Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 10)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 10)

Magic Series – Episode 10:

சூனியம் – ஒரு விளக்கம்:

4. நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியா:

பாபிலோன், எகிப்து, மற்றும் பாரசீக சூனியம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு தனித்துவமான வடிவில் தான் தான் நபி (ஸல்) அவர்கள் காலத்து அரேபியாவில் சூனியம் காணப்பட்டது. உலகளாவிய ரீதியில் இன்று நடைமுறையில் இருக்கும் அனேகமான சூனியங்கள் இந்த வகையான சூனியத்திலிருந்து முளைத்திருக்கும் கிளைகள் தாம்.

ஏற்கனவே பாபிலோனியர்கள், மற்றும் எகிப்தியர்கள் நடைமுறையிலிருந்த சூனியத்தில் இருக்காத பல புதிய அம்சங்கள் / உத்திகள் / நுட்பங்கள் அரபுகள் காலத்திலிருந்த இந்த வகையில் கூடுதலாக சேர்க்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக தலைகீழாக உச்சரிக்கப் படும் சில குர்ஆன் வசனங்களின் வடிவங்கள், குர்ஆன் பிரதிகளைக் கேவலப் படுத்தும் விதமாகக் கையாளப்படும் சில உத்திகள் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தற்கால உலகில் சர்வதேச அரங்கில் (மேலைத்தேய நாடுகள் உட்பட) நடைமுறையிலிருக்கும் சூனியத்திலெல்லாம் இவ்வாறான உத்திகளைப் பரவலாகக் காண முடிகிறது. இஸ்லாம், மற்றும் அரபு மொழி என்றால் என்னவென்றே தெரியாத பல தற்கால சூனியக்காரர்கள் சூனியம் வைக்கும் போது கூட, தெளிவான அரபு எழுத்துக்களில் குர்ஆன் வசனங்களைத் தலைகீழாக எழுதுகிறார்கள் என்ற உண்மை பட்டவர்த்தனமாகப் பல ஆய்வாளர்கள் மூலமாகவும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

உலகில் என்ன நடக்கிறது, எப்படியெப்படியெல்லாம் சூனியக்காரர்கள் செயற்படுகிறார்கள் என்பதைக் கொஞ்சம் சுற்றுமுற்றும் பார்த்த பிறகாவது ஹதீஸ் மறுப்பாளர்கள் வாதங்களை வைக்க முனைந்திருந்தால், கொஞ்சமாவது ஏற்புடையதாக இருந்திருக்கும். சூனியம் பற்றி எல்லாம் தெரியுமென்று சொல்லிக்கொண்டு திரியும் இவர்கள், உண்மையில் ஒன்றும் அறியாத நிலையிலேயே மக்களை அனாவசியமாகக் குழப்பிப் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிகிறது.

அரபுகள் வழக்கத்திலிருந்த இந்த வகையான சூனியத்தில் பிரதானமாக அரபு எழுத்துக்கள், குறியீடுகள், தலிஸ்மான்கள் (கோலங்கள் / சாதுரங்க கட்டங்கள்) போன்றவை பரவலாகக் காணப்படும். பாபிலோனியர்களது ஏழு நட்சத்திரக் கோட்பாட்டிலிருந்து கொஞ்சம் விருத்தியடைந்து, பன்னிரண்டு நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய கோட்பாடு இந்த வழிமுறையில் நடைமுறைக்கு வந்தது. இந்தப் பன்னிரண்டு நட்சத்திரக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் இவர்களது சூனியம் அமைந்திருந்தது.

மேலும், சூனியம் செய்யும் போது சூனியக்காரனுக்கும், சம்பந்தப்பட்ட ஜின்களுக்கும் இடையில் நடக்கும் ஒப்பந்தத்தின் கைச்சாத்துப் பிரதிகள் போலவும், குறிவைக்கப்பட்ட மனிதனைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள உதவும் அடையாள அட்டையைப் போலவும் தொழிற்படும் விதமாக, சூனியம் செய்யப்படும் மனிதரது தலைமுடி, அணியப்பட்ட ஆடையின் ஒரு பகுதி, காலடி மண் போன்ற அம்சங்களும் இந்த வகையான சூனியத்தில் மேலதிகமாக உள்ளடக்கப் பட்டிருக்கின்றன.

தலைமுடி, காலடி மண் போன்றவற்றை சூனியத்துக்குப் பயன்படுத்துவதற்கான நோக்கங்களுள் பிரதானமான ஒரு நோக்கம் என்னவென்றால், யாரைக் குறி வைத்து சூனியம் செய்யப் படுகிறதோ, அவரைத் துல்லியமாகத் தேடி அடையாளம் கண்டு கொள்வதற்கு இவ்வாறான பொருட்கள் ஜின்களுக்கு மேலதிகமாக உதவும். அதாவது, போலீஸ் மோப்ப நாய்க்கு எப்படி ஒரு பொருளை ஒரு தரம் முகர்ந்து பார்க்கக் கொடுப்பதன் மூலம், அந்தப் பொருளுக்குரிய நபரை மோப்பம் பிடித்து வீடு வரை சென்று ஆளைக் காட்டிக் கொடுக்கும்ப் படி செய்யப் படுகிறதோ, அதே போல தான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான பொருட்களின் நோக்கம் இது மட்டும் தான் என்று நான் கூறவில்லை. இது அல்லாத இன்னும் பல நமக்குத் தெரியாத நுணுக்கங்கள் இதனுள் இருக்கத் தான் செய்கின்றன. அதெல்லாம் நமக்கெதற்கு?

அரபுகள் காலம் தொட்டு இன்று வரை இருக்கும் இந்த வகையான சூனியத்தை “அப்ஜத்” (ABJAD) சூனியம் என்று கூறுவார்கள். இருக்கும் சூனியங்களில் மிக மோசமான வடிவங்களுள் இந்த வகையும் ஒன்று. “அப்ஜத்” சூனியம் என்று இது ஏன் அழைக்கப் படுகிறது என்பதையும் கொஞ்சம் பார்த்து விடலாம்:

ஏற்கனவே கூறிய பிரகாரம் இவர்களது சூனியத்தில் அரபு எழுத்துக்களை எண் சாஸ்திரத்தோடு ஒருங்கிணைத்துத் தயாரிக்கப்பட்ட ஓர் அட்டவணை இருக்கும். அதில் அரபு எழுத்துக்கள் வழமையான ஒழுங்குக்கு மாற்றமான ஒழுங்கில் ஆவர்த்தண அட்டவனை போல் எழுதப் பட்டிருக்கும்.

ஒவ்வோர் எழுத்துக்கும் என்று ஓர் இலக்கப் பெறுமாணம் வழங்கப் பட்டிருக்கும். “அ” = 1, “ப” = 2, “ஜ” = 3, “த” = 4, “ஹ” = 5, “வ” = 6…. என்று அந்த அட்டவணை தொடரும். இதில் ஆரம்பத்திலிருக்கும் அ, ப, ஜ, த எனும் நான்கு எழுத்துக்களையும் சேர்த்துத் தான் “அப்ஜத்” என்று இந்த அட்டவணையை அழைப்பார்கள்.

இந்த அட்டவணைப் பிரகாரம் தான் சூனியம் செய்யத் தேவைப் படும் நபருடைய மூலகத்தைக் கண்டுபிடிப்பார்கள். அது எப்படியென்பதையும் கொஞ்சம் பார்த்து விடலாம்:

அப்ஜத் சூனியத்தில் ஈருபடுபவர்களது நம்பிக்கைப் பிரகாரம், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐம்பூதங்களும் ஐந்து சக்திகள். இந்த ஐந்து சக்திகளையும் நிர்வகிப்பதற்குப் பிரத்தியேகமான ஐந்து கடவுள்கள் (ஜின்கள்) இருக்கிறார்கள் என்பது தான் இவர்களது நம்பிக்கை. ஏற்கனவே பாபிலோன் சூனியக்காரர்களது கோட்பாட்டிலிருந்து இவர்கள் ஏற்றுக் கொண்ட ஏழு நட்சத்திரக் கடவுள்களோடு ஐம்பூதங்களுக்குச் சொந்தக்காரர்களான இந்த ஐந்து கடவுள்களையும் சேர்த்தால், மொத்தம் பன்னிரண்டு கடவுள்கள்.

இவ்வாறு ஐந்து மேலதிகக் கடவுள்கள் இந்த சூனியத்தில் சேர்க்கப் பட்டதன் விளைவாகத் தான் இவர்களது சூனியம், பாபிலோன் சூனியத்தைப் போல் ஏழு நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்காமல், பன்னிரண்டு நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கிறது.

இந்தப் பன்னிரண்டு நட்சத்திரங்களும் தான் இன்று, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு ராசிகள் என்று ஜோதிடத்தில் அழைக்கப் படுகின்றன.

இந்த நம்பிக்கைப் பிரகாரம் ஒருவருக்கு சூனியம் செய்ய வேண்டுமென்றால், முதலில் சூனியக்காரன் அந்த மனிதனது பெயரையும், அவனது தாயின் பெயரையும் தெரிந்து கொள்வான். தந்தையின் பெயர் பற்றி இவர்கள் அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள். இது ஏனென்று கூட சிலர் யோசிக்கலாம். அதையும் சுருக்கமாக சொல்லி விடலாம்.

சூனியம் என்பது ஷைத்தான் மூலம் செயல்படும் ஒரு கலை. மனிதர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைக்கு நேர்மாற்றமாக நடக்க வேண்டும் என்பதைத் தான் ஷைத்தான் விரும்புகிறான். ஒவ்வொரு மனிதனும் தனது தந்தையின் பெயர் கொண்டே அழைக்கப் பட வேண்டும் என்பது தான் அல்லாஹ்வின் கட்டளை. இந்தக் கட்டளைக்கு நேர்மாற்றமாகவே சூனியத்தில் ஈடுபடுவோர் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், சூனியம் செய்பவர்கள் எவருமே தந்தையின் பெயரைக் கொண்டு ஒரு மனிதனை அழைப்பதில்லை; தாயின் பெயர் கொண்டு தான் அழைப்பார்கள்.

ஆகவே, இந்த அடிப்படையில் ஒருவனது பெயரையும், அவனது தாயின் பெயரையும், இரண்டுக்கும் நடுவில் “பின்” என்ற அரபுச் சொல்லையும் சேர்ப்பதன் மூலம் அந்த மனிதனது முழுப் பெயரை உருவாக்கிக் கொள்வார்கள். இந்த முழுப்பெயரிலும் இருக்கும் ஒவ்வோர் எழுத்துக்கும் உரிய இலக்கப் பெறுமானத்தை “அப்ஜத்” அட்டவணை மூலம் பெற்றுக் கொள்வார்கள். இறுதியில் மொத்தப் பெயருக்கும் உரிய இலக்கப் பெறுமனங்களின் கூட்டுத் தொகையை எடுத்து, அதைப் பன்னிரண்டால் வகுத்துக் கொண்டே வருவார்கள். பன்னிரண்டுக்கு உட்பட்ட ஓர் இலக்கம் இறுதி விடையாக வரும் வரை இவ்வாறு பன்னிரண்டால் வகுத்துக் கொண்டே வருவார்கள்.

இறுதியில் வரும் பன்னிரண்டுக்குக் குறைவான அந்த இலக்கம், முழு இலக்கமாக இல்லாமல் தசம தானங்களோடு வந்தால், அதை மட்டந்தட்டி, முழு இலக்கமாக்குவார்கள். இவ்வாறு மட்டந்தட்டும் போது, .6 இல் இருந்து அதற்கு மேற்பட்ட பெறுமானங்களைக் கூடிய இலக்கத்துக்கும், .5 இல் இருந்து அதற்குக் கீழிருக்கும் பெறுமானங்களைக் குறைந்த இலக்கத்துக்கும் மட்டந்தட்டி, அதை முழு இலக்கமாக மாற்றிக் கொள்வார்கள்.

இவ்வாறு இறுதியில் வரும் பன்னிரண்டுக்கு உட்பட்ட அந்த இலக்கம், பன்னிரண்டு நட்சத்திரங்களுள் (ராசி) எந்த நட்சத்திரத்துக்கு உரியதென்று பார்ப்பார்கள். உதாரணத்துக்கு, கணித்தெடுக்கப்பட்ட இலக்கம் 3 ஆக இருந்தால், அது “மிதுனம்” எனும் நட்சத்திரத்துக்குரியது. ஆகவே, இந்த அடிப்படையில் அந்த மனிதனது ராசியைக் கண்டறிந்து கொள்வார்கள்.

அடுத்த கட்டமாக அந்த ராசியானது, ஐம்பூதங்களுள் (நெருப்பு, நீர், நிலம், காற்று) எந்தப் பூதத்தோடு ஒத்துப் போகக் கூடியது என்பதையும் பார்த்துக் கொள்வார்கள்.

இவ்வாறு கணிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட நட்சத்திரத்துக்குச் சொந்தமான ஜின்னுக்கு வழிபாடுகள் செய்வதன் மூலம் சூனியம் செய்வார்கள். பிறகு செய்யப்பட்ட அந்தச் சூனியத்தை, அது எந்தப் பூதத்துக்கு உரியதோ, அந்தப் பூதத்தோடு கலந்து விடுவார்கள்.

உதாரணத்துக்கு, கணிப்பீட்டின் பிரகாரம் குறிப்பிட்ட ஒரு மனிதனது பூதம் நெருப்பாக இருந்தால், அவனுக்குச் செய்யப் படும் சூனியத்தை நெருப்பில் எரிப்பார்கள்; அல்லது சாம்பிரானிப் புகை போல் நெருப்பிலிட்டுப் புகைப்பார்கள். ஒருவேளை அந்த மனிதனது பூதம் நிலமாக இருந்தால், அவனுக்குச் செய்யப்படும் சூனியத்தை நிலத்தில் எங்காவது புதைத்து விடுவார்கள்.

இது தான் “அப்ஜத்” சூனியத்தின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, நபி (ஸல்) அவர்களுக்கு லபீத் என்ற யூதன் சூனியம் செய்த சம்பவத்தை ஓர் உதாரணமாக நோக்கலாம்:

சூனியக்காரன் லபீத்தின் “அப்ஜத்” கணிப்பீட்டு சாஸ்திரத்தின் பிரகாரம் நபி (ஸல்) அவர்களது முழுப் பெயர் “முஹம்மத் பின் ஆமினாஹ்” என்று தான் வரும். இதிலிருக்கும் மொத்த அரபு எழுத்துக்களையும் “அப்ஜத்” அட்டவணைப்படி கூட்டினால், மொத்தப் பெறுமானம் 240 என்று வரும். பன்னிரண்டுக்கு உட்பட்ட ஓர் இலக்கம் வரும் வரை இந்த இலக்கத்தைப் பன்னிரண்டால் வகுத்துக் கொண்டே போனால், இறுதியில் 1.666 என்ற விடை வரும்.

இந்த விடை இலக்கத்தை சூனியக்காரர்கள் மட்டந்தட்டுவது போல் மட்டந்தட்டினால், இலக்கம் 2 வரும். இது ரிஷபம் எனும் நட்சத்திரத்துக்கும், நீர் எனும் பூதத்துக்கு உரிய இலக்கம். அதாவது இந்தக் கணிப்பீட்டின் பிரகாரம் நபி (ஸல்) அவர்களது பூதம் நீர் என்பது தெரிகிறது. 2 எனும் இந்த இலக்கத்துக்கு உரிய ஒருவருக்கு எவன் சூனியம் செய்தாலும், அந்த சூனியத்தை அவன் கண்டிப்பாக நீருக்குள் தான் வைப்பான்.

இப்போது நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்ட ஹதீஸை நினைவு கூர்ந்து பாருங்கள். நபியவர்களுக்குச் செய்யப்பட்ட சூனியத்தை லபீத் எங்கு வைத்தான்? தர்வான் எனும் கிணற்றுக்குள் நீருக்கு அடியில் அமிழ்த்தி வைத்திருந்தான். இந்த ஓர் உதாரணத்தின் மூலம் “அப்ஜத்” சூனியத்தின் கணிப்பீட்டு சாஸ்திரம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்த “அப்ஜத்” சூனியம் இரண்டு பிரதான வகைகளாக வகுக்கப் பட்டிருக்கும்:

1. “ஸர்ஃபுன்” (விலக்கல் வகை) 2. “அத்ஃபுன்” (சேர்த்தல் வகை.)

வசியம் செய்தல், குடும்பம் பிரித்தல், சில நோய்களைத் தோற்றுவித்தல், அதே நோய்களுக்கு மருத்துவம் செய்தல், பிரமை ஏற்படுத்தல், பைத்தியம் உண்டாக்குதல் போன்ற எல்லா வகையான சூனியங்களும் இந்த இரண்டு பிரதான வகைகளுக்குள் தான் அடங்கும். இது பற்றிய விளக்கம் இப்போதைக்குப் போதுமென்று கருதுகிறேன்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *