Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 12)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 12)

Magic Series – Episode 12:

சூனியம் – ஒரு விளக்கம்:

ஹாரூத், மாரூத் என்போர் யார்?

ஏற்கனவே குர்ஆன் வசனம் 2:102 பற்றி நாம் அலசிய தொடரில் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பது பற்றிய விரிவான விளக்கத்தைப் பிறகு வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தொடரில் அதை அலசலாம்.

குர்ஆன் வசனம் 2:102 இன் நேரடி மொழியாக்கத்தின் பிரகாரம், ஹாரூத் மாரூத் என்று சொல்லக் கூடிய இருவரும், வானவர்கள் என்று தான் பொருள்படுகிறது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால், இவ்வாறு நேரடிப் பொருள் கொண்டால், அது வானவர்களின் கன்னியத்துக்குப் பங்கம் விளைவிப்பது போல் ஒரு நெருடலை ஏற்படுத்துவதையொட்டி, ஒருசில மார்க்க அறிஞர்கள், இதற்கு நேரடியாகப் பொருள் கொள்ளாமல், சுற்றி வளைத்துப் பொருள் கொண்டால் நன்றாக இருக்கும் என்ற கருத்தில், ஹாரூத் மாரூத் என்போர் வானவர்கள் அல்ல என்ற கருத்தில் சில வியாக்கியானங்களைக் கொடுக்க முயன்றதுண்டு. இதை யாரும் மறுப்பதற்கில்லை.

இவ்வாறு இவர்கள் இந்த வசனத்துக்கு மாற்று விளக்கம் கொடுக்க முனைந்ததற்கான அடிப்படைக் காரணம், ஹாரூத் மாரூத் என்போர் வானவர் என்று பொருள் கொண்டால், அவர்கள் தாம் சூனியம் எனும் குஃப்ர் சார்ந்த கலையைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற பொருள் கொள்ள வேண்டி வரும்; இது வானவர்களின் தன்மைக்கும், கன்னியத்துக்கும் ஒத்து வராத ஒரு செயல் என்ற ஒரு சிந்தனையின் அடிப்படை தான். இந்த அறிஞர்களின் நோக்கம் நல்லதாக இருந்தாலும், இந்த அணுகுமுறை தவறு.

உதாரணத்துக்கு:
இப்னு கதீரின் தஃப்ஸீர் பிரகாரம், ஹாரூத் மாரூத் என்போர் பாபிலோனைச் சேர்ந்த இரண்டு மனிதர்களாக இருந்திருக்கலாம் என்று இமாம் தபரி கருதுவதாக இப்னு ஜரீர் எடுத்துக் காட்டி, அதன் மூலமும், தான் அந்த வசனத்தை விளங்கிக் கொண்டதன் மூலமும், ஹாரூத் மாரூத் என்போர் வானவர்களாக இருக்க வாய்ப்பில்லை; மாறாக பாபிலோனைச் சேர்ந்த இரண்டு மனிதர்களாகவே இருக்க வேண்டுமென்று கருதுவதாகக் கூறப்படும் கூற்றை இப்னு கதீர் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், இறுதியில், “இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்து அல்ல” என்றும் கூறுகிறார்.

மேலும், ஹாரூத் மாரூத் விவகாரத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதை இமாம் குர்துபியும் கூறுவதாக இப்னு கதீர் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், இதில் குர்துபியின் கருத்து என்னவென்றால், இந்த வசனத்தை அலீ (ரழி), இப்னு மஸ்ஊத் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), இப்னு உமர் (ரழி) போன்ற ஸஹாபாக்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ, அவ்வாறு தான் நாமும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என்றும் இப்னு கதீர் கூறுகிறார்.

மேலும், அஸ் ஸுத்தி, அல் கல்பி, மற்றும் ஹஸன் பஸரி போன்றோரும் இதைத் தத்தம் அணுகுமுறையில் சற்று வித்தியாசமாக அனுகினாலும், மேற்கூறப்பட்ட அடிப்படையில் தான் அவர்களும் இதைப் புரிந்து கொண்டார்கள். அதாவது, அவர்கள் எல்லோரும், ஹாரூத் மாரூத் என்ற இருவரும் வானவர்கள் என்று தான் புரிந்திருக்கிறார்கள். அவ்விரு வானவர்களும் சூனியம் சார்ந்த கலையைத் தமது சுய விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக் கொடுக்கவில்லை; மாறாக அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரமே கற்றுக் கொடுத்தார்கள் என்பது தான் இவர்களது கருத்து.

மேலும், இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஆதம் (அலை) அவர்களைப் படைக்கும் வரை, வானவர்களின் சபையில், வானவர்களுக்குரிய அதே கன்னியத்தோடு இருந்த அதே இப்லீஸைத் தான், பிறகு இருக்கும் எல்லாத் தீமைகளுக்கும் காரணகர்த்தாவாக மாறும் படி அல்லாஹ்வே தலைகீழாக நாடினான். அல்லாஹ் எப்படி வேண்டுமானாலும் நாடுவான்; அது அவனது விருப்பம். இதை ஆட்சேபிக்கும் அதிகாரம் நமக்கு இல்லை. ஆக, இந்த அடிப்படையில் தான் ஹாரூத் மாரூத் என்போரையும் புரிய வேண்டும் என்ற கருத்து தான் சரியானது என்றும் இங்கு கூறப்படுகிறது. இப்னு கதீரின் தப்ஸீரில் இதையெல்லாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்த இடத்தில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இமாம்களுக்கு இடையில் ஏற்பட்ட இந்தக் கருத்து வேறுபாடுகள், வானவர்களின் கன்னியத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்தின் அடிப்படையில் வந்த கருத்து வேறுபாடு மட்டுமே; சூனியத்தை மறுக்கும் நோக்கத்தில் வந்த கருத்து வேறுபாடுகள் அல்ல. சகோதரர் பீஜேயைத் தவிர வேறெந்த இமாமும் இந்த நோக்கத்தில் ஹாரூத், மாரூத் விவகாரத்தை அணுகவேயில்லை.

ஒரு மார்க்க ஆதாரத்தைப் பார்த்து விளக்கம் எடுக்கும் போது, அது விசயத்தில் தாம் புரிந்து கொண்டதற்கு ஏற்ப சொந்த அபிப்பிராயம் கொள்வதற்கு யாருக்கும் உரிமையிருக்கிறது. அதில் எந்தக் குற்றமுமில்லை. ஆனால், அதே சொந்த அபிப்பிராயத்தை ஒரு கொள்கையாகப் பிரகடனம் செய்து, “எனது விளக்கத்தின் அடிப்படையில் இதைப் புரிவது மட்டும் தான் மார்க்கம்; இதை நீ ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், நீ முஷ்ரிக்” என்பது போல், தனது விளக்கத்தை பலாத்காரமாக இன்னொருவருக்குத் திணிக்க முயன்றால், அது குற்றம். இந்தக் குற்றத்தைத் தான் சகோதரர் பீஜே இப்போது செய்துகொண்டிருக்கிறார்.

இந்தக் குற்றத்தைத் தான் நாம் கண்டிக்கிறோம்; அவர் இந்த வசனத்தை மாற்றிப் புரிந்ததற்காக அவரைக் கண்டிக்கவில்லை. வேறு சில இமாம்கள் இந்த வசனத்தை மாற்றிப் புரிந்திருந்தும், அவர்களைக் கண்டிக்காமல் விட்டுவிட்டு, சகோதரர் பீஜேயை மட்டும் இதில் கண்டிப்பதன் அடிப்படை நோக்கமே, சூனியத்தை மறுக்கும் அவரது வாதங்களை நியாயப்படுத்தும் பொருட்டு, அவர் இந்த வசனத்தையும் தனக்குச் சார்பாக வளைத்துப் பொருள் கொள்ள விழையும் செயலைக் கண்டிப்பது தான். இந்த வித்தியாசத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில், மேற்கூறப்பட்ட இமாம்களது கருத்து வேறுபாடுகளின் நியாயங்களை வைத்துப் பார்க்கும் போதும், மற்றும் அந்த வசனத்துக்கு சுற்றி வளைத்துப் பொருள் கொடுக்காமல், நேரடியாகவே பொருள் கொடுப்பதன் மூலமும் ஹாரூத் மாரூத் என்போர் இரண்டு வானவர்கள் என்ற கருத்துத் தான் சரியானது என்பது தெளிவாகப் புலப்படுகிறது. மேலும், இந்தக் கருத்தில் தான் ஒருசில அறிஞர்கள் தவிர்ந்த ஏனைய அத்தனை அறிஞர்களும் ஒன்றுபட்டிருக்கிறார்கள்.

இருந்தாலும், ஹாரூத் மாரூத் விடயத்தில் ஒரு நெருடல் மட்டும் வரலாறு முழுக்க இருந்து கொண்டே வந்திருக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இதற்குக் காரணம், இந்த சம்பவத்தின் அடிப்படையை எல்லோரும் ஒரே கோணத்தில் இருந்து மட்டும் அணுகியதாகக் கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது.

இந்த நெருடலின் அடிப்படையில் இந்த வசனத்துக்கு வேறு வியாக்கியானங்களைக் கொடுக்க விழைந்தவர்களெல்லாம் ஒரு விடயத்தை இங்கு கவனிக்கத் தவறிவிட்டார்களென்றே தோன்றுகிறது. அதாவது, சூனியம் என்பதும், ஹாரூத் மாரூத் கற்றுக் கொடுத்த கலை என்பதும் ஒன்று தான் என்பது போல் புரிந்து கொண்டதன் விளைவாகவே இந்த நெருடல்கள் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.

ஆனால், உண்மை அதுவல்ல. ஹாரூத் மாரூத் பாபில் நகரில் கற்றுக் கொடுத்த கலை என்பதும், ஸுலைமான் (அலை) காலத்தில் ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்த சூனியம் என்பதும் ஒன்றல்ல; ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருந்தாலும், இரண்டும் வெவ்வேறான கலைகள் என்று தான் குர்ஆன் பிரித்துக் கூறுகிறது.

“அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (கற்றுக்கொடுத்தார்கள்). (2:102)

இந்த வசனத்தில் அல்லாஹ் சூனியத்தையும், மற்றும் ஹாரூத் மாரூத்துக்கு இறக்கப்பட்டதையும் ஆகிய இரண்டு விசயங்களை ஷைத்தான்கள் கற்றுக் கொடுத்ததாகப் பிரித்துக் கூறுகிறான். இதிலிருந்து, சூனியம் என்பது வேறு; ஹாரூத் மாரூத் கற்றுக் கொடுத்தது வேறு என்பது புரிகிறது. இருந்தாலும், இரண்டுக்கும் இடையில் ஏதோர் ஒரு சம்பந்தம் இருக்கிறது என்பதும் புரிகிறது. அந்த சம்பந்தம் என்னவென்பதைக் கிரகித்துக் கொள்வதில் தான் பலரும் தவறிழைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

இதை இன்னொரு விதத்தில் கூறுவதென்றால்…..
இரண்டு கலைகள் இருக்கின்றன. ஒன்று சூனியம்; மற்றது ஹாரூத் மாரூத் கற்றுக் கொடுத்த ஞானம். இதில் ஒரு கலையை (சூனியம்), தெளிவான இறைமறுப்பு என்று குர்ஆன் கூறுகிறது. ஆனால், மற்றக் கலையைப் பற்றி வெளிப்படையாகக் கூறவில்லை. அதே நேரம், இந்த இரண்டு கலைகளுக்கும் இடையில் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதையும் குர்ஆன் சுட்டிக்காட்டுகிறது. அதேநேரம், வெளிப்படையாகக் கூறப்படாத அந்த இரண்டாவது கலையை வானவர்களே கற்றுக் கொடுத்தார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது. அதேநேரம், அதைக் கற்றுக் கொடுக்க முன், அந்த வானவர்கள் “உங்களைச் சோதிக்கும் முகமாகவே இது கற்பிக்கப் படுகிறது” என்று எச்சரிக்கவும் செய்தார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது.

இதுவெல்லாம் எதைக் குறிக்கிறது?

இப்போது நாம் சிந்திக்க வேண்டியது இது தான்:

வானவர்கள் இறைநிராகரிப்பைக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். ஆகவே, சூனியத்தைப் போன்ற ஒரு கெட்ட கலையாக இந்த ஞானம் இருந்திருக்காது. அதாவது, அவர்கள் கற்றுக் கொடுத்த இந்த ஞானம், இயல்பில் இறைநிராகரிப்பாக இருந்திருக்காது. மாறாக, இந்த ஞானத்தை ஒருவர் கற்று, அதை வாழ்வில் அமுல்படுத்துவதன் மூலம் சூனியம் எனும் இறைநிராகரிப்புக்கு இட்டுச் செல்லக் கூடிய ஒரு வாசல் திறந்து கொள்ளும். அந்த வாசலினூள் அவர் நுழைந்தால் மட்டுமே அவர் சூனியக்காரராக மாறுவார்.

ஆனால், இதைக் கற்றுக் கொள்கிறவர் யாராக இருந்தாலும், அந்த வாசல் திறந்த பின், அதிலிருந்து வெளியேறித் தப்பிக்க முடியாது. விரும்பியோ, விரும்பாமலோ அதனுள் ஈர்க்கப்படவே செய்வார். ஏனெனில், இதன் சக்தி அத்தகையது.

இவ்வளவு அபாயங்கள் இதனுள் இருக்கிறது என்பதை வானவர்கள் எச்சரித்த பிறகும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த ஞானத்தின் மூலம் தனக்குக் கிடைக்கும் சில உலக ஆதாயங்கள் மீது பேராசைப்பட்டு, யாரெல்லாம் இதைக் கற்று இறை நிராகரிப்பில் வீழ்ந்து விடுகிறார் என்பதைச் சோதித்துப் பார்ப்பது தான் இந்த வானவர்களின் வேலை. இந்த வேலையைச் செய்வதற்குத் தான் அல்லாஹ் ஹாரூத் மாரூத் என்ற இரு வானவர்களையும் நியமித்தான்.

இது தான் ஹாரூத் மாரூத் பற்றிய யதார்த்தத்தின் சுருக்கம்.

ஆனால், இந்த சுருக்கம் நம்மில் பலருக்குப் போதாமல் இருக்கும். “இந்த அளவுக்கு மனிதனை சூனியத்தில் தள்ளிக் காஃபிராக்கி விடக் கூடிய சக்தி வாய்ந்த அந்த ஞானம் தான் என்ன?” “ஹாரூத் மாரூத் விடுத்த எச்சரிக்கையின் விரிவான வடிவம் தான் என்ன?” என்ற பல கேள்விகள் நம்மில் பலரை உள்ளுக்குள் குடைந்து கொண்டே இருக்கும்.

உண்மையில் இந்தக் கேள்விகளுக்கு நேரடி விடை தரக் கூடிய மார்க்க ஆதாரங்கள் இல்லை. நமது சிந்தனையையும், பகுத்தறிவையும் கொண்டு இதை அனுமானித்துக் கொள்ளும் விதமாகவே பல மறைமுகமான ஆதாரங்கள் மார்க்கத்தில் பரவலாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, நினைத்ததைச் செய்யும் அல்லாஹ்வின் அதிகாரம், வானவர்களின் பண்புகள், சூனியத்தின் யதார்த்தம், ஜின்கள் பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு போன்ற அனைத்தையுமே இதைப் புரிந்து கொள்வதற்கான மறைமுக ஆதாரங்களாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறான பல மறைமுக ஆதாரங்களைத் தொகுத்தெடுத்து, அவற்றின் மூலம் பெறப்பட்ட எனது விளக்கத்தின் அடிப்படையில், ஹாரூத் மாரூத் பற்றியும், அவர்களது எச்சரிக்கை பற்றியும் ஒரு விரிவான கண்ணோட்டத்தை இப்போது பார்க்கலாம்.

கவனத்திற் கொள்க! இது எனது புரிதலுக்கமைய நான் கொடுக்கும் விளக்கம் மட்டுமே. இது தான் மார்க்கம்; இது தான் நூற்றுக்கு நூறு சரியான விளக்கம் என்று இதை யாருக்கும் திணிக்கும் நோக்கம் எனக்கில்லை. மாறாக, இருக்கும் விளக்கங்களிலேயே இது தான் மிகவும் பொருத்தமான, அறிவுபூர்வமான, மார்க்கத்துக்கு நெருக்கமான விளக்கமாக இருக்கிறது என்பதே எனது கருத்து. அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன். இனி விளக்கத்துக்குள் நுழையலாம்:

ஹாரூத் மாரூத் பற்றிய விரிவான விளக்கம்:

ஹாரூத் மாரூத் என்போர் இரண்டு வானவர்கள் தாம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் மனிதருக்குக் கேடு செய்யும் சூனியத்தைக் கற்றுக் கொடுக்க வந்தவர்கள் அல்ல. இங்கு தான் பலரும் தப்பாகப் புரிந்திருக்கிறார்கள்.

ஹாரூத் மாரூத் என்போர் பண்டைய பாபிலோன் மக்களுக்குப் பல ஞானங்களைக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு அல்லாஹ்வால் அனுப்பப் பட்ட இரண்டு வானவர்கள். (ஆதாரம் – 2:102)

இந்த இரண்டு வானவர்கள் மூலம் பாபிலோன் மக்கள் பல விதமான அறிவு ஞானங்களையும் கற்றுக் கொண்டார்கள். மெசொபொத்தேமிய நாகரீகம் போன்ற உலக பிரசித்தி பெற்ற பல ஆதிகால நாகரீகங்களை அவர்கள் தோற்றுவித்தது கூட இந்த அறிவு ஞானங்களின் விளைவாகக் கூட இருக்கலாம். இதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு இவர்கள் கற்றுக் கொடுத்த ஞானத்தில், ஜின்களின் மறைவான உலகம் பற்றிய ஞானமும் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ஜின்களோடு தொடர்பு கொள்வது எப்படி? அமானுஷ்யமான பல காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்காக, ஜின்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது எப்படி? என்பவற்றை விளக்கும் ஓர் இரகசிய ஞானமாக இது இருந்திருக்க வேண்டும்.

தம்மிடம் அறிவைக் கற்றுக்கொள்ள வருபவர்களுக்கெல்லாம், இந்த ஒரு ஞானத்தைத் தவிர மற்ற ஞானங்களையெல்லாம் அவர்கள் தாராளமகக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஆனால், ஜின்கள் சார்ந்த இந்த மறைவான ஞானத்தையும் தமக்குக் கற்றுத் தரும்படி கேட்பவர்களை மட்டும் அவர்கள் எச்சரித்திருப்பார்கள். அதாவது, “மற்ற ஞானங்களையெல்லாம் நம்மிடம் தாராளமாகக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், இதை மட்டும் கற்று விடாதீர்கள்; இது ஆபத்தானது. பேராசைப்பட்டு, இதையும் கற்பதன் மூலம் யாரெல்லாம் ஷைத்தானிய ஜின்களுக்கு அடிமையாகி, இறைமறுப்பாளர்களாக மாறத் துணிகிறார்கள் என்று உங்களைச் சோதிப்பதற்காகத் தான் இந்த ஞானம் எங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதனால், இதைக் கற்பதன் மூலம் உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்”என்று எச்சரித்திருப்பார்கள்.

இந்த எச்சரிக்கையைத் தான் குர்ஆன் 2:102 வசனம், மிகவும் ரத்தினச் சுருக்கமாகவும், மூடலாகவும், “நாங்கள் சோதனையாகவே அனுப்பப் பட்டிருக்கிறோம்; எனவே காஃபிராகி விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறது என்பது தான் எனது கருத்து.

இந்த விளக்கத்தை நான் ஊகித்துச் சொல்லவில்லை.
பண்டைக்கால பாபிலோனின் வரலாறு, மற்றும் கலாச்சாரப் பின்னணி;
பாபிலோனியர் வழக்கத்தில் இருந்த நட்சத்திர ஜோதிட சாஸ்திரம்;
அதிலிருந்து முளைத்த சூனியம் எனும் கலை;
சூனியத்தில் ஈடுபடுவோருக்கும் ஜின்களுக்கும் உள்ள அந்தரங்கத் தொடர்புகள்;
மனித இனத்தை வேரறுக்க வேண்டுமென்ற வைராக்கியத்தோடு திட்டமிட்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஷைத்தானிய ஜின்களின் உத்திகள், தந்திரோபாயங்கள்…

போன்ற அனைத்தையும் தொகுத்து வைத்துக் கொண்டு, மார்க்கத்தின் வரம்புகளுக்குள் நின்று கொண்டு யார் இதை விளங்க முயற்சித்தாலும், கண்டிப்பாக இந்த விளக்கத்தைத் தான் இறுதியில் அடைவார்கள்.

மேலும் இந்த விளக்கத்தின் அடிப்படையில், ஹாரூத், மாரூத் என்ற வானவர்கள் செய்த எச்சரிக்கையின் விரிவான வடிவம் பின்வரும் விதத்திலேயே அமைந்திருக்கும் என்பதே எனது கருத்து:

ஜின்களின் உலகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் இந்த ஞானம் என்பது, கூரிய கத்தியைப் போன்றது. இதை நல்லதுக்கும் பயன்படுத்தலாம்; தீயதுக்கும் பயன்படுத்தலாம்.

ஆனால், இதைக் கற்று, ஒருவர் அமுல் படுத்தத் தொடங்கினால், கண்டிப்பாக இறுதியில் இது தீங்கில் தான் போய் முடியும். இதைக் கற்பவர் காபிராக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் படுவார்கள்.

ஏனெனில், ஜின்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம் சில காரியங்களை சாதித்துக் கொள்ள மட்டுமே இந்தக் கலையால் முடியும். ஆனால், தொடர்பு கொள்ளும் ஜின் நல்ல ஜின்னா? கெட்ட ஜின்னா? என்பதைப் பிரித்தறிய எந்த மனிதனாலும் முடியாது. வருகிற ஜின் சொல்வது உண்மையா? பொய்யா? என்பதைத் தீர விசாரித்து அறிந்து கொள்ளும் எந்த வசதியையும் மனிதர்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை.

குறிப்பு:
தெளிவாக நம்மோடு அளவளாவுகின்ற மனிதர்களுக்குள்ளேயே எவன் உண்மை சொல்கிறான்? எவன் பொய் சொல்கிறான்? எவன் நல்லவன்? எவன் கெட்டவன் என்பதைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடுகின்றது. மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் சில ஜமாஅத் தாயீக்களே சில சமயம் திருட்டு ஐடீ மூலம் முகநூலில் வந்து நம்மைத் திட்டிவிட்டுச் செல்வதுண்டு. மனிதர்களுள் நல்லவர்களைக் கண்டுபிடிப்பதிலேயே இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது, நமக்கு மறைவான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜின்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

ஆகவே, இந்த இடத்தில் தான் இதைக் கற்பவர்கள் சறுக்குவார்கள். ஏனெனில், ஜின் இனத்தில் இருக்கக் கூடிய அனேகமானவர்கள் ஷைத்தான்களே. இந்தக் கலை மூலம் ஒருவர் ஜின்களைத் தொடர்பு கொள்ளும் போது, முதலில் ஷைத்தான்கள் தாம் அவரிடம் விரைந்து வருவார்கள். ஏனெனில், அவர்களுக்குத் தான் மனிதர்களோடு நெருங்கி, அவர்களைக் கூட இருந்து, குழி பறித்து, நரகில் தள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

நல்ல ஜின்கள் மனிதர்களோடு நட்பு கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இதில் மிகவும் அரிது. அப்படியே வந்தாலும், அவர்களை யாராலும் பிரித்தறிய முடியாது.

இவ்வாறான தொடர்பு மூலம் ஒரு மனிதனோடு கூடும் ஷைத்தானிய ஜின்களுக்கு, அதன் பிறகு அவரை அடிமைப்படுத்துவதும், அவரைக் காபிராக்கி விடுவதும் மிகவும் சுலபம். இதன் மூலம் அவர்கள் கண்டிப்பாகக் காபிராகி விடுவார்கள்.

“உண்மையில் இது ஒரு விஷப் பரீட்சை தான். ஜின்களால் அடையக் கூடிய அமானுஷ்யமான பயன்கள் மீது ஆசைப்பட்டு, அதை அடைவதற்காக உங்கள் ஈமானையே நீங்கள் பணயமாக வைப்பீர்களா? அல்லது இந்த ஞானத்தால் கிடைக்கும் பயன்களை விட உங்கள் ஈமான் உங்களுக்குப் பெரிது என்று கருதுவீர்களா? என்று உங்களைச் சோதிப்பதற்காகவே அல்லாஹ் எங்களை இவ்வாறு சோதனையாக அனுப்பியிருக்கிறான். அதனால், இதை நீங்கள் கற்காமலிருப்பதே உங்களுக்கு நல்லது.” என்பது தான் ஹாரூத் மாரூத் வழங்கிய எச்சரிக்கையின் சாராம்சமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், இருக்கும் மறைமுகமான ஆதாரங்களின் அடிப்படையிலும், வானவர்களின் கன்னியத்துக்கு பங்கம் ஏற்படுத்தாமலும், ஜின்களின் பண்புகள், சூனியத்தின் நடைமுறை யதார்த்தம் போன்றவற்றுக்கு முரண்படாமலும் எடுக்கக் கூடிய அறிவுபூர்வமான ஒரே விளக்கம், இந்த ஒரு விளக்கம் மட்டும் தான்.

வேறு எந்த விதத்தில் இதற்கு விளக்கம் எடுத்தாலும், ஏதாவதொரு ஆதாரம் இன்னோர் ஆதாரத்தோடு மோதுவதாகவே இருக்கிறது. இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *