Featured Posts

ஷைத்தானின் சூழ்ச்சி – தொடர் 03

சூழ்ச்சி:
ஷைத்தான் உங்கள் உள்ளத்தில் வீண் சந்தேகங்களை உருவாக்கி அதைப் படைத்தது யார்? இதைப் படைத்தது யார்? என்று இறுதியில் உன் இறைவனைப் படைத்தது யார்? என்று கேட்பான்.

தீர்வு:
உடனே அல்லாஹ்விடம் ஷைத்தான் ஏற்படுத்தும் இவ்வாறான வீண் சந்தேகங்களை விட்டு பாதுகாப்புத் தேடிக்கொள்வதுடன் இத்தகைய தீய சிந்தனையிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இன்னும் “அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்” (ஆமன்த்து பில்லாஹ்) என்று கூறிக்கொள்ளுங்கள்.
ஆதாரம்:

“உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்துஇ ‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘உன் இறைவனைப் படைத்தவர் யார்?’ என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும்”. என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், புஹாரி 3276).

“மக்கள் (இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்? என்று ஒவ்வொன்றாகக்) கேட்டுக்கொண்டேவந்து இறுதியில், “அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவன் யார்?” என்று கேட்கும் நிலைக்கு உள்ளாவார்கள். இத்தகைய எண்ணம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் உடனே, “அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன்” (ஆமன்த்து பில்லாஹ்) என்று சொல்லட்டும்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆதாரம்: முஸ்லிம் 212).

“மாண்பும் வல்லமையுமிக்க அல்லாஹ் (என்னிடம் பின்வருமாறு) கூறினான்: உம்முடைய சமுதாயத்தார் (உம்மிடம்), “இது என்ன (இதைப் படைத்தவர் யார்)? இது என்ன (இதைப் படைத்தவர் யார்)?” என்று கேட்டுக்கொண்டே வந்து இறுதியில் “இதோ! அல்லாஹ்தான் படைப்பினங்களைப் படைத்தான். அல்லாஹ்வைப் படைத்தவர் யார்?” என்றும் கேட்பார்கள். என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், ஆதாரம்: முஸ்லிம் 217).

மனித உள்ளங்களில் வீணான ஊசலாட்டங்களை ஏற்படுத்தும் மனித ஷைத்தான்களும் உள்ளனர் என்பதை நாம் ஒரு போதும் மறந்த விடக்கூடாது. இன்று இவ்வாறான வீண் சந்தேகங்களை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள், ஊடகங்கள், உரையாடல்கள், நிகழ்ச்சிகள் சமூக வலை தளங்கள் மலிந்து விட்டன.

நமது ஈமானை பாதுகாத்துக் கொள்வதற்கு அல்லாஹ்வின் அருளும், மார்க்க ஞானமும் மிக மிக கட்டாயமானது . இன்று மாற்று மதத்தவருக்கு இஸ்லாத்தை சொல்லப் போகின்றோம், அர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப் போகின்றோம் என்று புரப்பட்ட பலர் சந்தேகத்தில் வீழ்ந்துள்ளனர். காரணம் இஸ்லாத்தைப் பற்றி போதிய தெளிவில்லாமல் அவர்கள் புரப்பட்டமையே!!!.

நபியவர்கள் அல்லாஹ்விடம் அதிகம் பிரார்த்தித்த ஒரு பிரார்த்தனை நாம் வாழும் குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தில் மிகவும் இன்றியமையாததாகும்.

يا مقلب القلوب ثبت قلبي على دينك

உள்ளங்களை புரட்டுபவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக்கி வைப்பாயாக. (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், ஆதாரம்: திர்மிதி 2140).
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில் சில (குழப்பமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்) பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ) காரியமாகக் கருதுகிறோம் (இது பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?)” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நபித் தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள், ஆதாரம்: முஸ்லிம் 209).

குழப்பமான நிலைக்கு ஒருவர் உள்ளாகியிருப்பதை அவர் உணர்வதென்பது, ஒளிவுமறைவற்ற ஈமான் என அல்லாஹ்வின் தூதர் குறிப்பிட்டார்கள். இன்று பலர் அவர்கள் குழம்பி போயிருப்பது அவர்களே உணராமல் மக்களையும் குழப்பி வருகின்றனர். இப்படியானவர்கள் கையில் மீடியாவும் கிடைத்து விட்டால் சமூகத்தின் நிலை எவ்வளவு ஆபத்தானது என்பதை சற்று எண்ணிப் பாருங்கள்.

எப்பொழுதும் அல்லாஹ்விடமே நேர்வழியைப் பிரார்த்திப்போம், நேர்வழிக்குப் பின் வழிகேட்டை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுவோம். அல்குர்ஆன், ஸுன்னா வழியில் நபித் தோழர்கள் எப்படி பயணித்து வெற்றி பெற்றார்களோ அது போன்று அவ்வுத்தமர்கள் சென்ற அதே பாதையில் நாமும் பயணித்து வெற்றி பெறுவோம்.

தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *