Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு » மஸ்ஜித் இமாம்களின் அவல நிலை

மஸ்ஜித் இமாம்களின் அவல நிலை

இஷாவுக்கு பிறகு பயான் முடித்துவிட்டு பள்ளிக்கு வெளியே உள்ள சீமெந்து பென்ஞ்சில் வந்தமர்கிறார் ஹஸ்ரத்.

பயான் தொடர்பான ஒரு சந்தேகம் தீரவேண்டி இருந்ததால் நானும் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன்.

சந்தேகம் தீர்ந்தது.

அதன் பின்னர் பொதுவான உரையாடல் தொடர்ந்தது…..

ஆனாலும் அவருக்குள் ஒரு தேக்க நிலையினை உணர்ந்தேன். வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்குவதற்கு பஸாருக்கு போகவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அதில்தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை உணரமுடிந்தது.

இந்த பள்ளிக்கு வந்த காலத்திலிருந்து தனது கஷ்டத்தை சொல்லி இதுவரை இங்கே வருகிற யாரிடமும் ஒரு சதம் கூட கை நீட்டி வாங்கியிராத கெளரவமான மனிதர்!

பள்ளி செயலாளர் அவரை நோக்கி நெருங்கும் போது விடைபெற்று வந்துவிட்டேன்.

அனேகமாக அவரைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

நமது நாட்டில் திருவோடு ஏந்த வேண்டிய பெளத்த துறவிகள் இன்டர் கூளரில் பவனி வருகிறார்கள், கிறிஸ்தவ பாதிரிமார் செல்வச்செழிப்போடு வாழ்கிறார்கள், பள்ளிவாயல்களில் பணிசெய்யும் மெளலவிமாரின் நிலையோ பரிதாபம்.

எங்கள் பள்ளி ஹஸ்ரத்துக்கு மாதச்சம்பளம் இருபத்தையாயிரம் ரூபாய். எந்த வருமானமுமின்றி இயங்குகிற பள்ளியாதலால் ஒரு நிறுவனந்தான் அந்த சம்பளத்தையும் வழங்குகிறது!

இந்த வருவாயோடுதான் ஆறுமாதக்குழந்தையோடு பள்ளி ஹஸ்ரத் இங்கே தலை நகரில் காலந்தள்ளவேண்டியிருக்கிறது!

கத்தம், பாத்திஹா, மெளலிது, மையத்து வருமானம், ட்ரஸ்டிமாருக்கு தலைசொறிவதால் வருகிற டிப்ஸ், பசையுள்ள பணக்கார்ர்களுடன் பல் இழிப்பதால் அவ்வப்போது கிடைக்கும் கையூட்டு இவை எதுவும் அவருக்கில்லை!

இஷாவுக்கும், சுபஹுக்கும் பிறகு நாள்தோறும் அவரது பயான் நிகழ்த்தப்படுகிறது.

அவ்வப்போது விடுமுறை நாட்களிலும் தூய இஸ்லாத்தை விளக்கும் நிகழ்வுகளும் அவரால் நடாத்தப்படுகிறது.

இப்படியொரு பள்ளி ஹஸ்ரத்தை எனது வாழ்நாளில் இப்போதுதான் பார்த்திருக்கிறேன்.

பள்ளி வாயல்களில் வழங்கப்படுகிற இந்த குறைந்த சம்பளத்தின் காரணமாக விடயதானமுள்ள மெளலவிமார் பள்ளி இமாம்களாக கடமையாற்றுவது மிக குறைவு.

நளீமிய்யாவில் இருந்து வெளியாகிற உலமாக்கள் பள்ளிவாயல்களில் இமாம்களாக இருப்பதை காணமுடியவில்லை, அவர்களுக்கு அரச தனியார் துறைகளில் நல்ல சம்பளத்துடன் தொழில் கிடைத்து விடுகிறது.

சவூதி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வருகிற உலமாக்களுக்கு மாதாந்தம் சவுதி அரசால் கணிசமான கொடுப்பனவு வழங்கப்படுகிறது. அத்தோடு அவர்கள் வேறு அரச / தனியார் துறை சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு நல்ல வருமானமும் பெறுகின்றனர்.
அவர்களுக்கு பள்ளி இமாம்களாக பணி செய்வதற்குரிய தேவைப்பாடும் கிடையாது.

மறுபுறம் இங்கே வருமானம் ஈட்ட முடியாத உலமாக்கள் தமது பொருளாதார தேவை கருதி மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் தேடி செல்கின்றனர். அவர்களில் சிலரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது.

ஜித்தா விமான நிலையத்தின் கழிவறைப்பகுதியில் சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த குர்ஆனை மனனஞ்செய்த ஹாபிழ் ஒருவரை கண்டு மனமுடைந்து போனதாக ஓரு முஸ்லிம் அரசியல்வாதி அடிக்கடி கூறிக்கொள்வார்.

இன்னும் மத்திய கிழக்கு நாடொன்றில் காரைக்கழுவிக்கொண்டே குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த இன்னொரு ஹாபிழை கண்ணுற்ற அறபி ஒருவர் மிக்க மனம் வருந்தி அந்த ஹாபிழை வேறொரு கெளரவமான தொழிலுக்கு நியமித்து, சம்பளத்தையும் அதிகரித்து கொடுத்த நிகழ்வொன்றை அதற்கு சாட்சியான நண்பர் ஒருவர் சொன்னதுண்டு.

இது போல் ஏராளமான சம்பவங்கள் நிகழ்கின்றன!

இப்போது நமது நாட்டில் பல அரேபிய நிறுவனங்களும், தனி நபர்களும் தர்ம காரியங்களில் அறப்பணி புரிகிறார்கள். அதில் பெரும்பாலானவை பள்ளிவாயல்களை கட்டுவதாகவே காணப்படுகிறது.

தெருவுக்கு நான்கு பள்ளிகளை கட்டுவதைவிட இருக்கிற ஒரு பள்ளிவாயலை ஒழுங்காக பராமரிக்கவும் அங்கே கடமையாற்றும் இமாம் மற்றும் முஅத்தினுக்கு நல்ல சம்பளத்தை வழங்கவும் வழி செய்தால் அது பாரிய நன்மையாக அமையும்.

ஒரு பள்ளி ஹஸ்ரத்துக்கு மாதாந்தம் அறுபதினாயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியுமாக இருந்தால் நமது பள்ளிகளில் நல்ல வினைத்திறண் மிக்க உலமாக்களை இமாம்களாக பெற முடியும் அவர்கள் தொழில் தேடி வேறெங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது சாதாரணமாக அறபிகள் ஒரு பள்ளிவாயல் நிர்மாணத்திற்கு இலங்கையில் இரண்டரைக்கோடி ரூபாய்கள் வரை சராசரியாக அன்பளிப்பு செய்கின்றனர். இவ்வாறு நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள் கட்டப்படுகின்றன!

இதற்காக செலவிடப்படும் பெருந்தொகைப்பணத்தினை சரியாக முகாமை செய்து இருக்கின்ற பள்ளிவாயல்களின் வளர்ச்சிக்கும் அதன் பணியாளர்களின் கொடுப்பனவுகளுக்கும் பயன்படுத்த முடியும்.

அறபிகளோடு பணி செய்யும் நிறுவனங்களும், தனி நபர்களும் இந்த விடயத்தில் கவனம் செலுத்துவதன் ஊடாக பாரிய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்த முடியும்.

அதே போல், மாதாந்தம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக பெறும் பள்ளிவாயல்கள் மாதாந்தம் இமாமுக்கு இருபதாயிரம், முஅத்தினுக்கு பத்தாயிரம் என்று வழங்கிவிட்டு, பெருந்தொகை பணத்தினை செலவிட்டு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பள்ளிக்கு மாபிள்களையும் , வர்ணங்களையும் மாற்றிக்கொண்டிராமல், இமாமையும், முஅத்தினையும் உரிய முறையில் கவனிக்கும் மன நிலைக்கு தங்கள் நிர்வாகத்தில் மாற்றத்தினை கொண்டுவர வேண்டும்.

நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய்கள் இருந்தாலே போதாதென்ற நிலையில் இலங்கையில் வாழ்க்கைச்செலவு எகிறிப்போய் இருக்கும் நிலையில், பள்ளி இமாமுக்கு கிடைக்கும் இருபத்தையாயிரம் ரூபாய் வெறும் பன்னிரெண்டு நாட்களில் தீர்ந்து போனால் எஞ்சி இருக்கும் நாட்களுக்கு அவர் என்ன செய்வார்? எங்கு போவார்?

ஒரு பெளத்த தேரோவுக்கு, கிறிஸ்தவ பாதிரிக்கு இலங்கையில் கிடைக்கும் வருவாயும், வாழ்க்கைத்தரமும் நமது பள்ளி இமாம்களுக்கு கிடைப்பதில்லை என்பதில் நமக்கு வெட்கமில்லையா?

சமூக ஆர்வலர்களே, பள்ளி நிர்வாகிகளே, இஸ்லாமிய சமூக இயக்கங்களே, அறபிகளோடு பணி செய்வோரே, செல்வந்தர்களே இந்த கேள்விகள் உங்களுக்கே!

Received through WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *