Featured Posts
Home » இஸ்லாம் » அல்குர்ஆன் » ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 07]

ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 07]

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)
ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? (02)

மர்யம்(ர) அவர்களின் கற்பில் ஜிப்ரீல்(ர) அவர்கள் ரூஹை ஊதினார்கள் எனக் குர்ஆன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கும் போது இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட மரபணுவை அந்த வானவர் மர்யம்(ர) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என PJ கூறுவது அவரது குர்ஆனுக்கு முரண்பட்ட குருட்டு யூகமாகும் என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம்.

ஈஸா நபி பேசியது குளோனிங் காரணமாகவா?:
ஈஸா பிறந்தவுடன் அற்புதமாகப் பேசினார்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது. அனைத்து முஸ்லிம்களும் இவ்வற்புதத்தை நம்புகின்றனர்.

PJ ஈஸா(ர) அவர்கள் பிறந்தவுடன் பேசினார்கள் என்றால் அவர்கள் மரபணுவால் படைக்கப்பட்டார்கள்ளூ மரபணுவால் குழந்தை பிறந்தால் குழந்தையின் வயது குறைவாக இருந்தாலும் மரபணுவின் முதிர்ச்சி குழந்தையிடம் இருக்கும். ஈஸா(ர) அவர்கள் குழந்தைப் பருவத்தில் பேசியது அந்த மரபணுவின் முதிர்ச்சி காரணமாகத்தான் நடந்தது என PJ சித்தரிக்க முற்படுகின்றார்.

ஏற்கனவே PJ பின்வருமாறு ஒரு பீடிகை போட்டிருந்தார்.
’25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொருத்த வரை வயது 25 ஆகும். எனவே, 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. இந்த விபரங்களை கவனத்தில் வைத்து ஈஸா(ர) அவர்களின் பிறப்பு பற்றி குர்ஆன் கூறுவதை சிந்தித்துப் பார்ப்போம்.’

அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விடயம்ளூ ஈஸா(ர) அவர்கள் பிறந்தவுடன் பேசியதாகவும் இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்தால் அற்புதம் என்ற அடிப்படையில் சில வார்த்தைகளைப் பேசிவிட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருந்திருப்பார் என்று நினைக்க முடியாது…..’ என்று PJ வாதத்தைத் தொடங்கினார்.

மரபணு மூலம் குளோனிங் அடிப்படையில் படைக்கப்பட்டதால் அவர் குழந்தையாக இருந்தாலும் மரபணுவின் முதிர்ச்சியுடையவராக இருந்ததால்தான் அவர் பிறந்ததும் பேசினார் என நிறுவ முற்படுவதே இந்த வாதத்தின் நோக்கமாகும்.

குளோனிங்கினால் உருவாக்கப்பட்டவர் களுக்கு விஞ்ஞானிகள் கூறுவது போல் மரபணுவின் முதிர்ச்சி இருந்தால் கூட பிறந்ததும் குழந்தை பேச முடியாது. ஏனெனில், குழந்தை பேசிய சம்பவத்தை அல்லாஹ் இப்படி விபரிக்கின்றான்.

‘அப்போது (தன் குழந்தையாகிய) அவர் பக்கம் சுட்டிக் காட்டினார். ‘தொட்டிலில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படிப் பேச முடியும்?’ என அவர்கள் கேட்டனர்.’ (19:29)

ஈஸா(ர) அவர்கள் மர்யம்(ர) அவர்களின் மடியில் இருந்துள்ளார்கள். மரபணுவின் முதிர்ச்சியால் அவர்கள் எழும்பி நடமாடித் திரியவில்லை. அறிவு முதிர்ச்சி வேறு, உடல் ஆற்றல்கள் வேறு. ஒரு வேளை, குளோனிங்கினால் ஒருவர் பிறந்தால் கூட அவர் பிறந்ததும் பேச முடியாது. வளர்ந்த பின்னர் முன்னைய மரபணுவின் முதிர்ச்சி அவரது அறிவில் தென்படலாம்.

அடுத்து, அவர் பேசிய எதுவும் மரபணுவின் முதிர்ச்சியுடன் சம்பந்தப்பட்டவை அல்ல. அனைத்தும் வஹியுடன் சம்பந்தப்பட்டவையாகும்.

‘நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாகவும் ஆக்கியுள்ளான்’ என்று (அக்குழந்தை) கூறியது.’

‘இன்னும் நான் எங்கிருந்த போதிலும் பாக்கியமளிக்கப்பட்டவனாக என்னை அவன் ஆக்கியுள்ளான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஸகாத்தையும் கொண்டு எனக்கு அவன் கட்டளையிட்டுள்ளான்.’

‘எனது தாய்க்கு நன்மை செய்பவனா கவும் என்னை அவன் ஆக்கியுள்ளான். மேலும், கர்வம் கொண்டவராகவும், துர்ப்பாக் கியமுடையவராகவும் என்னை அவன் ஆக்கவில்லை.’

‘நான் பிறந்த தினத்திலும், மரணிக்கும் தினத்திலும் உயிருடன் எழுப்பப்படும் தினத் திலும் என்மீது சாந்தி உண்டாகட்டும் (என்று கூறினார்.)’
(19:30-33)

மரபணு முதிர்ச்சி மூலம் தனது பிறப்பு, நபித்துவம், தொழுகை, ஸகாத், தனது இறப்பு பற்றியெல்லாம் கூற முடியாது. இது வஹி மூலம் அறிவிக்கப்பட்டதை ஈஸா நபி அற்புதமாகப் பேசினார்கள் அவ்வளவுதான்.

பேசிய குழந்தைகள்:
குழந்தைப் பருவத்தில் பேசிய குழந்தைகள் பற்றிய செய்திகள் ஹதீஸில் பதிவாகியுள்ளது. அவர்கள் எந்தக் குளோனிங்கில் படைக்கப்பட்டார்கள் என்கின்ற கேள்வி எழும்பும். இந்தக் கேள்விக்கு முறையான பதில் கிடைக்காத போது PJ யின் கிறுக்குத்தனமான வாதத்திற்காக அந்த ஹதீஸ்களை மறுக்க வேண்டிய நிலை அவரை ஏற்றவர்களுக்கு ஏற்படும்.

‘அஸ்ஹாபுல் உஹ்தூத்’ என்ற குர்ஆனில் இடம்பெறும் சம்பவத்தில் ஒரு குழந்தை பேசியதாக நபியவர்கள் கூறும் நீண்ட ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. முஸ்லிம் 3005-73 (பாபு கிஸ்ஸது அஸ்ஹாபுல் உஹ்தூத் வஸ்ஸாஹிர்.)

ஜுரைஜ் எனும் வணக்கவாளி சம்பந்தமான சம்பவத்தில் குழந்தை பேசியதாக நபியவர்கள் கூறிய ஹதீஸ் புஹாரி: 1206, முஸ்லிம்: 2550-7 போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இவர்கள் எல்லோரும் குளோனிங்கில் பிறந்தவர்களா?

இஃதல்லாமல் மாடு பேசியது, ஓநாய் பேசியது போன்ற ஹதீஸ்கள் மறுமை நெருங்கும் போது கல்லும் மரமும் பேசும் எனுக் கூறும் ஹதீஸ்கள், மற்றும் மறுமையில் மனிதனது கைகள், கால்கள், ஏன் தோல்கள் உற்பட உடலுறுப்புகள் அனைத்தும் பேசும் எனக் கூறும் குர்ஆன் வசனங்கள் எல்லாம் பேசச் செய்பவன் அல்லாஹ் என்பதையே உணர்த்துகின்றது. நாம் அந்த அடிப்படையில் ஈஸா நபி குழந்தைப் பருவத்தில் பேசியதை அற்புதமாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர மரபணு மூலம் ஏற்பட்ட முதிர்ச்சியால் நடந்தது என நம்பவைக்க முற்படுவது முட்டாள்தானமாகும்.

பிறந்ததும் நபியானது குளோனிங் காரணமா?:
‘…அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத்தூதராக ஆக்கியதாகவும் இங்கு கூறப்படுகின்றது. இறைத்தூதர் என்றால் இறைச் செய்திகளை சரியாக விளங்க வேண்டும். அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.

பிறந்தவுடனே ஈஸா(ர) அவர்கள் பேசியதுடன் இறைச் செய்திகளை விளங்கி மக்களிடம் எடுத்துச் செல்லும் அளவுக்கு முதிர்ச்சியுடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.’

மேற்படி வசனத்தின் படி ஈஸா நபி பிறக்கும் போதே பேசியதுடன் நபியாக ஆக்கப்பட்டார்கள். நபி என்றால் வஹியை விளங்கி மக்களுக்குப் போதிக்க வேண்டும். ஈஸா நபி பிறக்கும் போதே வஹியை விளங்கும் ஆற்றலுடன் இருந்தார்கள் என்றால் அவர் குளோனிங் மூலம் படைக்கப்பட்டவர். அதுதான் அவரிடம் அந்த முதிர்ச்சி இருந்தது என சித்தரிக்க முற்படுகின்றார்.

இங்கே இப்படி வாதிட்ட PJ அவரது தர்ஜமாவில் 276 ஆம் இலக்க விளக்கக் குறிப்பில் இப்படி எழுதுகின்றார்.

நபியாவதற்கு வயது, வரம்பு இல்லை:
‘நபியாவதற்கு வயது வரம்பு இல்லை வேதம் வழங்கப்படுவதும், ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில் தான் என்று கூறி, நாற்பதில் ஒரு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சிலர் சித்தரிக்கின்றனர். யஹ்யா நபியவர்கள் பிறக்கும் போதே நபியாகப் பிறக்கிறார்கள்ளூ சிறுவராக இருக்கும் போதே அவருக்கு இறைவன் வேதத்தைக் கொடுத்து விட்டான் என இவ்வசனம் (19:12) கூறுகிறது. மேலும் 19:30 வசனத்தில் ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனேயே தம்மை இறைவன் தூதராக நியமித்து வேதத்தை வழங்கியதாகக் கூறினார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நபியாக நியமிக்கப்படுவதற்கும், வயதுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதற்கு இவ் வசனங்கள் சான்றாகும்’

ஈஸா(ர) அவர்களுக்குளூ பிறந்ததும் வேதம் கொடுக்கப்பட்டது. அவர் PJ யின் வாதப்படி மரபணு மூலம் படைக்கப்பட்டவர். அவரிடம் அந்த மரபணுவின் முதிர்ச்சி இருக்கும் என்று வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அப்படியாயின் யஹ்யா நபியவர்கள் எந்த மரபணு மூலம் படைக்கப்பட்டார்கள்? எத்தகைய முதிர்ச்சி அவரிடம் இருந்தது? அவரும் பிறந்ததும் நபியாக்கப்பட்டுள்ளார் அவருக்கும் வேதம் வழங்கப்பட்டுள்ளது. ஈஸா நபிக்கு வேதம் வழங்கப்பட்டது என்றால் அவரிடம் மரபணுவின் முதிர்ச்சி இருந்தது என்ற PJ யின் முட்டாள்தனமான வாதத்தை ஏற்றால் யஹ்யா நபிக்கும் மரபணு தேடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிடும்.

ஆய்வு என்ற பெயரில் PJ நிறையவே உளறுகின்றார். அவர் விஞ்ஞானபூர்வமாக இஸ்லாத்தை விளங்கவைப்பதாகக் கூறி இஸ்லாத்தை களங்கப்படுத்துகின்றார். குர்ஆன், சுன்னாவை அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட நபித்தோழர்களின் புரிதலுக்கு ஏற்ப விளங்க முற்படுவதை வழிகேடு என வாய் கிழியக் கத்திவிட்டு நாஸ்திக சிந்தனைப் போக்குடைய விஞ்ஞானிகளின் கணிப்புகளுக்கு ஏற்ப இவர் குர்ஆனை வளைக்கவும், திரிக்கவும், அதை வைத்து கற்பனைகளையும் யூகங்களையும் வெளியிடுவதும் எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை மக்கள் புரிந்து கொள்வது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *