Featured Posts
Home » வரலாறு » வரலாற்று நிகழ்வுகள் » பொறுமையை இழந்த மூஸா நபி…

பொறுமையை இழந்த மூஸா நபி…

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்

மூஸா நபியுடன் கிள்ர் (அலை) அவர்கள்…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலை) அவர்கள் தம் (பனூஇஸ்ராயீல் சமுதாய) மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளையும் சோதனைகளையும் நினைவூட்டி (அறிவுரை கூறி)க் கொண்டிருந்தார்கள்.
அப்போது “இந்தப் பூமியில் என்னைவிடச் “சிறந்த” அல்லது “நன்கறிந்த” மனிதர்
வேறெவரும் இல்லை” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “உம்மைவிடச்
சிறந்தவரை, அல்லது உம்மை விட அதிக ஞானம் உள்ளவரை நான் அறிவேன்”
என அறிவித்தான்; “இந்தப் பூமியில் ஒரு மனிதர் இருக்கிறார். அவர் உம்மைவிட
அதிகம் அறிந்தவர்” என்று கூறினான். மூஸா (அலை) அவர்கள் “இறைவா! அவரை எனக்கு அறிவித்துக்கொடு” என்று கேட்டார்கள். அப்போது அவர்களிடம், “உப்பிட்ட மீனொன்றைப் பயண உணவாக எடுத்துக்கொண்டு (கடலோரமாகச்) செல்வீராக. அந்த மீனை எந்த இடத்தில் நீங்கள் தவறவிடுவீர்களோ அங்கு அவர் இருப்பார்” என்று கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளரும் (கடலோரமாக) நடந்து சென்று அந்தப் பாறையை அடைந்தனர். மூசா (அலை) அவர்கள் பாதை மாறி (தம் உதவியாளரை) விட்டுச் சென்றுவிட்டார்கள். அப்போது (உதவியாளரின் கூடையிலிருந்த) மீன் குதித்துத் தண்ணீரில் விழுந்துவிட்டது. அது சென்ற நீர்த்தடம் இணையாமல் வளையம் போன்று மாறிவிட்டது. அப்போது அவர்களுடைய உதவியாளர், “நான் இறைத்தூதரிடம் சென்று, இதைப் பற்றி தெரிவிக்க வேண்டாமா?” என்று கூறிக்கொண்டு, (மூஸா (அலை) அவர்களிடம்) சென்றார். ஆனால், (அதைக் கூறவிடாமல்) அவருக்கு மறதி ஏற்படுத்தப்பட்டது. அந்த இடத்தைவிட்டு அவர்கள் இருவரும் கடந்து சென்றதும், மூஸா (அலை) அவர்கள் “நமது காலை உணவைக் கொண்டுவாரும்! இந்தப் பயணத்தில் நாம் களைப்படைந்து விட்டோம்” என்று கூறினார்கள். அந்த இடத்தைக் கடக்கும்வரை அவர்கள் இருவருக்கும் களைப்பு ஏற்படவில்லை. அந்த இடத்தைக் கடந்ததும் உதவியாளர் (மீன் தப்பிச் சென்றுவிட்டதைப் பற்றி) நினைத்தார். “கவனித்தீர்களா? நாம் அந்தப் பாறை அருகில் ஒதுங்கியபோது அந்த மீனை நான் மறந்து விட்டேன். அதைப் பற்றிக் கூறவிடாமல் ஷைத்தான் என்னை மறக்கவைத்துவிட்டான். அது கடலில் ஆச்சரியமான முறையில் தனது வழித்தடத்தை அமைத்துச் சென்றது” என்று கூறினார்.  மூசா (அலை) அவர்கள், “அதுதான் நாம் தேடிவந்த இடம்” என்று கூறியபடி, தம் அடிச் சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே அவ்விருவரும் திரும்பினர். அப்போது அந்த மீன் குதித்தோடிய இடத்தை உதவியாளர் காண்பித்தார்.

மூசா (அலை) அவர்கள், “இதுதான் எனக்குச் சொல்லப்பட்ட இடமாகும்” என்று கூறிவிட்டு, அவரைத் தேடிக்கொண்டு சென்றார்கள். அங்கு ஆடையால் போர்த்தியபடி “பிடரியின் மீது” அல்லது “நடுப் பிடரியின் மீது” மல்லாந்து களிர் (அலை) அவர்கள் படுத்திருந்தார்கள். மூசா (அலை) அவர்கள்  “உங்களுக்குச் சாந்தி உண்டாகட்டும்” என்று சொன்னார்கள். உடனே களிர் அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி “வ அலைக்குமுஸ் ஸலாம்” என்று பதில் சலாம் சொல்லிவிட்டு, “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) “நான்தான் மூசா” என்றார்கள். களிர் அவர்கள், “எந்த மூசா?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “பனூஇஸ்ராயீல் (சமுதாய மக்களுக்கு இறைத்தூதராக நியமிக்கப்பெற்ற) மூசா” என்று பதிலளித்தார்கள். “எதற்காக வந்துள்ளீர்கள்?” என்று களிர் அவர்கள் கேட்க, “உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக நான் (உங்களிடம்) வந்துள்ளேன்” என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், “என்னுடன் உங்களால் பொறுமையாக இருக்க இயலாது. உங்களுக்கு ஞானமில்லாத ஒரு விஷயத்தில் உங்களால் எவ்வாறு பொறுமையாக இருக்க முடியும்? எதைச் செய்ய வேண்டுமென எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதோ அதை நான் செய்வதை நீங்கள் கண்டால், உங்களால் பொறுமையாக இருக்க முடியாது”என்று கூறினார். அதற்கு மூசா (அலை) அவர்கள், “அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாக நீங்கள் காண்பீர்கள். உங்களின் எந்தக் கட்டளைக்கும் நான் மாறுசெய்யமாட்டேன்” என்று கூறினார்கள். “நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயிருந்தால், எதைப் பற்றியும் நானாக (விளக்கம்) சொல்லாத வரை அதைப் பற்றி என்னிடம் நீங்கள் (விளக்கம்) கேட்கக் கூடாது” என்று களிர் (அலை) அவர்கள் சொன்னார்கள். பிறகு இருவரும் (கடலோரமாக) நடந்து சென்று ஒரு மரக்கலத்தில் ஏறினர். அப்போது களிர் (அலை) அவர்கள் வேண்டுமென்றே அந்த மரக்கலத்தில் ஓட்டை போட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், “இதில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா ஓட்டை போடுகிறீர்? நீங்கள் மாபெரும் (அபாயமான) செயலையன்றோ செய்து விட்டீர்கள்?” என்று களிரிடம் கேட்டார்கள். அதற்கு களிர் அவர்கள், “உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று நான் சொல்லவில்லையா?”என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், “நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்துவிடாதீர்கள். என் விஷயத்தில் சிரமத்தைக் கொடுத்துவிடாதீர்கள்” என்று கூறினார்கள். தொடர்ந்து இருவரும் நடந்தார்கள்; விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தார்கள். உடனே களிர் அவர்கள் யோசிக்காமல் சென்று, அவர்களில் ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள். அதைக் கண்டு மூசா (அலை) அவர்கள்,பெரிதும் திடுக்குற்றார்கள்; வெறுப்படைந்தார்கள். எந்தப் பாவமும் அறியாத, எந்த உயிரையும் கொல்லாத உயிரைக் கொன்றுவிட்டீர்களே? தகாத  காரியத்தைச் செய்துவிட்டீர்களே?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நிகழ்ச்சியைச் சொல்லிக்கொண்டே) இந்த இடத்திற்கு வந்தபோது “நம்மீதும் மூசா அவர்கள் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும். மூசா (அலை) அவர்கள் மட்டும் அவசரப்பட்(டுக் கேள்வி கேட்)டிருக்காவிட்டால் இன்னும் (அரிய) விந்தை(யான பல காட்சி)களைக் கண்டிருப்பார். ஆயினும், (இவ்வாறு கேட்ட) மூசா (அலை) அவர்களை, தம் தோழர் (களிர்) முன்பாக நாணம் கவ்விக்கொண்டது” என்றார்கள்.

மூசா (அலை) அவர்கள் “இதற்குப் பிறகு ஏதேனும் உங்களிடம் நான் கேட்டால் உங்களுடன் என்னைச் சேர்த்துக்கொள்ளாதீர். என்னிடமிருந்து (இரு முறை) மாதானத்தை ஏற்றுக் கொண்டீர்” என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், ஆச்சரியமானவற்றைக் கண்டிருப்பார்கள். -(பொதுவாகவே) நபி (ஸல்) அவர்கள் நபிமார்கள் எவரைப் பற்றியாவது பேச்செடுத்தால் “நம்மீதும் என்னுடைய இன்ன சகோதரர்மீதும்  அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்” என்று முதலில் தமக்காகவும் பிறகு அந்த நபிக்காகவும் பிரார்த்திப்பார்கள்- நம் மீதும் அல்லாஹ்வின் கருணை பொழியட்டும்.

தொடர்ந்து அவர்கள் இருவரும் நடந்து, அற்பக் குணமுடைய ஒரு கிராமவாசிகளிடம் வந்தனர். அந்த மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று உணவு கேட்டுச் சுற்றிவந்தனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அப்போது அங்கு விழுந்துவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்த ஒரு சுவரைக் கண்டனர். உடனே களிர் அதைத் தூக்கி நிறுத்தினார்கள். அதைக் கண்ட மூசா (அலை) அவர்கள், “நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்றிருக்கலாமே?” என்று கூறினார்கள்.

கிள்ர், “இதுவே எனக்கும் உமக்குமிடையே பிரியும் நேரமாகும்” என்று கூறி, மூசாவின் ஆடையைப் பிடித்தார். மேலும், உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன். அந்த மரக்கலம் கடலில் தொழில் செய்யும் ஏழைகள் சிலருக்குரியது…” என்று தொடங்கி, வசனத்தின் (18:79) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள். அந்த மரக்கலத்தை அபகரித்துக்கொள்பவன் வந்து, ஓட்டையான நிலையில் மரக்கலத்தைக் கண்டால் அதை விட்டுவிடுவான். பிறகு அவர்கள் மூங்கில் கழியால் (ஓட்டையை அடைத்து) அதைப் பழுது பார்த்துவிடுவார்கள்.
அந்தச் சிறுவனோ, படைக்கும்போதே “இறைமறுப்பாளன்” என (இறைவனால்)
தீர்மானிக்கப்பட்டு படைக்கப்பட்டான். அவனுடைய பெற்றோர் அவன்மீது மிகுந்த
பாசம் வைத்திருந்தனர். அவன் பருவ வயதை அடைந்தால் அவ்விருவரையும் தவறான வழியிலும் இறைமறுப்பிலும் தள்ளிவிடுவான். (இறைவன் கூறுகிறான்) “அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனைவிடச் சிறந்ததூய்மையான நெருங்கி உறவாடக்கூடிய குழந்தையை மாற்றாக வழங்குவான்” என நினைத்தோம். (18:81) அந்தச் சுவர், அந்நகரத்தில் உள்ள இரண்டு அநாதைச் சிறுவர்களுக்கு உரியதாகும். அதற்குக் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது என்று அந்த
வசனத்தின் (18:82) இறுதிவரை சொல்லிக்காட்டினார்கள்.

இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 4744)

இந்த செய்தியின் மூலமாக நாம் படிக்கும் பாடம் என்னவென்றால் கல்விக்கு தேவை அதிக பொறுமையும், சகிப்புத்தன்மையுமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *