Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 11)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 11)

Magic Series – Episode 11:

சூனியம் – ஒரு விளக்கம்:

4. ஸுலைமான் (அலை) காலத்து சூனியம்:

இது இன்னொரு வகையான சூனியம். பிரதானமாக யூத சமூகங்கள் மத்தியில் இந்த வகையான சூனியம் தொன்று தொட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது. இதைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தான் அல்லாஹ் 2:102 வசனத்தில் லேசாகத் தொட்டுக் காட்டுகிறான். இந்த வகையான சூனியமும் கிட்டத்தட்ட ஏற்கனவே விவரிக்கப் பட்ட “அப்ஜத்” சூனியத்தைப் போல தான் இருக்கும். வித்தியாசப் படுத்திக் காட்டுவதற்கு இதில் பெரிய வேறுபாடுகள் இருக்காது.

இதைத் தனித் தலைப்பில் குறிப்பிட்டதன் நோக்கம், இந்த வகையான சூனியம் எப்படி செய்யப்படுகிறது என்பதை விபரிப்பதற்காகவல்ல; மாறாக, ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக்காலத்தையொட்டிப் பல அவதூறுகளும், பொய்யான செய்திகளும் யூதர்களால் பரப்பப் பட்டு வந்தன. மேலும், இதைப் பற்றித் தான் குர்ஆன் 2:102 வசனத்திலும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காரணங்களைக் கருத்திற் கொண்டு, இதற்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்த வகையான சூனியம் எப்படியிருக்கும் என்பதை விட, இது வழக்கத்திலிருந்த ஸுலைமான் (அலை) அவர்களது காலம் பற்றிய சில பின்னணிகளை அறிந்து கொள்வதே பிரயோசனமாக இருக்குமென்று கருதுகிறேன். இந்த அடிப்படையில், குர்ஆன் வசனம் 2:102 இல் சொல்லப்பட்டிருக்கும் கூற்றுக்கு அமைய, ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சியை ஒட்டிய காலத்தில் ஷைத்தான்கள் மக்களுக்குப் போதித்தது என்ன? என்பது பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்:

ஸுலைமான் (அலை) அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஜெரூசலம் நகரின் கலாச்சாரப் பின்னணி:

எவரது ஆட்சிக் காலத்தையும் பொன்றதல்ல ஸுலைமான் (அலை) அவர்களது காலம். எந்தவொரு ஊரின் நிலவரத்தையும் போன்றதல்ல ஸுலைமான் (அலை) அவர்களது காலத்தில் ஜரூசலம் நகரின் நிலவரம். உலக வழமைக்கு முற்றிலும் மாற்றமான ஒரு சூழ்நிலை தான் ஸுலைமான் (அலை) அவர்களது காலத்தில் இஸ்ராயீலிய தேசத்தில் நிலவியது.

சிறுவர் மந்திரக் கதைகளின் கற்பனைப் பாத்திரங்கள் போன்ற பல பாத்திரங்கள் நிஜமாகவே மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த காலம் அது. உண்மையில் சொல்லப் போனால், இன்று சிறுவர் காட்டூன், மற்றும் கதைகளில் காணப்படும் பல அமானுஷ்யமான விடயங்கள் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக் காலத்தில் யதார்த்தமாக இருந்த பல உண்மைகளை அடிப்படியாக வைத்துத் தான் புனையப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

உதாரணத்துக்கு, ஸுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் காற்றையும், பறவைகளையும், ஜின்களையும் வசப்படுத்திக் கொடுத்தான் என்றும், காற்றின் மூலம் அவர்கள் ஒரு மாதகால பயண தூரத்தை ஒரு காலைப் பொழுதுக்குள் காற்றில் பறந்தே பயணித்து விடுவார்கள் என்றும் குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறிக் காட்டுகிறான்.

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது. மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (34:12)

மேலும் குர்ஆனில் வேறு பல இடங்களிலும் ஏராளமான ஜின்களை அல்லாஹ் ஸுலைமான் (அலை) அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறான். மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல பிரும்மாண்டமான கட்டுமானப் பணிகள், கடலுக்கடியில் சென்று முத்துக்குளித்தல் போன்ற பல்வேறு பணிகளையும் சக்தி வாய்ந்த பல ஜின்களை வைத்து ஸுலைமான் (அலை) அவர்கள் சாதிப்பவராக இருந்தார் என்றும் குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறான குர்ஆன் வசனங்களை வைத்து, ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக் காலம் எப்படி இருந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

பறவைகளோடு சகஜமாகப் பேசக் கூடியவராகவும், நினைத்த நேரத்தில் நினைத்த இடத்துக்குக் காற்றில் பறந்து செல்லும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்கும் ஓர் அதிசய மனிதனது கட்டளைக்குக் கீழ்படிந்து, இராட்சத பூதங்கள் போன்ற பல்வேறு வடிவங்களில் ஜின்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்முன்னால் நிறுத்திப் பார்த்தால், நான் உணர்த்த விரும்பும் உண்மை புரியும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், மந்திரக் கதைகளில் சித்தரிக்கப் படுவது போல், மனிதர்களும் ஜின்களும் சர்வசாதாரணமாக ஒருவரோடு ஒருவர் அலவளாவிக்கொண்டிருந்த ஒரு காலம் அது. அதே போல் ஜின்களது அபார ஆற்றல்களையும், அதிசய சக்திகளையும் மக்கள் கண்கூடாகக் கண்டு கொண்டிருந்த காலம் அது.

இங்கு புரிந்து கொள்ள வேண்டிய ஓர் அம்சம் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் தான் எல்லா ஜின்களும் இருக்கும் என்றோ, அல்லது ஸுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஜின்களெல்லாம் கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் தான் நடமாடிக்கொண்டிருந்தன என்றோ யாராவது சொல்வதாக இருந்தால், அது ஊகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனை வாதம் மட்டுமே.

ஏனெனில், ஜின்கள் என்றாலே சுத்தமாக ஒருபோதும் மனித கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் தான் இருக்கும் என்று கூறக் கூடிய எந்தவொரு மார்க்க ஆதாரமும் இல்லை. இதற்கு மாறாக, சிலபோது கண்ணுக்குத் தெரியும் விதத்திலும், மற்றும் சிலபோது கண்ணுக்குத் தெரியாத வடிவத்திலும் ஜின்கள் வந்து போகக் கூடியவை என்பது தான் மார்க்கத்தின் நிலைபாடு.

ஆகவே, இந்த அடிப்படையில் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக் காலத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஜின்களில் அனேகமானவை, கண்ணுக்குத் தெரியும் வடிவத்திலும் தான் இருந்தன என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாகத் தான் 2:102 வசனம் கூட இருக்கிறது. அது எப்படியென்பதை இன்னும் கொஞ்சத்தில் பார்க்கலாம். அதற்கு முன், ஜின்கள் பற்றி ஒரு விசயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜின்களைப் பொருத்தவரை அவை தமது தேவைக்கேற்ப, மூன்று வகையான வடிவங்களில் மக்கள் மத்தியில் நடமாடக் கூடியவையாக இருக்கின்றன:

1. சுத்தமாகக் கண்ணுக்குத் தெரியாத வடிவம்
2. தெளிவாகக் கண்ணுக்குத் தெரியும் வடிவம்
3. ஓரளவு கண்ணுக்குத் தெரியும் அரகுறை வடிவம் (நிழல், மற்றும் ஆவி போன்ற தோற்றம்)

இது பற்றி விரிவாக இன் ஷா அல்லாஹ் ஜின்கள் பற்றிய தொடரில் பார்க்கலாம். இப்போதைக்கு இவ்வளவும் போதும்.

ஸுலைமான் (அலை) அவர்கள் காலத்திலும் ஜின்கள் இவ்வாறான எல்லா வடிவங்களிலும் பணியாற்றிக் கொண்டிருந்தன என்று தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவு தூரத்துக்கு ஜின்கள் பற்றி நான் பிரஸ்தாபிப்பதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. தொடர்ந்து வாசிக்கும் போது இதன் நியாயங்கள் புலப்படும்.

ஸுலைமான் (அலை) அவர்களிடம் பணியாற்றிக் கொண்டிருந்த ஜின்களில் அனேகமானவை ஷைத்தானிய ஜின்களாகவே இருந்தன. இப்லீஸின் பட்டாளத்தைச் சேர்ந்த பல ஜின்கள் பலாத்காரமாக அல்லாஹ்வால் வசப்படுத்தப்பட்டு, ஸுலைமான் (அலை) அவர்களிடம் அடிமைகளாக ஒப்படைக்கப்பட்டன.

இந்த ஜின்களில் அனேகமானவை தாமாக மனமுவந்து இந்தப் பணிகளைச் செய்யவில்லை; வேறு வழியில்லாமல் முணுமுணுத்துக் கொண்டு தான் பணியாற்றிக் கொண்டிருந்தன. இதைப் பின்வரும் குர்ஆன் ஆதாரங்கள் மூலம் புரிந்து கொள்ளலாம்:

ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். (38 : 37,38)

“அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்” (34:12)

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்தியபோது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினமே (கரையான்) அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே” என்று ஜின்கள் கருதின. (34:14)

ஆக, இந்த வசனங்கள் மூலம், அனேகமான ஜின்கள் கோபத்தோடும், முணுமுணுப்போடும் தான் ஸுலைமான் (அலை) அவர்களது கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டிருந்தன.

பொதுவாக யாரையாவது நாம் அவரது விருப்பத்துக்கு மாற்றமாக அடிமைப்படுத்தி வேலை வாங்கினால், அது விசயத்தில் அவரது மனோ நிலை எவ்வாறிருக்கும் என்பதை நாம் அறிவோம். அவர்கள் வேறு வழியில்லாமல் அடங்கியொடுங்கி வேலை செய்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், தம்மை இவ்வாறு அடக்குமுறை செய்வதற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக தம்மால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்யாமலிக்க மாட்டார்கள். இது தான் மனித சுபாவம். இதே சுபாவம் தான் ஜின்களுக்கும் இருக்கின்றது.

இவ்வாறு அதிருப்தியோடு பணியாற்றிக் கொண்டிருந்த பல ஜின்கள் எப்படியாவது இந்தக் கொடுமைக்கு வஞ்சம் தீர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக்கு எதிராக அவை சதி செய்தன.

ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக்கு எதிராக யூத மக்களைத் திருப்பி விடும் நோக்கத்திலும், அவரது நபித்துவத்தைப் பொய்ப்பிக்கும் நோக்கத்திலும் மக்களிடம் ஜின்கள் புணைந்து கூறிய கதைகளும், அந்த மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்த செயலும் கூட இவ்வாறான சதித்திட்டங்கள் தாம்.

குறிப்பு: சூனியம் என்பது ஜின்கள் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கும் ஒரு கலை என்பதற்கு மேற்கூறப்பட்ட செய்தி கூட ஓர் ஆதாரம் தான். அதாவது, ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக் காலத்தில் ஜின்கள் (ஷைத்தான்கள்) தாம் சூனியத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என்று அல்லாஹ் 2:102 வசனத்தில் குறிப்பிடுகிறான். ஒருவருக்கு எந்த விசயம் பற்றிய தெளிவான ஞானம் இருக்கிறதோ, எந்த விசயத்தில் அவருக்கு நேரடி சம்பந்தம் இருக்கிறதோ, அவர் தான் அதை மற்றவருக்கு ஒரு பாட நெறியாகக் கற்றுக் கொடுக்க முடியும். இங்கு பனூ இஸ்ரவேலர்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததே ஜின்கள் தாம் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜின்களுக்கு சூனியத்தில் நேரடி சம்பந்தம் இருக்கிறது என்பதை இது பட்டவர்த்தனமாக நமக்கு இன்னொரு தடவை உறுதிப் படுத்துகிறது.

குர்ஆன் வசனம் 2:102 இல் “ஸுலைமான் ஆட்சியின் போது ஷைத்தான்கள் கூறியதை (கட்டுக்கதையை) இவர்கள் (யூதர்கள்), (உண்மையென்று நம்பிப்) பின்பற்றினர்” என்றும், “ஸுலைமான் (இறைவனை) நிராகரிக்கவில்லை; மாறாக ஷைத்தான்களே நிராகரித்தனர்; அவர்கள் மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்தனர்” என்றும் அல்லாஹ் கூறுகிறான். இந்த இரண்டு வாக்கியங்கள் மூலமும் இரண்டு விசயங்கள் தெளிவாகின்றன.

ஒன்று: ஸுலைமான் (அலை) அவர்களது காலத்தில் ஜின்கள் ஏதோ ஒரு கட்டுக்கதையை மக்கள் மத்தியில் பரப்பி விட்டார்கள் என்ற தகவல்.

இரண்டு: அதே நேரம் அந்த ஜின்கள் மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுக்கவும் செய்தார்கள் என்ற தகவல்.

இதில், சூனியத்தைக் கற்றுக் கொடுத்த தகவல் பற்றிய அனேகமான செய்திகளை நாம் ஏற்கனவே பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ஆனால், இந்தக் காலப் பகுதியில் ஜின்கள் மக்கள் மத்தியில் பரப்பி விட்ட கட்டுக்கதை என்னவென்பதைப் பற்றி நாம் இதுவரை பார்க்கவில்லை. அதையும் கொஞ்சம் பார்த்து விடுவதே பொருத்தம் என்று கருதுகிறேன்.

இது பற்றி சொல்லப்படும் குர்ஆன் வசனங்கள், அவற்றுக்கான விளக்கங்கள், மற்றும் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக் காலம் பற்றிய விபரங்கள், சூனியத்தைப் பற்றிய மார்க்க ஆதாரங்கள் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து விளங்க முயற்சிக்கும் போது இந்தக் கட்டுக்கதை என்னவென்பதை இலகுவாக அனுமானிக்க முடிகிறது. அந்த அனுமானத்தின் அடிப்படையிலேயே ஜின்கள் பரப்பிவிட்டதாகக் கருதப்படும் பின்வரும் கட்டுக்கதை அமைந்திருக்கிறது:

ஸுலைமான் (அலை) காலத்தில் ஜின்கள் பரப்பிய கட்டுக்கதை என்ன?

ஸுலைமான் எனும் இந்த அரசன் ஜின்களாகிய எம்மையெல்லாம் அடக்கியாள்கிறார்; வேலை வாங்குகிறார்; காற்றில் பறந்து செல்கிறார்; பறவைகளிடம் பேசுகிறார்; எறும்புகளிடம் பேசுகிறார். இவருக்கு அபாரமான ஆற்றல்கள் இருக்கின்றன; இதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், இந்த அபார ஆற்றல்களெல்லாம், உண்மையில் உங்கள் இறைவன் இவருக்கு வழங்கிய அற்புதங்களோ, அருட்கொடைகளோ அல்ல; உண்மையில் ஸுலைமான் என்பவர் ஒரு நபி கூட கிடையாது. இவர் ஒரு சூனியக்காரர். சூனியம் எனும் சக்தி வாய்ந்த ஒரு கலையின் மூலம் தான் எம்மைப் போன்ற பல சக்தி வாய்ந்த ஜின்களையெல்லாம் வசப்படுத்தி வைத்துக் கொண்டு இந்த ஸுலைமான் காரியம் சாதிக்கிறார். வேதம் என்று சொல்லி இவர் உங்களுக்குப் போதிப்பதெல்லாம் இறைவேதமல்ல; சூனியம் மட்டுமே.

மேலும் கட்டுக்கதை தொடர்கிறது…

சூனியம் என்பது ஒரு சக்தி வாய்ந்த கலை. இது ஒரு ஆயுதத்தைப் போன்றது. இதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம்; கெட்டதுக்கும் பயன்படுத்தலாம். ஸுலைமான் இதை நல்லதுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார். அதனால் தான் அவர் உங்களிடம் நல்லவர் என்ற பெயரை வாங்கியிருக்கிறார். சூனியத்தின் மூலம் தான் ஸுலைமான் எங்களைப் போன்ற ஜின்களையும், காற்று, பறவைகள் போன்றவற்றையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வசப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார்.

சூனியம் என்பதும் அல்லாஹ்வின் பால் இருந்து உதித்த ஒரு ஞானம் தான். ஆனால், இந்த ஞானத்தை அல்லாஹ் இறைவேதம் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் வழங்குவதில்லை. இதற்கென்று சில வானவர்களை அல்லாஹ் நியமித்து இருக்கிறான். இது பற்றிய தூய ஞானம் சக்தி வாய்ந்த அந்த வானவர்களிடம் தான் இருக்கிறது. முன்னொரு காலத்தில் பாபில் நகரில் வாழ்ந்த ஹாரூத், மாரூத் என்ற இரண்டு வானவர்களும் இவ்வாறானவர்கள் தாம். பல மனிதர்களுக்கு அந்தக் காலத்தில் அவர்கள் தாம் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.

அவர்கள் கற்றுக் கொடுத்த அந்த சூனியம் எங்களுக்குத் தெரியும். விரும்பியவர் அதை எங்களிடம் கற்றுக் கொள்ளலாம். சூனியம் என்ற கலையைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதனால் தான் ஸுலைமான் சக்தி பெற்றவராக விளங்குகிறார். ஸுலைமானுக்கென்று தனிச்சிறப்புகள் எதுவுமில்லை. அவரும் உங்களைப் போல் ஒரு மனிதன் தான். அவரைப் போல் நீங்களும் எம்மிடம் சூனியத்தைக் கற்றுத் தேர்ந்தால், உங்களால் கூட இதே போல் சாதிக்க முடியும்.

இது தான் அந்தக் கட்டுக்கதை. இந்தக் கட்டுக்கதையைத் தான் 2:102 வசனத்தில் அல்லாஹ் பின்வருமாறு மறுக்கிறான்:

ஆனால் ஸுலைமான் ஒருபோதும் (இறைவனை) நிராகரித்தவர் அல்லர் (அவருக்கு சூனியத்தில் சம்பந்தம் இருக்கவில்லை). ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). (2:102)

ஸுலைமான் (அலை) அவர்களை சூனியக்காரரென்று ஜின்கள் இவ்வாறு அவதூறு கூறிப் பரப்பி விட்ட கதையை குர்ஆன் மறுத்த போதும், இதை யூதர்கள் தொடர்ந்தும் நம்பி வந்தார்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே 2:102 வசனம் அருளப்பட்டது.

இந்தக் கதை யூத மக்கள் மத்தியில் பரவலாக எடுபடத் தொடங்கியதற்கு, இதைச் சொன்னது ஜின்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம். இதையே ஒரு மனிதன் சொல்லியிருந்தால், அவ்வளவு சீக்கிரம் மக்கள் மத்தியில் இது எடுபட்டிருக்காதென்றே தோன்றுகிறது.

மேலும், இந்தக் கதை ஸுலைமான் (அலை) அவர்களின் மரணத்தையடுத்துத் தான் ஒரு காட்டுத்தீயைப் போல் விஸ்வரூபம் எடுத்துப் பரவியிருக்க வேண்டும் என்பதையும் அனுமானிக்க முடிகிறது. ஏனெனில், ஸுலைமான் (அலை) அவர்களின் மரணத்தையொட்டிய அந்தக் குறுகிய காலப்பகுதியில் பல ஜின்களுக்கு ஏககாலத்தில் விடுதலை கிடைத்தது. சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறும் கைதிகளைப் போல் நாலாபக்கமும் ஊடுறுவிய ஷைத்தானிய ஜின்கள் எப்படியெல்லாம் மக்கள் மத்தியில் நச்சுக் கருத்துக்களை விதைத்திருப்பார்கள் என்பதை யதார்த்தத்தின் அடிப்படையில் சிந்திப்போர் இலகுவாக அனுமானிக்கலாம்.

எப்பொழுது நமக்கு விடுதலை கிடைக்கும்? என்பது போல் பல ஜின்கள் ஆவலோடு காத்திருந்தார்கள் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனம் மூலமும் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்:

அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே” என்று ஜின்கள் கருதின. (34:14)

ஷைத்தானிய ஜின்கள் இந்தக் கட்டுக்கதையை அவிழ்த்து விட்டதன் அடிப்படை நோக்கமே, நேர்வழியில் இருந்த யூத மக்களை சூனியம் எனும் வாசலினூடாக இறைநிராகரிப்பினுள் நுழையச் செய்வது தான்.

ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சிக்காலம் பற்றியும், ஜின்களின் சதித் திட்டங்கள் பற்றியும், சூனியத்தை மக்களுக்குப் போதிக்க வேண்டிய அவசியம் ஜின்களுக்கு ஏன் இருந்தது என்பதைப் பற்றியும் ஓரளவு பார்த்து விட்டோம்.

இதுவரை பேசப்படாமலும், அனைவர் உள்ளத்திலும் நீங்காத ஒரு நெருடலாகவும் இன்னும் இருந்து கொண்டிருப்பது ஹாரூத், மாரூத் என்போர் யார்? சூனியத்தை அவர்கள் ஏன் கற்பிக்க வேண்டும்? என்ற கேள்விகள் தாம்.

இதுவரை தெளிவான ஒரு விடை கிடைக்கப் பெறாமல் அனேகமானோர் குழப்பத்திலிருக்கும் ஒரு பகுதி இது தான். இதற்கான தர்க்கரீதியான, அறிவுபூர்வமான ஒரு பதிலையும் இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்….

– அபூ மலிக்

One comment

  1. السلام عليكم ورحمة الله وبركاته

    فضيلة الشيخ أبو مالك

    أرى أن تفسيرك على الآية 102 من سورة البقرةغير صحيح بأن ما ورد في الآية هو نوعان من التعليم من طرفين مختلفين إلى طرفين مختلفين لا علاقة بينهما والديل على ذلك اكتملت جملة موضوع التعليم الأول بالفعل/والفاعل/ والمفعول هو السحر من الشيطين إلى الناس بعد عهد سليمان عليه السلام وانتهى موضوع السحر.

    وأما التعليم الثاني هو كيفية تفريقهم بين المرء وزوجه من الملكين مباشرة إلى الناس الذين عاشوا ببابلون تكتمل الجملة بفعله/وفاعله/ومفعوله كما أنه موضوع آخر عن السحر ولا علاقة بينهما

    كأن الآية أشارت إلى أن اليهود الذين نبذوا كتاب الله وراء ظهورهم اتبعوا أمرين:1) ما تتلوا الشياطين على ملك سليمان. 2) وما أنزل على الملكين

    فأرجو من السيادة التكرم تصحيح تفسيري إذا كان خاطئا

    من أخيكم فرحان مرجان الأزهري

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *