Featured Posts
Home » சட்டங்கள் » உளூ » குளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா?

குளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

ஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தின் மூலம், அல்லது கனவின் மூலம் ஸ்கலிதமானால் குளித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சற்று தாமதித்து குளிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்காக இதை நாம் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

குளிப்பு கடமையானவர் உறங்குவது.
ஈமான் கொண்டவர்களே! . . . மேலும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை தொழுகையை நெருங்காதீர்கள், பாதையை கடந்து செல்பவராக இருந்தாலே தவிர. (4-43)

‘நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் தூங்க நினைத்தால், தங்கள் மர்மஸ்தலத்தைக் கழுவிவிட்டுத் தொழுகைக்குரிய உளூச் செய்வார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார். ( புகாரி 287)

‘நம்மில் ஒருவர் குளிப்புக் கடமையான நிலையில் தூங்கலாமா?’ என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு ‘ஆம்! உங்களில் ஒருவர் குளிப்புக் கடமையானவராக இருக்கும்போது உளூச் செய்துவிட்டுத் தூங்கலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (புகாரி 288)

இரவு நேரத்தில் குளிப்பு கடமையானவராக இருந்தால் சுப்ஹூ தொழுகைக்காக குளித்துக் கொள்ள வேண்டும். என்றாலும் இல்லறத்தில் ஈடுபட்ட பிறகும் உளூ செய்து கொண்டு இரவிலே துாங்குவது மிக பொருத்தமாகும். சுப்ஹூ தொழுகைக்கு பிறகு குளிப்பு கடமையானவராக இருந்தால், குளிப்பதற்கு தாமதமாகும் என்றால் தொழுகைக்கு உளூ செய்வது போல உளூ செய்து கொள்ள வேணடும். அதன் பிறகு துாங்கவோ அல்லது வேறு வேலைகளில் ஈடுபடவோ முடியும். உளூ செய்த கொண்டு ஏனைய காரியங்களில் ஈடுபடலாம்.

குளிப்பு கடமையானவர் வெளியில் செல்லலாம்:
‘நான் குளிப்புக் கடமையாகியிருந்த இருந்த நிலையில் என்னை நபி(ஸல்) அவர்கள் சந்தித்து என்னுடைய கையைப் பிடித்தார்கள். நான் அவர்களோடு நடந்தேன். அவர்கள் அமர்ந்த உடன் நான் நழுவிச் சென்று கூடாரத்தில் போய்க் குளித்துவிட்டு வந்தேன். அப்போது நபி(ஸல்) உட்கார்ந்திருந்தார்கள். ‘அபூ ஹுர்ரே! எங்கே சென்று விட்டீர்?’ என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு நடந்த விஷயத்தைக் கூறினேன். அப்போது ‘ஸுப்ஹானல்லாஹ்! அபூ ஹுர்ரே! நிச்சயமாக இறைநம்பிக்கையாளன் அசுத்தமாவதில்லை’ என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 285)

எனவே கட்டாய தேவை ஏற்படுமேயானால் குளிப்பு கடமையான நிலையில் கடைவீதி போன்ற இடங்களுக்கு போய் வரலாம். போய் வரும் போது யாராவது ஸலாம் சொன்னால் தாராளமாக பதில் சொல்லலாம். அல்லது சந்தித்து பேசினால் சற்று பேசிவிட்டு வரலாம். வீட்டிற்கு யாராவது சந்திக்க வந்தால் அவருடனும் இருந்து பேசலாம். என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

குளிப்பு கடமையானவர் குளிக்கும்முறை:
ஆயிஷா (றழி) அவர்கள் கூறினார்கள்: ‘நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்” (புஹாரி: 248…முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்பில்; பாத்திரத்திலிருந்து தங்களின் கையில் அள்ளி தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்” (புஹாரி: 258, முஸ்லிம்)

எனவே குளிப்பு கடமையானவர்கள் மேற்க் கூறிய ஒழுங்கு முறைகளை பேணி நடந்த கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *