Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 04)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 04)

Magic Series – Episode 04:

சூனியத்தை மறுப்போரின் வாதங்களும், தக்க பதில்களும்:

வாதம் 3:
சூனியம் என்பது வெறும் பித்தலாட்டமா?

இந்தக் கேள்வியையொட்டிய ஹதீஸ் மறுப்பாளர்களது வாதம் இது தான்:

சூனியம் என்றால், ஒன்றுமே இல்லை என்று தான் அர்த்தம். அது ஒரு சுத்தப் பொய்.
சூனியத்துக்கு எந்தத் தாக்கமும் இல்லை. சூனியம் என்று யார் எதைச் செய்தாலும், அது யாருக்கும் பலிப்பதுமில்லை. ஏனெனில், சூனியம் என்பது சுத்தப் பொய், என்று தான் குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

இந்த வாதத்துக்கு ஆதாரமாக ஹதீஸ் மறுப்பாளர்கள் இன்னொரு குர்ஆன் வசனத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல் இந்த வசனத்துக்கு ஒரு கூமுட்டை விளக்கத்தையும் கொடுத்து, அதன் மூலம், தமது வாதத்தை நிலைநாட்ட இவர்கள் அரும்பாடு படுகிறார்கள். அந்தக் குர்ஆன் வசனத்தை முதலில் பார்த்து விடலாம்:

அந்நாளில் அவர்கள் நரகில் ஒரேயடியாகத் தள்ளப்படுவார்கள்.
நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.
இது சூனியமா? அல்லது (இந்த நரகத்தை) நீங்கள் பார்க்க மாட்டீர்களா?
(52 : 13,14,15)

இனி இந்த வசனத்தை வைத்து இவர்கள் கொடுக்கும் வியாக்கியானம் என்னவென்பதைப் பார்க்கலாம்:

இங்கு பொய் என்பதை அல்லாஹ் சூனியத்தோடு ஒப்பிட்டுக் கூறிக் காட்டுகிறான். அதாவது சுவர்க்கம் / நரகம் எனும் மறுமை வாழ்வை காஃபிர்கள் பொய்யென்று சொன்னார்கள். அப்படியொரு மறு உலகம் இல்லையென்று கூறினார்கள். மறுமையைப் பொய்யென்று அவர்கள் கூறிய போது, அதை சூனியத்துக்கு ஒப்பிட்டுக் காட்டி, “சூனியம் என்பது எவ்வாறான ஒரு பொய்யாக இருக்கிறதோ, அதைப் போலவே மறுமை என்பதும் பொய்” என்று தான் கூறினார்கள்.

இதைத் தான் அல்லாஹ் மறுமையில் கூறிக் காட்டி, “சூனியத்தைப் போல், இந்த நரகத்தையும் பொய்யென்று தான் நீங்கள் நினைத்தீர்களா? இப்போது நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறி நோவினை செய்கிறான்.

இந்த விளக்கத்தின் பிரகாரம், சூனியம் என்பது சுத்தப் பொய் என்பது உறுதியாகிறது.

இனி இதற்கான நமது பதிலைப் பார்க்கலாம்:

இதை விட ஒரு சிறுபிள்ளைத் தனமான வாதத்தை இந்த வசனத்தின் மூலம் உலகில் யாருமே முன்வைக்க முடியாது. இந்த வாதமே நகைப்புக்குரியது. ஏனெனில், இந்த ஆதாரம் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களது வாதத்துக்கு எதிரான ஆதாரம் என்பதைக் கூட அறியாதவர்களாக இதை ஓர் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.

தமக்கு எதிரான ஓர் ஆதாரத்தைத் தமக்கு சார்பானதென்று நினைத்து இவர்களே முன்வைத்ததன் மூலம், உண்மையில் இவர்களாகவே நமக்கு இன்னோர் ஆதாரத்தைத் தந்து உதவி விட்டார்கள். அதற்காக முன்கூட்டியே இவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், “ஜஸாகல்லாஹ்”.

இனி இவர்களது வாதத்தில் இருக்கும் அறியாமை என்னவென்பதைப் பார்க்கலாம்:

இந்த வசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

சூனியம் என்பது எப்படி ஒரு சுத்தப் பொய்யாக இருக்கிறதோ, அது போன்ற ஒரு சுத்தப் பொய் தான் தான் சுவர்க்கம் / நரகம் என்ற கருத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?
அல்லது வேறொரு கருத்தில் சொல்லப் பட்டிருக்கிறதா?

ஹதீஸ் மறுப்பாளர்கள் கொஞ்சம் கண்ணைத் திறந்து மறுபடியும் பார்க்கட்டும்; சூனியத்துக்குத் தாக்கம் இருக்கிறது என்பதற்கு இந்த வசனமே சாட்சி.

சூனியம் பொய்யென்ற கருத்தில் இங்கு காஃபிர்கள் பேசவும் இல்லை; அல்லாஹ் பேசவும் இல்லை. அல்லாஹ்வின் தூதர் கொண்டுவந்த குர்ஆனையும், அது சொல்லும் சுவர்க்கம் / நரகம் சார்ந்த அகீதாவையும் தான் காஃபிர்கள் பொய்யென்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னது இது தான்:
“குர்ஆன் கூறுவது போல் மறுமை விசாரணை, சுவர்க்கம் / நரகம் என்று எதுவும் கிடையாது; அதுவெல்லாம் சுத்தப் பொய்; வெறும் மாயை. இல்லாத ஒரு மறுமை உலகை இருப்பதாகக் குர்ஆன் சித்தரித்துக் காட்டி, மக்களை நம்ப வைத்து விட்டது. சூனியத்தின் மூலம் தான் மனிதர்களது புலன்களை ஏமாற்றி, இல்லாத ஒன்றை இருப்பதாக நம்ப வைக்க முடியும். ஆகவே, கண்டிப்பாக இது (குர்ஆன்) சூனியம் தவிர வேறில்லை.”

இப்படித் தான் காஃபிர்கள் கூறினார்கள்.

இதையும் நான் இஷ்டத்துக்குச் சொல்லவில்லை;
இந்தக் கருத்தில் தான் இது சொல்லப்பட்டது என்பதை இன்னொரு குர்ஆன் வசனம் பின்வருமாறு உறுதிப்படுத்துகிறது:

அவர்களுக்காக வானத்தில் ஒரு வாசலை நாம் திறந்து விட்டு, அதன் வழியாக அவர்கள் மேலேறிச் சென்றாலும், “எங்கள் பார்வைகள் மயக்கப்பட்டு விட்டன. இல்லை நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகி விட்டோம்” என்றே கூறுவார்கள். – (15:14,15)

இந்த வசனத்தின் மூலம் நான் முன்வைத்த விளக்கத்தை அழகாகப் புரியலாம்.

அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறான்; சுவர்க்கம் / நரகம் என்பன இருக்கின்றன; ஏழு வானங்கள் இருக்கின்றன என்பனவற்றையெல்லாம் காஃபிர்கள் கண்களால் கண்ட பிறகாவது நம்புவார்களா என்பதை சோதிக்கும் முகமாக, வானுலகுக்கு அவர்களைக் கூட்டிச் சென்று காட்டினாலும், அப்போதும் அதை அவர்கள் உண்மையென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். “இது எதுவும் உண்மையில்லை..!! எங்கள் கண்களுக்கு இவர்கள் சூனியம் செய்து விட்டார்கள். இல்லாத ஓர் உலகம் இருப்பது போல் எங்கள் கண்களுக்கு மாயத் தோற்றம் தருகிறது” என்றே கூறுவார்கள் என்ற கருத்தில் தான் அல்லாஹ் இதைக் கூறுகிறான்.

இதே அர்த்தத்தில் தான் ஹதீஸ் மறுப்பாளர்கள் ஆதாரம் காட்டும் குர்ஆன் வசனத்திலும் காஃபிர்கள் கூறியதாக அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கூறியதன் மூலம், அவர்கள் மறு உலகைப் பொய்யென்று சொன்னதற்குத் தான், அல்லாஹ் நரகில் வைத்துப் பதிலடி கொடுக்கிறான். “இப்போது சொல்; இல்லாத ஒரு உலகத்தை இருப்பதாக என் வேதத்தில் பொய் சொன்னேனா? இல்லாத ஒன்றை இருப்பது போல் சித்தரிப்பதற்கு என் வேதத்தை என்ன சூனியம் என்று நினைத்தாயா? நன்றாகப் பார்; அனுபவி” என்று சொல்லி அவர்களை அல்லாஹ் வதைப்பான் என்பது தான் இதன் அர்த்தம்.

இப்போது இதை மனதில் வைத்துக் கொண்டு மறுபடியும் அதே குர்ஆன் வசனத்தை வாசித்துப் பாருங்கள். சூனியத்துக்கு நிச்சயமாகத் தாக்கம் உண்டு என்பதை நீங்களே புரிவீர்கள்.

இல்லாத ஒன்றை இருப்பதாக ஒரு மனிதன் நம்பும் அளவுக்கு, சூனியத்தின் மூலம் ஒரு மனிதனது புலன்களில் தாக்கம் செலுத்தலாம். அதாவது, மனித புலன்களை மாற்றியமைக்கும் சக்தி சூனியத்துக்கு உண்டு என்பது தான் இங்கு அல்லாஹ்வின் வார்த்தைகளில் தெளிவாகத் தெரிகிறது.

ஒரு மனிதனது புலன்களில் ஆதிக்கம் செலுத்துவது என்பது, அவன் மீது ஏற்படுத்தப்படும் தாக்கம் இல்லாமல் வேறென்னெ? சூனியத்துக்கு இருக்கும் தாக்கங்களுள் இதுவும் ஒன்று.

ஆகவே, இதன் மூலமும் சூனியத்துக்குத் தாக்கம் இருக்கின்றதென்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது. எந்த ஆதாரம் தமக்குச் சார்பாக இருக்கிறதென்று ஹதீஸ் மறுப்பாளர்கள் நினைத்தார்களோ, அதுவே அவர்களுக்கு எதிராக இருக்கிறது.

இதைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இவர்களது சிந்தனையின் வீரியம் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஷைத்தானின் கைப்பிடிக்குள் யாரெல்லாம் சிக்குகிறார்களோ, அவர்களது சிந்தனைத் திறன் படிப்படியாக மழுங்கிப் போகும்; இதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் ஞானம் படிப்படியாக மறைந்து போகும்.

இது தான் இப்போது ஹதீஸ் மறுப்பாளர்கள் விடயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இனியாவது விழித்துக் கொள்வார்களா? அல்லாஹ்வே அறிந்தவன்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *