Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 1)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 1)

Magic Series – Episode 13 – Part 1:

சூனியம் – ஒரு விளக்கம்:

பாகம் 1:

சூனியத்துக்கு ஜின்கள் ஏன் உதவ வேண்டும்?

நம்மில் அனேகமானோர் சூனியத்தைத் தப்பாகவே விளங்கி வைத்திருக்கின்றனர். சூனியத்தின் அடிப்படைத் தாத்பர்யத்தை சரிவர விளங்கத் தவறுவதால் தான், மார்க்கத்தின் ஒளியில் அதை அனுகும் பல சந்தர்ப்பங்களில் தவறான நிலைபாடுகள் எடுக்கப்படுகின்றன.

சூனியம் என்பது ஒரு மனிதன் புறச்சாதனங்கள் எதுவுமின்றி இன்னொரு மனிதனுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயல் அல்ல. அதையும் தாண்டிய ஒரு செயல். சூனியத்தை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கண்டிப்பாக அவருக்கு ஜின்கள் பற்றிய அறிமுகம் இருக்க வேண்டும். ஏனெனில், ஜின்கள் என்ற ஒரு படைப்பின் தலையீடு இல்லாமல் சூனியம் என்ற ஒன்று கிடையாது.

ஜின்களைப் பற்றிய விரிவான ஒரு தொடரை இன் ஷா அல்லாஹ் வழங்க இருக்கிறேன். ஜின்கள் என்றால் யார்? அவர்களது வகையராக்கள் என்னென்ன? அவர்களது ஆற்றல் எத்தகையது? மனிதர்களுக்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்புகள் என்ன? போன்ற அம்சங்களெல்லாம் அந்த ஆய்வுரையில் விரிவாக சொல்லப்படும். இப்போதைக்கு அதை இங்கு அலசுவது எனது நோக்கமல்ல. இந்த ஆய்வுக்குத் தேவைப்படும் பகுதிகளை மட்டும் அவ்வப்போது தொட்டுச் செல்வேன்.

சூனியம் செய்யப்படுவதன் அடிப்படை:

ஏற்கனவே நான் இன்னொரு தொடரில் கூறிய பிரகாரம், “ஸ ஹ ர” எனும் அரபுச் சொல்லடியிலிருந்து தான் “ஸிஹ்ர்” எனும் சொல் முளைத்திருக்கின்றது. “ஸ ஹ ர” எனும் மூலச் சொல்லுக்கு நேரடி அர்த்தம் “அடர்ந்த இரவின் காரிருள்” என்பது தான். பொதுவாக நள்ளிரவு தாண்டிய பின்னிரவில் தான் அடர்ந்த இருள் மண்டியிருக்கும். இந்த அடிப்படையில் தான் நோன்பு நோற்பவர் உணவு உண்ணும் பின்னிரவு நேரத்தைக் குறிக்கும் “ஸஹர்” என்ற சொல் கூட இதே சொல்லடியிலிருந்து முளைத்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதென்றால், பார்வை எனும் புலனை மறைக்கும் அளவுக்கு அடர்ந்த காரிருள் என்பது தான் “ஸ ஹ ர” எனும் மூலச் சொல்லின் பொருள்.

சூனியம் என்பது ஷைத்தானிய இருள் சூழ்ந்த ஒரு கலை. மேலும், மனிதனது புலன்களை மறைக்கும் தன்மையும் சூனியத்துக்கு இருக்கிறது. இதனால் தான், இதன் இருள் சூழ்ந்த தன்மையையும், புலன்களை மறைக்கும் தன்மையையும் உருவகப்படுத்தும் விதத்தில் “ஸிஹ்ர்” (சூனியம்) எனும் சொல் “ஸ ஹ ர” எனும் இதே சொல்லடியிலிருந்து முளைத்திருக்கிறது.

மேலும், பொதுவாக மனித அறிவின் வெளிச்சத்துக்குப் புலப்படாத ஓர் இருண்ட உலகத்துக்கும், மனித அறிவின் வெளிச்சத்துக்குப் புலப்படும் நமது உலகத்துக்கும் இடையில் முளைத்திருக்கும் ஒரு கலை என்பதையும் இது குறிக்கிறது.

சூனியம் என்பது ஒரு மனிதன் ஷைத்தானிய ஜின்களின் உதவி மூலம் சக மனிதனுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கலை. இந்தக் கலையைக் கற்பவர்கள் சூனியக்காரர்கள். சூனியத்தில் நல்ல சூனியம், கெட்ட சூனியம் என்ற பாகுபாடு எதுவும் இல்லை. மொத்த சூனியமுமே நூற்றுக்கு நூறு கெட்டது மட்டும் தான். ஏனெனில் இதில் பங்கேற்கும் அத்தனை ஜின்களும் ஷைத்தான் இனத்தைச் சார்ந்த ஜின்கள் தாம். நல்ல ஜின்கள் எதுவும் இதில் சம்பந்தப்படுவதே இல்லை.

ஜின்களை அதிகாரத்தோடு தம் கட்டுப்பாட்டுக்குள், வசப்படுத்தி வைத்துக் கொண்டு எந்த சூனியக்காரனும் சூனியம் செய்வதில்லை. ஏனெனில் எந்த ஜின்னையும் யாராலும் அதிகாரம் செய்து கட்டுப்படுத்த முடியாது. மாறாக, இதற்குத் தலைகீழான ஒரு நிலைமை தான் அங்கு நிலவுகின்றது. சூனியக்காரன் ஜின்னுக்குக் கட்டளை பிறப்பிப்பதில்லை. மாறாக ஜின்கள் தாம் சூனியக்காரனுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றன; அவனை ஆட்டிப்படைக்கின்றன.

அப்படியென்றால், சூனியக்காரன் எப்படி தனது காரியங்களை ஜின்களை வைத்து சாதிக்கிறான்? என்ற கேள்வி எழும்பும். இதற்கான பதில் மிக இலகுவானது. சூனியம் என்பது மனிதன் ஜின்னுக்கு இடும் கட்டளையின் பிரதிபலிப்பு அல்ல; மாறாக மனிதனுக்கும் ஜின்னுக்கும் இடையில் நடக்கும் ஒரு வியாபார ஒப்பந்தம்.

இந்த ஒப்பந்தத்தில் இரண்டு தரப்புக்கும் ஆதாயம் இருக்கிறது. ஜின்களின் சில தேவைகளை சூனியக்காரன் நிறைவேற்றிக் கொடுக்கிறான்; அதற்குப் பகரமாக சூனியக்காரனின் தேவைகளை ஜின்கள் நிறைவேற்றிக் கொடுக்கின்றன. இதைத்தான் பின்வரும் குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது:

அவர்கள் அனைவரையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில் “ஜின்களின் கூட்டத்தினேர! அதிகமான மனிதர்களை வழி கெடுத்து விட்டீர்கள்” (என்று அல்லாஹ் கூறுவான்). அதற்கு மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள், “எங்கள் இறைவா! எங்களில் ஒருவர் மற்றவர் மூலம் பயனைடந்தனர். நீ எங்களுக்கு விதித்த கெடுவையும் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள். – (6:128)

கெட்ட மனிதர்களும், கெட்ட ஜின்களும் திரைமறைவில் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றனர் என்பதை மேற்கண்ட வசனம் மறுக்க முடியாதவாறு உறுதிப்படுத்துகிறது. சூனியம் என்பதும் இதே அடிப்படையில் நடக்கும் ஒன்று தான். கெட்ட சூனியக்காரனுக்கு சில கெட்ட ஜின்கள் உதவுகின்றன; அதற்குப் பகரமாக அந்தக் கெட்ட ஜின்களுக்கு சில அடிப்படைகளில் சூனியக் காரன் உதவுகிறான். இது தான் சூனியம்.

இப்போது நமக்குள் எழும்பும் கேள்வி இது தான்:
சூனியக்காரனின் தேவைகளை மனமுவந்து நிறைவேற்றிக் கொடுக்கும் அளவுக்கு சூனியக்காரன் அப்படி எதைத் தான் ஜின்களுக்கு விலையாகக் கொடுக்கிறான்? இதைப் புரிந்து கொள்வதென்றால், முதலில் ஜின்களின் உளவியல் பற்றிய ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். அதையும் கொஞ்சம் பார்த்து விடலாம்.

ஜின்களின் தாழ்வுச்சிக்கல் மனப்பான்மை:

அனேகமான கெட்ட ஜின்களின் உள்ளத்தில் ஒரு தாழ்வுச்சிக்கல் இருக்கிறது. இந்தத் தாவுச்சிக்கல் மனப்பான்மை தான் ஜின்களது பலவீனம். இந்தப் பலவீனத்தை வைத்துத் தான் சூனியக்காரன் காரியம் சாதிக்கிறான்.

இந்தத் தாழ்வுச்சிக்கல், இன்று நேற்று ஏற்பட்ட ஒன்றல்ல; மனித இனத்தின் படைப்பின் ஆரம்பத்தில் ஏற்பட்டது. ஆதிமனிதன் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைக்கும் முன், பூமியின் வாரிசுகளாக பூமியை ஆண்டு கொண்டிருந்தவர்கள் ஜின்கள் தாம். பிறகு இவர்களுள் அனேகமானோர் பூமியில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்ததால், அல்லாஹ் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த மரியாதையைக் குறைக்கும் விதமாகவும், இவர்களுக்குப் பாடம் புகட்டும் விதமாகவும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டான்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக நேரடி ஹதீஸ் பதிவுகள் இல்லையென்றாலும், இப்னு அபீ ஹாத்தம், இப்னு அப்பாஸ் (ரழி) போன்றவர்கள் மூலமும், மற்றும் பல தப்ஸீர்களிலும் இந்தக் கருத்துப்பட சில செய்திகளைப் பார்க்கலாம்.

முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களைப் படைக்கப் போவதாக அல்லாஹ் சொன்ன போது, வானவர்கள் “பூமியில் இரத்தம் சிந்தும் இன்னோர் இனத்தைப் படைக்கப் போகிறாயா?” என்ற தொனியில் அதிருப்தியை வெளியிட்டதாகக் குர்ஆனில் குறிப்பிடப்படும் செய்தி இந்தச் சம்பவத்தையொட்டியது தான் என்பது ஒரு கருத்து.

அல்லாஹ் தமக்கு வழங்கியிருந்த அருட்கொடைகளைத் துஷ்பிரயோகம் செய்யும் விதமாகப் பல ஜின்கள் பூமியில் நடந்து கொண்டதால், இந்த ஜின்கள் தமது அந்தஸ்த்தை அல்லாஹ்விடம் இழந்தார்கள். இந்த ஜின்களது தாழ்வுச்சிக்கல் மனப்பான்மையின் ஆரம்பம் இங்கு தான் முதலில் முளைத்தது.

மேலும், பூமியின் புதிய வாரிசுகளாக அல்லாஹ் மனித இனத்தை நியமித்துப் பூமிக்கு அனுப்பிய போது, பெரும்பாலான ஜின்கள் தமது இருப்பிடங்களிலுருந்து துரத்தப்பட்டு, ஆங்காங்கே மனித நடமாட்டமில்லாத பகுதிகளில் (காடுகள், மலைக் கனவாய்கள், குகைகள் போன்ற பகுதிகளில்) அகதிகள் போல் ஒதுங்கி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இதன் மூலமும் மனிதனோடு ஒப்பிடுகையில் தாம் இரண்டாம் தரக் குடிமக்களாக அல்லாஹ்வால் நோக்கப்பட்டது போன்ற ஒரு தாழ்வு மனப்பான்மை இங்கும் உருவானது.

இது எல்லாவற்றையும் விட ஜின்களின் தாழ்வுச்சிக்கல் மனப்பான்மைக்கு மூல காரணமாக அமைந்தது ஒரு சம்பவம் தான். அது வேறெதுவுமல்ல; மனித இனத்தின் படைப்பின் ஆரம்பம்.

அல்லாஹ் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான். ஜின்களின் மூலப்பதார்த்தமான அக்கினியை விடத் தரம் குறைவானதாகக் கருதப்பட்ட கருப்பு மண்ணையும், தண்ணீரையும் கலந்து, பிசைந்து உருவாக்கப்பட்ட சேற்றுக் களிமண்ணைக் காய வைத்து, அதிலிருந்து மனிதனைப் படைத்தான். இவ்வாறு தரம் குறைந்த பதார்த்ததால் படைக்கப்பட்ட மனிதனுக்கு, இதுவரை எந்தப் படைப்புகளுக்கும் கொடுக்காத அளவு சிறப்பையும், கன்னியத்தையும் கொடுத்தான். மலக்குகளுக்கும், ஜின்களுக்கும் கொடுக்காத பல ஞானங்களைக் கூட ஆதம் (அலை) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவரை அனைவரையும் விட சிறப்பித்துக் காட்டினான்.

இவ்வாறு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ் மனிதனை உயரத்தில் தூக்கி வைத்துப் பாராட்டியதும், சீராட்டியதும் இப்லீஸ் எனும் ஜின்னுக்குப் பிடிக்கவில்லை. தன்னை விடக் கீழ்த்தரமான பதார்த்தங்களால் படைக்கப்பட்ட மனிதன் தன்னை விட உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பதை அவனது அகம்பாவம் கொண்ட உள்ளத்தால் ஜீரனிக்க முடியவில்லை. தன்னை விடக் கீழ்த்தரமான ஒருவன், தன்னை விட உயர்ந்த அந்தஸ்த்தில் மிளிர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்துப் பொறாமையில் வெதும்பிக் கொண்டே இருந்தான்.

இந்தப் பொறாமைத் தீயில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றும் விதமாக இறுதியில் அல்லாஹ் “ஆதமுக்கு சிரம் பணியுங்கள்” என்று அனைவருக்கும் உத்தரவிட்டதும், அவனால் அதற்கு மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் யார், அல்லாஹ் யார் என்பதைக் கூட மறந்து போகும் அளவுக்கு அவனது உள்ளம் கொந்தளித்தது. இதன் பிரதிபலிப்பாகத் தான் அவன் நேரடியாகவே அல்லாஹ்வின் கட்டளைக்குப் பணிய மறுத்தான். இதன் மூலம் அல்லாஹ்வின் சாபத்துக்கு ஆளானான். கன்னியத்துக்குரிய அல்லாஹ்வின் சபையிலிருந்து சிறுமைப்படுத்தப் பட்டவனாகத் துரத்தியடிக்கப் பட்டான்.

ஆனால், வெளியேறிய இப்லீஸ் சும்மா வெளியேறவில்லை; அல்லாஹ்வின் அனுமதியோடு, மனித இனத்தைக் கருவருப்பேனென்ற சபதம் பூண்டவனாகத் தான் வெளியேறினான்.

இன்று அனேகமான கெட்ட ஜின்களின் உள்ளத்திலிருக்கும் தாழ்வுச்சிக்கல் மனப்பான்மைக்குக் காரணம், இப்லீஸுக்கு அன்று நடந்த இந்த அவமானம் தான்.

மனிதனின் முன்னிலையில் தனது மானம், மரியாதை, கௌரவம், அந்தஸ்த்து எல்லாவற்றையும் இழந்து, சிறுமையடைந்து, கூனிக் குறுகிப்போன இப்லீஸின் உள்ளத்தில் அப்போது உதித்தது ஒரேயொரு லட்சியம் தான். எந்த மனிதன் முன்னிலையில் தான் கூனிக் குறுகி நிற்க வேண்டி வந்ததோ, அதே மனிதன் முன்னிலையிலும், அவனுக்காகத் தன்னைத் துரத்திய அல்லாஹ் முன்னிலையிலும் மறுபடியும் ஒரு நாள் தான் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும்; அப்போது இந்த மனிதனும், அவனுக்காகத் தன்னைப் பகைத்துக் கொண்ட அல்லாஹ்வும் தன் முன்னால் தோற்றுத் தலைகுணிய வேண்டும்.

மனிதன் மீதும், அல்லாஹ் மீதும் ஏற்பட்ட ஆறாத பெரும் கோபத்தின் வெளிப்பாடு தான் இப்லீஸின் இந்த லட்சியம். இதன் விளைவாக மனிதன் மீதும், அல்லாஹ் மீதும் தனித்தனியே வஞ்சம் தீர்க்கும் விதமாகத் தனது திட்டங்களை இப்லீஸ் இரண்டு பகுதிகளாக வகுத்துக் கொண்டான்.

முதலாவது திட்டம்:
எந்த மனிதனால் தனது வாழ்க்கை நாசமானதோ, அந்த மனிதன் ஈருலகிலும் நிம்மதியாக வாழவே கூடாது. பூமியில் வாழும் போதும் மனிதன் நிம்மதியற்று, சிறுமையடைந்து, சீரழிந்து, சின்னாபின்னமான நிலையிலேயே வாழ்ந்து, மரணிக்க வேண்டும். மறுமையிலும் அவன் நிரந்தர நரக நெருப்பில் வெந்து கருக வேண்டும். “கடைசி வரை மனித இனத்தை வேரறுப்பேன்” என்று அவன் சபதம் செய்ததன் அர்த்தம் இது தான்.

இரண்டாவது திட்டம்:
எந்த மனிதனை அல்லாஹ் தனது இரண்டு கைகளாலும் ஆசை ஆசையாகப் படைத்து, அன்போடு சீராட்டிப் பாராட்டினானோ, அதே கையால் அல்லாஹ் அதே மனிதனை நரகத்தில் தூக்கி வீச வேண்டும். அந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தான் கண்ணாறக் காண வேண்டும். இதன் மூலம், மனிதனைப் படைத்த விசயத்தில் அல்லாஹ் தோற்றுத் தலைகுணிவதைத் தான் பார்த்து ரசிக்க வேண்டும். அதன் பிறகு எத்தனை யுகங்கள் நரகில் கிடந்து வெந்தாலும், அது பற்றிக் கவலையில்லை.

அதே போல், எந்த மனிதனைத் தனது விருப்பத்துக்குரிய அடியானாகப் படைத்துத் தன்னை மட்டும் வணங்குமாறு அல்லாஹ் பணித்தானோ, அதே அடியான் அல்லாஹ்வுக்கு மாறு செய்து விட்டு, அவனது எதிரியாக இருக்கும் தன்னை வணங்க வேண்டும். எந்தப் படைப்பின் காலடியில் சிரம் பணியுமாறு அல்லாஹ் தன்னைப் பணித்தானோ, அதே படைப்பு, அந்த அல்லாஹ்வையே மறந்து, தன் காலடியில் சிரம் பணிய வேண்டும். அதன் மூலம் அல்லாஹ்வை வெட்கித் தலைகுணிய வைக்க வேண்டும்.

இது தான் இப்லீஸின் இறுதி லட்சியம். இதை அடிப்படையாக வைத்துத் தான் பூமியில் அவனது மொத்தப் பரிவாரங்களும் காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன.

தொடர்ச்சியை இன் ஷா அல்லாஹ் இதன் இரண்டாம் பாகத்தில் பார்க்கலாம்.

இன் ஷா அல்லாஹ் வளரும்…

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *