Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 08)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 08)

Magic Series – Episode 08:

சூனியம் – ஒரு விளக்கம்:

சூனியம் என்பது வெறும் வித்தைகளின் தொகுப்பு அல்ல; அது ஒரு மதம். உண்மையில் இந்தக் கலையின் சரியான மூலப் பெயர் மந்திரம் (Sorcery) என்பது தான்.

மந்திரம் எனும் இந்த மதம் ஒரு மொழியை அடிப்படையாகக் கொண்டதாகத் தான் இருக்கிறது. வெளிப் பார்வைக்கு இந்த மொழி, மனிதர்கள் பேசிக் கொள்ளும் மொழிகளின் கூட்டுச் சேர்க்கை போல தான் தோற்றமளிக்கும். ஆனால், உண்மையில் இது, ஒரு மனிதன் இன்னொரு மனிதனோடு பேசிக் கொள்ளும் மொழி அல்ல; மாறாக மனிதன் ஜின்களோடு பேசும் மொழி தான் இது. மனிதர் பேசும் சில மொழிகள் மாற்றி, வடிவமைக்கப் பட்டதன் மூலமே இந்த மொழி உருவாக்கப் பட்டிருக்கிறது.

இதில் வாய்மொழிச் சொற்கள், எழுத்துக்கள், இலக்கங்கள், குறியீடுகள், கோலங்கள் போன்ற பல அம்சங்கள் உள்ளடக்கப் பட்டிருக்கும். இது ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் இருக்கும். எந்த இலக்கத்தோடு எந்தக் குறியீடுகளைப் பொருத்தி, எந்தக் கோலத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், எந்தக் கோத்திரத்தைச் சார்ந்த ஜின்களின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தான் மந்திரம் எனும் பாடநெறி மூலம் சூனியக் காரர்கள் கற்கிறார்கள்.

மந்திரத்தினுள் பல உட்பிரிவுகள் இருக்கின்றன: தூய மந்திரம் (White Magic), உற்பத்தி மந்திரம் (Productive Magic), பாதுகாப்பு மந்திரம் (Protective Magic), தீய மந்திரம் (Black Magic) போன்ற ஒருசிலதை உதாரணத்துக்குக் குறிப்பிடலாம். இதில் தீய மந்திரம் எனும் உட்பிரிவைத் தான் நாம் சூனியம் என்கிறோம்.

இந்தத் தீய மந்திரத்தினுள் (சூனியத்தினுள்) இன்னும் சில உட்பிரிவுகள் உண்டு:
பில்லி சூனியம் (Witchcraft), ஏவல் சூனியம் (Voodoo) போன்றவற்றை இவற்றுக்கு உதாரணங்களாகக் கூறலாம்.

சூனியத்தினுள்ளும் மத்ஹபுகளைப் போன்ற பல பிரிவுகள் இருக்கின்றன. ஒருவரைக் குறி வைத்து சூனியம் செய்யப்படும் போது, அது வாய்ச் சொல் மூலமோ, எழுத்து வடிவங்கள் மூலமோ, முடிச்சுக்களில் ஊதுதல் மூலமோ, பொம்மைகளைக் கொண்டு ஏவல் செய்வதன் மூலமோ அது சூனியக்காரனுடைய மத்ஹபுக்கு ஏற்ப செய்யப்படும்.

சூனியம் என்பது இன்று நேற்று முளைத்த ஒரு கலை அல்ல. இதன் வரலாறு மிகவும் நீண்டது. வரலாறு நெடுகிலும், காலத்துக்குக் காலம், கலாச்சார / நாகரீக மாற்றங்களுக்கு ஏற்ப, சூனியமும் பல்வேறு வடிவங்களில் கூர்ப்படைந்து வந்துள்ளது. இதைப் புரிந்து கொள்ளும் நோக்கிலும், மற்றும் சூனியத்தில் இருக்கும் பல்வேறு மத்ஹபுகளை இனம்காட்டும் நோக்கிலும் சூனியத்தைக் கொஞ்சம் வரலாற்றின் ஒளியிலும் இப்போது பார்க்கலாம்:

1. பண்டைக்கால பாபிலோன்:

வரலாற்றுக் குறிப்புகள், தடயங்கள் மற்றும் புராணங்கள் என்று எங்கு சென்று தேடிப் பார்த்தாலும் சூனியம் எனும் கலையின் ஆதி மூலம், மெசொபொத்தேமிய (சுமேரியர்கள் / பாபிலோனியர்கள் வாழ்ந்த பூமி / இன்றைய ஈராக்) பூமியிலிருந்தே வியாபித்திருப்பதை அவதானிக்கலாம்.

பாபிலோனியர்கள் வழக்கத்திலிருந்த சூனியம் எவ்வாறு இருந்தது என்பதையும் பார்க்கலாம்:

சக்தி வாய்ந்த ஏழு ஷைத்தானிய ஜின்களை இவர்கள் கடவுள்களாக வணங்கி வந்தார்கள். அந்த ஏழு ஜின்களுக்கும் வானத்திலிருக்கும் ஏழு நட்சத்திரங்களை சாட்டி, அந்த நட்சத்திரங்களை இந்த ஜின்களின் பெயரால் அழைத்தது மட்டுமல்லாமல், அந்த நட்சத்திரங்களையும் வழிபட்டார்கள்.

ஏழு நட்சத்திரங்களுக்கும் சொந்தக்காரர்களான ஜின் குடும்பம்:
“அஸ்பு” (தந்தை / கனவன்), “தியாமா” (அஸ்புவின் மகளும், மனைவியும்), “லஹ்மு” / “லஹமு” (பிள்ளைகள்), “அன்ஷர்” / “கிஷர்” (பேரப் பிள்ளைகள்), “அனு” (கொள்ளுப் பேரனும், குட்டிக் கடவுள்களின் தந்தையும்)

கடவுள்களாக வணங்கப்பட்ட இந்த ஜின்களின் பெயர்களைத் தான் ஏழு நட்சத்திரங்களுக்குச் சூட்டி, அவற்றை பாபிலோனியர்கள் வழிபட்டார்கள். இந்த ஏழு நட்சத்திர வழிபாட்டை அடிப்படையாக வைத்துத் தான் இவர்களது ஜோதிட சாஸ்திரமும், சூனியமும் இருந்தது.

பாபிலோனியர்களது இந்த மத நம்பிக்கைப் பிரகாரம், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதன் பெயர், பிறந்த திகதி / நேரம், தாயின் பெயர் போன்ற தகவல்களைத் திரட்டிக் கணிப்பதன் மூலம், அதன் ஜாதக நட்சத்திரத்தைக்க் கண்டுபிடிப்பார்கள். எந்த நட்சத்திரம் ஜாதகப்படி அமையுமோ, அந்த நட்சத்திரத்துக்கு ஏற்பவே அவனது வாழ்வில் நல்லது, கெட்டது எல்லாமே செய்வார்கள்.

நட்சத்திரங்கள் மூலம் அழைக்கப்பட்ட ஷைத்தானிய ஜின்களை வணங்கும் இப்படியொரு மதம் பண்டைக் காலத்தில் இருந்தது என்பதை இஸ்லாம் கூட உறுதிப் படுத்துகிறது. இதைத் நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை பின்வருமாறு கூறிக் காட்டினார்கள்:

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹுதைபியா’ எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள்.-அன்றிரவு மழை பெய்திருந்தது.- தொழுது முடித்ததும் மக்களை நோக்கித் திரும்பி, “உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர்.
அப்போது “என்னை நம்பக் கூடியவர்களும், மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். “அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது’ எனக் கூறியவர்களோ என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் (பொழிந்தது) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவர்களாவர்’ என இறைவன் கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி (846 / 1038)

இந்த ஹதீஸில் “அல்லாஹ்வை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களே முஃமின்கள்” என்ற கருத்தையும், மற்றும் “அல்லாஹ்வின் அருளால் அல்லாமல்; நட்சத்திரத்தின் தயவால் தான் மழை பெய்கிறது என்று நம்பியவர்கள் இறைமறுப்பாளர்கள்” என்ற கருத்தையும் நபி (ஸல்) அவர்கள் பதிய வைக்கிறார்கள். உண்மையில் இங்கு “நட்சத்திரங்கள்” என்பதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் அர்த்தம் கற்பித்தது வானில் இருக்கும் எல்லா நட்சத்திரங்களையுமல்ல; மாறாக, சில நட்சத்திரங்கள் மூலம் பாபிலோனியர் காலத்திலிருந்து காஃபிர்கள் வணங்கி வழிபட்ட ஷைத்தானிய ஜின்களைத் தான்.

அதாவது, வானிலிருக்கும் ஒரு நட்சத்திரத்தைக் குறிவைத்து வழிபாடு நடத்துவதன் மூலம், காஃபிர்கள் வணங்கியது அந்த நட்சத்திரத்தையல்ல; மாறாக அந்த நட்சத்திரத்தின் மூலம் தாம் உதவி தேடிப் பிரார்த்திக்கும் ஜின்னைத் தான். இவ்வாறு, ஆதிகாலம் தொட்டு இவர்கள் ஜின்களைத் தான் வணங்கி வந்தார்கள் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களின் மூலமும் மேலும் உறுதிப் படுத்திக் கொள்ளலாம்:

ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது, அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அறிவில்லாமல் அவனுக்கு ஆண் மக்கைளயும் பெண் மக்களையும் கற்பைன செய்து விட்டனர். (6:100)

“நீ தூயவன். நீயே எங்கள் பாதுகாவலன். அவர்களுடன் (எங்களுக்கு சம்பந்தம்) இல்லை. மாறாக இவர்கள் ஜின்களையே வணங்கி வந்தனர். இவர்களில் அதிகமானோர் அவர்களையே நம்பினர்” என்று கூறுவார்கள். (34:40,41)

நபி (ஸல்) அவர்களுக்கு முந்திய காலத்திலிருந்தே அந்த மக்களில் பெரும்பாலானோர் ஜின்களையே வணங்கி வந்தார்கள் என்பதும் இந்த வசனங்கள் மூலம் நிரூபணமாகிறது.

இந்த ஷைத்தானிய சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் பாபிலோனியர்களது சூனியமும் இருந்தது. பாபிலோனியர்களது வழக்கப்படி, ஒருவனுக்கு சூனியம் செய்வதென்றால், முதலில் அவனது நட்சத்திரத்தை கணித்துக் கொள்வார்கள். அதன் பிறகு, அதற்குரிய ஜின்னைக் குறி வைத்து வழிபாடுகள் செய்யப்படும்.

இந்த வழிபாட்டினுள் பல அம்சங்கள் அடங்கும். சூனியத்தின் தன்மைக்கும், அளவுக்கும் ஏற்ப இது மாறுபடும். உதாரணத்துக்கு தீக்குண்டத்தை மூட்டி, அதன் எதிரில் உட்கார்ந்து கொண்டு நாட்கணக்காகத் தவம் செய்தல், நிர்வாண பூஜைகள் செய்தல், குறிப்பிட்ட அந்த ஜின்னுக்காக ஓர் உயிரை அறுத்துப் பலியிடுதல் போன்றவை இதில் அடங்கும்.

பாபிலோனியர்களது சூனியத்தில் சாம்பிரானிப் புகை, மற்றும் அகில் புகை போன்றவை பரவலாகப் பயன்படுத்தப் பட்டன. மேலும், இவர்களது சூனியம் பெரும்பாலும் முடிச்சுக்களில் ஊதும் சூனியமாகத் தான் இருந்தது. அதாவது கயிறு, இழை, நூல் போன்றவற்றில், குறிப்பிட்ட நபரின் ஜாதகத்துக்கு ஏற்ப, குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடிச்சுக்கள் போடுவார்கள். ஒவ்வொரு முடிச்சிலும் குறிப்பிட்ட ஜின்னின் பெயரைக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் திக்ர் செய்வது போல் சொல்லி, ஊதுவார்கள். பாபிலோன் சூனியக்காரர்களுள் அனேகமான பெண் சூனியக்காரிகளும் இருந்தார்கள்.

மனித வரலாற்றில் முதன்முதலாக பாபிலோனியர்கள் இவ்வளவு நுணுக்கமாக சூனியம் செய்வதற்கு எங்கிருந்து கற்றுக் கொண்டார்கள் என்ற ஒரு கேள்வி இங்கு சிலருக்கு எழலாம். இதற்கான பதிலையும் அல்லாஹ் குர்ஆனிலேயே சூசகமாகக் கூறுகிறான்.

குர்ஆன் வசனம் 2:102 இல் பாபிலோனில் தான் சூனியம் முதன்முதல் தோற்றம் பெற்றது என்பது மறைமுகமாக சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, ஹாரூத் மாரூத் என்ற இரண்டு வானவர்கள் பாபிலோனியர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஒரு மறைவான ஞானத்திலிருந்து தான் சூனியம் என்ற கலையே முளைத்தது. இது பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக இன்னொரு தொடரில் அலச இருக்கிறோம். இப்போதைக்கு பாபிலோனியர்களது சூனியத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு, சூனியத்தின் ஏனைய மத்ஹபுகளைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.

2. பண்டைக்கால பாரசீகம்:

பாரசீகத்தைப் பொருத்தவரை, ஆரம்ப காலத்தில் அவர்களுக்கு சூனியத்தில் பெரிதாக ஈடுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், ருஸ்தும் என்ற அரசனின் வருகைக்குப் பிறகு, பாரசீகத்திலும் சூனியத்தின் நடமாட்டம் பரவலாகக் காணப்பட்டது.

பாரசீகர்களுக்கென்று தனித்துவமான சூனிய முறைகள் இருக்கவில்லை. பாபிலோன் மக்கள் வழக்கத்திலிருந்த ஏழு நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட அதே வழிகெட்ட கொள்கை பிற்காலத்தில் பாரசீகத்தினுள்ளும் ஊடுறுவியது. இதன் விளைவாக பாரசீகத்திலும் சூனியம் இன்னொரு பரிணாமம் எடுத்தது. பாரசீகர்களும் பாபிலோன் சூனியத்தைத் தான் கடைப்பிடித்தார்கள். ஆனால், அதைத் தமது கலாச்சாரப் பின்னணிகளுக்கு ஏற்ப சற்று மாறுபட்ட வடிவத்தில் செய்து வந்தார்கள். இதைத் தவிர பாரசீகர்கள் விசயத்தில் சூனியம் பற்றிப் பிரத்தியேகமாக சொல்வதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. இனி அடுத்த மத்ஹபைப் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *