Featured Posts
Home » பொதுவானவை » எச்சரிக்கை » நரகத்தில் சில காட்சிகள்… (2)

நரகத்தில் சில காட்சிகள்… (2)

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர்

நரகத்தில் சில காட்சிகள்… (1)

சென்ற இதழில் நரகத்தைப் பற்றிய சில செய்திகளை உங்கள் சிந்தனைக்கு முன் வைத்தேன். நரகத்தில் பாவிகளை தண்டிக்கும் காட்சிகளை அல்லாஹ் நபியவர்களுக்கு எடுத்துக் காட்டினான். அந்த காட்சிகளை தொடர்ந்து படியுங்கள்.

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் ‘உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?’ என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்,

தொழுகையில் அலச்சியம்…

ஒரு மனிதர் மல்லாக்க படித்திருக்கிறார். அவரின் பக்கத்தில் ஒரு மனிதர் பெரிய கல்லை துாக்கி படுத்திபவரின் தலையில் ஓங்கி போடுகிறார். தலை சுக்கு நுாறாக சிதறி போகிறது. அடித்த வேகத்தில் அந்த கல் துார இடத்திற்கு போய் விட்டு, மீண்டும் அந்த மனிதரின் பக்கம் உருண்டு வருகிறது. அந்த கல் வருவதற்கு முன் அவரின் தலை மீண்டும் சரியாகி விடுகிறது. மீ்ண்டும் அந்த கல்லை அந்த மனிதர் எடுத்து அவரின் தலையையில் ஓங்கி போடுகிறார். முன்னைய போல தலை சிதறுகிறது. இவர் ஏன் இப்படி சித்தரவதைக்கு ஆளாக்கப்படுகிறார் என்று நபியவர்கள் காரணம் கேட்ட போது இவர் குர்ஆனை மனனம் செய்து மறந்தவர்.மற்றும் பர்ளான தொழுகையை அலச்சியம் செய்பவர் என்று கூறப்பட்டது.

பொய்யை பரப்பியவர்…

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, ‘நடங்கள்’ என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார். அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். – அல்லது பிளந்தார் – பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம்பழையபடி ஒழுங்காக ஆகிவிடுகிறது. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், ‘அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?’ என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்’ என்றனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்டோருக்கு தண்டனை…

அப்படியே நாங்கள் நடந்து அடுப்பு போன்று (மேல் பகுதி குறுகலாகவும் கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள். நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், ‘இவர்கள் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று என்னிடம் கூறினர்.

வட்டி வாங்கியோருக்கு தண்டனை…

அப்படியே நாங்கள் நடந்து ஓர் ஆற்றின் அருகே சென்றோம். அது இரத்தத்தைப் போன்று சிவப்பாக இருந்தது. அந்த ஆற்றில் ஒருவந் நீந்திக் கொண்டிருந்தான். ஆற்றின் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தபடி ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்துக் கொண்டிருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்னுடைய வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். (அவன் திரும்பி பழைய இடத்திற்கே தள்ளப்படுகிறான். இப்படியே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.) நான் அவ்விரு(வான)வரிடமும், ‘இவ்விருவரும் யார்?’ என்று கேட்டேன். அவர்கள், என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று கூறினார்கள்.

நரகத்தின் காவலாளி மாலிக்…

நாங்கள் அப்படியே நடந்து ஓர் அசிங்கமான தோற்றம் கொண்ட மனிதர் ஒருவரிடம் சென்றோம். அவர் நீ காணுகிற மனிதர்களிலேயே மிகவும் அருவருப்பான தோற்றமுடையவர் போன்று காணப்பட்டார். அங்கு அவர் தமக்கு அருகே நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்துகொண்டிருந்தார். நான் அவ்விருவரிடமும், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். அவர்கள் என்னிடம், ‘செல்லுங்கள், செல்லுங்கள்’ என்று கூறினர்… நான் அவ்விருவரிடமும், ‘நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?’ என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், ‘(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம். கல்லால் தலை நசுக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதருக்கு அருகில் முதலில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் குர்ஆனை (மனனம் செய்து) எடுத்துக்கொண்டுவிட்டுப் பிறகு அதை (மறந்து)விட்டவன் ஆவான். மேலும், அவன் கடமையாக்கப்பட்ட தொழுகைகளை நிறைவேற்றாமல் தூங்கிவிட்டவனும் ஆவான். (அடுத்து) தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும். அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் விபசாரம் புரிந்த பெண்களுமாவர். ஆற்றில்
நீந்திக்கொண்டும் (கரையை நெருங்கும்போது வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்த ஒரு மனிதனுக்கு அருகே நீங்கள் சென்றீர்களே! அவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான். நெருப்பை மூட்டி அதைச் சுற்றி வந்து கொண்டிருந்த அருவருப்பான தோற்றத்திலிருந்த அந்த மனிதர் நரகத்தின் காவலரான மாலிக் ஆவார்.  -(புகாரி 7047)

கண்மூடித்தனமாக தலைவரை பின்பற்றியவர்ளுக்கு தண்டனை…

இந்த உலகில் பின் பற்றுபற்றுவதற்கு தகுதியானது குர்ஆனும், சுன்னாவுமாகும். அல்லாஹ் குர்ஆனில் சொல்லக் கூடிய அம்சங்களை நாளாந்தம் பின் பற்ற வேண்டும்.அதே போல நபியவர்கள் காட்டித்தந்த அமல்களை நாளாந்தம் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவைகளை விட்டு விட்டு அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார், அவர் நமது தலைவர், இவர் நமது பெரியார் என்று மார்க்கத்தை
சரியாக விளங்காமல் தலைவர்மார்களுக்கும், பெரியார்களுக்கும் பின்னால் செல்லக் கூடிய மக்களுக்காக பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு எச்சரிக்கிறான்.

“நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான். -33:64

“அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்; தங்களைக் காப்பவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள் காணமாட்டார்கள். -33:65

“நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!” என்று கூறுவார்கள். -33:66

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். -33:67

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக; அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக” (என்பர்). -33:68

மறுமையில் நெருப்பில் சென்று ஓலமீடுவதை விட இந்த உலகத்திலே நிதானமாக சிந்தித்து நான் யாரை பின் பற்ற வேண்டும், நான் எதை எனது வாழ்நாளில் அமலாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை ஒரு தடவைக்கு பல தடவைகள் சிந்தித்து செயல்படுங்கள்.

முனாபிக்குகளுக்கான (நயவஞ்சகர்ளுக்கான ) தண்டனை…

நல்லவர்களைப் போல நடிப்பவர்கள் மகா கெட்டவர்கள். இவர்கள் உலகத்தில் நல்லவர்களைப் பால நடந்து கொண்டாலும் மறுமை நாளில் இப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை அல்லாஹ் தயார் பண்ணி வைத்துள்ளான். பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று பயத்தோடு கவனியுங்கள்.

“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர். -4:145

நரகத்தில் குறைந்த தண்டனை…

நரகத்தில் பலவிதமான தண்டனைகளை பாவிகளுக்கு அல்லாஹ் ஏற்ப்பாடு செய்துள்ளான்.அந்த தண்டனைகளில் மிகவும் குறைந்த தண்டனை நபியவர்களின் சாச்சா அபூதாலிபுக்கு கொடுக்கப்படுவதாக நபியவர்களே பின்வருமாறு உறுதிப்படுத்துகிறார்கள்.

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்களிடம் அவர்களின் பெரிய தந்தை அபூ தாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், ‘அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரின் (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்) அதனால் அவரின் மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதிக்கும்’ என்று சொல்ல கேட்டேன். (புகாரி-6564)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *