Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » பிக்ஹுல் இஸ்லாம் – 23 (மழை வேண்டித் தொழுகை)

பிக்ஹுல் இஸ்லாம் – 23 (மழை வேண்டித் தொழுகை)

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)

முன்னைய இதழின் தொடர்ச்சி….

தொழுகை:
மழை வேண்டித் தொழுகை இரண்டு ரக்அத்துக்களையுடையது. இதில் இமாம் கிராஅத்தை சப்தமாக ஓதுவார். குத்பா நிகழ்த்தப்படும். நபி (ச) அவர்கள் பெருநாள் தொழுகை போன்று தொழுதார்கள் என ஹதீஸ்கள் இடம்பெறுகின்றன. எனவே, மழை வேண்டித் தொழுகையிலும் பெருநாள் தொழுகை போன்று மேலதிகத் தக்பீர்கள் இடம் பெற வேண்டும் என்ற கருத்தை அதிகமான உலமாக்கள் கூறியுள்ளனர்.

மற்றும் சிலர், பெருநாள் தொழுகை போன்று என்பது மேலதிகத் தக்பீர்களைக் குறிப்பதற்காகக் கூறப்பட்டதன்று. அதான் இல்லை, இகாமத் இல்லை, திறந்த வெளியில் தொழப்படுதல், ஆண்-பெண் இருபாலாரும் இணைந்து தொழுதல், தொழுகையின் பின்னர் குத்பா நடாத்துதல்.. என பல விடயங்கள் பெருநாள் தொழுகையை ஒத்திருப்பதால் இப்படிக் கூறப்பட்டதாகக் கருதுகின்றனர். இரண்டுக்கும் இடம்பாடு உள்ளது என்பதே பொருத்தமாகப் படுகின்றது. (அல்லாஹு அஃலம்)

மழை வேண்டி ஓதும் துஆக்கள்:
நபி (ச) அவர்கள் மழை வேண்டித் தொழும் தொழுகையின் குத்பாவில் ஓதியதாகவும் மற்றும் பல சந்தர்ப்பங்களிலும் ஓதியதாகவும் இடம்பெற்ற பல பிரார்த்தனைகள் உள்ளன. பிரார்த்தனையின் போது அவற்றை ஓதுவது வரவேற்கத்தக்கதாகும்.

அனஸ் இப்னு மாலிக்(வ) அறிவித்துள்ளார்: ‘ஜும்ஆ நாளில் நபி(ச) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது ‘தாருல்களா’ எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ச) அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே, எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கேட்டார். நபி(ச) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, ‘இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களுக்கும் (அதாவது மதீனாவுக்கும்) ‘ஸல்ஃ’ என்னும் மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்குப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ச) அவர்கள் நின்று உரை நிகழ்த்தும் போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ச) அவர்களை நோக்கி, ‘இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். உடனே நபி(ச) அவர்கள் தம் கைகளை உயர்த்தி ‘இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற் குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)’ என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம்.

இரண்டாவதாக வந்த மனிதர் முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(வ) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘தெரியாது’ என்றனர் என ஷரீக் கூறுகிறார்.’
(புஹாரி: 1014)

image002

பெய்யும் மழையால் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக நபி(ச) அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்துள்ளார்கள்.

image004

நபி(ச) அவர்கள் பின்வரும் துஆவை ஓதிப் பிரார்த்தித்ததும் மழை பொழிந்த ஹதீஸை அபூதாவுதில் காணலாம்.

image006

(அபூதாவூத்: 1173)

மற்றும் பல ஹதீஸ்களிலும் நபி(ச) அவர்கள் பிரார்த்தித்ததுண்டு.

image008

(அபூதாவூத்: 1176)

image010

(இப்னுமாஜா: 1269)

இவ்வாறு துஆக்கள் தேர்ந்தெடுத்து ஓதலாம். அத்துடன் பாவமன்னிப்புத் தேடுவதை ஊக்குவிப்பதுடன் அதிகம் பாவமன்னிப்புத் தேடக் கூடிய துஆக்களையும் ஓதலாம்.

தொழாமல் மழைவேண்டிப் பிரார்த்தித்தல்:
மழை இல்லாத போதும் மக்கள் மழைக்காக ஏங்கும் போதும் மழை வேண்டித் தொழுகை தொழாமலே பிரார்த்தனை மட்டும் கூட செய்யலாம். இதற்கு ஏற்கனவே நாம் கூறிய ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

இந்த நபிமொழி ஜும்ஆவுடைய குத்பாவிலே நபி(ச) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்திருப்பதைக் குறிப்பிடுகின்றது. இவ்வாறின்றி சாதாரண நிலைகளிலும் மஸ்ஜித்களிலும் தேவைக்கு ஏற்ப நபி(ச) அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள்.

மழை இல்லாத போது மழைக்காக பைத் படிப்பது அல்லது சடங்குகள் செய்வது, நட்சத்திரங்கள் மூலமாக மழை எதிர்பார்ப்பது, நட்சத்திரங்களின் மாற்றத்தினால் மழை பொழிவதாக நம்புவது அனைத்தும் கண்டிக்கத்தக்க அம்சங்களாகும்.

(தொடரும்… இன்ஷா அல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *