Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » QA3. மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா?

QA3. மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா?

கேள்வி:
3. மாதவிடாய்ப் பெண்கள் குர்ஆனைத் தொடலாமா? ஓதலாமா?
-அபூ ஸயாப்-

பதில்:
மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த நிலையில் பெண்கள் இருக்கும் போது அவர்கள் மார்க்க ரீதியில் செய்யக் கூடாதவைகள் எவை யெவை என்பதை நபியவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

  1. அவர்கள் தொழக்கூடாது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் விடுபட்ட தொழுகைகளை கழாச் செய்ய வேண்டியதில்லை.
  2. நோன்பு பிடிக்கக் கூடாது. இக்காலத்தில் விடுபடும் கடமையான நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும்.
  3. அவர்கள் பள்ளிவாயில்களில் தங்கியிருக்கக் கூடாது.
  4. உடலுறவில் ஈடுபடலாகாது.
  5. கஃபாவைத் தவாப் செய்யக் கூடாது.

இவை தவிர்ந்த வேறு எதையும் செய்யக் கூடாது என இஸ்லாம் தடுக்கவில்லை.

ஆயிஷா(ரழி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த போது மாதவிடாய்க்கு உள்ளானார்கள். அப்போது நபி(ச) அவர்கள் தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய்யுமாறு கூறினார்கள்.

ஹாஜிகள் மினா, அறபாவில் தரிக்கும் போது திக்ர் செய்வர், துஆவில் ஈடுபடுவர், குர்ஆன் ஓதுவர். இது பற்றி எதையும் நபியவர்கள் தடுக்கவில்லை. இந்த அடிப்படையில் மாதவிடாய் வந்த பெண்கள் குர்ஆனை ஓதுவதிலோ, தொடுவதிலோ மார்க்க ரீதியிலான எந்தத் தடையும் இல்லை என்பதே சரியான முடிவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *