Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 09)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 09)

Magic Series – Episode 09:

சூனியம் – ஒரு விளக்கம்:

3. பண்டைக்கால எகிப்து:

எகிப்தியர்களது சூனியம், பாபிலோனியர்களது சூனியத்திலிருந்து கொஞ்சம் வேறுபட்ட வடிவத்தில் இருக்கும். பாபிலோனியர்களைப் போல் வாய் வார்த்தை மூலம் சூனியம் செய்தல், முடிச்சுக்களில் ஊதுதல் போன்ற வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் அதிகமாக, இவர்கள் பெரும்பாலும் குறியீடுகள், மற்றும் எழுத்துக்கள் மூலமாக சூனியம் செய்வதில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதன் சில சுவடுகளை இன்று கூட எகிப்து பிரமிடுகளிலும், அது சார்ந்த தொல்பொருட்களிலும் அவதானிக்கலாம். அவற்றில் இருக்கும் “ஹைரொக்லிஃபிக்ஸ்” எனும் வகையைச் சார்ந்த குறியீடுகளில் அனேகமானவை, எகிப்தியர்களது பாதுகாப்பு மந்திரம், உற்பத்தி மந்திரம் போன்ற சூனியங்களின் சுவடுகள் தாம்.

எகிப்தியர்கள் சூனியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்ததைப் போல் வரலாற்றில் வேறெவரும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்று சொன்னால் கூட அது மிகையாகாது. சூனியத்தை அவர்களது அன்றாட வாழ்வின் ஓர் அம்சமாகவே எகிப்தியர்கள் கருதினார்கள். சாதாரண குடிமகன் தொடக்கம், அரச மட்டத் தலைவர்கள் வரை அனைவரும் சூனியத்தில் ஈடுபட்டார்கள். பண்டைய பிர்அவுன்களின் அரச மதகுருமார்கள் அனைவரும் சூனியத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். சூனியம் என்பது அவர்களது கல்வியின் ஓர் அம்சமாகவே நோக்கப்பட்டது.

பார்வைப் புலன் சார்ந்த சூனியத்தில் எகிப்திய சூனியக்காரர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதாவது, கண்பார்வைக்கு மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும் சூனியத்தில் இவர்கள் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதைக் குர்ஆன் கூட மூஸா (அலை) அவர்களது சம்பவத்தின் வாயிலாக உறுதிப்படுத்துவதைப் பார்க்கலாம்.

சூனியத்தில் இது ஒரு வகை மட்டுமே. இந்த வகையான சூனியத்தை அரபியில் “அஸ் ஸிஹ்ருல் தக்ஃயீலிய்” என்று அழைப்பார்கள். இந்த வகையான சூனியம் தான் மூஸா (அலை) அவர்களது சம்பவத்தில் செய்யப்பட்டது. பின்வரும் குர்ஆன் வசனம் இதற்குக் ஆதாரம்:

“இல்லை! நீங்களே போடுங்கள்!” என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. (20:66)

பார்வைப் புலன் வழியாகத் தாக்கும் சூனியத்தின் யதார்த்தம் இது தான்:

சூனியக்காரன் சூனியத்தைச் செய்யும் போது, அதைப் பலிக்கச் செய்யும் ஜின்கள் கயிறுகளையும், கைத்தடிகளையும் அசைக்கும். அதே நேரம், சூனியத்தால் தாக்கப்பட்டவரின் பார்வைப் புலன் வழியாக மூளைக்குள் ஊடுறுவி, உண்மையான தோற்றத்துக்கு (கயிறுகளும், கைத்தடிகளும்) மாற்றமான வேறொரு தோற்றத்தைப் (பாம்புகள்) பார்ப்பதாகக் நம்பும் அளவுக்கு மூளையின் கிரகிக்கும் பகுதியை ஏமாற்றும். இதன் விளைவாக, அவர்களின் புலன்களுக்கு கயிற்றுக்குப் பதிலாக, சீறும் பாம்பைப் பார்ப்பது போல் பிரமையூட்டப்படும்.

இது சூனியத்தின் ஒரு வகை. இந்த வகையான சூனியத்தைத் தான் ஹதீஸ் மறுப்பாளர்கள் மஜிக் எனும் தந்திர வித்தை என்று தப்பாக வாதிடுகிறார்கள். இது அவர்களின் அறியாமையை மேலும் வெளிக்காட்டுகிறது. உண்மையில் பார்வைப் புலன் சார்ந்த சூனியம் என்பதும், மேடைகளில் மஜிக் என்று செய்யப்படும் தந்திர வித்தைகளும் ஒன்றல்ல; இரண்டுக்கும் இடையில் இரவுபகல் வேறுபாடு இருக்கிறது.

தந்திரத்தின் மூலம் காட்டப்படும் கண்கட்டி வித்தைக்கு அரபியில் “ஷ’வதாஹ்” (வித்தை / Tricks) என்ற பதம் தான் வழங்கப் பட்டிருக்கிறது. ஆனால், பார்வையை மயக்கும் சூனியத்துக்கு “ஸிஹ்ருல் தக்ஃயீல்” என்ற தனிப் பதம் வேறாக வழங்கப் பட்டிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? சூனியம் என்பது வேறு, தந்திரத்தால் செய்யும் கண்கட்டி வித்தை என்பது வேறு என்பதை ஆதிகாலம் முதல் அரபுகள் கூட பிரித்துத் தான் அறிந்து வைத்திருந்தார்கள் என்பது நிரூபணமாகிறதா இல்லையா?

உண்மை இவ்வாறிருக்கும் போது, இதற்கு மாற்றமாக ஹதீஸ் மறுப்பாளர்கள், இரண்டும் ஒன்றென்று வாதிடுவது நகைப்புக்குரியது. தமக்குத் தான் எல்லாமே தெரியும் என்பது போலவும், ஏனைய உலக மக்கள் அனைவரும் ஒன்றுமே தெரியாத கூமுட்டைகள் என்பது போலவும் ஒரு நினைப்பில் தொண்டை கிழியக் கத்திக் கொண்டிருக்கும் இந்த அறிவிலிகளது கண்கள் எப்போது தான் திறந்து கொள்ளப் போகிறதோ அல்லாஹ்வே அறிவான்.

சூனியம் என்பதும், கண்கட்டி வித்தை என்பதும் வெவ்வேறான அம்சங்கள் என்பதை ஹதீஸ் மறுப்பாளர்கள் தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அறிஞர்களெல்லாம் எவ்வளவு தெளிவாகப் பிரித்து அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பின்வரும் உதாரணங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்:

மஜ்மூ அல் ஃபத்தாவா இப்ன் பாஸ்: பாகம் 8, பக்கம் 101-114 இன் பதிவுகளில் அஷ் ஷெய்க் பின் பாஸ் இதற்குக் கொடுத்திருக்கும் விளக்கத்தைப் பருங்கள்:

“(B)பதாஇல் ஃபவாஇத்” எனும் நூலில், இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுவதாக ஷெய்க் பின் பாஸ் கூறும் வார்த்தைகள் இவை:

7:116 வசனத்தில் சூனியக்காரர்கள் மக்கள் கண்களுக்கு சூனியம் செய்தார்கள் என்று கூறுகிறான். இந்த சூனியம் இரண்டு அடிப்படைகளில் பலித்தது.

முதலாவது அடிப்படை: கயிறுகளையும், கைத்தடிகளையும் ஜின்கள் தான் அசைத்தன. ஆனால், அந்த ஜின்கள் யாரும் பர்க்க முடியாத வடிவத்தில் இருந்ததனால் தான் அவை தானாக அசைவது போல் தோன்றின. இரண்டாவது அடிப்படை: பார்த்துக் கொண்டிருப்பவர்களின் புலன்களுக்கு இல்லாத ஒரு பொருளைப் பார்ப்பது போல் ஒரு பிரமையும் ஊட்டப்பட்டது. சூனியக்காரர்கள் இந்த இரண்டு அடிப்படைகளிலும் தேவைக்கேற்ப சூனியம் செய்வார்கள்.

சூனியத்தை மறுக்கக் கூடிய முஃதஸிலாக்கள் கூறுவது போல், சூனியக்காரர்கள் பாதரசம் போன்ற பதார்த்தங்களைக் கொண்டு தந்திரமாகக் கயிறுகளை வீங்கச் செய்வதன் மூலம் கயிறுகள் அசைவதில்லை. இவர்களது இந்த வாதம் பல அடிப்படைகளில் தவறாகும்.

இவ்வாறான தந்திரமாக இது இருந்திருந்தால், அந்த அசைவு கற்பனை சார்ந்த அசைவாக (நெளிவது போல தோற்றமளித்தது) இருந்திருக்காது; மாறாக, நிஜமான அசைவாகவே இருந்திருக்கும். இவ்வாறிருந்தால், “கண்களுக்கு சூனியம் செய்தார்கள்” என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்; மேலும் இதை “ஸிஹ்ர்” என்று அல்லாஹ் அழைத்திருக்க மாட்டான்; மாறாக “தந்திரம்” என்று தான் கூறியிருப்பான்.

மேலும், முஃதஸிலாக்கள் கூறுவது போல் இது தந்திரமாக இருந்திருந்தால், கயிற்றுக்குள் பாதரசத்தை மறைத்து செய்யப்பட்ட ஒரு வித்தைக்குள் ஒளிந்திருக்கும் தந்திரத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டாலேயே சூனியக்காரர்கள் படுதோல்வி அடைந்து விடுவார்கள். அந்த அடிப்படையில், பாதரசம் பற்றிய உண்மையை மூஸாவுக்கு ஒரு வஹி மூலம் அல்லாஹ் தெரிவித்தாலே போதுமானதாக இருந்திருக்கும்; மறுகணமே மூஸா கயிற்றுக்குள் ஒளிந்திருக்கும் பாதரசத்தை வெளியில் எடுத்து, மக்கள் மத்தியில் அவர்களின் தந்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பார். இவ்வளவு அற்பமான ஒரு தந்திரத்தின் மூலம் அசைந்த வெறும் கயிறுகளை விழுங்குவதற்காக அல்லாஹ் தனது மகத்தான அற்புதத்தை வீணடித்திருக்க மாட்டான்.

மேலும், இது தந்திர வித்தையாக இருந்திருந்தால், இதைச் செய்வதற்கு தொழிநுட்பம், இரசாயணவியல், பொறியியல் போன்ற துறைகளில் கரைகண்ட தொழிநுட்பவியலாளர்களே ஃபிர்அவுனுக்குத் தேவைப்பட்டிருப்பார்கள்; சூனியக்காரர்கள் அல்ல.

இவ்வாறான துறைசார் நிபுணர்கள் விசயத்தில் ஃபிர்அவுனுக்கு எந்தப் பஞ்சமும் இருக்கவில்லை. தனது சாம்ராஜ்ஜியத்தில் இருந்த கைதேர்ந்த பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், இரசாயணவியலாளர்கள் போன்ற அனைவரும் ஏற்கனவே ஃபிர்அவுன் வசம் தான் பணியில் ஈடுபடுத்தப் பட்டுக் கொண்டிருந்தார்கள். இவ்வாறான நிபுணர்களே பிரமிட் கட்டுதல் போன்ற பாரிய செயல்திட்டங்களில் ஈடுபடுத்தப் பட்டிருந்தார்கள். இவர்களில் சிலரை வைத்தே ஃபிர்அவுன் இந்தத் தந்திர வித்தைகளைச் சாதித்திருந்திருப்பான்; வீணாக நாடு முழுவதும் ஆளனுப்பி, இருக்கும் சூனியக்காரர்களையேல்லாம் வரவழைத்து ஒன்றுசேர்த்திருக்க மாட்டான்.
( தா(Dh)ர் ஆலம் அல் ஃபவா’இத், தஹ்கீக்: பக்கம் 747 )

ஆக, இவ்வாறான தர்க்க ரீதியான வாதங்களின் மூலமும் ஹதீஸ் மறுப்பாளர்களின் வாதங்களில் இருக்கும் பொய், மற்றும் பித்தலாட்டங்கள் மீண்டும் ஒரு தடவை இங்கு தோலுரித்துக் காட்டப் படுகிறது.

எகிப்தியர்களது சூனியம் பற்றிய அறிமுகத்தை இத்தோடு நிறுத்திக் கொண்டு, இனி வரலாற்றின் அடுத்த கட்டத்தை அடையலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *