Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 1)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 1)

Magic Series – Episode 06 – Part 1:

2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்:

பாகம் 1:

சூனியத்தை மறுக்க முயற்சிக்கும் சகோதரர் பீஜே, தனக்கு எதிராக இருக்கும் ஆதாரங்களையெல்லாம் எவ்வாறு பித்தலாட்டங்கள் மூலம் தமக்கு சார்பான ஆதாரங்களைப் போல் மாற்றிக் கொள்வதற்குப் படாத பாடு படுகிறார் என்பதை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த அடிப்படையில் தமது ஹதீஸ் மறுப்புக் கொள்கைக்கு எதிரான சிம்ம சொப்பணமாகத் திகழும் 2:102 வசனத்தை தமக்கு சார்பாக மாற்றிக் கொள்வதற்குப் பல வருடங்களாக அவர் செய்த முயற்சிகளையெல்லாம் சிந்திக்கும் மக்கள் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரது குர்ஆன் மொழிபெயர்ப்பின் ஒவ்வொரு பதிப்பிலும் இந்த வசனத்தின் மொழியாக்கத்தை அப்டேட் செய்வது போல் மாற்றிக் கொண்டே வருகிறார்.

என்ன தான் திறமையைப் பிரயோகித்தாலும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. இந்த ஒரு வசனத்தில் சகோதரர் பீஜே செய்திருக்கும் பித்தலாட்டங்கள் என்னவென்பதைக் கொஞ்சம் விரிவாகவே நோக்கலாம். அப்போது தான் இவர் மார்க்கத்தில் அறிந்தே விளையாடுகிறாரா? அல்லது அறியாமல் தவறு செய்கிறாரா என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

இதை நிரூபிக்க முன், சகோதரர் பீஜே குர்ஆன் வசனங்களில் செய்யும் பித்தலாட்டங்களின் அடிப்படையைப் புரிந்து கொள்ளும் விதமாக ஒரு சிறிய உதாரணத்தை முதலில் பார்ப்போம்:

உதாரணம்:
14:22 வசனத்தில் சகோதரர் பீஜேயின் பித்தலாட்டம்.

இந்த வசனத்துக்கு சகோதரர் பீஜே கொடுத்திருக்கும் மொழியாக்கம் இது தான்:

“அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறிவிட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்! ……………… என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். – (14:22)

இதில், “…..எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை….” எனும் வாசகங்களை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், இங்கு தான் பித்தலாட்டம் ஒளிந்திருக்கிறது.

இனி இதே வசனத்துக்கு ஏனைய குர்ஆன் தர்ஜுமாக்களில் செய்யப்பட்டிருக்கும் மொழியாக்கம் என்னவென்பதையும் பார்த்து விடுவோம். அது இது தான்:

உங்களை அழைத்தேன் என்பதைத் தவிர எனக்கு எந்த அதிகாரமும் இருக்கவில்லை. எனது அழைப்பை ஏற்றீர்கள். எனவே என்னைப் பழிக்காதீர்கள்!….. என்று ஷைத்தான் கூறுவான்.

உண்மையில் இந்த வசனத்துக்குக் கொடுக்கப் பட வேண்டிய சரியான மொழிபெயர்ப்பு இது தான். சரியான இந்த மொழிபெயர்ப்பின் பிரகாரம் இதன் வியாக்கியானம் இப்படித் தான் வரும்:

“முஃமின்கள் விசயத்தில் எனது அதிகாரங்களை, உள்ளத்தில் ஆசைகளைத் தூண்டும் அளவோடு மட்டுப்படுத்தியே அல்லாஹ் வைத்திருந்தான். ஆகவே, உள்ளத்தில் ஆசைகளைத் தூண்டும் இந்த அதிகாரத்தைத் தவிர, ஆரம்பத்தில் எனக்கு உங்கள் மீது வேறெந்த அதிகாரமும் இருக்கவில்லை. இந்த ஓர் அதிகாரத்தை உபயோகித்து, உங்கள் மனதில் ஆசையைத் தூண்டி, எனது வழிகேட்டின் பால் உங்களை அழைத்தேன். எனது அழைப்பை நீங்கள் ஏற்றீர்கள்; ஆசைக்கு அடிமையாகி வழிகேட்டின் பால் திரும்பினீர்கள். இவ்வாறு நீங்கள் செய்ததன் மூலம் உங்கள் மீது அதிகாரம் செலுத்துவதில் அல்லாஹ் எனக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீங்களே தகர்த்தெறிந்து விட்டீர்கள். இதன் மூலம் எனது முழு அதிகாரத்தையும் பிரயோகிப்பதற்கு ஏதுவாக நீங்களே வாசல்களைத் திறந்தும் விட்டீர்கள். இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்; உங்களை மொத்தமாகவே கவிழ்த்து விட்டேன். இதன் விளைவாகவே நீங்கள் இன்று நரகில் கிடக்கிறீர்கள். இதற்காக என்னை மட்டும் நீங்கள் இப்போது திட்டுவதில் பயனில்லை. உங்களையும் சேர்த்து திட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், உங்களது இந்த இழிநிலைக்கு நீங்களும் தான் காரணம்” என்று ஷைத்தான் கூறுவான்.

இந்தக் கருத்தைத் தரும் விதமாகத் தான் ஏனைய தர்ஜுமாக்களில் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆனால், சகோதரர் பீஜே மட்டும் இதற்கு மாற்றமாக வேறொரு மொழியாக்கம் செய்திருக்கிறார்.

இவ்வாறு அவர் செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏனைய தர்ஜுமாக்களில் இருப்பது போல் இதை மொழிபெயர்த்தால், “உள்ளத்தில் ஊசலாட்டம் ஏற்படுத்துவதைத் தவிர ஷைத்தானுக்கு (அல்லது ஜின்களுக்கு) வேறெந்த ஆற்றலும் இல்லை” என்று ஏற்கனவே அவர் முன்வைத்திருக்கும் நாத்திக வாதத்துக்கு இந்த வசனம் அச்சுறுத்தலாக அமைந்து விடும்.

ஆகவே, தனது மொழித் திறமை மூலம் அரபு இலக்கணத்தில் இருக்கும் சலுகைகளையெல்லாம் உபயோகித்து, “உங்கள் உள்ளத்தில் ஆசையைத் தூண்டுவதைத் தவிர எனக்கு வேறெந்த அதிகாரமும் ஒருபோதும் இல்லை” என்ற கருத்தைத் தரும் விதமாக சகோதரர் பீஜே இதை மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வாறு மொழிபெயர்த்தால் தான் அவரது பகுத்தறிவு வாதத்துக்கு இந்த வசனம் அச்சுறுத்தலாக அமையாது.

சகோதரர் பீஜேயின் இந்தச் செயல், தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு அல்ல என்பதை, இந்த மொழியாக்கத்தில் அவர் கையாண்டிருக்கும் நுணுக்கத்தை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. தனது கருத்தை நிலைநாட்டுவதற்காக, அவர் வேண்டுமென்றே இவ்வாறு மாற்றி மொழிபெயர்த்திருக்கிறார். இது தெளிவான பித்தலாட்டம்.

இதே அடிப்படையிலான ஒரு மாபெரும் பித்தலாட்டத்தைத் தான் சூனியம் பற்றிய 2:102 வசனத்துக்கு அவர் கொடுத்திருக்கும் மொழியாக்கத்திலும் அரங்கேற்றியிருக்கிறார். இந்த அடிப்படையை உங்கள் மனதில் பதிய வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தான் மேற்கூறப்பட்ட வசனத்தை உதாரணம் காட்டினேன். இனி 2:102 வசனத்திலிருக்கும் பித்தலாட்டங்களை இதன் 2ம் பாகத்தில் விரிவாகப் பார்ப்போம்:

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *