Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 2)

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 2)

Magic Series – Episode 13 – Part 2:

சூனியம் – ஒரு விளக்கம்:

பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி)

மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு, இப்போது மீண்டும் சூனியத்துக்கு வருவோம்.

மேற்குறிப்பிடப்பட்ட தாழ்வுச்சிக்கல் மனப்பான்மை ஷைத்தானின் சந்ததிகளான அத்தனை ஜின்களின் ஆழ்மனதிலும் வேறூன்றியிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த ஜின்கள், மனிதனை விடத் தாமே உயர்ந்த படைப்புக்கள் என்று நிரூபித்துக் கொள்ளும் விதமாக எங்காவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், உடனே அங்கு தேடி வருந்து குடிகொள்கின்றன.

இறைமறுப்பிலும், இணைவைப்பிலும் ஊறிப்போன மனிதர்களிடமும், தொடர்ச்சியான பாவச் செயல்களால் ஏற்படும் குற்ற உணர்வில் மூழ்கிப்போன மனிதர்களிடமும் பல கெட்ட ஜின்கள், அனேகமான சந்தர்ப்பங்களில் தேடி வந்து, உடலில் புகுவதும், சேட்டைகள் பன்னுவதும் இதனால் தான்.

இவ்வாறான மனிதர்கள் (பாவிகள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து தூரமானவர்கள் என்பதால், இவர்களை ஆக்கிரமிப்பதும், தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும் இந்த ஜின்களுக்கு சுலபமான காரியம்.

கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின், தம்மை அந்த மனிதர்களின் எஜமானர்களாக இந்த ஜின்கள் பிரகடனம் செய்து கொள்வார்கள். அதன் பின், அல்லாஹ்வுக்குப் பகரமாகத் தம்மையே வணங்க வேண்டுமென்று அம்மனிதர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பார்கள். தனது காலடியில் ஒரு மனிதன் சிரம் பணிந்து, தன்னை வணங்குவதைப் பார்க்கும் போது ஒரு ஷைத்தானிய ஜின்னுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியை விட இந்த உலகில் அதற்கு உவப்பானது வேறெதுவும் கிடையாது.

இதே அடிப்படையில் தான் சூனியக்காரன் விடயத்திலும் நிலைமை இருக்கிறது. உண்மையில் சூனியக்காரர்கள் உச்சரிக்கும் மந்திரங்கள், மற்றும் பூஜைகள் எதுவும் ஜின்னை வசப்படுத்தித் தன் கைப்பிடிக்குள் கொண்டுவரும் நோக்கில் அமைந்தவை அல்ல.

மாறாக ஜின்களின் தரிசனத்தை வேண்டிச் செய்யும் பிரார்த்தனைகளே அவை. இதற்கென்று பல படித்தரங்கள் இருக்கின்றன. அந்தப் படித்தரங்கள் என்னென்ன என்பது பற்றிய விரிவான விளக்கத் தொகுப்பு தான் சூனியம் எனும் கலையில் கற்பிக்கப் படுகிறது. இதைத் தான் சூனியக் காரன் கற்கிறான். கற்று முடித்த பின் தனது பூஜையை ஆரம்பிக்கிறான்.

முதல் கட்டமாகத் தனது ஆன்மாவையும், இறைநம்பிக்கையையும் ஏதாவதொரு ஜின்னுக்கு விற்பனை செய்யத் தான் தயார் என்பதை அறிவித்து விளம்பரம் செய்கிறான்.

இதன் போது என்ன செய்வானென்றால், காடு, மலை, பாழடைந்த கட்டடம், தனிமைப்படுத்தப்பட்ட இருட்டறைகள் போன்ற ஆள் நடமாட்டமில்லாத ஓர் இடத்தைத் தெரிவு செய்வான். அங்கு தனது பூஜைக்குத் தேவையான பண்டங்களோடு வந்து உட்கார்ந்து விடுவான்.

துர்நாற்றம் தரும் அழுக்குகளையும், அருவருக்கத்தக்க பொருட்களையும், சொல்லவே வாய் கூசும் ஆபாசம் நிறைந்த பொருட்களையும் தன்னைச் சுற்றிப் பரத்தி வைத்துக் கொள்வான்.

பிறகு அதன் நடுவில் குறிப்பிட்ட ஒரு ஜின்னைத் தேர்வு செய்து, “இந்த ஜின் தான் எனது கடவுள்; இந்த ஜின்னுக்கே நான் சிரம் பணிகிறேன்; அவரது தரிசனத்துக்காக நான் இங்கு தவம் செய்து காத்திருக்கிறேன்” என்ற கருத்துக்களை உள்ளடக்கிய பல குறியீடுகள் மூலம் தரையில் ஒரு கோலம் போடுவான்.

அவன் போடும் கோலத்தில் இருக்கும் ஒவ்வொரு குறியீட்டுக்கும் அர்த்தம் உண்டு. ஒவ்வொரு குறியீடும் குறிக்கும் அர்த்தங்களை ஜின்களால் இலகுவாக வாசித்துப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறான குறியீடுகளால் போடப்பட்ட கோலத்தின் மத்தியில் ஒரு யோகியைப் போல் முழு நிர்வானமாகவோ, அல்லது அசுத்தம் நிறைந்த உடையிலோ உட்கார்ந்து சூனியக்காரன் தவம் செய்யத் தொடங்கி விடுவான்.

குறிப்பிட்ட ஜின்னின் பெயரை திக்ர் செய்வது போல் மந்திரங்களாக ஜெபித்துக் கொண்டே இருப்பான். இந்தத் தவம் பல நாட்கள் நீடிக்கும். குறிப்பிட்ட ஜின் அவனிடம் வரும் வரை இந்தத் தவம் நீடித்துக் கொண்டே இருக்கும். இப்படித் தவம் செய்து, காத்திருக்கும் காலப் பகுதியைத் தான் சூனியக்காரர்கள் ஒரு மண்டலம், மூன்று மண்டலம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

உண்மையில் இதை ஒரு தவம் என்று சொல்வதை விட, விளம்பரம் என்று தான் கூற வேண்டும். கடையைத் திறந்து வைத்துக் கொண்டு, அதன் வாசலில் விளம்பரப் பலகையைத் தொங்க விட்டு, வியாபாரத்துக்காகக் காத்திருக்கும் ஒரு வியாபாரியைப் போன்ற ஒரு நிலை தான் இது.

கடைசியில் ஒரு நாள் குறிப்பிட்ட அந்த ஜின் அவனைக் கவனித்து விடும்.

ஆதாரம்:
நீங்கள் அவர்களைக் (ஷைத்தான்களைக்) காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (7:27)

ஆனால், கவனித்த உடனேயே அந்த ஜின் அவனிடம் ஆஜராவதில்லை. தனக்காக எவ்வளவு தூரம் இந்த மனிதன் காத்திருக்கிறான் என்பதைச் சோதித்துப் பார்க்கும் விதமாகத் தொடர்ந்தும் மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கும்.

கடைசியில் இந்த சூனியக்காரன், தனது கொள்கையில் உறுதியாகத் தான் இருக்கிறான் என்பதை உணர்ந்த பிறகு சூனியக் காரன் எதிரில் அந்த ஜின் தோற்றம் தரும். சில சமயம் நிழல் / ஆவி வடிவத்தில் தோன்றும்; சில சமயம் நாய், பாம்பு போன்ற மிருகங்களின் வடிவத்தில் தோன்றும். சில சமயம் இது அல்லாத வேறு வடிவங்களிலும் தோன்றும்.

இவ்வாறு தரிசனம் கிடைத்தவுடன் சூனியக்காரன் ஜின்னுக்கு சாஷ்டாங்கம் செய்வான். ஆனால், அதை வைத்து மட்டும் அந்த ஜின் திருப்திப் படுவதில்லை. அல்லாஹ்வுக்குப் பதிலாகத் தன்னைக் கடவுளாக ஏற்றுக் கொண்டதை நிரூபித்துக் காட்டச் சொல்லும். தான் சொல்லும் விதத்திலெல்லாம் செய்து காட்டச் சொல்லும். தன் கண்ணெதிரில் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக் கூடிய காரியங்களைச் செய்து காட்டச் சொல்லும்.

இவ்வாறு நிரூபித்துக் காட்டச் சொல்லும் காரியங்களின் பட்டியலில் பல அம்சங்கள் இடம்பெறும். தான் திருப்திப்படும் விதமாகத் தன் கண்ணெதிரில் குர்ஆன் பிரதிகளை அவமதித்துக் காட்டச் சொல்லும். குர்ஆன் பிரதிகளைக் காலால் மிதித்தல், அதன் மேல் மலம், சலம் கழித்தல், குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட பிரதிகளை மாதவிடாயில் இருக்கும் ஒரு பெண்ணின் மர்ம உறுப்புக்குள் ஊற வைத்து, அந்த இரத்தத்தோடு அதை சமர்ப்பித்தல் போன்ற எண்ணற்ற காரியங்கள் இந்தப் பட்டியலில் அடங்கும்.

இது போதாததற்கு மேலும், அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளைத் தனக்காகச் செய்து காட்டச் சொல்லும். இதில் ஸுஜூது செய்தல், அந்த ஜின்னுக்காக ஓர் உயிரை அறுத்துப் பலியிடுதல் போன்ற அம்சங்கள் அடங்கும். எந்த சூனியத்துக்கு எந்த உயிரை அறுத்துப் பலியிட வேண்டும் என்பதை அந்தந்த ஜின்கள் தாம் தீர்மானிக்கும்.

அனேகமான சந்தர்ப்பங்களில் ஒரு சேவலை அறுக்கச் சொல்லும். சேவலைத் தெரிவு செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அல்லாஹ்வை வணங்குவதற்காக அதிகாலையிலேயே மனிதர்களைக் கூவி எழுப்பும் பறவை தான் சேவல். பல பேர் ஸுபஹு தொழ எழுவதற்கு சேவல் துணை புரிகிறது. மேலும் ரஹ்மத்துடைய மலக்குகளை அதிகாலையில் பார்ப்பதால் தான் சேவல் கூவுறதென்று நபி (ஸல்) அவர்கள் கூட ஒரு ஹதீஸில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாம். இதிலிருந்து, சேவல் எவ்வளவு பரக்கத் நிறைந்த ஒரு பறவை புலனாகிறது.

அல்லாஹ்வை மக்கள் அதிகாலையில் வணங்குவதற்குத் துணை புரியும் ஓர் உயிரினம் சேவல் என்பதால் தான், அல்லாஹ்வின் எதிரியான இந்த ஜின்கள் அதைக் கொல்வதில் திருப்தியடைகின்றன. இதே போல் சில ஜின்கள் ஆடுகளைக் கூட அறுத்துப் பலியிடச் சொல்லும். சில ஜின்கள் சில சமயங்களில் தமக்காக ஒரு மனித உயிரைக் கூட பலியாகக் கேட்கும். பொதுவாகக் குழந்தைகள், கன்னிப் பெண்கள் போன்றவர்களையே பலியிடச் சொல்லும்.

இவ்வாறு அறுத்துப் பலியிட்ட பின், அந்த இரத்தத்தை வைத்துப் பலவிதமான அருவருக்கத்தக்க காரியங்களையும் செய்து காட்டச் சொல்லி ஜின்கள் சூனியக்காரனுக்குக் கட்டளையிடும்.

சில சமயம் அறுத்துப் பலியிட்ட உயிர் ஆடு, அல்லது மனித உயிராக இருந்தால், அறுக்கப்பட்ட அந்தப் பிராணியோடு, அல்லது அந்த மனிதப் பிணத்தோடு சூனியக்காரனைத் தனது கண்ணெதிரில் உடலுறவு கொள்ளச் சொல்லும். அது சொல்வதையெல்லாம் இந்த சூனியக்காரன் அணுவளவும் பிசகாமல் அப்படியே செய்வான். அதையெல்லாம் அந்த ஜின் பார்த்து ரசிக்கும்.

குறிப்பு:
இதுவெல்லாம், முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய சூனியக்காரர்கள் விடயத்தில் நடப்பவை. முஸ்லிம்களிடம் வரும் போது தான் இந்த ஜின்கள் இந்த அடிப்படையில் வரும். இது போக, முஸ்லிமல்லாத சூனியக்காரர்களிடம் வரும் போது இந்த ஜின்கள், தம்மை ஜின்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. மாறாக குலதெய்வம், இஷ்ட தெய்வம், காளி, அம்மன், போன்ற பெயர்களில் தான் அவர்கள் மத்தியில் இதே ஜின்கள் தரிசனம் தரும். மொத்தத்தில் இரு தரப்பிலும் ஒரே மாதிரியான செயற்பாடுகள் தான் நடக்கும்; பெயர்கள் மட்டுமே வித்தியாசப்படும்.

இப்படிப் பலவிதமான காரியங்கள் மூலம் சூனியக்காரன் தனது பக்தியை அந்த ஜின்னுக்கு நிரூபித்துக் காட்டிய பின்பு தான், அந்த ஜின்னுக்கு இவனது நாணயத்தின் மீது நம்பிக்கை வரும். இறுதியில் தன்னைத் தான் இந்த மனிதனின் கடவுளாக வணங்குகிறான் என்பது நிரூபிக்கப்பட்ட பின், சூனியக்காரனைப் பார்த்து, “என்ன வரம் வேண்டும்?” என்று கேட்கும்.

அப்போது தான் சூனியக்காரன் தனது தேவைகளைச் சொல்வான். இன்னாருக்கு இன்னின்ன கெடுதல் செய்ய வேண்டும் என்ற தனது கோரிக்கைகளை முன்வைப்பான். இதைத் தான் சூனியம் என்று சொல்கிறோம்.

கோரிக்கையோடு சேர்த்து, சூனியம் செய்யப்பட்ட மனிதனைச் சரியாக ஜின்கள் அடையாளம் கண்டுகொள்வதற்காக, சம்பந்தப்பட்ட மனிதனது டீ.என்.ஏ மாதிரிகளையும் சூனியக்காரன் ஒப்படைப்பான். இதற்காகத் தான் தலைமுடி, காலடி மண், சிறுநீர் போன்றவை சூனியத்துக்காக சேகரிக்கப் படுகின்றன.

இவற்றை வைத்து மோப்ப நாய் மோப்பம் பிடிப்பதைப் போல் குறிப்பிட்ட மனிதனை ஜின்கள் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும். மேலும், சூனியக்காரனுக்கும், ஜின்னுக்கும் இடையில் நடக்கும் இந்தக் கொடுக்கல்வாங்கலுக்கான ஆவணங்கள் போலவும் இந்தப் பொருட்களே பயண்படும். இவற்றையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளும் ஜின், இறுதியில், “சரி, உனது தேவைகளை நிறைவேற்றி வைக்கிறேன்” என்று கூறி விட்டு, சென்று விடும்.

பொதுவாக சூனியக்காரன் எதிரில் இவ்வாறு தரிசனம் கொடுக்கும் ஜின், ஏதாவதொரு ஜின் கோத்திரத்தின் தலைவனாக இருக்கும். அல்லது இப்லீஸின் பட்டாளத்தில் உயர் அதிகாரிகள் போன்ற அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஜின்னாக இருக்கும். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் இந்தப் பெரிய ஜின், தனக்குக் கீழ் அடிமைகள் போல் பணியாற்றும் சிறிய ஜின்களில் ஒன்றைத் தெரிவு செய்து, அதனிடம் இந்தப் பணியை ஒப்படைத்து, சூனியம் செய்யப்பட்ட மனிதனிடம் ஏவி விடும். அந்த ஜின் சம்பந்தப்பட்ட மனிதரை நோக்கிப் புறப்படும்.

சூனியம் செய்யப்பட்ட மனிதன் அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் இறைவிசுவாசியாக (அதாவது சாதாரண முஸ்லிமாக அல்ல; முஃமினாக) இருந்தால், அவனை நெருங்குவது இந்த ஜின்னுக்குக் கடினமாக இருக்கும். ஏனெனில், அந்த முஃமினுக்கு முன்னாலும், பின்னாலும் வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். இந்த நிலையில், சூனியக்காரனின் கோரிக்கைகளையெல்லாம் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் இந்த ஜின் தடுமாறும்.

இறுதியில் தன்னால் இயன்ற கடைசி முயற்சியாகத் தூரத்திலிருந்து கல்லெறிந்து தாக்குவதைப் போல், அந்த மனிதனது உள்ளத்தை நோக்கித் தாக்குதல் நடத்திப் பார்க்கும்.

ஆனால், இந்தத் தாக்குதல்களால் அந்த முஃமினுக்குப் பௌதீக ரீதியிலான பெரிய பாதிப்புகள் அனேகமாக ஏற்படுவதில்லை. நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மனக்குழப்பத்தைப் போன்ற ஒருசில தற்காலிகமான கோளாறுகள், மற்றும் அவனுக்கும், அவனது மனைவிக்கும் இடையில் தற்காலிக விரிசல்கள், கசப்புணர்வுகள் போன்ற மனத்தாக்கங்களையே ஏற்படுத்தலாம். இதைத் தான் குர்ஆன் வசனம் 2:102 இல் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இவ்வாறான கெடுதல்களை மீறிய வேறெந்தக் கெடுதலையும் பொதுவாக ஓர் இறைவிசுவாசியின் விசயத்தில் ஜின்களால் செய்ய முடியாது.

அதே நேரம், சூனியம் செய்யப்பட்ட மனிதன் இறைமறுப்பாளனாகவோ, இணைவைப்பவனாகவோ, பாவியாகவோ, இசைக்கு அடிமையானவனாகவோ, நிதமும் போதையில் மூழ்கியவனாகவோ இருந்தால், வருகிற ஜின்னுக்குக் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பதில் எந்தத் தடங்கலும் இருக்காது. அந்த மனிதன் அல்லாஹ்வின் கருணையிலிருந்து தூரமானவனாக இருப்பதால், அவனைச் சுற்றி எந்த வானவர் பாதுகாப்பும் இருக்காது. வந்த உடனேயே ஜின்னுக்கு அவனை ஆக்கிரமித்து விடலாம். இவன் விடயத்தில் அல்லாஹ் நாடும் போது, செய்யப்படும் அந்த சூனியம் நூற்றுக்கு நூறு வீதம் கனகச்சிதமாகப் பலிக்கும்.

இவ்வாறு சூனியங்கள் பலிப்பதனால், இதைச் செய்து கொடுக்கும் ஷைத்தானிய ஜின்களுக்கு இன்னொரு இலாபமும் இருக்கிறது. ஒரு சூனியம் வெற்றிகரமாகப் பலித்து விட்டால், அதையே ஆதாரமாகவும், விளமபரமாகவும் காட்டிப் பலரையும் சூனியக்காரன் இந்த இறைநிராகரிப்பின் வட்டத்துக்குள் இழுத்தெடுப்பான். ஏனெனில் அவனைப் பொருத்தவரை சூனியம் என்பது அவனது தொழில். வாடிக்கையாளர் அதிகரிக்க அதிகரிக்கத் தான் அவனது வருமானம் அதிகரிக்கும். ஆகவே, சூனியத்தின் பால் மக்களை ஈர்க்கும் நோக்கில் முழுநேர அழைப்பாளனாக சூனியக்காரனே செயல்பட்டுக் கொண்டிருப்பான்.

இதனால் கவரப்பட்டுக் கூட்டம் கூட்டமாக மக்கள் ஒவ்வொரு சூனியக்காரன் மூலமும் இதில் இணையும் போது, பெரும் திரளான மனிதர்களை இறைநிராகரிப்பில் தள்ளி விடும் ஷைத்தானின் அடிப்படை நோக்கம் இங்கு இலகுவாக நிறைவேறிக் கொண்டிருக்கும். ஒரு கல்லில் நூறு மாங்காய் அடிப்பது போல், ஒரு சூனியத்தைப் பலிக்கச் செய்வதன் மூலம் பலநூறு மக்களை ஷைத்தான் வழிகேட்டில் தள்ளி விடுகிறான்.

குறிப்பு:
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி உதயமாகலாம். சூனியம் பற்றிய இவ்வாறான ஓர் அறிமுகத்தையும், சூனியக்காரனுக்கும், ஜின்களுக்கும் உள்ள இரகசியத் தொடர்புகளையும் ஏதோ பக்கத்திலிருந்து பார்த்தது போல், எப்படிச் சொல்கிறேன்? இந்தக் கதையெல்லாம் என் கற்பனையில் உதித்த வெறும் கப்ஸாக்களாக இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இவற்றுக்கு என்ன ஆதாரம்? என்ற ஒரு கேள்வி இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்குள் எழுந்தால், அது நியாயமான கேள்வி.

இதற்கான பதில் ஒன்றும் கடினமானது அல்ல. உலகின் நாலாபக்கங்களிலும் சூனியம் எப்படியெல்லாம் செய்யப்படுகிறது என்பதைத் தேடிப் பார்த்தால், உடனே இது தெரிந்து விடும். பலரது நிஜ வாழ்வில் நடக்கும் பல சூனியங்கள், சூனியக்காரர்களின் செயல்திட்டங்கள், சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் போன்றவற்றைத் தொகுத்து விளங்குவதன் மூலமும், மற்றும் சூனியக்காரர்கள் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்பது பற்றி நடுநிலையான நோக்கில் ஆய்வு செய்யும் பல ஆய்வாளர்களின் கருத்துக்கள் போன்றவற்றைத் தொகுத்து விளங்குவதன் மூலமும் இந்த உண்மைகளை இலகுவாகக் கண்டறிந்து கொள்ளலாம். சூனியம் பற்றிய நிதர்சணங்கள் இவை தாம்.

மேலே நான் விவரித்திருக்கும் பிரகாரம் தான் உலகில் எல்லா சூனியங்களும் செய்யப் படுகின்றன. இந்த முறையைத் தவிர்த்து வேறு எந்த முறையிலும் உலகின் எந்த மூலையிலும் யாரும் சூனியம் செய்வதில்லை. ஆனால், சூனியக்காரன் இதில் பாதியை வெளியில் காட்டிக் கொள்வான்; பாதியை மறைத்துக் கொள்வான். அதாவது, ஜின்களிடம் கேவலப்பட்டு அடிமையாவதன் மூலம் தான் அவனது சூனியம் பலிக்கிறது என்ற உண்மையை வெளியில் சொல்ல மாட்டான். இதை மூடிமறைத்துக் கொண்டு, தனது மந்திர சக்தியால் மட்டுமே சூனியம் பலிக்கிறது என்பது போல் பீற்றிக் கொள்வான்.

இதன் மூலம் மக்களை ஏமாற்றித் தன் வட்டத்துக்குள் இழுக்க முயற்சிப்பான். இதை என்னால் ஆணித்தரமாக அடித்துக் கூறலாம். சந்தேகமிருந்தால், ஒரு கைதேர்ந்த சூனியக்காரனின் அந்தரங்க வாழ்வைக் கொஞ்சம் துப்பறிந்து பாருங்கள். நான் சொல்வதற்கு அச்சுப் பிசகாமல் அவன் நடந்து கொள்வதை உங்களால் அவதானிக்கலாம். நிதர்சனத்துக்கு ஆதாரம் காட்ட வேண்டியதில்லை. ஒவ்வொரு மனிதனும் பசி வந்தால் சாப்பிடுகிறான்; தூக்கம் வந்தால் உறங்குகிறான் என்பது நிதர்சனம். இதற்கு ஆதாரம் காட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இதே போல தான் ஒவ்வொரு சூனியக்காரனும் உலகில் இந்த அடிப்படையில் தான் சூனியம் செய்கிறான் என்பது நிதர்சனம். சூனியத்தை மறுப்பவர்கள் இதையெல்லாம் கண்களால் பார்க்கவில்லை என்பதற்காக நிதர்சனத்தில் நடக்கும் ஓர் உண்மை பொய்யென்று ஆகி விடாது.

இவ்வாறான பல சதித்திட்டங்களும், இறைநிராகரிப்புக்களும் சூனியத்தில் பொதிந்திருப்பதால் தான் சூனித்தை இஸ்லாம் இறைநிராகரிப்பு (குஃப்ர்) என்னும் பெரும் பாவத்தில் அடக்குகிறது.

இது தான் சூனியத்தின் சுயரூபம். இதற்கு மேலும் இந்த அசிங்கத்தைக் கற்கவோ, கற்பிக்கவோ வேண்டிய எந்தத் தேவையும் எனக்கில்லை. இந்த அளவுக்கு இதைப் பற்றி எழுதியது கூட, ஹதீஸ் மறுப்பாளர்கள் இந்த சூனியத்தை வைத்து மக்கள் மத்தியில் செய்யும் பித்தலாட்டங்களைத் தோலுரித்துக் காட்டத் தான். அந்தப் பணி இந்தத் தொடர் மூலம் அல்லாஹ்வின் அருளால் போதுமான அளவுக்கு நிறைவேறி விட்டதென்று கருதுகிறேன். ஆகவே, இத்தோடு இந்தத் தொடர் நிறைவடைகிறது. இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.

– அபூ மலிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *