Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் » [பிக்ஹுல் இஸ்லாம்-29] அதானும் இரண்டு இகாமத்துக்களும்

[பிக்ஹுல் இஸ்லாம்-29] அதானும் இரண்டு இகாமத்துக்களும்

இரண்டு தொழுகைகளைச் சேர்த்துத் தொழும் போது முதலில் அதான் கூறி அதன் பின்னர் இகாமத் கூறி முதல் தொழுகையைத் தொழுது முடித்து ஸலாம் கூறி பின்னர், அடுத்த தொழுகைக்காக மீண்டும் அதான் சொல்லப்பட மாட்டாது. இகாமத் மட்டும்தான் சொல்லப்படும். இரண்டு தொழுகைகளுக்குமிடையில் வேறு சுன்னத் தொழுகையும் கிடையாது.

நபி(ச) அவர்களது அரபா, முஸ்தலிபா தொழுகை பற்றி நபிமொழிகளில் பின்வருமாறு பேசப்பட்டுள்ளது.

‘பின்னர் அதான் கூறினார். பின்னர் இகாமத் கூறி ழுஹர் தொழுவித்தார். பின்னர் இகாமத் கூறி அஸரைத் தொழுவித்தார். அவை இரண்டுக்கும் இடையில் எதுவும் தொழவில்லை. முஸ்தலிபா வந்ததும் மஃரிபையும் இஷாவையும் ஒரு அதான் இரண்டு இகாமத்துக்களுடன் தொழுவித்தார்கள். அவை இரண்டுக்கும் இடையில் எதுவும் தொழவில்லை.’
(அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் | நூல்: முஸ்லிம் 1218-147, இப்னு மாஜா 3074, அபூதாவூத் 1664)

இந்த அடிப்படையில் ஒரு அதான் இரு இகாமத்துக்களுடன் சேர்த்துத் தொழப்படும். இடையில் சுன்னத்துத் தொழுகைகள் எதுவும் தொழுவது சுன்னா அல்ல.

ஒழுங்கில் தொழுதல்:
சேர்த்துத் தொழுபவர்கள் முதலில் ழுஹரையும் அடுத்து அஸரையும் தொழ வேண்டும். அவ்வாறே மஃரிபுக்குப் பின்னர்தான் இஷாத் தொழ வேண்டும். இந்த ஒழுங்கை மாற்றக் கூடாது.

உதாரணமாக அஸர் தொழுகையுடைய நேரத்தில் பள்ளிக்கு வரும் ஒரு பயணி ஜமாஅத்துடன் சேர்ந்து அஸரைத் தொழுதுவிட்டு பின்னர் ழுஹர் தொழவோ இஷாவைத் தொழுதுவிட்டு பின்னர் மஃரிப் தொழவோ முடியாது.

பயணத்தில் சுன்னத் தொழுதல்:
கஸ்ரு, ஜம்உ இரண்டையும் பயணத் தொழுகையுடன் சம்பந்தப்படுத்தியே நாம் பார்த்துள்ளோம். பயணத்தில் இருக்கும் போது சுன்னத்துத் தொழலாமா? கூடாதா? தொழ அனுமதி உள்ளதா? என்ற ஐயம் உள்ளது. இது தொடர்பிலும் பயணத் தொழுகை என்ற பாடத்தில் பார்ப்பது பொருத்தமானதாகும். இது தொடர்பில் அறிஞர்களிடம் ஐந்து விதமான கருத்துக்கள் உள்ளன.

01. பயணத்தில் சுன்னத்துத் தொழுவது கூடாது!

இதற்குப் பின்வரும் சம்பவம் ஆதாரமாக அமைகின்றது.

‘நான் இப்னு உமர்(வ) அவர்களுடன் மக்காவின் பாதையில் இருந்தேன். அவர் ழுஹரை எங்களுக்கு இரண்டு ரக்அத்துக்களாகத் தொழுவித்தார;கள். பின்னர் வெளியேறினார்கள். நாமும் வெளியேறினோம். பின்னர் தொழுத இடத்தைப் பார்த்தார்கள். (பயணிகளில் சில) எழுந்து தொழுவதைப் பார்த்தார்கள். இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்று அவர் கேட்க (சுன்னத்) தொழுகின்றார்கள் என்று கூறினேன். சுன்னத்துத் தொழுவதாக இருந்தால் நான் தொழுகையைச் (சுருக்காமல்) பூரணப்படுத்தி யிருப்பேன். என் சகோதரன் மகனே! நான் நபி(ச) அவர்களுடன் பயணத்தில் இருந்துள்ளேன். அவர் மரணிக்கும் வரை இரண்டு ரக்அத்துக்களுக்கு மேல் தொழுததில்லை. இவ்வாறே அபூபக்கர், உமர், உஸ்மான், ஆகியோருடனும் பயணத்தில் இருந்துள்ளேன். அவர்கள் இரண்டு ரக்அத்துக் களுக்கு மேல் தொழுததில்லை. அல்லாஹ் தன் திருமறையில்,
“உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவோருக்கு அல்லாஹ்வின் தூதரிடம் நிச்சயமாக அழகிய முன்மாதிரி இருக்கின்றது.”
(33:21)

என்று கூறுகின்றான் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹப்ஸ் இப்னு ஹாஸிம் (வ) | நூல்: முஸ்லிம் 689-8, இப்னு மாஜா 1071

இந்த அறிவிப்பை வைத்து பயணத்தில் சுன்னத்துத் தொழுகையே இல்லை என்று சிலர் முடிவு செய்கின்றனர். இந்த அறிவிப்பு ராதிபான முன்-பின் சுன்னத்துக்கள். பயணத்தில் இல்லை என்பதற்கு மட்டுமே ஆதாரமாக அமையும்.

02. பயணத்தில் சுன்னத்து பொதுவாகவே தொழலாம்:

இந்தக் கருத்தில் உள்ள அறிஞர்கள் பொதுவாக சுன்னத்துத் தொழுகை பற்றி சிறப்பித்து வந்துள்ள ஹதீஸ்களையும் பயணத்தில் நபி(ச) அவர்கள் சுபஹுடைய முன் சுன்னத்துத் தொழுகையைத் தொழுத ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இந்த அறிவிப்பை வைத்து முன்-பின் சுன்னத்துக்களில் பயணத்தில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழ வேண்டும் என்பதற்கான ஆதாரத்தைப் பெற முடியும்.

03. நபிலான தொழுகைகளைத் தொழலாம், முன்-பின் சுன்னத்துக்களைத் தவிர்க்க வேண்டும்:

இந்தக் கருத்திலும் சில அறிஞர்கள் உள்ளனர்.

ஆமிர் இப்னு ரபிஆ(வ) அறிவித்தார்: “நபி(ச) அவர்கள் இரவில் பயணத்தின்போது தம் வாகனத்தின் மீது அமர்ந்து அது செல்லும் திசையில் உபரியான தொழுகைகளைத் தொழுததை பார்த்திருக்கிறேன்.”
(புகாரி: 1104, முஸ்லிம் 701-40)

நபியவர்கள் பயணத்தில் வாகனத்தில் அமர்ந்தவாறு நபில் தொழுதுள்ளார்கள். எனவே, பொதுவாக நபிலான தொழுகைகளைத் தொழ முடியும். முன்-பின் சுன்னத்துக்கள் தொழவில்லை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது இவர்களது வாதமாகும்.

04. பகலில் தொழக் கூடாது, இரவில் தொழலாம்:

பயணத்தில் பகல் வேளைகளில் சுன்னத்து இல்லை. இரவில் வித்ர், கியாமுல்லைல் தொழலாம் என்பது இத் தரப்பாரின் வாதமாகும்.

05. முன் சுன்னத்து தொழலாம், பின் சுன்னத்து இல்லை.

சுபஹுடைய முன் சுன்னத் தொழாத ஹதீஸை வைத்து இப்படி நோக்குகின்றனர். வேறு சில வாதங்களையும் இக்கருத்துக்கு முன்வைக்கின்றனர்.

பொதுவாக நபில் தொழுகைகளைத் தொழலாம் என்பது இச்சாராரின் வாதமாகும். இவற்றை வைத்துப் பார்க்கும் போது நாம் பொதுவான ஒரு நிலைப்பாட்டிற்கு வரலாம்.

நபி(ச) அவர்கள் பயணத்தில் சுபஹின் முன் சுன்னத்து, வித்ர் என்பவற்றை விடாமல் தொடர்ந்து தொழுது வந்துள்ளார்கள்.

நபிலான தொழுகைகளைத் தொழலாம் என்றும் வழிகாட்டியுள்ளார்கள்.

இந்த அடிப்படையில் பயணத்தில் சுபஹ் அல்லாத தொழுகைகளுக்கு முன்-பின் சுன்னத்துத் தொழுவதைத் தவிர்க்க வேண்டும். விரும்பினால் ஏனைய நபில் தொழுகைகளைத் தொழுது கொள்ளலாம். பள்ளிக்குச் சென்றால் அமர்வதற்கு முன்னர் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுவது போன்ற காரண காரியங்களுடன் சம்பந்தப்பட்ட சுன்னத்துத் தொழுகைகளையும் தொழுது கொள்ளலாம்….. (அல்லாஹு அஃலம்)

தொடரும்… இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *