Featured Posts
Home » பொதுவானவை » நாட்டு நடப்பு » இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? – ரோஹிங்கிய முஸ்லிம்களும், சமூக பொறுப்பும்

இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா? – ரோஹிங்கிய முஸ்லிம்களும், சமூக பொறுப்பும்

இந்த மக்களை நாம் சில பொழுதுகளில் மறந்து விடுகிறோமா?
ரோஹிங்கிய முஸ்லிம்களும் – சமூக பொறுப்பும்

தொகுப்பு,
பூவை அன்சாரி
நாள்: துல்-ஹஜ் மாதம், பிறை 7

எம் அண்டை தேசமான பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளும், அடக்குமுறைகளும் இந்த நொடி வரை தொடரத்தான் செய்கிறது. வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் இவர்களுக்கான குடியுரிமை மறுக்கப்பட்டு, சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, உணவு இல்லாமல், குடிநீர் இல்லாமல், உறைவிடம் இல்லாமல், அகதிகளுடைய அந்தஸ்தை கூட அடைய முடியாமல் – அனுதினமும் தங்களது உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் இம்மக்களுக்காக நாம் எப்படி / எப்போது குரல் கொடுக்க அல்லது உதவிக்கரம் நீட்டப்போகிறோம் ?

வரலாற்றின் பக்கங்கள் இவர்களுடைய மண்ணின் உரிமையை நமக்கு தெளிவாக படம் பிடித்து காட்டுகின்றது. பர்மா முஸ்லிம்களுடைய வரலாறு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து துவங்குகிறது. பாரசீகர்களும், அரபுக்களும் வியாபார நிமித்தமாக வந்தவர்கள் அங்கு முதலில் குடியேறினர். மன்னர் அனவ்ரதா (1044 – 1077 ) மற்றும் அவருடைய மகன் சவலு (1077 – 1088 ) ஆகியோரது ஆட்சியில் முஸ்லிம்கள் மிக முக்கிய பங்கு வகித்ததாக குறிப்புக்கள் உள்ளன. 13ஆம் மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் வாங்கதேச முஸ்லிம்கள் அர்கான் பகுதியில் வந்து குடியேறியுள்ளனர். தனி மன்னராட்சியாக இருந்து வந்த அர்கான் மாகாணம் பர்மா மன்னராட்சியின் கீழ் 18 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் வணிகத்திலும், வியாபாரத்திலும் கொடி கட்டி பரந்த சமூகம் இன்று ஒரு வேலை உணவுக்காக ஏங்கி நிற்கும் காட்சிகள் நம் கண்களை குளமாக்குகின்றன.

உங்களுக்கு நினைவிருக்கிறதா ?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாட்டன்மார்கள் பர்மாவில் வியாபாரம் செய்தவர்கள். குறிப்பாக ராமநாதபுரம், காயல்பட்டினம், நாகை தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களிலிருந்து பர்மாவிற்கு சென்று வணிகமும், வியாபாரமும் செய்த மக்கள் நம் முன்னோர்கள். மறைந்த சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இந்திய இராணுவத்தை கட்டி எழுப்புவதற்காக அணி திரட்டிய சமயத்தில் – அதற்காக அன்றைய கால கட்டத்தில் ஒரு கொடி ரூபாய் நிதியளித்தவர் கீழக்கரையை சேர்ந்த வள்ளல் ஹபீப் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டுகிறேன். மலேசியா, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும், அங்கிருந்து இறக்குமதியும் முன்னின்று செய்தவர்கள் முஸ்லிம்கள் என்று வரலாறு சாட்சி கூற – அவர்களுடைய அடித்தளத்தை முதன் முதலில் அசைக்க முயற்சித்தவர்கள் அந்நாட்டு புத்த மத பிட்சுக்கள்.

கிளர்ச்சியின் மூலம் ராணுவ தளபதியான நெ-வின் 1962 ஆம் ஆண்டு ஆட்சியமைத்த பிறகு காட்சிகள் மாற ஆரம்பித்துள்ளன. அரசு மற்றும் இராணுவத்தில் அங்கம் வகித்த முஸ்லிம்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார் தளபதி நெ வின். அதன் தொடர்ச்சியாகவே தங்கள் கட்டம் கட்டப்படுகிறோம் என்பதனை முஸ்லிம்கள் உணர ஆரம்பித்தனர். சமூகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷம் எந்த அளவுக்கு தொடர்ந்தது என்றால், பர்மாவின் தந்தை என்று அழைக்கப்படும் ஆங் சாங் (பர்மாவின்கி வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஆங் சங் ஸ்யு கி அவர்களின் தந்தை) அவர்களோடு வெள்ளையனுக்கு எதிராக போராடி படுகொலை செய்யப்பட்டவரும், பர்மா மக்களால் கதாநாயகனாக போற்றப்படும் சயா கியி யு ரஜாக் போன்றோரின் தியாகங்கள் அழிக்கப்பட்டன, மறக்கடிக்கப்பட்டுள்ளன. அன்று ஆரம்பித்த முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு இன்றுவரை தொடர்கிறது. நியூ யார்க்கிலிருந்து செயல்படும் ஒரு மனித உரிமை அமைப்பு குறிப்பிடுகையில்; சட்டமாக எதுவும் இயற்றப்படாவிட்டாலும், முஸ்லிம்களுக்கான தேசிய அடையாள அட்டை போன்ற விடயங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் அந்நாட்டில் பள்ளிகளில் இடம் பெறவோ, நிலம் வாங்கவோ, பயணம் செய்யவோ, அரசின் சலுகைகளுக்கு விண்ணப்பிக்கவோ, வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவோ, அரசு கல்லூரிகளில் இடம் பெறவோ முடிவதில்லை என்று குறிப்பிடுகிறது.

1940 – களில் மேற்கு பர்மாவை பாகிஸ்தானோடு இணைத்து விடுதலை கோருமாறு முஹம்மது அலி ஜின்னாஹ் அவர்களோடு ரோஹிங்கிய முஸ்லீம் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். நீண்ட கால கோரிக்கை 1948 ஆம் ஆண்டு வலுப்பெற்று ஜின்னாவிடத்தில் முக்கிய கோரிக்கையாக அவை மாறின. ஆனால் பர்மாவின் உள் அரசியல் விவகாரங்களில் தான் தலையிடப்போவதில்லை என ஜின்னாஹ் அவர்கள் கூறிவிட அம்மக்கள் ஒரு தலைமை இல்லாமல் தவித்துள்ளனர். ஜின்னா அவர்களின் மறுப்பை தொடர்ந்தது தங்களுடைய அர்கான் மாகாணத்தை தனி பிரதேசமாக மீட்டெடுக்க முஜாஹித் இயக்கம் தொடங்கப்பட்டது. மிக தீவிர போராட்டங்களை முன்னெடுத்த முஜாஹித் இயக்கம் 1962 ஆம் ஆண்டு மேஜர் நெ-வினால் முந்தைய ஆட்சி கவிழ்ப்பு ஏற்பட்டு அரசாங்கம் மாறிய பின்னர் அர்கான் முஜாஹிதீன் இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தான். பல தவறான வாக்குறுதிகளை அள்ளி வீசியதனால் முஜாஹித் இயக்க போராளிகள் அதனை நம்பி தங்களது ஆயுதங்களை பிரிகேடியர் ‘ஆங்-யு’ தலைமையில் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்தனர்.

“என்றைக்கு ஒரு சமுதாயம் தங்களுடைய சமுதாயத்தின் விடுதலையை இன்னொரு சமுதாயத்தின் கையில் வழங்குகிறார்களோ – அன்றைக்கு துவங்குகிறது அந்த சமுதாயத்தின் அழிவு” என்பதற்கு சாட்சி நம் கண் முன்னே இன்று நடப்பவைகள்.

1968 ஆம் ஆண்டு இறுதி முதல் அங்கிருக்கும் முஸ்லிம்களை வெளியேற்ற கூறி போராட்டம் நடத்தி கலவரத்தில் ஈடுபட்டார்கள் புத்த மத வெறியர்கள். ஆயுதங்களை ஒப்படைத்து நிராயுதபாணிகளாக நின்ற மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் மேற்பார்வையில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அர்கான் மாகாண முஸ்லிம்கள் அகதிகளைப்போல தம் மண்ணை விட்டு வங்காள தேசத்திற்கு துரத்தப்பட்டார்கள். இந்நேரத்தில் வியாபாரம் செய்வதற்காக சென்றிருந்த எமது இந்திய மற்றும் இலங்கை தமிழ் முஸ்லிம்கள் பலர் தங்களது பொருளாதாரத்தை இழந்து வெறும் கையோடு வீடு திரும்பினார்கள் என்பது வரலாறு. அந்த சமயத்தில்தான் பர்மாவில் இருந்து திரும்பிய நம் மக்களுக்காக ஒரு வியாபார சந்தையை உருவாக்கி தந்தது நம் தமிழக அரசு. அதுவே பிற்காலத்தில் ‘பர்மா பஜார்’ என்று அழைக்கப்படுகிறது. நாடு திரும்பிய வரலாற்றில் எனது தாய் வழி கொள்ளுபாட்டனாரும் ஒருவர் என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

ஆகவே, பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான கொடும் திட்டங்களும், கொலைக்களங்களும் இன்றும் தொடருகின்றன. பிரார்த்தனைகள் மட்டுமே நமது எல்லை என்று மௌனம் காக்க போகின்றோமா? அல்லது அவர்களுக்கு எதிரான அநீதிகளை களைத்திட நம்மால் என்ன செய்ய முடியும் என்று வழி தேட போகின்றோமா ? சிந்திக்க வேண்டும் தோழர்களே.

உலகில் இதுபோன்ற கொடுமைகள், அவலங்கள், இன சுத்திகரிப்பு வேறு எங்குமே நடந்ததில்லை என அடித்து கூறலாம். வரலாற்று ரீதியாக அர்கான் மாகாணத்தில் எம் இஸ்லாமிய சமூகம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இதுநாள் வரை நாற்பதாயிரம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பௌத்த இன பேரினவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் ஒரு நாட்டின் அகதிகள் முகாம்களுக்குள் கூட அனுமதிக்கப்படாமல் விரட்டப்படுவதும், அந்த நேரங்களில் அப்பெண்களும், குழந்தைகளும் கதறி உயிர்ப்பிச்சை கேட்கும் காட்சிகள் என் இரவு நேர தூக்கத்தை தொலைக்கின்றன.

இவர்களுக்காக என்ன செய்யலாம் ? சற்று சிந்திப்போம் தோழர்களே….
வழி தேடிய போது கிடைத்த சில தகவல்கள்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள் வாழும் அகதிகள் முகாம்கள் பெரும்பாலும் பொருளுதவி இல்லாமல் இருப்பதனாலேயே மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்காக நிதி திரட்டி தொண்டு செய்யும் தன்னார்வல அமைப்புக்கள் நமது உதவிகளை பெற்று சென்றடைய செய்கிறார்கள்.

பொருளுதவி என்று மட்டும் இல்லாமல் தன்னார்வ தொண்டர்களாக கூட சேர்ந்து உதவும் வாய்ப்பும் தருகிறார்கள்.

எனவே இது போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் நமது பொருளாதாரத்தை கொடுத்து அவர்களுக்கான நமது தற்காலிக ஆதரவை வழங்கி நிரந்தர தீர்வுக்கான வழியை தேடி நாம் பயணிக்க வேண்டும்.

சில இணைப்புக்கள் உங்களின் பார்வைக்கு…
https://charityright.org.uk/cr-star-campaign/215/urgent-appeal—help-rohingya-refugees-after-cyclone-mora/
https://www.muslimcharity.org.uk/project/rohingya-appeal/
https://www.totalgiving.co.uk/mypage/helprohingya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *