Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 07)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 07)

Magic Series – Episode 07:

சூனியம் என்றால் என்ன?

அறிமுகம்:
இதுவரை சூனியத்தை மறுக்கும் ஹதீஸ் மறுப்பாளர்களின் பிரதான வாதங்களையெல்லாம் தக்க ஆதாரங்களோடு முறியடித்திருக்கிறோம்.

இனிமேலும், அதே வாதங்களைத் திரும்பவும் அவர்கள் முன்வைப்பதாக இருந்தால், அதற்கு முன் நாம் ஏற்கனவே முன்வைத்திருக்கும் வாதங்களைத் தகுந்த ஆதாரங்களோடு முறியடிக்க வேண்டும்; அதன் பிறகு தான் மீண்டும் அந்த வாதங்களை எடுத்து வைப்பது பற்றி யோசிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யவில்லையென்றால், ஹதீஸ் மறுப்பாளர்கள் சத்தியத்தைப் பிரச்சாரம் செய்யும் நோக்கத்தோடு செயல்படவில்லையென்பதும், தமது இயக்கத்தை வளர்க்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறார்கள் என்பதும் மக்கள் மத்தியில் நிரூபணமாகி விடும்.

இனி நமது ஆய்வின் அடுத்த கட்டத்தை அடைகிறோம். இங்கு சூனியம் எனும் கலை பற்றிய ஒரு விரிவான அறிமுகத்தை வழங்குவது பொருத்தம் என்று கருதுகிறேன்.

வாசகர் கவனத்துக்கு:
இந்தத் தொடர், மார்க்க ஆதாரங்களோடு மட்டும் மட்டுப்படுத்தப் படாமல், அறிவு சார்ந்த ஒரு தொடராகவும் இருப்பதனால், இந்தத் தொடரின் ஒருசில பகுதிகளில் நேரடி மார்க்க ஆதாரங்கள் இருக்காது. அதற்காக, மார்க்கத்திலிருந்து விலகிய ஒரு திசையில் இது இருக்கும் என்று யாரும் புரிந்து விடவும் கூடாது.

மார்க்கத்தின் அடிப்படை நிலைபாடுகளுக்கு எந்த வகையிலும் முரணாகாத வகையில் உலக வரலாறு, நடைமுறை யதார்த்தங்கள் போன்றவற்றின் துணையோடு எனது சிந்தனைக்கு எட்டிய வரையில் பெறப்பட்ட சில கருத்துக்கள் கூட இந்தத் தொடரில் இடையிடையே முன்வைக்கப் படும்.

இவ்வாறான கருத்துக்களை மார்க்கம் என்ற பெயரில் யார் மீதும் திணிக்கும் நோக்கத்தில் நான் இதை எழுதவில்லை. இவ்வாறான பகுதிகளை விரும்பியவர் ஏற்றுக் கொள்ளலாம்; விரும்பாதவர் புறக்கணிக்கலாம். சூனியம் எனும் மர்மங்கள் நிறைந்த இந்த ஷைத்தானியக் கலையின் யதார்த்தத்தை அதன் முழுமையான வடிவில் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இந்த அணுகுமுறை இன்றியமையாதது என்றே கருதுகிறேன்.

இதைக் கருத்திற்கொண்டு தான் இந்த அணுகுமுறை தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும்.

மேலும், இன்னொரு விசயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு விசயம் பற்றிய மார்க்கத்தின் நிலைபடு என்ன என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள விரும்பினால், அது பற்றி மார்க்கம் சொல்லியிருக்கும் அத்தனை ஆதாரங்களையும் முடிந்த அளவுக்கு முதலில் தொகுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதிலிருக்கும் ஒவ்வோர் ஆதாரத்தையும் தனித்தனியாகப் பார்த்து, அதிலிருந்து கிடைக்கும் விளக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஒவ்வோர் ஆதாரத்திலிருந்தும் பெறப்பட்ட விளக்கங்களையெல்லாம் இறுதியில் ஒருங்கிணைக்க வேண்டும். விளக்கங்களை இவ்வாறு ஒருங்கிணைப்பதன் மூலம் இது பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்பதைப் புரிய முயற்சிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் யார் முயற்சித்தாலும் இன் ஷா அல்லாஹ் அது பற்றிய சரியான விளக்கத்தை அல்லாஹ் அவருக்கு வழங்குவான். இவ்வாறு பெறப்படும் விளக்கமே சரியான விளக்கமாக அமையும் என்பது எனது கருத்து.

இதை இன்னொரு விதத்தில் சொல்வதென்றால், இருக்கும் ஆதாரங்களையெல்லாம் இணைத்து விளங்க முயற்சிப்பதன் மூலம் மட்டுமே ஒரு விசயம் பற்றிய சரியான, முழுமையான விளக்கத்தைப் பெறலாம். இதற்கு மாற்றமாக, ஆதாரங்களுக்கிடையில் முரண்பாடு கற்பிப்பதன் மூலம் ஒருவர் விளக்கம் பெற நினைத்தால், ஒருபோதும் அது நடக்காது. விளக்கம் கிடைப்பதற்குப் பதிலாக குழப்பத்தையே அதன் மூலம் அவர் தேடிக் கொள்வார்.

இந்த அடிப்படையையும் மனதில் பதிய வைத்துக் கொண்டு, சூனியம் பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு என்னவென்பதையும், சூனியத்தின் யதார்த்த வடிவம் என்னவென்பதையும் புரிந்து கொள்ளும் நோக்கில் இந்த ஆய்வுக்குள் இப்போது பயணிக்கிறோம்:

சூனியத்தின் வரைவிலக்கணம்:

ஒரு மனிதன் அமானுஷ்ய அடிப்படையில் பிற மனிதருக்குத் தாக்குதல் நடத்தும் பொருட்டு ஜின்களை வணங்கி, அதன் மூலம் ஜின்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளும் செயல் தான் சூனியம் எனப்படும்.

சூனியத்தின் அடிப்படைக் கோட்பாடு ஒன்று தான்:
பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் சித்தரித்து, அதை ஐம்புலன்கள் வாயிலாக உடலுக்குள் அல்லது உள்ளத்துக்குள் திணிப்பதன் மூலம் மட்டுமே சூனியம் பலிக்கச் செய்யப்படுகிறது. ரத்தினச் சுருக்கமாகச் சொன்னால், சூனியம் என்பது இவ்வளவு தான்.

இந்த அடிப்படைத் தத்துவத்திலிருந்து தான் சூனியம் எனும் மொத்தக் கலையும், பல கிளைகளாக விரிந்து வியாபித்திருக்கிறது.

சூனியத்தால் ஏற்படும் தாக்க விளைவுகளை இரண்டு பிரதான வகைகளாகப் பிரிக்கலாம்:

1. உளவியல் சார்ந்த விளைவுகள்:
இல்லாத ஒன்று இருப்பதாகவோ, காணாத ஒன்றைக் காண்பதாகவோ,
நடக்காத ஒன்று நடப்பதாகவோ, செய்யாத ஒன்றைச் செய்ததாகவோ… ஏற்படும் பிரமை இந்த வகையைச் சார்ந்தது.

இவ்வாறான உளவியல் தாக்கங்களின் மூலம் ஏற்படும் இறுதி விளைவுகளாக, இருவருக்கிடையில் இருக்கும் அன்பு / காதல் / வெறுப்பு போன்ற உணர்வுகளில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படுதல், மற்றும் இந்த மாற்றங்களின் விளைவாகக் குடும்பங்களுக்குள் பிளவுகள் ஏற்படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

2. உடல் சார்ந்த விளைவுகள்:
அவயவங்கள் தற்காலிகமாக முடமாகுதல், உள்ளுறுப்புக்கள் சிலவற்றின் தொழிற்பாடுகளைக் குழப்புவதன் மூலம் சில வகையான நோய்கள் ஏற்படுதல் போன்றவையெல்லாம் இதில் அடங்கும்.

இவ்வாறான உடல் சார்ந்த தாக்கங்களில் இருப்பதும், பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் காட்டும் அதே அடிப்படைக் கோட்பாடு தான்.

சூனியத்தின் மூலம் ஏற்படும் எந்த நோயும் உண்மையில் நோய்கள் அல்ல; நோயுற்ற ஓர் அவயவம் எப்படித் தொழிற்படாமல் போகுமோ, அதே போல் ஆரோக்கியமாக் இருக்கும் ஓர் அவயவம் தற்காலிகமாக தொழிற்படாமல் போகும்.

இந்த இடத்தில் ஒரு வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இயல்பில் ஏற்படும் மனித நோய்களுக்கும், சூனியத்தால் ஏற்படும் நோய்களுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இதை இலகுவில் புரிந்து கொள்வதற்காக ஒருவரது கால் முடமாகிப் போவதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

மனித இயல்புகளுக்கு அமைய ஒருவரது கால் முடமாவதென்றால், ஒன்று அவருக்கு ஏதும் விபத்து நேர்ந்திருக்க வேண்டும்; அல்லது அவரது கால் சம்பந்தப்பட்ட நரம்புத் தொகுதியிலோ, சுற்றோட்டத் தொகுதிலோ ஏதும் கோளாறு இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் ஒருவரது கால் முடமாகிப் போனால், அந்த நோயின் காரணம் என்னவென்பதை மருத்துவர்கள் சரியாகக் கண்டறிந்து கொள்ளும் விதமாக அது இருக்கும். “இன்ன பிரச்சினையால் இவரது கால் தொழிற்படாமல் இருக்கிறது. எனவே, இதற்கு இன்ன மருத்துவம் மூலம் சிகிச்சை செய்தால் குணமாகும்” என்ற ஒரு தெளிவான பதில் மருத்துவத்தில் இருக்கும். அதற்கு அமைய உரிய மருத்துவத்தைச் செய்தால், இன் ஷா அல்லாஹ் நாளடைவில் அதற்குரிய நிவாரணம் கிடைக்கும்.

ஆனால், சூனியத்தின் மூலம் கால் முடமான ஒருவரது நிலை இவ்வாறு இருக்காது. முடமாகியிருக்கும் அவரைக் கூட்டிச் சென்று பரிசோதித்துப் பார்த்தால், அவரது குருதிச் சுற்றோட்டத்திலோ, நரம்புத் தொகுதியிலோ, அல்லது அது சார்ந்த அம்சங்களிலோ எந்தக் கோளாறும் இருக்காது. அதே போல் அவருக்கு விபத்து நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இருக்காது. ஆரோக்கியமான ஒரு கால் தொழிற்படுவதற்கு என்னவெல்லாம் சரியாக இருக்க வேண்டுமோ, அதுவெல்லாம் சரியாகவே இருக்கும். ஆனால், அவரது கால் தொழிற்படாது.

அதாவது இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால், காலில் எந்த நோயும் இல்லையென்பது தான் இங்கு மெய். ஆனால், இந்த மெய்யை சூனியம் பொய்யாக்கிக் காட்டும். இதன் மூலம் ஆரோக்கியமான காலை நோயுற்ற ஒரு காலைப் போல் சூனியம் சித்தரிக்கும். ஆக, இங்கும் அதே அடிப்படை சித்தாந்தம் தான் பிரயோகத்திலிருக்கும்.

இவ்வாறு பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் புலன்கள் வழியாக மனித உடல், மற்றும் உள்ளத்துக்குள் விதைக்கும் இந்த வேலையை சூனியக் காரனுக்காகச் செய்து கொடுப்பது வேறு யாருமல்ல; ஜின்கள் தாம். ஜின்களுக்கு இருக்கும் பல அபார ஆற்றல்களுள் இவ்வாறான ஆற்றல்களும் அடங்கும்.

ஜின்கள் பற்றி இன் ஷா அல்லாஹ் வேறொரு தொடரில் விரிவாக அலச இருக்கிறோம். ஆகவே, ஜின்கள் பற்றிய மேலதிக விளக்கங்களை இங்கு சொல்வதாக உத்தேசமில்லை. இந்த ஆய்வுக்குத் தேவைப்படும் அளவுக்கு மட்டுமே இங்கு ஜின்கள் பற்றிப் பேசப்படும்.

இந்த இடத்தில் அனேகமானோருக்கு ஒரு கேள்வி எழலாம்:

“ஜின்கள் மூலம் தான் சூனியம் செய்யப்படுகிறது என்பதற்கு மார்க்கத்தில் என்ன ஆதாரம்?”

இது ஒரு நியாயமான கேள்வி. ஆகவே, இந்தக் கேள்விக்கான ஒரு தெளிவையும் பெற்றுக் கொள்ளும் முகமாக, இந்த வாதத்தை ஆதரிக்கக்கூடிய ஆதாரங்கள் என்னவென்பதையும் கொஞ்சம் பார்க்கலாம்:

இதற்கான எனது முதலாவது பதில்:
நிதர்சனத்தில் பரவலாக நடக்கும் ஓர் உண்மைக்கு ஆதாரம் காட்ட வேண்டியதில்லை. அது பற்றி யார் தேடி ஆய்வு செய்தாலும், அந்த உண்மைகளை அவர் கண்கூடாகக் கண்டுகொள்வார்.

உலகிலிருக்கும் ஒவ்வொரு சூனியக்காரனும் எவ்வாறு சூனியம் செய்கிறான் என்பதைக் கொஞ்சம் லேசாக ஆய்வு செய்து பார்த்தாலே இந்த உண்மை தெரிந்து விடும். அதாவது, ஜின்களின் தலையீடு இல்லாத சூனியமே கிடையாது என்ற உண்மை புரிந்து விடும்.

நிதர்சன உண்மையே இதைப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருந்தாலும், மார்க்கத்தின் கண்ணோட்டத்திலும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் சில ஆதாரங்களையும் இங்கு முன்வைப்பது இன்னும் சிறந்தது. ஏனெனில், எந்த நெருடலும் இல்லாமல் இந்த உண்மையை அனைவரும் புரிந்து கொள்வதற்கு மார்க்க ஆதாரங்கள் மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்த அடிப்படையில் இனி சில ஆதாரங்களைப் பார்க்கலாம்:

ஆதாரம் 1:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்), “அவர்கள் ஒரு பொருட்டே அல்லர் (அவர்களைக் கண்டுகொள்ளவே தேவையில்லை)” என்று சொன்னார்கள். மக்கள் அதற்கு, “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் ஒன்றை அறிவிக்கிறார்கள்; (சில வேளை) அது உண்மையாகி விடுகின்றதே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்த உண்மையான சொல், (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக் கொண்டதாகும். அதை அந்த ஜின், தனது (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றான்” என்று பதிலளித்தார்கள். (புகாரி 7561)

ஆதாரம் 2:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்தவாறு) பூமியில் நடைபெற விருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக் கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (அந்தப்) பேச்சை (ஒட்டுக்) கேட்கின்றன. பின்னர், (தண்ணீர்ப் பையின் வாயைப் பாத்திரத்தின் வாயில் பொருத்தி, கொஞ்சமும் சிந்தாமல் ஊற்றுவதைப் போல்) சோதிடனின் காதில் தன் வாயை வைத்துப் பொருத்தி, (தாம் கேட்டதையெல்லாம்) சோதிடனிடன் காதில் கூறி விடுகின்றனர். அதனுடன் (இன்னும்) நூறு பொய்களை சோதிடர்கள் (தம் தரப்பிலும்) சேர்த்து விடுகின்றார்கள். (புகாரி 3288)

இந்த இரண்டு ஆதாரங்கள் மூலமும் ஓர் உண்மை புலப்படுகிறது. அதாவது, சோதிடர்களுக்கும், ஜின்களுக்கும் இடையில் இரகசியத் தொடர்புகள் / உறவுகள் இருக்கின்றன என்பதை இந்த ஹதீஸ்கள் மறுக்க முடியாதவாறு உறுதிப்படுத்துகின்றன. இனி இன்னும் சில ஆதாரங்களைப் பார்ப்போம்:

ஆதாரம் 3:
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒருவர் எந்த அளவுக்கு சோதிடத்தைக் கற்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் சூனியத்தின் ஒரு கிளையைக் கற்கிறார்.
நூல்: ஸுனன் அபூதாவூத் 3905 / பாடம் 30, ஹதீஸ் 2
தரம்: ஹஸன் (அல்பானி)

ஆதாரம் 4:
இப்னு அப்பாஸ் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒருவர் நட்சத்திரங்களைக் கணிப்பது பற்றி எந்த அளவுக்குக் கற்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் சூனியத்தின் ஒரு கிளையைக் கற்கிறார்.
நூல்: ஸுனன் இப்னு மாஜா 3726 / பாடம்: 33, ஹதீஸ்: 71
தரம்: ஹஸன் (தாருஸ்ஸலாம்)

இந்த இரண்டு ஹதீஸ்கள் மூலமும் இன்னுமோர் உண்மை புலப்படுகிறது. அதாவது, சோதிடம் எனும் கலையானது, சூனியம் எனும் கலையின் ஒரு கிளை (உட்பிரிவு) தான் என்பதை இந்த ஹதீஸ்கள் மறுக்க முடியாதவாறு உறுதிப்படுத்துகின்றன.

ஆக, மேலே சுட்டிக்காட்டப்பட்ட நான்கு ஹதீஸ்கள் மூலமும் நாம் தெரிந்து கொண்ட இரண்டு உண்மைகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம், நாமாக விளங்கும் மூன்றாவது உண்மை என்ன?

சூனியத்தின் ஒரு கிளையாக மட்டும் இருக்கக் கூடிய சோதிடத்திலேயே இத்தனை ஜின்கள் சம்பந்தப் பட்டிருக்கும் போது, அனைத்துக் கிளைகளையும் உள்ளடக்கிய பிரதான கலையாக இருக்கும் சூனியத்தில் எத்தனை ஜின்கள் சம்பந்தப் பட்டிருக்கும் என்பதை நீங்களே கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ஜின்களுக்கும் சூனியத்துக்கும் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தும் இன்னோர் ஆதாரத்தையும் பாருங்கள்:

மாலிக் கேட்டதாக என்னிடம் அறிவித்த செய்தி:
ஒருமுறை உமர் (ரழி) அவர்கள் ஈராக் செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த போது, கபால்-அஹ்பார் அவரிடம் கூறினார், “முஃமின்களின் தலைவரே, அங்கு செல்ல வேண்டாம். அங்கு தான் பத்தில் ஒன்பது பங்கு சூனியமும், எதற்கும் அடங்காத பல வழிகெட்ட ஜின்களும், மருத்துவர்களால் குணமாக்க முடியாத விசித்திரமான நோய்களும் நிறைந்து காணப்படுகின்றன.”
முவத்தா மாலிக்: பாடம்: 54, ஹதீஸ் 30

இந்தச் செய்தியில் மொத்தம் நான்கு விசயங்களை ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தி உமர் (ரழி) அவர்களுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கப் படுகிறது. ஈராக் (பாபிலோன்), சூனியம், ஜின்கள், விசித்திரமான நோய்கள் ஆகிய நான்கு அம்சங்களும் தாம் அவை. குர்ஆன், ஹதீஸ், மற்றும் சூனியத்தின் பண்டைக்கால வரலாறு ஆகியவற்றின் துணையோடு இந்த நான்கு விசயங்களையும் இணைத்து சிந்திக்கும் ஒருவருக்கு ஒரு நொடியில் இது எதைக் குறிக்கிறது என்பது புரிந்து விடும்.

மேலும், மேற்கூறப்பட்ட ஆதாரங்களையெல்லாம் சூனியம், மற்றும் ஜின்கள் பற்றித் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏனைய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோடு ஒருங்கிணைத்து விளங்க முயற்சிக்கும் யாராக இருந்தாலும், ஜின்கள் மூலம் தான் சூனியம் செய்யப்படுகிறது என்ற உண்மையைக் கண்டிப்பாக அறிந்து கொள்வார்கள்.

ஜின்கள் மூலம் தான் சூனியம் செய்யப்படுகிறது என்ற எனது கருத்துக்கு ஆதரவாக இத்தனை ஆதாரங்களை முன்வைத்திருக்கிறேன். இதையும் மீறி ஒருவர் இந்தக் கருத்தை மறுத்து, ஜின்களுக்கும் சூனியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று வாதிடுவதாக இருந்தால், அவர் தனது வாதத்துக்கு சார்பான மார்க்க ஆதாரங்களை முன்வைப்பதன் மூலம் தான் வாதிட வேண்டும். அப்படி வாதிடவில்லையென்றால், அவரது வாதம், வெறும் மனோ இச்சையை அடிப்படையாகக் கொண்ட வாதம் என்று தான் அர்த்தம்.

இனி சூனியம் பற்றிய விரிவான விளக்கத்துக்குள் செல்லலாம்:

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *