Featured Posts
Home » இஸ்லாம் » கொள்கைகள் » இஸ்லாமின் மூன்று அடிப்படைகள் (தொடர் 3)

இஸ்லாமின் மூன்று அடிப்படைகள் (தொடர் 3)

தொடர் 3

بسم الله الرحمن الرحيم
ثلاثة الأصول وأدلتها للإمام محمد بن عبد الوهاب بن سليمان التميمي

இஸ்லாமின் மூன்று அடிப்படைகளும் அவற்றின் ஆதாரங்களும்
முஹம்மது இப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்)

அவசியம் அறிய வேண்டிய மூன்று அம்சங்கள்
1. அல்லாஹ்வே நம்மை படைத்து பாதுகாத்துக்கொண்டிருக்கிறான். அவன் நம்மீது எப்பொறுப்பையும் சுமத்தாமல் வெறுமனே நம்மை விட்டுவிடவில்லை. அவனை வணங்கி கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற கடமையை நம்மீது விதித்துள்ளான். இதை நமக்கு கற்றுக்கொடுப்பதற்காக ஒரு துாதரை நம்மிடம் அனுப்பினான். அத்துாதருக்கு கட்டுப்படக்கூடியவர் சுவர்க்கம் செல்வார். அத்துாதருக்கு மாறுசெய்பவர் நரகம் செல்வார்.

ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேத் தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை.
அல்குா்ஆன் (51 56)

உங்களிடம் ஒரு துாதரை அனுப்பியுள்ளோம். அவர் உங்களுக்கு சாட்ச்சியாக இருப்பார். இதற்கு முன்பு இதுபோல் ஃபிர்அவ்னிடம் நாம் ஒரு துாதரை அனுப்பினோம். ஃபிர்அவன் அத்துாதருக்கு மாறுசெய்தான். எனவே அவனை நாம் கடுமையாக பிடித்தோம்.
அல்குா்ஆன் (73 15)

2. வணக்கத்தில் தனக்கு இணையைாக யாரை ஏற்படுத்தினாலும் அல்லாஹ் அதை பொருந்திக்கொள்ளமாட்டான். அவர் இறைவன் அனுப்பிய நபியாக இருந்தாலும் அவனுக்கு நெருக்கமான வானவராக இருந்தாலும் வேறுயாராக இருந்தாலும் சரியே.

பள்ளிவாசல்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியவை. எனவே அவனுடன் வேறுயாரையும் அழைக்காதீர்கள்.
அல்குா்ஆன் (72 18)

3. இறைத்துாதருக்கு கட்டுப்பட்டு இறைவன் ஒருவனை மட்டும் ஒருவர் வணங்கிவிட்டால் அடுத்தப்படியாக அவர் அல்லாஹ்விற்கும் அவனது துாதருக்கும் எதிராக நடக்கும் இறைமறுப்பாளர்கள் இணைவைப்பாளர்கள் ஆகியோரிடம் நேசம்கொள்ளக்கூடாது. அவர்கள் தனக்கு நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே.

அல்லாஹ்வையும் அவனுடைய துாதரையும் நம்பிக்கைக்கொண்ட கூட்டத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய துாதருக்கும் எதிராக நடப்பவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்களின் தந்தையர்களாகவோ மகன்களாகவோ சகோதரர்களாகவோ குடும்பத்தினர்களாகவோ இருந்தாலும் சரியே. இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் இறைநம்பிக்கையை பதித்துவிட்டான். தனது ரூஹ் (ஜிப்ரீல்) மூலம் அவர்களை உறுதிபடுத்தினான். அருகே ஆறுகள் ஓடும் சுவனச் சோலைகளில் அவர்களை நுழைவிப்பான். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ் இவர்களை பொறுந்திக்கொண்டான். இவர்களும் அவனை பொறுந்திக்கொண்டனர். இவர்களே அல்லாஹ்வின் படையினர். அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ்வின் படையினரே பெற்றியாளர்கள்.
அல்குா்ஆன் (58 22)

ஹனீஃபிய்யா  என்றால் என்ன?
அல்லாஹ் ஒருவனை மட்டுமே முன்னோக்கி வழிபடுதல் என்பது ஹனீஃபிய்யா (الحنيفية) என்ற சொல்லின் பொருளாகும். இப்பதத்தை அல்லாஹ் திருக்குா்ஆனில் இப்ராஹீம் (அலை) அவர்களுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கூறியுள்ளான். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

  1. மக்கத்து இணைவைப்பாளர்கள் தாங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் இருப்பதாகவும் அவர்களே தங்களுடைய தந்தை என்றும் கூறிவந்தனர். எனவே அல்லாஹ் இக்கொள்கையை இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்து அவர்களிடம் பேசினான்.
  2. இப்ராஹீம் (அலை) அவர்களை அவர்களுக்குப் பிறகு வந்த நபிமார்களுக்கு இமாமாக (தலைவராக) அல்லாஹ் நியமித்தான். இச்சிறப்பு அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அவன் வழங்கவில்லை.
  3. இப்ராஹீம் (அலை) அவர்கள் ஓரிறைக்கொள்கையை கடைபிடிப்பதில் மற்ற அனைவரையும் காட்டிலும் உயர்வான நிலையை அடைந்தார்கள். இதன் மூலம் அல்லாஹ்வின் நண்பன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றார்கள். அவர்களுக்குப் பிறகு அவர்களின் பரம்பரையில் வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களைத் தவிர வேறு யாரும் இந்நிலையை அடையவில்லை. மகனை விட தந்தை முற்படுத்தப்படுவார் என்ற அடிப்படையில் ஹனீஃபிய்யா என்பது இப்ராஹீம் (அலை) அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.

முக்கியமான கட்டளையும் கடுமையான தடையும்
அல்லாஹ் மனிதனுக்கு எராளமான கட்டளைகளை இட்டுள்ளான். இவற்றில் மிக முக்கியமானதும் முதன்மையானதும் எதுவென்றால் அவன் ஒருவனை மட்டுமே வணங்குவதாகும். இதுவே தவ்ஹீத் (இறைவனை மட்டும் வழிபடுதல்) எனப்படும்.

இறைவன் பல்வேறு பாவங்களை மனிதனுக்கு தடைசெய்துள்ளான். இவற்றில் மிகப்பெரிய பாவம் அவனை அழைப்பது போல் மற்றவர்களை அழைப்பதாகும். இதுவே ஷிர்க் (இணைவைப்பு) எனப்படும்.

தவ்ஹீத் மூன்று வகைப்படும்
தவ்ஹீத் என்றால் அல்லாஹ்விற்குரிய உரிமைகள் அனைத்தும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உரியது என்று நம்புவதும் இவற்றில் எந்த ஒன்றையும் பிறருக்கு உண்டு என நம்பாமல் இருப்பதாகும். அல்லாஹ்வின் உரிமைகள் மூன்று வகைப்படும். இதனடிப்படையில் தவ்ஹீத் மூன்று வகைப்படும்.

  1. தவ்ஹீதுர் ருபூபிய்யா – அல்லாஹ் ஒருவன் மட்டுமே அகிலம் முழுவதையும் படைத்து பரிபாலிக்கிறான். இதை வேறு யாரும் செய்யவில்லை என்று நம்ப வேண்டும். உதாரணமாக மழை பொழிய வைத்தல் உணவளித்தல் துன்பங்களை நீக்கும் வானம் பூமி அழிந்துவிடாமல் அவற்றை சீராக செயல்பட வைத்து நிர்வகித்தல் மரம் செடி கொடி அனைத்து உயிரினங்களையும் படைத்தல் ஆகிய காரியங்களே படைத்து பரிபாலித்தலாகும். இது இறைவன் மட்டுமே செய்கின்ற காரியங்களாகும்.
  2. தவ்ஹீதுல் உலுாஹிய்யா – வணக்கத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே நிறைவேற்றுதல். அவனல்லாத வேறு யாருக்கும் அதை நிறைவேற்றாமல் இருத்தல். இது படைப்பினங்கள் செய்ய வேண்டிய காரியமாகும். உதாரணமாக அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனை செய்தல். அவனுக்கு மட்டுமே அறுத்துப் பலியிடுதல் அவனுக்கு மட்டுமே நோ்ச்சை செய்தல் ஆகியவை சில வணக்கங்களாகும்.
  3. தவ்ஹீதுல் அஸ்மாஉ வல்ஸிஃபாத் – அல்லாஹ்விற்கு மட்டும் பிரத்யேகமாக சில பெயர்களும் பண்புகளும் உள்ளன. உதாரணமாக அல் ஹய் (நித்திய ஜீவன்) அல்கய்யூம் (நிலைத்திருந்து நிர்வகிப்பவன்) அஸ்ஸமத் (தேவையற்றவன்) அஹத் (தனித்தவன்) ஆகிய பெயர்களைக் கூறலாம். குழந்தை இல்லை மனைவி இல்லை உறக்கம் இல்லை பலவீனம் இல்லை மறதி இல்லை அனைத்தையும் அறிதல் ஆகியவை அல்லாஹ்வின் பண்புகளாகும். இதுபோன்ற பண்புகள் பெயர்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்ப வேண்டும்.

ஷிர்க் என்பதும் மூன்று வகைப்படும்

1. தவ்ஹீதிற்கு முற்றிலும் முரணான ஷிர்க் என்பதும் மூன்று வகைப்படும்.

  1. ருபூபிய்யாவில் இணைவைத்தல்
  2. உலுாஹிய்யாவில் இணைவைத்தல்
  3. அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத்தில் இணைவைத்தல்

பெரிய இணைவைப்பும் சிறிய இணைவைப்பும்
மேலும் ஷிர்க் (இணைவைப்பு) என்பது அது ஏற்படுத்தும் விளைவை கவனித்தால் அதனை இரு வகைகளாக பிரிக்கலாம்.

1. பெரிய இணைவைப்பு – அல்லாஹ்விற்குரிய உரிமைகளில் ஏதாவது ஒன்றை மற்றவர்களுக்கு வழங்குதல். அல்லாஹ்வின் உரிமைகள் மூன்று வகைப்படும். அவை

  1. அவன் மட்டுமே படைத்து பரிபாலிக்கிறான்
  2. அவன் மட்டுமே வணங்குவதற்கு தகுதியானவன்
  3. அவனது பெயர்கள் மற்றும் தன்மைகள் அவனுக்கு மட்டுமே உள்ளன

அல்லாஹ்விற்குரிய இந்த மூன்று உரிமைகளில் ஏதாவது ஒன்று மற்றவர்களுக்கு உண்டு என நம்பிவிட்டால் அது பெரிய இணைவைப்பாகும். இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடுவார். அவர் காஃபிராகவோ இணைவைப்பாளராகவோ மாறிவிடுவார். உதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்வது பெரிய இணைவைப்பாகும். இது நிரந்தர நரகத்திற்குரிய பெரும்பாவமாகும்.

2. சிறிய இணைவைப்பு
சிறிய இணைவைப்பு என்பது இணைவைப்பிற்கு முன்பு நாம் சொன்ன வரையறுக்குள் அடங்காத பாவமான காரியமாகும். அல்லாஹ்வின் மூன்று உரிமைகளில் மற்றவர்களை இணையாக்கும் அம்சம் இந்த பாவத்தில் இருக்காது.

இறைதிருப்த்தியை மட்டும் எதிர்பார்த்து செய்ய வேண்டிய வணக்கங்களில் மக்களிடம் புகழ்ச்சியை தேடினால் இதுவே சிறிய இணைவைப்பாகும். இது பெரும்பாவம் என்றாலும் இணைவைப்பிற்கு நிகரான பாவமல்ல. இணைவைப்பின் சாயல் இதில் தென்படுவதால் இது சிறிய இணைவைப்பு எனக் கூறப்படுகிறது.

உதாரணமாக அல்லாஹ்விற்காக தொழுதுகொண்டிருப்பவர் தன் எண்ணத்தை மாற்றி பிறரிடம் நற்பேறு வாங்குவதற்காக தொழுதல் சிறிய இணைவைப்பாகும்.

இக்காரியத்தை செய்பவர் ஈமானை விட்டும் இஸ்லாமை விட்டும் முழுமையாக வெளியேறிவிடமாட்டார். மாறாக ஈமானிய குறைபாடு உடையவராகவும் பாவியாகவும் ஆகிவிடுவார். இவர்கள் பெரும்பாவிகள் என்றாலும் நிரந்தர நரகத்திற்கு உரியவர்கள் அல்ல. அல்லாஹ் நாடினால் இவர்களை நரகத்தில் தண்டித்துவிட்டு பிறகு சுவர்க்கத்திற்குள் அனுப்புவான்.

1. அடியான் தன் ரப்பை அறிதல்

ஒரு அடியான் கட்டாயம் அறிய வேண்டிய மூன்று அடிப்படைகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைகளை தெளிவுபடுத்துவதே இந்நுாலின் நோக்கம். அதில் முதலாவது அடிப்படை அடியான் தன்னைப் படைத்தவனை அறிவதாகும்.

ரப்பு என்பவன் நம்மையும் உலகில் உள்ள அனைவரையும் படைத்து பரிபாலிப்பவன் ஆவான். அவனுடைய அருட்கொடையால் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனிதன் தன்னைப் படைத்த அல்லாஹ்வை பற்றி அறிவதே அவனுடைய முதல் கடமையாகும்.

ரப்பை எவ்வாறு அறிவது?
நாம் அல்லாஹ்வை கண்ணால் காணவில்லை. என்றாலும் அவனை ஆழமாக நம்ப வேண்டும். இந்த நம்பிக்கைக்கு அல்லாஹ் படைத்துள்ள படைப்புகளே சான்றுகளாக இருக்கின்றன.

வானம் பூமி சூரியன் சந்திரன் மலைகள் கடல்கள் தாவரங்கள் பறவைகள் வனவிலங்குகள் கால்நடைகள் நாம் உண்ணுகிற உணவு வகைகள் காற்று மனித உடலின் அமைப்பும் செயல்பாடும் ஆகியவற்றை சிந்தித்துப்பார்த்தால் இவற்றை படைத்தவன் இருக்கிறான் என்பது உறுதியாக அறியலாம். அவனே அல்லாஹ். படைப்பினங்களை சிந்தித்துப்பார்ப்பதின் மூலம் படைத்தவனை அறியலாம். இதன் மூலம் அவன்மீதுள்ள நம்பிக்கை அதிகமாகும்.

எனவே அவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனல்லாத வேறு யாரையும் வணங்கக்கூடாது. இதுவே அல்லாஹ் நமக்கு புரிந்த அருட்கொடைகளுக்கு நாம் செலுத்தும் நன்றி ஆகும். இதை நிறைவேற்றாதவர்கள் நன்றிகெட்டவர்கள் ஆவர்.

படைத்தவனுக்கு நன்றி செலுத்துவோம்
அல்லாஹ் ஒருவனே நம்மை படைத்து பரிபாலித்துக்கொண்டிருக்கிறான். இதை அவனல்லாமல் வேறு யாரும் செய்யவில்லை. எனவே அவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனல்லாத வேறு யாரையும் வணங்கக்கூடாது. இதுவே அல்லாஹ் நமக்கு புரிந்த அருட்கொடைகளுக்கு நாம் செலுத்தும் நன்றி ஆகும். இதை நிறைவேற்றாதவர்கள் நன்றிகெட்டவர்கள் ஆவர்.

படைத்தவனை வணங்கும் முறைகள்
இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை மனத்துாய்மையுடனும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்தவாறும் நிறைவேற்றுவது வணக்கமாகும்.

இறைவனை வணங்கும் முறைகளை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள். வணக்கங்கள் மூன்று வகைப்படும்.

  1. நாவால் நிறைவேற்றும் வணக்கங்கள்
  2. உறுப்புக்களால் நிறைவேற்றும் வணக்கங்கள்
  3. உள்ளத்தால் நிறைவேற்றும் வணக்கங்கள்

நாவால் நிறைவேற்றும் வணக்கங்கள்.
இறைவனை துதிபாடுவதும் அவன் விரும்பும் வார்த்தைகளை கூறுவதும் வணக்கமாகும். உதாரணமாக
அல்லாஹ் அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்)
அல்ஹம்து லில்லாஹ் (புகழனைத்தும் இறைவனுக்கே)
சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் துாயவன்)
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வின் அடிமையும் துாதரும் ஆவார்.
இன்னும் இதுபோன்ற இறைவன் விரும்பும் வார்த்தைகள் அனைத்தும் வணக்கமாகும்.

உறுப்புக்களால் நிறைவேற்றும் வணக்கங்கள்
1. தொழுகை நோன்பு ஸகாத் ஹஜ் ஆகியவையும் இறை வணக்கங்களாகும். நன்மையை ஏவுவதும் தீமையை தடுப்பதும் வணக்கமாகும். பிரார்த்தனை – நம் தேவைகளை இறைவனிடம் கேட்பதும் பிறர் நலனுக்காக இறைவனிடம் வேண்டுவதும் நபி(ஸல்) அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதும் வணக்கமாகும். பாவமன்னிப்புத் தேடுதல் ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் அறுத்துப் பலியிடுதல் நேர்ச்சை செய்தல் இவையும் வணக்கமாகும்.

உள்ளத்தால் நிறைவேற்றும் வணக்கங்கள்
2. சில செயல்கள் வணக்கமாக இருப்பதைப் போன்று உள்ளத்தில் எழும் நல்ல உணர்வுகளும் வணக்கமாகும். இறைவனையும் அவனது துாதர்களையும் வேதங்களையும் வானவர்களையும் மறுமை நாளையும் விதியையும் நம்புதல் வணக்கமாகும். வெட்கம் பிறர் படும் துன்பத்தை கண்டு கவலைப்படுதல் இறைவனை நினைத்து அழுதல் பிறருக்கு நலம் நாடுதல் பொறுமை மேற்கொள்ளுதல் தீமையை மனதில் வெறுத்தல் இறைவனை அஞ்சுதல் அவனுடைய உதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தல் தனது இயலாமையை வெளிப்படுத்தி அவனையே சார்ந்து இருத்தல் மற்றும் இவை அனைத்தும் வணக்கமாகும்.
தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *