அதைப் பொய்ப்பிக்க முயன்றார்கள்.

இதனால் தான் அவர்கள் மக்களிடம், “இதன் அழகில் மயங்கி ஏமாந்து விட வேண்டாம்; இது ஒரு வழிகேடு. இதன் அழகில் மதி மயங்கித் (மஸ்ஹூர் ஆகி) தான் முஹம்மத் வழிதவறி விட்டார். நீங்களும் அவரைப் போல் “மஸ்ஹூர்” ஆகி, வழிதவறிவிட வேண்டாம்” என்ற கருத்தில் தான் இதைச் சொன்னார்கள்.

இப்படி அவர்கள் பொய்ப்பிரச்சாரம் செய்ததால் தான், அதற்கு பதிலடியாக அல்லாஹ் 48வது வசனத்தில் “அவர்கள் தான் நிரந்தரமாக வழிதவறி விட்டார்கள்” என்று சபித்துக் கூறுகிறான். அல்லாஹ்வின் இந்த சாபம் நபியவர்களது தனிப்பட்ட ஆரோக்கியத்தில் காஃபிர்கள் குறை கூறினார்கள் என்பதற்காகவல்ல; அவர் ஓதிய குர்ஆன் வசனங்களை வழிகேடு என்றும், அசத்தியம் என்றும் காஃபிர்கள் அபாண்டமாகப் பேசியதற்காகத் தான்.

நியாயம் 2:
மேலே சொன்ன கருத்துக்களை நான் என் சொந்த அபிப்பிராயத்தில் மட்டும் சொல்லவில்லை; இந்தக் கருத்து தான் தப்ஸீர் உல் ஃகாஸின், ஷரஹ் உஸ் ஸுன்னா, தப்ஸீர் அஸ் ஸமஅனி போன்ற பல தப்ஸீர்களிலும் இருக்கின்றது.

நியாயம் 3:
17:47 வது வசனத்தில் “மஸ்ஹூர்” என்ற சொல்லுக்கு மதி மயங்கி வழிதவறியவர் என்ற அர்த்தத்தைத் தான் கொடுப்பது பொருத்தம் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனம் மூலம் இன்னும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தையும் வைத்திருப்பவன் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக!
‘அல்லாஹ்வே’ என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!
– (23:88,89)

இங்கு 89வது வசனத்தில் “துஸ்ஹரூன்” என்ற வசனம் தான் உபயோகிக்கப் பட்டிருக்கிறது. இதுவும் “மஸ்ஹூர்” என்ற சொல் முளைத்த அதே சொல்லடியிலிருந்து முளைத்த சொல் தான். மஸ்ஹூர் என்பதற்கு என்ன அர்த்தமோ, அதே அர்த்தம் தான் துஸ்ஹரூன் என்பதற்கும் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த இடத்தில் இதற்கு எல்லோரும் கொடுக்கும் அர்த்தம் மதி மயக்கப்படுதல் என்பது தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இடத்தில் சகோதரர் பீஜே கூட “துஸ்ஹரூன்” என்ற இந்தச் சொல்லுக்கு சூனியம் செய்யப்படுதல் என்ற அர்த்தத்தில் மொழியாக்கம் செய்யவில்லை; மதி மயக்கப்படுதல் என்ற அர்த்தத்தில் தான் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இந்த இடத்தில் ஸிஹ்ர் உடைய சொல்லுக்கு மதி மயங்கியவர் என்ற அர்த்தத்தைக் கொடுத்திருக்கும் சகோதரர் பீஜே, 17:47 வசனத்தில் மட்டும் இதற்கு மாற்றமாக, சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு எந்த அர்த்தமும் இதற்குக் கொடுக்கவே கூடாது என்பது போல் அநியாயத்துக்கு அடம்பிடிப்பது ஏன்?

அவ்வாறு பிடிவாதமாகப் பொருள் கொடுத்தால் மட்டுமே இவர்களது ஹதீஸ் மறுப்பு வாதங்கள் நிற்கும்; இல்லையென்றால், அவை தவிடுபொடியாகி விடும்.

இன்னோர் ஆதாரத்தைப் பாருங்கள்:

“நீங்களே போடுங்கள்!” என்று (மூஸா) கூறினார். அவர்கள் போட்ட போது மக்களின் கண்களை வசப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (7:116)

இது கூட சகோதரர் பீஜேயின் மொழிபெயர்ப்பு தான். இந்த இடத்தில் கூட அரபு மூலத்தில் “மக்களின் கண்களுக்கு “ஸிஹ்ர்” செய்தார்கள்” என்று தான் இருக்கிறது. இதற்கு மொழியாக்கம் செய்யும் போது சகோதரர் பீஜே, “மக்களின் கண்களுக்கு சூனியம் செய்தார்கள்” என்று மொழிபெயர்க்கவில்லை. மாறாக “மக்களின் கண்களை வசப்படுத்தினார்கள்” என்று தான் மொழிபெயர்த்திருக்கிறார். “ஸிஹ்ர்” / “மஸ்ஹூர்” என்பதற்கு “வசியம்” / “வசியம் செய்யப்பட்டவர்” என்ற அர்த்தம் கூட இருக்கிறது என்பதை சகோதரர் பீஜே கூட அடிமனதில் ஒத்துக் கொள்கிறார் என்பதற்கு, அவரது இந்த மொழியாக்கமே ஆதாரம்.

இதில் வேடிக்கை என்ன தெரியுமா?
சூனியத்துக்கு தாக்கம் இருக்கிறது என்ற கருத்தைத் தரக் கூடிய குர்ஆன் வசனங்களில் எல்லாம் “ஸிஹ்ர்” என்ற சொல்லுக்கு சகோதரர் பீஜே “சூனியம்” என்று மொழியாக்கம் செய்யாமல், நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஏனைய அர்த்தங்களில் நாசூக்காக மொழியாக்கம் செய்கிறார்.

அதாவது “வசியம்”, “மதிமயக்கம்”, “கவர்ச்சி” போன்ற அர்த்தங்களைக் கொடுக்கும் ஏனைய மொழியாக்கங்களைக் கொடுத்திருக்கிறார்.

இதன் மூலம் அந்த வசனங்களில் இருக்கும் “சூனியத்துக்குத் தாக்கம் இருக்கிறது” என்ற உள்ளர்ந்த கருத்தை மக்கள் அவதானித்து விடக் கூடாது என்பதற்காக இவ்வாறான வசனங்களில் “ஸிஹ்ர்” என்பதற்கு சூனியம் என்று மொழியாக்கம் செய்யாமல், ஏனைய அர்த்தங்களில் மொழியாக்கம் செய்கிறார்.

அதே நேரம், “சூனியம் என்பது சுத்தப் பொய்” என்ற தனது புழுகுமூட்டை வாதங்களை நியாயப் படுத்தும் நோக்கில், தனக்கு சாதகமாக அவர் வளைத்தெடுத்து இருக்கும் வசனங்களில் மட்டும், “ஸிஹ்ர்” என்ற சொல்லுக்கு வலுக்கட்டாயமாக “சூனியம்” என்று அழுத்தமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள்:
சகோதரர் பீஜேயின் இன்னொரு பித்தலாட்டம் இது.

ஒரு வாதத்துக்கு “மஸ்ஹூர்” என்ற பதத்துக்கு சூனியம் செய்யப்பட்டவர் என்ற அர்த்தத்தைத் தான் கொடுத்தாலும், அப்போதும் இவர்கள் வாதத்தை நூற்றுக்கு நூறு நிரூபிக்கும் எந்த ஆதாரமும் இந்த வசனங்களில் இல்லை. “இவர் ஓதுவது இறைவேதமல்ல; யாரோ இவருக்கு சூனியம் வைத்து விட்டார்கள்; அதனால் தான் இவர் இப்படி லூஸுத் தனமாக உளறுகிறார்” என்று தான் அப்போதும் அர்த்தம் வரும்.

இந்த அர்த்தத்தைக் கொடுத்தாலும், ஒரு மனிதனை லூஸாக மாற்றும் சக்தி சூனியத்துக்கு இருக்கிறது என்று தான் பொருள்படும். ஆக, இந்த அடிப்படையிலும், நமது வாதமே உண்மையென்பது நிரூபனமாகும்.

ஆகவே, எந்த விதத்தில் இதை நீதியாக மொழியாக்கம் செய்தாலும், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட ஹதீஸ்களை மறுப்பதற்கு இதில் எந்த ஆதாரமும் இல்லை.

உண்மை என்ன தெரியுமா?
காஃபிர்கள் நபியவர்களை “மஸ்ஹூர்” என்று சொன்னது ஒரு சம்பவம்.
நபியவர்களுக்கு யூதன் சூனியம் வைத்தது வேறொரு சம்பவம்.

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரண்டு சம்பவங்கள் இவை.
இரண்டுக்கும் பொதுவாக இருப்பது “ஸஹர” எனும் சொல்லடியிலிருந்து முளைத்த ஒரு சொல் மட்டும் தான். இவ்வளவு தான் ஒற்றுமை. இதைத் தவிர வேறெந்த ஒற்றுமையும் இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையிலும் இல்லை.

இந்த ஒரு சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு, மீதி மொத்தத்தையும் மனோ இச்சையால் நிரப்பி, ஒரு வியாக்கியானத்தை உருவாக்கி, அதன் மூலம் இரண்டு சம்பவத்துக்கும் முடிச்சுப் போட்டு, இல்லாத ஓர் அர்த்தத்தை இவர்கள் கற்பிக்கிறார்களே…. இது பித்தலாட்டம் அல்லாமல் வேறென்ன?

அல்லாஹ்வை இவர்கள் பயந்து கொள்ளட்டும்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *