Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 3)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 06 – Part 3)

Magic Series – Episode 06 – Part 3:

2:102 குர்ஆன் வசனமும், சூனியம் பற்றிய பித்தலாட்டமும்:

பாகம் 3
(பாகம் 2 இன் தொடர்ச்சி…)

முதலில் 2:102 வசனத்துக்கான சகோதரர் பீஜேயின் மொழியாக்கத்தை மொத்தமாக ஒருமுறை பார்த்துக் கொள்வோம்:

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்.
ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை.
மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை.
பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே (ஏகஇறைவனை) மறுத்தனர்.
“நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.
எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.
அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.
மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள்.
“இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை” என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.
தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

இனி, இந்த வசனத்தை எப்படியெல்லாம் வெட்டிக் கொத்திக், கத்தரித்து, என்னென்ன ஒப்பரேஷன் வேலை எல்லாம் இதில் பார்த்திருக்கிறார் என்பதை ஒவ்வொரு தொகுதியாக அலசுவோம்:

தொகுதி 1:
ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்.

எனது கருத்து:
இது சரியாகத் தான் இருக்கிறது
————————–

தொகுதி 2:
ஸுலைமான் (ஏகஇறைவனை) மறுக்கவில்லை.

எனது கருத்து:
இந்தத் தொகுதியில் மொத்தம் நான்கு தகவல்கள் இருக்க வேண்டும்.
1. ஸுலைமான் காஃபிர் இல்லை.
2. ஷைத்தான்களே காஃபிரானார்கள்.
3. ஷைத்தான்கள் சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
4. பாபில் நகரில் ஹாரூத் மாரூத் என்ற இரு வானவர்களுக்கு ஏதோ ஒன்று அருளப்பட்டது.

இந்த நான்கு தகவல்களில், முதலாவது தகவலை மட்டும் வைத்து விட்டு, மற்ற மூன்று தகவல்களையும் கத்தரித்து, வேறாக எடுத்து, ஒரு பக்கம் வைத்துக் கொண்டார். இந்தக் கத்தரித்த துண்டுகள் மூலம் தான் பின்னால் வரக்கூடிய தொகுதிகளில் தனது திறமையைக் காட்டப் போகிறார். இது முதலாவது பித்தலாட்டம்.
————————

தொகுதி 3:
மேலும் (ஜிப்ரீல், மீகாயீல் எனும்) அவ்விரு வானவர்களுக்கும் (சூனியம்) அருளப்படவில்லை.

எனது கருத்து:
மேலே கத்தரித்து, வேறாக்கிய மூன்று தகவல்கள்களிலும் இருந்து, “பாபில் நகரில் ஹாரூத் மாரூத் என்ற இரு வானவர்களுக்கும் அருளப்பட்டது” என்ற வாக்கியத்தில் இருந்து “இரண்டு வானவர்களுக்கும் அருளப்பட்டது” என்ற ஒரு துண்டை மட்டும் மறுபடியும் தனியாக வெட்டியெடுத்து, அதை இங்கு கொண்டு வந்து, புதிதாக மூன்றாவது ஒரு தொகுதியை / வாக்கியத்தை உருவாக்கியிருக்கிறார்.

ஆனால், இந்தத் தொகுதி இப்போது அரைகுறை வாக்கியமாக இருக்கிறது. அவ்விரு வானவர்களும் யார் என்ற தகவல் இல்லாமல் இங்கு இந்தத் தொகுதி தொக்கி நிற்கும் போது, ஹாரூத் மாரூத் என்ற இரண்டு பெயர்களும் அனாதையாக அங்கு வேறோர் இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அதன் சோகக் கதையைப் பிறகு பார்க்கலாம். இப்போது இருக்கும் பிரச்சினை, இந்த இரண்டு வானர்களுக்கும் இரண்டு பெயர்களைச் சூட்ட வேண்டும். இல்லாவிட்டால், வாக்கியம் முழுமையடையாது.

ஆகவே, சுற்றுமுற்றும் பார்க்கிறார். மேலே நான்கு வசனங்களுக்கு அப்பால் 2:98 வது வசனத்தில் ஜிப்ரீல், மீகாயில் என்ற இரண்டு வானவர்களின் பெயர்கள் லட்டு மாதிரி இருக்கின்றன.

அடித்தது அதிஷ்டம்; ஒரே கவ்வாக அதைக் கவ்வுகிறார். அப்படியே அந்த இரண்டு பெயர்களையும் இழுத்துக் கொண்டு வந்து, இந்தத் தொகுதியில் இருக்கும் இரண்டு வானவர்களோடு பலவந்தமாக சேர்த்துக் கட்டி, தனது புதிய தொகுதியை ஒருவாறு முழுமைப் படுத்தி விடுகிறார்.

பொருத்தமில்லாத இரண்டு ஜோடிகளுக்கு இடையில் இப்படியொரு கட்டாயக் கல்யாணம் பன்னியதன் மூலம் புதிய ஒரு பிரச்சினை முளைத்து விட்டது. இணைக்கப்பட்ட இரண்டு ஜோடிகளும் தமக்கிடையில் ஒத்து வராமல் பிணங்கிக் கொள்ளத் தொடங்கி விட்டன.

அதாவது, புதிதாக இவர் உருவாக்கிய வாக்கியத்தை வாசித்தால், “ஜிப்ரீல், மீகாயில் என்ற அவ்விரு வானவருக்கும் சூனியம் அருளப்பட்டது.” என்று தான் வரும். இது அடுத்த தலையிடி.

ஆகவே, இதற்கு என்ன செய்வது? என்று சுற்றும் முற்றும் பார்த்தார். பக்கத்திலேயே “மா” என்ற இடைச்சொல் இருந்ததைக் கண்டுவிட்டார். “மா” என்ற இடைச்சொல்லை “இல்லை” என்ற அர்த்தத்திலும் மொழியாக்கம் செய்யலாம் என்பதை அரபு மொழி கற்றவர்கள் அறிவர்.

அப்பாடா, இது போதும் என்று பெருமூச்சு விட்டவராக, “மா” வுக்கு இல்லையென்று மொழியாக்கம் செய்தார். இதன் மூலம் இறுதியில் ஒருவாறு தான் எதிர்பார்த்தபடி “ஜிப்ரீல், மீகாயில் என்ற அவ்விரு வானவருக்கும் சூனியம் அருளப்படவில்லை” என்று வெற்றிகரமாகக் தனக்கேற்ற மொழியாக்கத்தைச் செய்து முடித்தார்.

ஆகமொத்தத்தில் இந்த ஒரு தொகுதிக்குள் மட்டும் மூன்று பித்தலாட்டங்கள்.
———————–

தொகுதி 4:
பாபில் நகரத்தில் சூனியத்தை மக்களுக்குக் கற்பித்த ஹாரூத், மாரூத் என்ற ஷைத்தான்களே (ஏகஇறைவனை) மறுத்தனர்.

எனது கருத்து:
ஏற்கனவே ஆரம்பத்தில் வெட்டி எடுத்த மூன்று தகவல்கள் அடங்கியிருந்த துண்டில், இப்போது எஞ்சியிருப்பது… ‘சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்கள்’ என்ற துண்டும், சொந்தம் கொண்டாட யாருமற்ற அனாதைகள் போல் தத்தளிக்கும் ‘ஹாரூத் மாரூத்’ என்ற இரண்டு பெயர்களைக் கொண்ட துண்டும் மட்டுமே.

மிச்சமிருக்கும் இந்த இரண்டுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தினார். ஹாரூத் மாரூத் என்ற இரண்டு பெயர்களையும் கொண்டுவந்து, சூனியத்தைக் கற்றுக் கொடுத்த ஷைத்தான்களோடு கோர்த்தார்.

இதன் பிரகாரம் “பாபில் நகரில் இருந்த ஹாரூத் மாரூத் என்ற ஷைத்தான்களே சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர்” என்று மொழியாக்கமும் செய்தார். இந்தப் பித்தலாட்டத்தையும் வெற்றிகரமாக அரங்கேற்றி விட்டதாகத் தனக்குள் நினைத்துக் கொண்டார். ஆனால், அவருக்கு சறுக்கிய இடம் இது தான்.

அனேகமான உலக மொழிகளில், ஒரு பொருளைக் குறிக்க “ஒருமை” என்றும், ஒன்றுக்கு மேற்பட்டதைக் குறிக்க “பன்மை” என்றும் தான் இலக்கண விதி இருக்கும்.

ஆனால், அரபு மொழிக்கென்று ஒரு சிறப்பு இருக்கிறது. ஒரு பொருளைக் குறிக்க “ஒருமை” என்றும், இரண்டு பொருட்களைக் குறிக்க “இருமை” என்றும், இரண்டுக்கு மேற்பட்டதைக் குறிக்க “பன்மை” என்றும் தான் அரபு மொழியின் இலக்கண விதி இருக்கிறது.

அரபு மொழியில் இருக்கும் இந்த இருமை விதியைத் தான் சகோதரர் பீஜே தனது பித்தலாட்டத்துக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதாவது, இந்தக் குர்ஆன் வசனத்தில் இரண்டு வானவர்களைக் குறிக்க “மலக்கைனி” என்ற இருமைச் சொல் தான் வழங்கப் பட்டுள்ளது.

மலக்கைனி என்பதும் இருமைச் சொல்; ஜிப்ரீல், மீகாயீல் என்பதும் இருமைக்குப் பொருத்தக் கூடிய வகையில் இருக்கும் இரண்டு வானவர்கள்.

ஆகவே, இருமை எனும் இலக்கண விதியின் அடிப்படியில் தான் சகோதரர் பீஜே, இரு வானவர்களுக்கும் என்ற இந்த வசனத்தின் சொற்றொடருக்கும், நான்கு வசனங்களுக்கு அப்பால் இருக்கும் ஜிப்ரீல், மீகாயீல் எனும் இரண்டு வானவர்களுக்கும் இடையில் முடிச்சுப் போட்டார். இதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு வாக்கியத்தை இரண்டாக உடைத்து, அதன் ஒரு பகுதியை வேறொரு வாக்கியத்தின் இன்னொரு பகுதியோடு இணைப்பதற்கு, ஒருவர் இந்த இலக்கண விதியைக் கடைப்பிடித்தால், வாக்கியத்தின் அடுத்த பாதியை, மற்றப் பாதியோடு சேர்க்கும் போது மீண்டும் இதே இருமை விதி குறுக்கிடுமாக இருந்தால், அந்த இடத்திலும் அவர் இதே இருமை விதியைக் கடைப்பிடிப்பதன் மூலம் தான் அந்த வெட்டல் / ஒட்டல் காரியத்தை முழுமைப் படுத்த வேண்டும்.

வாக்கியத்தின் ஒரு பாதியை ஒட்டுவதற்கு மட்டும் இந்த இருமை விதியைக் கடைப்பிடித்து விட்டு, மறு பாதியை ஒட்டும் போது இந்த விதியைப் புறக்கணித்து அவர் நடந்தால், கண்டிப்பாக அவர் அந்த வாக்கியங்களுக்கு அநீதி செய்கிறார் என்று அர்த்தம்.

அதாவது, இந்த விசயத்தில் மொழிபெயர்ப்பை விகாரப் படுத்துகிறார் என்று தான் அர்த்தம். இந்த விகாரப் படுத்தலைத் தான் சகோதரர் பீஜே இந்த இடத்தில் செய்திருக்கிறார். எப்படியென்று பாருங்கள்:

ஏற்கனவே சொன்ன பிரகாரம், “மலக்கைனி” என்பது – இரண்டு வானவர்களைக் குறிக்கும் இருமைச் சொல்.

ஆனால்…

“ஷயாத்தீன்” என்பது – பல ஷைத்தான்களைக் குறிக்கும் பன்மைச் சொல்; இருமை அல்ல.

ஜிப்ரீல், மீகாயில் என்ற இரு வானவர்கள் என்பது இலக்கணப்படி பிரச்சினை இல்லை.
இரண்டு பெயர்களுக்கு, இருமைச் சொல் என்ற அடிப்படையில் பொருந்தியிருக்கிறது.

இதே அடிப்படையில் தான், ஹாரூத், மாரூத் விடயத்திலும் இணைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதாவது ஹாரூத், மாரூத் என்ற இரண்டு பெயர்களுக்கும் இங்கு இருமைச் சொல் தான் வந்திருக்க வேண்டும்.

மலக்கின் இருமைச் சொல் “மலக்கைனி” என்பது போல், ஷைத்தானின் இருமைச் சொல் “ஷைத்தானானி” என்பது தான்; “ஷயாத்தீன்” அல்ல.

ஹாரூத், மாரூத் என்ற இரண்டு பெயர்களோடும் சகோதரர் பீஜே இணைத்திருக்கும் சொல், “ஷைத்தானானி” என்ற இருமைச் சொல்லை அல்ல; “ஷயாத்தீன்” என்ற பன்மைச் சொல்.

“ஷைத்தானானி” என்ற இருமைச் சொல்லை அவரால் அங்கு இணைக்க முடியவில்லை. ஏனெனில், “மலக்கைனி”யைத் தவிர வேறெந்த இருமைச் சொல்லையும் அல்லாஹ் அங்கு பயன்படுத்தவே இல்லை. ஷைத்தானுக்கு அல்லாஹ் அங்கு பன்மைச் சொல்லைத் தான் பயன்படுத்தியிருக்கிறான்.

இந்த ஒரு விசயத்திலிருந்தே நமக்குத் தெளிவாகப் புரிகிறது, “மலகைனி” என்ற இருமைச் சொல்லை அல்லாஹ் ஒதுக்கியிருப்பது, பக்கத்தில் இருக்கும் ஹாரூத் மாரூத் என்ற இரண்டு பெயர்களுக்காகத் தான்; எங்கோ தொலைவில், நான்கு வசனத்துக்கு அப்பால் இருக்கும் ஜிப்ரீல், மீகாயீலுக்காக அல்ல என்பது.

ஆனால், இதையெல்லாம் இருட்டிப்பு செய்து, தனது சொந்த மனோ இச்சையின் அடிப்படையில் சகோதரர் பீஜே, ஹாரூத் மாரூத் என்ற இரண்டு வானவர்களுக்கும், ஷைத்தான்கள் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதையெல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தான் இப்படியெல்லாம் செய்கிறாரா?

என்ன தான் பூசி மெழுகினாலும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?
———————–

தொகுதி 5:
“நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!” என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை.

எனது கருத்து:
எப்படியோ ஆட்டைக் கழுதையாக்கி ஹாரூத், மாரூத் என்ற இரண்டு வானவர்களையும் ஷைத்தான்கள் என்று மேலே சித்தரித்து விட்டார். இனி, அதன் பின்விளைவுகளையும் சமாளிக்கத் தானே வேண்டும். அவ்வாறான ஒரு பின்விளைவைத் தான் இந்தத் தொகுதியில் அவர் சமாளிக்கிறார்.

பாபில் நகர மக்களை அல்லாஹ் சோதித்துப் பார்க்கும் விதமாகத் தான், ஹாரூத் மாரூத் என்ற வானவர்களிடம் ஏதோ ஒரு ஆபத்தான கலையை ஒப்படைத்து, அதை அந்த மக்களுக்குக் கற்றுக் கொடுக்குமாறு அனுப்பியிருக்கிறான்.

ஆனால், அதைக் கற்க வருபவர்களிடம் அதிலிருக்கும் ஆபத்துகளை எச்சரித்த பிறகு தான் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டும் இருக்கிறான். இதனால் தான் அவர்கள் “நாங்கள் சோதனை (ஃபித்னா) ஆகவே அனுப்பப் பட்டிருக்கிறோம்; எனவே இதன் மூலம் காஃபிராகி விடாதீர்கள்” என்று கற்க வரும் ஒவ்வொருவரையும் எச்சரித்தார்கள் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் சோதனையாக அனுப்பப்பட்ட வானவர்களை பீஜே ஷைத்தன் என்று மாற்றி விட்டதால், அங்கு ஃபித்னா என்ற வசனத்துக்கு சோதனை என்று பொருள் கொடுப்பது பொருந்தாது. ஆகவே இங்கு “ஃபித்னா” என்ற சொல்லுக்கு சோதனை என்பதற்குப் பதிலாகப் படிப்பினை என்று மொழியாக்கம் செய்திருக்கிறார். இதுவும் இன்னொரு சமாளிப்பு தான்.
————————

தொகுதி 6:
எனவே எதன் மூலம் கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவார்களோ அதை அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர்.

எனது கருத்து:
இது அடுத்த பித்தலாட்டம். முன்னாலுள்ள வாக்கியத்தில், ஹாரூத் மாரூத் என்போர், “இதைக் கற்காமல் இருப்பதே உங்களுக்கு நல்லது” என்று எச்சரித்த போதும், அந்த எச்சரிக்கையயும் பொருட்படுத்தாமல், பாபில் மக்கள் அவர்களிடம் அந்தக் கலையைக் கற்றார்கள் என்று தான் குர்ஆன் வசனம் சொல்கிறது.

இதில் என்ன புரிகிறது? ஹாரூத், மாரூத் கற்பித்த எந்தக் கலை மூலம் சூனியம் செய்ய முடியுமோ, அந்தக் கலையைத் தான் மக்கள் எச்சரிக்கையையும் மீறிக் கற்றுக் கொண்டார்கள் என்பது தான் இங்கு உணர்த்தப் படுகிறது.

ஆனால், இந்த அர்த்தத்தில் யாரும் இதைப் புரிந்து விடக் கூடாது என்பதில் அவர் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். ஏனெனில், இந்த அர்த்தத்தில் புரிந்தால், கணவன் மனைவிக்கு இடையில் பிரிவினை ஏற்படுத்தும் சக்தி (தாக்கம்) சூனியத்துக்குத் இருக்கிறது என்ற உண்மை இந்த இடத்தில் ஊர்ஜிதமாகி விடும்.

இதனால், கஷ்டப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிக்காத்த தனது பித்தலாட்டம் மொத்தமும் ஒரே நொடியில் அம்பலமாகி விடும். ஆகவே, இதற்கு வேறு ஏதாவதொரு சமாளிப்பு விளக்கம் கொடுத்தாக வேண்டும்.

இதற்கு அவர் தெரிவு செய்த ஆயுதம் தான் “ஃபயதஅல்லமூன” என்ற ஒரு சொல். “ஃப” என்ற இடைச்சொல்லுக்கு இலக்கணப் படி “ஆனாலும்” என்ற அர்த்தம் இருப்பது போல் “எனவே” என்ற அர்த்தமும் இருக்கிறது. இந்த இலக்கண சலுகையை அவர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

இதன் மூலம் “ஆனாலும் (ஹாரூத் மாரூத்தின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல்) அவர்கள் சூனியத்தைக் கற்றுக் கொண்டார்கள்” என்ற கருத்தில் சொல்லப்பட்ட வசனத்தைத் தலைகீழாக மாற்றி, “எனவே (ஹாரூத் மாரூத்தின் எச்சரிக்கைக்குப் பயந்ததனால்) அவர்கள் சூனியத்துக்குப் பதிலாக வேறொன்றைக் கற்றுக் கொண்டார்கள்” என்ற கருத்தைத் தரும் விதமாக மொழியாக்கம் செய்து கொண்டார்.

அந்த வேறொரு கலை என்ன? என்று யாராவது கேள்வி கேட்டால், அதற்கும் ஒரு பதில் வேண்டுமல்லவா? அதற்கும் ஒரு நொண்டி வியாக்கியானத்தைத் தனது திறமை மூலம் உருவாக்கிக் கொண்டார்.

“அந்த வேறொரு கலை என்பது வேறொன்றுமல்ல; பொய் சொல்லி, கோள் சொல்லி, சண்டை மூட்டுவதன் மூலம் கணவன் மனைவிக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும் தந்திரம் தான் அது. இதைத் தான் அவர்கள் ஹாரூத் மாரூத்திடம் கற்றார்கள்; சூனியத்தை அல்ல” என்பது தான் அந்தப் பதில்.

இவ்வாறு புரட்டிப் புரட்டிப் பேசுவதன் மூலம் தனது பக்தர்களை வேண்டுமானால் அவர் சமாளித்து விடலாம்; ஆனால், எல்லோரையும் சமாளிக்க முடியாது. இந்த இடத்திலும் அவர் மாட்டிக் கொண்டார். எப்படியென்று சொல்கிறேன்:

அவரது வியாக்கியானத்தின் அர்த்தம் இது தான்:
ஹாரூத் மாரூத்தின் எச்சரிக்கைக்குப் பயந்ததனால், அவ்விருவரிடமும் வந்த எவருமே மொத்தத்தில் சூனியத்தைக் கற்கவில்லை.

அதாவது, இதை இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், ஹாரூத் மாரூத் என்போர் மொத்தத்தில் யாருக்குமே சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லை.

ஹாரூத் மாரூத் மொத்தத்தில் யாருக்குமே சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவில்லையென்றால், அவரது மொழியாக்கத்தின் பிரகாரம் “ஹாரூத் மாரூத் என்ற ஷைத்தான்களே சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்” என்ற வசனத்துக்கு இது முரணாக இருக்கிறது. அதாவது இவர்கள் வாதப்படி இங்கு இந்தக் குர்ஆன் வசனம் தனக்குத் தானே முரண்பட்டுக் கொள்கிறது.

இது எப்படி சாத்தியம்? இதை சமாளிக்க அவர் மறந்து விட்டார் போலும். பாவம், மறுபடியும் மாட்டிக் கொண்டார். அவர் சார்பாக இதை ஹதீஸ் மறுப்பாளர்களாவது இனிமேல் சமாளிக்க முயற்சிக்கட்டும். அதன் மூலம் குருநாதரைக் காப்பாற்ற எத்தனிக்கட்டும்.
————————

தொகுதி 7:
அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது.

தொகுதி 8:
மேலும் அவர்கள் தமக்குத் தீங்களிப்பதையும், பயனளிக்காததையும் கற்றுக் கொண்டார்கள்.

தொகுதி 9:
“இதை விலைக்கு வாங்கியோருக்கு மறுமையில் எந்த நற்பேறும் இல்லை” என்பதை உறுதியாக அவர்கள் அறிந்து வைத்துள்ளனர்.

தொகுதி 10:
தங்களை எதற்காக விற்றார்களோ அது மிகவும் கெட்டது. அவர்கள் அறிய வேண்டாமா?

எனது கருத்து:
இந்த நான்கு தொகுதிகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லை. சரியான மொழியாக்கமே செய்யப்பட்டிருக்கிறது.
———————————

இப்போது நான் கேட்பது ஒரேயொரு கேள்வி தான்:
இந்த மொழியாக்கத்தில் சகோதரர் பீஜே கையாண்டிருக்கும் இவ்வளவு நுணுக்கமான செயல்களையெல்லாம் பார்த்த பிறகும் ஒருவர், “இதெல்லாம் அவர் மனிதன் என்ற அடிப்படையில் அறியாமல் விட்ட தவறுகளாக இருக்கலாம்” என்று சொன்னால், அதை நீங்கள் நம்புவீர்களா?

தனது மனோ இச்சையை நிலைநாட்டுவதற்காக ஒரு மனிதன் இந்த அளவுக்குமா அல்லாஹ்வின் வேதத்தில் பித்தலாட்டம் பன்னுவான்? சிந்திக்க வேண்டிய தருணம் இது.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்:
குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் சுருக்கமான தகவல்களை விரிவாக விளக்குவதற்காகத் தான் ஹதீஸ்களை அல்லாஹ் அருளினான். ஆகவே, நமது புரிதலுக்குக் கடினமாக இருக்கக் கூடிய குர்ஆன் வசனங்களை அனுகும் போது, கண்டிப்பாக அது சார்ந்த ஆதாரபூர்வமான ஹதீஸ்களை வைத்துத் தான் புரிய முயற்சிக்க வேண்டும். இது தான் விதி.

அதிலும் குறிப்பாக, இந்த வசனம் பல முக்கியமான ஃபத்வாக்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கக் கூடிய மிகவும் செறிவான, நுனுக்கமான ஒரு வசனம். அதனால், மற்ற வசனங்களை அனுகுவதை விட இந்த வசனத்தை அனுகும் போது மிகவும் ஜாக்கிரதையாகத் தான் அனுக வேண்டும். அதாவது, இது சார்ந்த ஹதீஸ்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தான் இதை விளங்க முயற்சிக்க வேண்டும். அப்போது தான் சரியான விளக்கம் கிடைக்கும்.

இந்த அடிப்படையில், மேலே கூறப்பட்டவாறு இந்த வசனத்தையும், நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸையும் ஒன்று சேர்த்து விளக்கம் எடுத்திருந்தால், சகோதரர் பீஜே இந்த நிலைபாட்டுக்கே வந்திருக்கத் தேவையில்லை.

ஆனால், இப்படி இணைத்து விளக்கம் எடுப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. தனது நாத்திக விஞ்ஞானக் கருத்து தான் அவருக்குப் பிடித்திருக்கிறது. அதைநிலை நாட்டுவதற்காகத் தான் இந்த ஃபித்னா எல்லாம் அரங்கேற்றப்படுகிறது என்பதே எனது குற்றச்சாட்டு.

இது போல் குர்ஆன் வசனங்களுக்கெல்லாம், ஏறுக்கு மாறாக விளக்கம் கொடுத்து, அவரது நாத்திகக் கருத்துக்கு சார்பாக அவற்றைத் தன் பக்கம் வளைத்துக் கொண்டார்.

பிறகு, தனது சித்தாந்தத்துக்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சூனியம் பற்றிய ஹதீஸ்களை, குர்ஆனுக்கு முரண்படுவதாக சித்தரித்துக் காட்டி, அவற்றையும் ஒழித்துக் கட்டினார்.

அவரது அநியாயத்தைத் தட்டிக் கேட்கக் கூடிய ஹதீஸ்களையும் துரத்தியாச்சு; எதிராக இருந்த குர்ஆன் வசனங்களையும், மாற்று விளக்கம் கொடுத்துத் தன் பக்கம் வளைத்துப் போட்டாச்சு.

இனி அவரைத் தட்டிக்கேட்க நாதியில்லை. ஆகவே அவரது உஸூல் கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், அல்லாஹ் ஒருவன் இருக்கிறான்; நினையாப் புறத்திலிருந்து அவன் இதற்கு ஆப்பு வைப்பான் என்பதை அவர் கவனிக்கத் தவறி விட்டார்.

குறிப்பு:
இந்தக் குர்ஆன் வசனத்தின் பிரகாரம், ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியது (போதித்தது) என்ன? என்ற ஒரு கேள்வி சிலருக்கு எழலாம். இதற்கான சுருக்கமான பதில் என்னவென்றால், ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்தது சூனியத்தைத் தான்.

இங்கு அல்லாஹ்வின் கூற்றுப் பிரகாரம், சூனியம் என்பது ஒரு கலை மாத்திரமல்ல; “ஷைத்தான்களை மையமாகக் கொண்ட ஒரு வேதம்” என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வேதத்தைத் தான் நபி (ஸல்) காலத்து யூதர்கள் பின்பற்றினார்கள்.

இன்று கூட யூதர்களில் பலர் இந்த வேதத்தை நடைமுறைப் படுத்துகிறார்கள். இதற்கென்று யூதர்களிடம் ஒரு தனி வேதநூல் கூட இன்றும் உண்டு. அந்த நூலின் பெயர் “க(B)பாலா” என்பது தான். “கபாலா” என்றால் என்னவென்று தேடிப் பாருங்கள். நான் சொல்வதிலிருக்கும் உண்மை புரியும்.

யூதர்கள், தமதுக்கு வழங்கப் பட்ட உண்மையான தவ்ராத் வேதத்தை இருட்டடிப்பு செய்து மறைத்து விட்டார்கள். அதற்குப் பகரமாக பாபில் நகரில் ஹாரூத் மாரூத்துக்கு அருளப்பட்ட பட்ட ஞானத்தின் ஒரு பகுதியிலிருந்து முளைத்த சூனியம் எனும் வேதத்தைப் பின்பற்றினார்கள்.

பிறகு, அவர்களது உண்மையான தவ்ராத் வேதத்தை உறுதிப்படுத்தும் விதமாக குர்ஆன் அருளப்பட்டது. ஆனால், அது அருளப்பட்டிருப்பதை அறிந்த பிறகும், அதைப் பின்பற்றாமல், அதன் மீது பல பொய்யான அவதூறுகளைக் கூறியவர்களாக, அதை முதுகுக்குப் பின்னால் தூக்கியெறிந்தனர்.

இதைத் தான் இந்த குர்ஆன் வசனம் அழகாகக் கூறுகிறது. இந்த விளக்கங்களை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு தடவை 2:102 வசனத்தை ஹதீஸ் மறுப்பாளர்களும் வாசித்துப் பார்த்துக் கொள்ளட்டும்.

ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பது பற்றி இன் ஷா அல்லாஹ் இன்னொரு தொடரில் விரிவாகப் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *